இரண்டு ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் பணி நிமித்தமாக இருக்கிறேன். மாதம் ஒருமுறை சென்னைக்கு வருவது வழக்கம். வரும் பொழுதெல்லாம் அப்பா திட்டிக்கொண்டிருப்பார். ஏன் வீண் செலவு என்று. எப்போது சென்னை வந்தாலும் குடும்பத்துடனே வருவேன். மனைவி மக்களும் கூட எனது பெற்றோரிடம் நெருக்கமாகவே இருந்தனர்.
மார்ச்சில் கொரோனா வீடடங்கு தொடங்கியபின் வரமுடியவில்லை. சென்னையில் பெற்றோரும் தனியே இருந்தனர். எனது இரு தம்பிகள், தங்கை மற்ற உறவினர்கள் எனப்பலரும் இருந்தாலும் யாரும் அதிகம் வந்து போவதற்காக வாய்ப்புகள் குறைந்தது. இதைத்தொடர்ந்து அப்பாவும் அம்மாவும் தனிமையை உணர ஆரம்பித்தனர். மே மாதம் முதல் வாரத்தில் என்ன நிகழக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேனோ அது நிகழ்ந்தது. அப்பாவுக்கு உடல்நலம் குன்றிவிட்டது. இரண்டு அடி கூட எடுத்த வைக்க இயலவில்லை. மருத்துவமனையில் சேர்ப்பதே இந்த காலத்தில் குதிரைக்கொம்பாகி விட்டிருந்தது. கொரோனா பரிசோதனை செய்து அதன் முடிவு கொரோனா இல்லை என்று உறுதியானதும் மறுநாள் மருத்துவமனையில்
சேர்த்தனர். அம்மா மிகுந்த வேதனையில் இருந்தார். நீ விரைவில் வந்தால் நல்லது என்றார்.
ரத்தப்பரிசோதனையில் அவருக்கு எல்லா விதமான இரத்த அணுக்களும் குறைவாக இருப்பதாகவும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மிகக் குறைந்திருப்பதாகவும் சொன்னார்கள். சராசரியாக எல்லோருக்கும் 12 ஆக இருக்கவேண்டிய அளவு அவருக்கு 4 தான் இருந்தது. இனி தாமதிக்கக் கூடாது என்பதால் உடனே குடும்பத்துடன் காரில் சென்னைக்கு விரைந்தேன். வரும்போது வழி நெடுகிலும் சோதனைச் சாவடிகள். சென்னை வந்து நேராக மருத்துவமனையில் தந்தையைப் பார்த்த பிறகு தான் வீட்டிற்கு வந்துசேர்ந்தோம். அப்போது இரவாகி இருந்தது. வெளி மாநிலத்தில் இருந்து சென்னை வந்திருந்தபடியால் கோரொனா பரிசோதனை கட்டாயம். மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அழைத்துக்கொண்டே இருந்தார். தந்தையுடன் மருத்துவ மனையில் இருந்ததால், உடனே செல்ல முடியாத நிலை. அவருக்கு மேலும் சில ரத்த பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்துவிட்டு, வீட்டுக்கு அழைத்துவந்தோம். அன்றே நானும் மனைவி மக்களும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டோம். எனக்கு எந்த அச்சமும் இருக்கவில்லை. எப்படியும் எங்களில் யாருக்கும் கொரோனா பாஸிட்டிவ் இருக்கப்போவது இல்லை. நாங்கள்தான் எல்லாவிதமான பாதுகாப்புகளையும் உணவு முறைகளையும் கடைப்பிடித்திருந்தோமே என எண்ணி இருந்தேன்.
மே18 அன்று காலையில் மாநகராட்சி ஊழியர்கள் பத்துப்பேர் வீட்டு வாசலில் வந்து சேர்ந்தனர். என் மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ்! ஊஊ என சப்தமிட்டபடி வீட்டு முன்பாக ஆம்புலன்ஸ் வந்து நின்றது. எங்கள் குடும்பம் மட்டுமில்லை. தெருவே கதிகலங்கிப் போய்விட்டது என்றுதான் சொல்லவேண்டும். மனைவியை சோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். உடனே ஆம்புலன்ஸில் ஏறுங்கள் என்றனர். வீடு வாசலில் கிருமிநாசினி தெளித்து,, ப்ளீச்சிங் பவுடர் அடித்து ஏக களேபரம். இந்த வீடும் வீட்டினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று எழுதிய அட்டைகள் ஒட்டப்பட்டன. ஆம்புலன்ஸில் ஏறும்போது என் துணைவியார் கண்களில் நீர்.
