சகலத்தையும் இழந்தவர்களின் நம்பிக்கை நட்சத்திரம்

உலகம் உன்னுடையது
சகலத்தையும் இழந்தவர்களின் நம்பிக்கை நட்சத்திரம்
Published on

கடந்த காதலர் தினத்தன்று 37 வயதான ஜன் கோமின் (Jan Koum) வாட்ஸ் அப் நிறுவனத்தை ஒரு லட்சத்து இருபது ஆயிரம் கோடி கொடுத்து பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. இதைவிட, இந்த விற்பனை உடன்படிக்கை கையெழுத்தான இடம்  அகதியாக அமெரிக்கா வந்த ஜன் கோமின் வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது தான் விஷேசமானது.

அரசியல் மற்றும் இனப் பிரச்னை காரணமாக தனது 16 வது வயதில் சொந்த நாடான உக்ரைனை விட்டு வெளியேறி அம்மாவோடு அமெரிக்காவின் மவுண்டய்ன் வியூ (Mountain View))  பகுதியில் அகதியாக இடம் பெயருகிறார் ஜன் கோம். அமெரிக்கா அரசின் சொற்ப உதவித் தொகையில், அரசு கொடுத்த வீட்டில் வாழ்க்கை சிக்கல்களுடன் பற்றாக்குறையை சமாளிக்க ஒரு வீட்டில் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் வேலையை தாயும், பக்கத்தில் உள்ள மளிகைக் கடையில் துப்புரவுப் பணியில் ஜன் கோம்.

பள்ளி நேரம் போக மீதியுள்ள நேரங்களில் பழைய புத்தகக்கடையில் உள்ள கம்ப்யூட்டர் புத்தகங்களை இரவலாகப் பெற்று படித்து தனது கம்ப்யூட்டர் அறிவை விசாலப்படுத்துகிறார். பின் சான் ஜோஸ் மாநில பல்கலையில் கம்ப்யூட்டர் பட்ட படிப்பை படித்துக் கொண்டே யாகூவில் பகுதி நேர வேலை பார்க்கிறார். வேலை காரணமாக பட்ட படிப்பை பாதியில் விட வேண்டிய சூழல்.

யாகூவில் பணிபுரியும் போது பிரியன் அக்டன் என்பவருடன் (Brian Acton)  நட்பு ஏற்படுகிறது.

கோமின் அம்மாவிற்கு கேன்சர் வந்தபின் வாழ்க்கை மேலும் போராட்டமாகிறது. 2000 ஆம் ஆண்டு நோய்க்கு தன் அம்மாவை பலி கொடுத்து விட்டு தனிமரமான கோமிற்கு அக்டன் மிக ஆறுதலாக இருந்தார். இருவருக்குமான நட்பு பலப்பட்டது. சுமார் பத்தாண்டுகள் யாகூவில் பணியாற்றிய பின் ஒரு

வித அயர்ச்சிக்கு ஆளான கோம் நண்பர் அக்டனுடன்  செப்டம்பர் 2007-ல் யாகூவிலிருந்து வெளியேறினார்.

ஓர் ஆண்டு காலம் தென் அமெரிக்காவில் சுற்றித் திரிந்து தங்களது மன அழுத்தத்தை குறைத்தனர்.

மீண்டும் வேலைக்கு போகலாம் என்று முடிவெடுத்து ‘பேஸ்புக் ’ நிறுவனத்திற்கு விண்ணப்பித்தனர். இருவரையும் நிராகரித்தது ‘பேஸ்புக்’ நிறுவனம்.

ஜனவரி 2009-ல் ஜன் கோம் ஐபோன் ஒன்றை வாங்குகிறார். அப்போது தான் ஏழு மாதமான Apps ஸ்டோரில் பல புதிய செயலிகள் (Apps) இருப்பதை பார்த்து ஒரு புதிய உலகம் தனக்கு வாய்ப்புகளுடன் காத்திருப்பதாக உணர்கிறார் ஜன் கோம்.

