தேர்தலில் முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாக முன்னிறுத்தப் பட இருப்பது மதுவிலக்கு. மகளிருக்கு ஐம்பது சதவீதம் உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு அளிப்பது மதுவிலக்கு அறிவிக்காமல் பெண்களை ஏமாற்றுவதாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். மதுவிலக்கு வேண்டும் என்பது தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக தவிர பிற எல்லா கட்சிகளுமே ஏற்றுக்கொண்டுள்ள அம்சம். சுமார் 25,000 கோடி வருமானம் ஈட்டித்தருகிற இந்த சரக்கு வியாபாரத்தைக் கைவிடதமிழ்நாடு அரசு தயாராக இல்லை.
இந்தியாவில் பிற மாநிலங்களில் பொதுவாக மதுவிலக்கு நிலவரம் எப்படி இருக்கிறது? ஒரு வேகமான பார்வை:
டெல்லியில் 25 வயதுக்குப் பின்னர்தான் குடிப்பதற்கு அனுமதி. வீட்டில் 12 பாட்டில்களுக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. (டெல்லி முதல்வரின் முதன்மைச் செயலாளர் வீட்டில் 14 விஸ்கி பாட்டில்கள் வைத்திருந்ததாக சமீபத்தில் சிபிஐ ரெய்டு செய்து எப்.ஐ. ஆர் பதிவு செய்த கூத்து நடந்தது!)
குஜராத்தில் 1961-ல் இருந்து மதுவிலக்கு நிலவுகிறது. ஆனாலும் கள்ளச்சந்தையில் தாராளமாக கிட்டும்.
புதுச்சேரியில் அரசின் வருமானத்தில் ஐந்தில் இரண்டு பங்கு சரக்கு விற்பனையில்தான் கிடைக்கிறது.
மும்பையில் லைசன்ஸ் இருந்தால்தான் குடிக்கமுடியும் என்ற விதி பெயரளவில் உள்ளது. ஒரு நாளைக்கு 5 ரூபாய் லைசன்ஸ் கட்டணம். 1000 ரூபாய் ஆயுள் கட்டணம். இந்த லைசன்ஸ் இல்லாமல் குடித்தால் ஐந்து வருஷம் சிறையில் போடலாம்.(இதெல்லாம் விதிகள் மட்டுமே. அமல் படுத்துவது இல்லை. எனவே அஞ்சேல்!)
குடிகாரர்கள் நிறைந்த கேரளா சென்ற ஆண்டு மதுவிற்பனையில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது.
பிகாரில் இந்த ஏப்ரல் முதல் நிதீஷ்குமார் மதுவிலக்கை கொண்டுவரப்போகிறார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 24 ஆண்டுகளாக மதுவிலக்கு இருந்தது. இந்த ஆண்டு அதை நீக்கப்போகிறார்கள். கள்ளச்சாராயத்தையும் குற்றம் பெருகுதலையும் சமாளிக்கமுடியவில்லையாம்! தமிழ்நாடுபோல் மக்கள் நலத்திட்டங்கள் செய்ய இந்த வருமானம் உதவும் என்று அம்மாநில முதல்வர் கூறுகிறார். மிஜோராமில் 15 ஆண்டுகளாக இருந்த மதுவிலக்கு சென்ற ஆண்டு விலக்கப்பட்டது. நாகாலாந்தில் மதுவிலக்கு உண்டு.
ஆந்திராவில் உள்ளூர் சரக்குக்கு விலையைக் குறைத்து உயர்வகை மதுவுக்கு விலையைக் கூட்டிஉள்ளனர். இதனால் அருகில் உள்ள மாநிலங்களுக்கு விலை குறைவான மது கடத்தப்படுகிறது. விற்பனை வருவாயும் உயர்ந்துள்ளது.
கோவாவில் இருந்து மலிவான மது கடத்தப்படுவதை தடுக்க தடுமாறுகிறது கர்நாடகா.
பிற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மதுவகைகளுக்கு பஞ்சாபில் வரிகள் அதிகம். உள்ளூர் உற்பத்தியாளர்களைக் காப்பாற்றும் சுதேசி உத்தியாம் இது.
நாடுமுழுக்க ஒரே மாதிரி சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டுவர மத்திய அரசு போராடினாலும் மதுவுக்கு மட்டும் விதி விலக்கு.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு வருமா என்பது தேர்தல் முடிந்ததும் தெரியவரும். ஆனால் எப்போதும் இல்லாத விதமாக இந்த தேர்தலையொட்டி சாராயம் ஆறாகப் பாயும். குவார்ட்டர் சாப்பிட்டுவிட்டு மதுவிலக்கு வேண்டும் என்று கூவுவது தமிழனுக்கே உரிய பண்பாடு.ஆனால் ஒரு அரசு இந்த அளவுக்கு மது விற்பனை வருமானத்தைச் சார்ந்திருக்கலாமா என்று கொஞ்சமாவது யோசிக்கவேண்டும்!
மார்ச், 2016.