குரல் கம்மியது. அவருக்கு எந்த நோய்க்குறிகளும் அப்போது இருக்கவில்லை. எனக்கும் மனம் படபடத்தது. வீட்டில் அப்பா நலமின்றி உள்ளார். மனைவிக்கோ கொரோனா பாஸிட்டிவ்! ‘‘ஒண்ணுமில்லை கவலை படாதே'' என மனைவியிடம் சொன்னேன். இவை வெற்று சொற்கள்தான்! அந்தசமயத்தில் வேறென்ன சொல்வது? மனைவியை அழைத்துச் சென்று பரிசோதித்தவர்கள், அவருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்பதால் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் எனச் சொல்லி வீட்டிற்கு அழைத்து வந்தனர். அவரை திரும்பவும் பார்த்தபின் எங்களுக்கெல்லாம் ஓரளவுக்கு நிம்மதி! வைட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர் ஆகியவற்றை கொடுத்து உட்கொள்ளச் சொன்னார்கள். வீட்டு வாசலை இரும்புத் தட்டிகள் கொண்டு அடைத்தனர்.
விதி யாரை விட்டது? பத்துநாளில் திரும்பிவிடலாம் என்று சென்னைக்கு வந்தேன். இன்னும் பல தினங்கள் ஆகலாம் எனத் தெரிந்துவிட்டது! விடுமுறையை நீட்டித்தேன்.
அம்மாவிற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு ஒரு அறுவை சிகிச்சை செய்திருந்தோம். அதனால் அவர் வேலை செய்வதிலும் நடப்பதிலும் சிரமம் இருக்கும். மனைவியும் தனிமைப்படுத்தப்பட்டார். அதனால் அப்பாவிற்கு உணவளிப்பது, மருந்தளிப்பது, மனைவிக்கு உணவளிப்பது, அம்மாவிற்கு துணையாக இருந்து வீட்டில் உள்ள மற்ற பணிகளைச் செய்வது என்று இரண்டு வாரங்கள் கழிந்தன. மே மாதத்து கத்திரி வெய்யிலில் அப்பாவுக்கு உடல்நலம் மேலும் மோசமானது. அவரால் பேச இயலவில்லை. நாட்கள் இப்படியே கழிந்த நிலையில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் வீடடங்கு சற்று தளர்த்தப்பட்டது. வீட்டு முன் போடப்பட்டிருந்த தடுப்புகளும் நீக்கப்பட்டன. ஜூன் முதல் வாரம் அவர் நிலைமை மேலும் மோசமானது. மறுநாள் அவர் மரணமடைந்தார். அன்று மாலையே அவரது இறுதிச் சடங்குகளும் நிறைவடைந்தன.
அப்பாவின் மரணத்துடன் இந்த துரதிருஷ்டம் பிடித்த நாட்கள் முடிந்துவிடும் என நான் உறுதியாக எண்ணினேன். என் அம்மாவை என்னுடனே திருவனந்தபுரம் வந்துவிடுமாறு அழைத்தேன். அவர் மறுப்பு தெரிவித்தார்.
‘‘இன்னும் சிலநாட்கள் இருந்துவிட்டு போ!'' என்றார். அம்மாவின் மனம் தேற வேண்டும். அதுவே முக்கியம் என்று முடிவெடுத்தோம். மறுநாளே அம்மாவிற்கு ஜுரம். இரண்டு நாள் மாத்திரையை மட்டும் கொடுத்ததில் சரியானதாகச் சொன்னார்கள். நாங்கள் எல்லோருமே சென்னை வந்த நாளிலிருந்து கபசுரக்குடிநீரும் வைட்டமின் மாத்திரைகளும் ஜிங்க் மாத்திரைகளும் தினமும் எடுத்துக் கொண்டிருந்தோம்.
கொரோனா குறித்த பயம் பெரிதாக எங்களுக்கு ஏற்பட்டதில்லை. அம்மாவுக்கு மீண்டும் இரண்டு நாளில் ஜுரம். இரவெல்லாம் 101 டிகிரி என்றே வெப்பமானி காட்டியது. பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வாங்கி வைத்திருந்தேன். அதை வைத்து அவருக்கு ஆக்சிஜன் அளவு பார்த்தேன். 97-98 இருந்தது.
