எனக்குப் பொதுவாக வேலை செய்யப் பிடிக்காது. முடிந்தவரை வேலையை நிராகரிக்கவோ தள்ளிப் போடவோதான் விரும்புவேன். இந்தக் கட்டுரையைக் கூடக் கடைசி நிமிடத்தின் கடைசி நொடியில்தான் எழுதுகிறேன்.எப்போதுமே எழுதும் விஷயம் பிடித்தமானது என்பதால் எழுதுகிறேனே தவிர எழுதினால் இத்தனை பணம் கிடைக்கும் என்பதற்காக எழுதுவதில்லை. எனக்கு பிடித்து எழுதியதற்கு போதுமான பணம் வருவதில்லை என்ற பிரச்சனையையும் எழுதிக் கொண்டே இருக்கிறேன்.
ஆனால் நான் சோம்பேறி அல்ல. எனக்குப் பிடித்த வேலைகளை எந்த நிபந்தனையுமில்லாமல் என் விருப்பப்படி செய்யும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் சுறுசுறுப்பாக செய்வேன். மனிதருக்கு மிக அவசியமான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுக்குத் தேவைப்படும் பொருள் ஈட்டுவதற்காக வேலை செய்தாகவேண்டும் என்பதுதான் மனித குலம் தன் மீது தானே சுமத்திக் கொண்டிருக்கும் சாபம். மனிதர்கள் தமக்குள் பிரிந்து ஏற்றத்தாழ்வுகளுடன் அமைத்துக் கொண்டிருக்கும் சமூக அரசியல் அமைப்புமுறைகளின் விதி அது.
பட்டப்படிப்பை முடித்த உடனே நான் வேலைக்குப் போய் எனக்காகவும் என்னை நம்பியிருந்த இருவருக்காகவும் வேலை செய்து பொருள் ஈட்டியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அதனால் நாடக மேதை பி.வி.காரந்த் எனக்கு டெல்லி தேசிய நாடகப்பள்ளியில், (ஒற்றை ஆள் உயிரைத் தக்கவைக்கக் கூடிய) உபகாரச் சம்பளத்துடன் இடம் கொடுத்தும் நான் சேரமுடியவில்லை. சேர்ந்திருந்தால் என்னுடன் இருந்த இருவரும் பட்டினியில் செத்திருப்-பார்கள். நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உயிர் வாழ, வேலை செய்து பொருள் ஈட்டிதான் ஆகவேண்டும் என்ற உலக விதியை மீறமுடியாத நிலையில், எனக்குப் பிடித்த வேலையை மட்டும்தான் செய்வது, பிடிக்காத எதையும் பணத்துக்காக என்று செய்யப்போவதே இல்லை என்ற தீர்மானத்தை மேற்கொண்டு இன்றளவும் மகிழ்ச்சியுடன் பின்பற்றிவருகிறேன்.
எனக்குத் தெரிந்த ஒருவருக்கு சுமார் 40 வயதாகியும் அவர் ஒரு வேலைக்கும் செல்லாமல் அவரது வயதான பெற்றோரின் ஆதரவில் வாழ்ந்துவந்தபடி கலைத் துறையில் ஈடுபடுகிறேன் என்று மிகச் சுமாரான கலைப் படைப்புகளை தயாரித்துக் கொண்டிருந்தார். அந்த மாதிரி வசதி கிடைக்கும்போது எத்தனை பெரிய விஷயங்களையெல்லாம் சாதித்திருக்கலாம் என்று எனக்குத்தோன்றும். ஆனால் அது சரியான வழிமுறை அல்ல. வேறு யாரோ வேலைக் கஷ்டத்தை அனுபவிக்க அந்த சுகத்தில் குளிர் காய்ந்தபடி நாம் சும்மா இருப்பது நியாயமானதே அல்ல.
யாருமே கடினமாக உழைக்கவேண்டியதில்லை என்பதே என் விருப்பம். கடின உழைப்பே முன்னேற்றத்துக்கு வழி என்பது பொய்யான முழக்கம். வீட்டு வேலை செய்பவர்களும், கூடையில் காய் சுமந்து வீடு வீடாக காய் விற்பவர்களும், சாலை போடுபவர்களும், துப்புரவுப்-பணியாளர்களும் இன்னும் இது போன்ற பல உதிரித் தொழிலாளர்களும் மிகக் கடுமையான வேலைகளில் பல மணி நேரங்கள் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சொந்தமாக ஓர் ஒன் பெட்ரூம் பிளாட் கூட அவர்களால் ஒரு போதும் வாங்கமுடியாது.