எஸ்.எம்.எஸ்-க்கு மாற்றான ஓர் புதிய செயலியை உருவாக்க வாய்ப்பிருப்பதாக உணரும் கோம் அதற்கான முயற்சியில் முழு மூச்சோடு இயங்குகிறார்.

பிப்ரவரி 29, 2009 அன்று Whatsapp நிறுவனத்தை கலிபோர்னியாவில் நிறுவுகிறார். ஆரம்ப காலம் மிகவும் கஷ்டத்துடனே நகர்கிறது. நினைத்த மாதிரி திட்டங்கள் நடக்காமல் போக சோர்ந்து போன கோம் இதை அப்படியே  விட்டு விட்டு, மீண்டும் வேலைக்கு போகலாமா  என்று யோசிக்கிறேன் என்று அக்டனிடம் கூறுகிறார். இப்படி முட்டாள் தனமாக யோசிக்காதே, இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டபின் கைவிடுவது சரியல்ல. இன்னும் கொஞ்சம் முயற்சி செய் என்று அக்டன் ஆலோசனை கூற போராட்டத்தை தொடர்ந்தார் கோம்.

அந்த காலகட்டத்தில் பிளாக்பெர்ரி போன்களில்  பிபிஎம் என்ற  தகவல் அனுப்பும் சேவை இருந்தது. ஆனால் அதைவிட கோமின் வாட்ஸ் அப் தனித்தன்மை வாய்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து 2,50,000 என்ற எண்ணை எட்டியது.

அக்டோபர், 2009-ல் அக்டன் முன்பு தங்களுடன் வேலை பார்த்த முன்னாள் யாகூ நண்பர்கள் ஐவரிடமிருந்து இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் டாலர்களை முதலீடாக திரட்டினார்.

2011-இன் ஆரம்ப கட்டத்தில் அமெரிக்காவில் வாட்ஸ் அப் மிக பிரபலமாகி விட்டது. பத்திரிகைகள் கோம்மை பேட்டி எடுத்து அட்டை படக் கட்டுரையாக்க ஆசைப்பட்டன. ஆனால் பேட்டி கொடுக்க தொடர்ந்து மறுத்துக் கொண்டே வந்தார். அதற்கு அவர் கூறிய காரணம், ‘பத்திரிகைகளில் அதிகம் இடம் பிடிப்பதால் தூள் கிளப்பலாம். ஆனால் கிளம்பிய தூள் நம் கண்ணில் விழும். நாம், நம் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகும்’. கவனத்தை சிதறவிடாமல் வேலையில் குறியாக இருந்ததால் ஐந்து வருடத்தில் ஜன் கோம்மால் இமாலயச் சாதனை புரியமுடிந்தது.

இந்தியாவில் மிகப் பெரிய ஐடி கம்பெனியான டிசிஎஸ்ஸில் மூன்று லட்சம் பேர் பணிபுரிகின்றனர். டிசிஎஸ்ஸின் மதிப்பு நாலு லட்சத்து முப்பதாயிரம் கோடி ரூபாய். ஜன் கோம் உருவாக்கிய வாட்ஸ் அப்பில் 55 பேர் பணி புரிகிறார்கள், நிறுவன மதிப்பு ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய்!

பேஸ் புக்குடனான உடன்படிக்கையை ஜன் கோம் கையெழுத்திட்ட இடம் மவுண்ட் வியூ பகுதியிலுள்ள சமூக நல அலுவலகம். அந்த அலுவலகத்தில் தான் ஜன் கோம் தன் தாயாருடன் அகதிகளுக்கான அரசின் மானிய உணவு கூப்பன்களை தனது 16 வயதில் பெற்றார்.

வாழ்க்கையில் சகலத்தையும் இழந்தவர்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஜன் கோம்.

மார்ச், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com