ஆனால் அன்று உருளைக்கிழங்கில் காரமில்லை; கீரையில் உப்பு இல்லை என்றும் அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். என்னை அச்சம் கவ்வத் தொடங்கியது. அன்று மாலைக்குப்பிறகு மீண்டும் ஜுரம். மூச்சு விடுவதில் லேசான சிரமம். பல்ஸ் ஆக்ஸிமீட்டர் 92 காட்டியது. ஒரு தனியார் ஆய்வகத்தில் சிடி ஸ்கேன் எடுத்தோம். நுரையீரலில் 35லிருந்து 40 சதவிகிதம் பாதிப்பு இருப்பதாக
சொன்னார்கள். கொரோனா தாக்குதலுக்கான அறிகுறி என உணர்ந்தேன். வீட்டில் மருத்துவம் செய்யலாமா? தனியார் மருத்துவமனைக்குச் செல்லலாமா அல்லது அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கலாமா என்று சிறிது நேரம் யோசித்தேன். அம்மாவிற்கோ பயம். மருத்துவமனை செல்ல அவருக்கு விருப்பமில்லை. எனக்கு ஒன்றும் இல்லை எல்லாம் குணமாகிவிடும், நாளை பார்க்கலாம் என்றார்.
ஆனால் வேறு வழி இல்லாமல் அன்றே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவரைச் சேர்த்தோம். கொரோனாவிற்கான தொண்டைச் சளி பரிசோதனை செய்ததில் கொரோனா என்று மறுநாள் உறுதியானது.
அம்மாவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வீட்டிற்கு வந்துவிடலாம் என்று நினைத்தேன். ஏனெனில் கொரோனா வார்டில் நோய்வாய்ப்பட்டவர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், உதவியாளர் இருக்க அனுமதிக்கமாட்டார்கள் என எண்ணினேன். ஆனால், உதவியாளர் இருக்கலாம். நோய்வாய்ப்பட்டவருக்கு ஏதேனும் அவசியம் இருந்தால் அவருக்கு உதவ வேண்டும் என்றும் கூறினார்கள். எனவே அன்று இரவு அங்கேயே தங்கினேன். அவருக்கு ரத்தப்பரிசோதனை செய்தனர். அந்த ரத்த மாதிரிகளை வேறு வார்டில் தருவதெல்லாம் நான் தான் செய்ய வேண்டும்.
நள்ளிரவு வரை மருத்துவமனை வளாகத்தில் திரிந்துகொண்டு இருந்தேன். அதிகாலை 2 மணியிலிருந்து 5 மணிவரை அம்மா இருந்த கட்டிலில் அவர் காலருகில் தலைவைத்து வேறு ஒரு மர ஸ்டூலில் நாற்காலியில் கால் வைத்துப் படுத்துக்கொண்டேன். அடுத்த ஐந்து நாட்கள் நானும் இரு தம்பியரும் மாற்றி மாற்றி அவ்வளாகத்தில் சுற்றியும், இடையில் வார்டுக்குச் சென்று விசாரித்தும் பார்த்துக்கொண்டோம்.
அரசு மருத்துவமனையில் சேர்த்தது குறித்து முதலில் ஒரு வினா எழுந்தது. தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கலாமோ என்று. அரசு மருத்துவமனையில் உள்ள அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பல்லாயிரக்கணக்கான கொரோனா நோயாளிகளை பார்த்திருப்பவர்கள், எனவே குணப்படுத்திக் கொடுப்பார்கள் என்று அவர்கள் மீது நம்பிக்கை இருந்தது. அம்மாவிற்கு கொரோனா தொற்று இருப்பதால் வீட்டை மீண்டும் தகர ஷீட்டுகளால் தடுத்தனர். மருத்துவமனை செல்லவேண்டுன்றால் மாநகராட்சி ஊழியர்கள் செவிசாய்க்கவில்லை. மருத்துவமனையில் உதவி யாளர் அவசியம் இல்லை என்று மாநகராட்சி ஊழியர்களின் வாதம். அந்தத் தடுப்பையெல்லாம் மீறித்தான் மருத்துவமனை சென்றோம். ஒரு குடும்பத்தில் ஒருத்தர் நோய்வாய்ப்பட்டால் அக்குடும்பத்தினர் மருத்துவமனை செல்வது சிறந்ததா அல்லது வேறு யாரையேனும் பார்த்துக் கொள்ளச் சொல்லி அவர்களுக்கும் தொற்று வருவது நல்லதா? மாநகராட்சியும் சுகாரத்துறையும் இதனை முடிவு செய்ய வேண்டும்.