பொருள் தேவைக்கான மனித உழைப்பைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டே போவதுதான் நியாயம். ஏன் பலரும் தனியார் நிறுவன வேலையை விட்டு விட்டு அரசு வேலை கிடைத்ததும் மகிழ்ச்சி அடைகிறார்கள்? அதிக சம்பளம் கிடைக்கும். குறைவான வேலை என்பதால்தான். இந்த வசதி சமூகத்தில் எல்லாருக்கும் அமையவேண்டும்.
சிலர் குறைவான நேரமே வேலை பார்த்து நிறைய சம்பளம் பெறுவதும், பலர் அதிக நேரம் வேலை பார்த்து குறைந்த ஊதியம் அடைவதும் சமூக விதிகளில் இருக்கும் அயோக்கியத்தனம். இதை நியாயப்படுத்த மூளை உழைப்பு, உடல் உழைப்பு என்று பிரித்து வைத்திருக்கிறார்கள். எந்த மனிதருமே கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடவும் தேவையிருக்கக்கூடாது; கடுமையான மூளை உழைப்பும் செய்ய வேண்டியிருக்கக்கூடாது என்பதே என் கருத்து.
கடினமான உடல் உழைப்பு வேலைகளை எல்லாம் இயந்திரங்களை செய்யவைக்க வேண்டும். நாகரிக வளர்ச்சி என்பதே அப்படித்தான். சக்கரம் கண்டு பிடித்ததால்தான் சுமைகளைச் சுமந்துகொண்டு மனிதரே அலையும் கொடுமை குறைந்தது. சக்கரம் போன்ற புதுப்புது கண்டுபிடிப்புகளைச் செய்ய மூளை உழைப்பு செய்யவேண்டும். எல்லாருமே இதில் ஈடுபடும் சூழல் அமைக்கப்படவேண்டும்.
குறைந்த உழைப்பிலேயே வாழ்க்கைக்கான எல்லா தேவைகளுக்குமான பொருள் எல்லாருக்கும் கிட்டவேண்டும் என்ற அமைப்பை ஏற்படுத்துவதுதான் நமக்கான சரியான லட்சியம். மனிதர்கள் யாரும் ஒரு நாளில் அதிக பட்சம் ஓரிரு மணி நேரத்துக்கு மேல் பொருள் ஈட்டுவதற்கான உழைப்பில் ஈடுபடும் தேவையே இருக்கக் கூடாது என்ற நிலைதான் என் கனவு. மீதி நேரங்களை மனிதர்கள் இசை, ஓவியம், சிற்பம், இலக்கியம், விளையாட்டு, கண்டு-பிடிப்பு என்று அவரவருக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் மட்டும் செலவழிக்கும் வசதி வரவேண்டும்.
மனிதர்களை பண்டங்களை நுகரும் இயந்திரங்களாக மாற்றி அதற்காக பெரும் பொருள் ஈட்டவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி பெரும்பாலோரை உழைப்பின் பெயரால் கஷ்டப்பட வைத்து சிலர் மட்டும் செல்வந்தர்களாக திரியும் அமைப்பு முறைதான் இப்போது எங்கும் இருக்கிறது. இது மாறவேண்டுமானால், முதலில் ஒருவர் விரும்பியதை மட்டுமே படிப்பது. விரும்பிய துறையில் மட்டுமே வேலை செய்வது, எல்லா வேலைகளுக்கும் சமமான மதிப்பு, ஊதியம் என்று பல அம்சங்களைப் படிப்படியாகவாவது நடைமுறைப்படுத்தும் சமூக அரசியல் கலாசாரச் சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். சம்பளத்துக்காக அடிமைகளாகும் நிலையை விட்டு விடுதலையாகி நிற்போம் !
இது தொடர்பாக பாரதிக்கும் அவன் காலம், விருப்பம் சார்ந்து ஒரு கனவு இருந்திருக்கிறது. இதோ அது: :
அன்பு செய்தல்
இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர்
பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு-மென்றே?
யானெதற்கும் அஞ்சு லேன்,மானுடரே,
நீவிர்
என் மதத்தைக் கைக் கொண்மின்; பாடுபடல்வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!
நவம்பர், 2012.