ஐந்து நாட்கள் கழித்து ஆறாம் நாள் காலையில் பரிசோதித்த மருத்துவர் அவரது உடல்நிலை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அன்றொரு நாள் மட்டும் கவனித்துவிட்டு மறுநாள் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறோம் என்றும் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் அன்று மாலையே நிலைமை தலைகீழ். அம்மா கழிவறை செல்லும்போது சோர்வில் விழுந்துவிட்டார். காலையில் 90 ஆக இருந்த பல்ஸ் ஆக்ஸிமீட்டர் இப்போது 40 எனக்காட்டியது. மருத்துவர் என்னை தனியாக அழைத்து, ‘ஆண்டவனிடம் பிரார்த்தியுங்கள்' என்றார்.
அப்பாவின் கடைசி மூன்று நாட்களைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால் அம்மாவின் கடைசி மூன்று மணிநேரங்களை மட்டும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரின் ஜீவமரணப் போராட்டத்தைக் கண்டு மனம் அழுதது. இரவு எட்டு மணியளவில் அவரது இறுதி மூச்சு நின்ற நிலையில் தான் என் கண் அழுதது, வாய் கதறியது. என் தம்பியர் இருவரும் வந்து அழுதனர். ஐயிரண்டு திங்களெல்லாம் அங்கமெல்லாம் நொந்து பெற்றெடுத்த அன்னையை எப்பிறவியில் காண்போம் இனி யாரும் யாரையும் தேற்றும் நிலையில் இல்லை. மனைவியையும் தங்கையையும் மருத்துவமனைக்கு அழைக்கும் எண்ணம் வரவில்லை.
அம்மாவின் உடலை பிணவறைக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். நானும் தம்பியரும் ஒருவாரம் இவ்வண்ணமாய் மருத்துவமனை வந்து சென்றதால் எங்களுக்கும் அன்றிரவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். அப்பாவும் அம்மாவும் இல்லாத வீடு. அனைவர் மனதிலும் வெற்றிடம்.
காலையில் பிணவறைக்குச் சென்றேன். முன்தினம் நான்கைந்து நோயாளிகள் இறந்திருக்க கூடும். மதியம் தான் அம்மாவின் உடலைப் பார்க்க முடிந்தது. ஒரு மணியளவில் உறுதிப்படுத்துவதற்காக முகத்தை என்னிடம் காட்டினர்.
நான் உறுதி செய்ததும் மீண்டும் மூடி ஆம்புலன்ஸில் ஏற்றினர். சிறிது நேரம் வீட்டின் வாசலில் உடலை வைக்கமுடியுமா என்று காவல்துறையினரைக் கேட்ட போது கொரோனா மரணம் என்பதால் நேராக சுடுகாட்டுக்குதான் எடுத்துச்செல்வோம் என்றனர். தம்பியரை, தங்கையை, மனைவியை சுடுகாட்டுக்கு வரச்சொன்னேன். நானும் பின் தொடர்ந்தேன்.
அங்கே அம்மாவின் உடலை ஆம்புலன்ஸிலிருந்து கீழே இறக்கினர். வீட்டிலிருந்து எடுத்துவந்த புடவையை அம்மாவிற்கு சாற்றி அரிசியிட்டோம், பால் ஊற்றினோம். ஐந்து நிமிடமே இந்த சடங்குகள். ஏற்கனவே மூடிவிட்டதால், கொரோனா சடலங்களை மீண்டும் முகம் திறப்பதிற்கில்லை என்றார்கள். கடைசியாக ஒருமுறைகூட முகத்தைப் பார்க்கமுடியவில்லையே என தங்கை அழுதார். நான் கற்பூரத்தை ஏற்றிய பின் மின் மயானத்தில் அம்மாவின் உடலை இட்டனர்.
மருத்துவமனையில் இருந்தபோது அப்பா சொன்னார்: ‘‘ உங்க அம்மாவிற்கு பின் நான் எப்படியும் காலம் தள்ளுவேன். எனக்குப்பின் உங்க அம்மா காலம் தள்ளுவது கஷ்டம்''. அம்மாவோ ஏன் இவர் இப்படிப் பேசுகிறார் என்று அழுதார். மேலும் அம்மா தனக்கு ஒரு கனவு வந்ததாகவும் அந்தக் கனவில் மாநகராட்சி ஊழியர்கள் தன் சடலத்தை வண்டியில் அள்ளிச் செல்வதாகக் கண்டதாகக் கூறி இருந்தார். ‘‘அப்படி எதுவும் நடக்காது நாங்கள் விடமாட்டோம். கவலைப்படாதே'' என்றிருந்தேன். ஆனால் அவர்கள் வாக்கும் கனவுமே நடந்தேறியது. ஒரு வேளை அப்பா, அம்மாவையும் உடன் அழைத்துசென்றாரோ? அதுவும் அனாதைப் பிணமாக? எங்களையும் யாருமற்றவராக்கிவிட்டு!
அன்று மாலை அனைவரும் வீட்டிற்கு வந்து என்ன செய்வது இனி என சோகம் தவழும் முகங்களுடன் அமர்ந்திருந்தோம். என் தாய் புழங்கிய இடங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எக்கணமும் அவர் முன்னே வந்து நிற்பார் என்றே தோன்றியது. அவர் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை!
கண்களைத் துடைத்துக்கொண்டு என் செல்பேசியில் வந்த தகவலைப் பார்த்தேன். எனக்கும் மூத்த தம்பிக்கும் கொரொனா பாஸிட்டிவ் என தகவல் வந்திருந்தது! கடைசித் தம்பிக்கு நெகட்டிவ் என்பதே இந்த சோகத்திலும் சின்ன ஆறுதல். அம்மாவின் மரணத்துடன் எங்களை கொரோனா விட்டுவிடவில்லை! இன்னும் பீதியைக் கிளப்பிவிட்டுத்தான் போவது என்று முடிவெடுத்துவிட்டது போலும்!
என்ன செய்வது என்று புரியவில்லை. வீட்டில் இருந்து பார்க்கலாமா? மாநகராட்சியிலிருந்து ஊழியர்கள் வரும் வரை காத்திருக்கலாமா?
எங்களிடமிருந்து பிள்ளைகளுக்கு தொற்று வரக்கூடாதே! மருத்துவமனைக்குச் சென்றுவிடலாமா? அப்பாவும் இறந்து அம்மாவும் இறந்து வெற்றிடமாய் உள்ள வீட்டில் மனைவி மக்கள் எப்படி தனியாக இரவுகளில் நிம்மதியாக இருப்பார்கள்?
ஒரு இரவேனும் வீட்டில் இருந்துவிட்டு காலையில் மருத்துவமனை செல்வது என முடிவெடுத்தேன். அச்சம் எங்கள் இல்லத்தில் ஒரு பெரிய கருந்திரையைப் போல மூடி இருந்தது. ஏற்கெனவே இருவரை இழந்த குடும்பம்! இதோ மேலும் இருவர் கொரோனாவின் பிடியில்... இன்னும் அம்மாவை இழந்த துக்கத்தில் வடித்த கண்ணீரே காயவில்லை!
கோரொனா நெகட்டிவ் ஆன தம்பியை வீட்டில் வைத்துவிட்டு காலை ஆறுமணிக்கெல்லாம் ஓமந்தூரார் மருத்துவமனைக்குக் கிளம்பிவிட்டோம். இப்போதும் தனியார் மருத்துவமனை செல்ல நான் விரும்பவில்லை! அரசு மருத்துவர்களையே முழுசாக நம்பினேன். அங்கே சிடி ஸ்கேன் எடுத்தனர். எனக்கு நுரையீரலில் 15% சதவீதம் பாதிப்பு என்றவர்கள் தம்பிக்கு 30% சதவீதம் பாதிப்பு என்றதும் எனக்கு ‘கெதக்' என்று இருந்தது. இதயத்துடிப்பு அதிகமானது. மிகவும் பதற்றமடைந்து, ஒருவாறு, இதற்கு மேலும் ஒரு மனிதனுக்கு என்ன துயரம் வந்துவிடப்போகிறது என்று நினைத்து தேற்றிக்கொண்டேன்.
மருத்துவமனையில் சில நாட்கள் இருந்து பார்த்துக் கொண்டு பின்னர் வீட்டுக்குச் செல்லலாம் என்றனர் மருத்துவர்கள். தம்பிக்கு சர்க்கரை நோய் இருப்பதால் ரிஸ்க் அதிகம் ஆயினும் அறிகுறிகள் தீவிரமாக இல்லை என்பதால் கவலைப்படவேண்டாம் என்றும் கூறினர்.
கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைக் காட்டிலும் ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தூய்மையாக இருந்தது. நன்றாக பராமரிக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு
படுக்கைக்கும் இடையே தேவையான இடைவெளி இருந்தது. நோயாளிகளின் நெரிசல் இல்லை. ஒருவேளை புதிய மருத்துவமனை என்பதால் நன்றாக பராமரித்து வருகின்றனர் என்று நினைக்கிறேன். அனுபவம் மிக்க மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குப்பட்டது. அவர்கள் வார்டுக்கு மூன்று முறை வந்து நோயாளிகளைப் வந்து பார்த்துச் செல்கின்றனர். ஒரு முறை தலைமை மருத்துவரும் வருகிறார். நர்ஸ் இருவர் எப்போதும் இருக்கின்றனர்.. கீழ்பாக்கம் மருத்துவமனையை விட இங்கு அணுகுமுறை சரியாக இருப்பதாக எனக்குப்பட்டது. உதவியாளர்கள் யாரையும் இருக்க விடுவதில்லை.
இந்நிலையில் வீட்டிற்குச் சென்ற மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் தகர ஷீட்டுகளை வாசலில் கட்டி வீட்டை தனிமைப்படுத்தினர். வீட்டை முதல்முறை தனிமைப்படுத்தி பின்னர் தளர்த்திய போது தந்தையை பறிகொடுத்தோம். இரண்டாவது முறை தனிமைப்படுத்தியபோது தாயைப்பறி கொடுத்தோம். அதனால் மூன்றாவது முறை தனிமைப்படுத்தியபோது வீட்டில் உள்ளவர்களின் மனம் அதனை அத்தனை இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை.
மருத்துவமனையில் எனக்கும் எனது தம்பிக்கும் தரப்பட்ட மருத்துவம் சிறப்பாகவே இருந்தது. வைட்டமின், ஜிங்க், அசித்ரோமைசின், டாக்ஸி சைக்ளின், சிட்ரிசென், க்ரோசின், ஐவர்மெக்டின் போன்ற மாத்திரைகள். மெதில்ப்ரெட்னிசோலோன், மெரோபெனெம் , ஹெபாரின் ஆகிய ஊசிகள் போடப்பட்டன. நோயின் தீவிரம் நோயாளிகளுக்குள்ள ஏனைய நோய்கள் ஆகியவற்றைக்கொண்டு மருந்துகள் நிர்ணயம் செய்யப்பட்டன. மேலும் கபசுரக்குடிநீரும் இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை கலந்த சூப்பும் கொடுக்கப்பட்டன. மூன்று வேளை உணவு , அதில் ஏதேனும் ஒரு வேளை புரதச்சத்து மிகுந்த ஒரு பொருள் (வேகவைத்த வேர்க்கடலை, வேகவைத்த மூக்குக் கடலை, பன்னீர், முட்டை, இவற்றில் ஒன்று). மூச்சு பயிற்சியும் செய்ய சொன்னார்கள்.
ஓயாமல் நண்பர்கள் அழைத்தார்கள்.
எல்லோரிடமும் மன தைரியத்துடன் இருப்பதாகச் சொன்னேன். எனக்கு மிதமாகத்தான் நுரையீரலில் பாதிப்பு. வேறு பிரச்சனைகள் இல்லை. அறிகுறிகளும் மிதமாகவே இருந்தன. ஆகையால் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவோம் என்றே அனைவரிடமும் பேசினேன்.
உண்மையில் மனம் அவ்வளவு தைரியமாக இல்லை. மூன்றாவது முறையாக என் வீடு தனிமைப்படுத்தப் பட்ட நிலையில் நான் மருத்துவமனையில் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தேன். இங்கிருந்து மீள்வோமா என்ற சிந்தனை அவ்வப்போது தோன்றி புரட்டி எடுத்தது. என் படுக்கையிலிருந்து மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு இயங்கிக் கொண்டிருப்பதை பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. காலையிலிருந்து இரவு வரை வரும் ஒவ்வொருவரின் நிலை, எந்த அளவு அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாருக்கு எப்படிப்பட்ட தனிமைப்படுத்துதல் (வீடு/கல்லூரி/மருத்துவமனை) என்பதை ஒலிபெருக்கியில் சொல்வார்கள். கவனிப்பேன். சிலர் மருத்துவமனையில் இருப்பதற்கு பயந்தும் இருந்தார்கள். சிலரோ அவசியம் இல்லையென்றாலும் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார்கள். இத்தனைக்கும் இடையில் தினமும் ஓரிரு அழுகைக் குரல்கள், மரண ஓலங்கள்!
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கேட்ட அதே ஒலிகள்! இடையில் எங்கள் வார்டிலும் ஒருவர் மரணம் எய்தினார். இந்நிலையில் எவ்வளவு தூரம் நெஞ்சில் உரமிருப்பதாக நடிப்பது? நமக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்ற பயம். தம்பிக்கு என்னைக் காட்டிலும் பாதிப்பு அதிகம், அவனுக்கு ஏதும் ஆகக்கூடாதே... தூக்கம் என்ற விஷயமே மறந்துபோய்விட்டது. அலைவுற்ற மனம் மேலும் அலைந்தது. இங்கே கொடுக்கப்பட்ட பல்வேறு மாத்திரைகளுடன் உறக்கத்துக்கான மாத்திரையும் வாங்கிக்கொண்டேன்.
ஆனாலும் பலனில்லை. மேலும் பெற்றோரின் கடைசி தருணங்கள் நினைவில் வந்துகொண்டே இருந்தன. நாங்கள் மருத்துவமனையில் இருந்தபோதே இரண்டு உறவினர்களும் இறந்த செய்தி கிடைத்தது. அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்றாலும் இறப்பதற்கு முன்பு அவர்கள் இருந்த நிலையை யோசித்தால் அவர்களுக்கும் கொரோனா தொற்று வந்திருக்கவேண்டும். அதில்தான் அவர்கள் இறந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
இதனால் என் குடும்பத்தினர், குழந்தைகள் அம்மாவின் இறுதிக் காரியத்தில் பங்கேற்ற பெரியப்பா, சித்தப்பா ஆகியோருக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாதே என சிந்தித்துக்கொண்டே இருந்தேன். அச்சம் ஒரு சூறாவளியைப் போல் என்னை சுழற்றுவதைக் கவனித்தேன். ஆயினும் ஒன்றும் செய்ய இயலவில்லை.
இவ்வளவும் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தினாலும் அம்மாவும் அப்பாவும் ஆத்ம வடிவில் நமக்கு துணையிருப்பார்கள் என்ற எண்ணமே எனக்கு பற்றுக்கோடாக இருந்தது.
நாங்கள் சேர்ந்து பத்து நாட்கள் முடியும்போது மீண்டும் சிடி ஸ்கேன் எடுத்தனர். எங்களுக்கு முன்னைக்காட்டிலும் நுரையீரல் தேறி இருப்பதாகக் கூறினார்கள். மறுநாள் பதினொன்று நாட்கள் கழித்து வீட்டுக்கு அனுப்பினர்.
வீட்டில் இருவாரம் தனிமையில் இருக்குமாறும் மேலும் ஒரு மாதம் நல்ல புரதம், வைட்டமின், தாதுச்சத்து உள்ள உணவை உட்கொள்ளுமாறு ஆலோசனை தந்தனர்.
வீட்டிற்கு வந்தும் நிம்மதி இல்லை. மருத்துவமனையில் இருந்த உற்சாகமின்மையும் மனச்சோர்வும் இங்கும் தொடர்ந்தன. வீட்டு வாசலில் ஏற்கனவே அடைத்திருந்த தகடு இருந்தது. மறுநாள் வந்த மாநகராட்சி ஊழியர்கள் மீண்டும் பழையபடி வைத்து தகட்டினை நன்றாக முறுக்கிக் கட்டினர். நான் உச்சகட்ட விரக்தியில், ‘‘இன்னும் ஒரு மாதம் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள். பார்க்க வேண்டிய துன்பங்களை எல்லாம் பார்த்தாயிற்று. உங்கள் இஷ்டம்'' என்றேன்.
வீட்டில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தோம். முழு நேரமும் அறையில் இருக்க முடியவில்லை என்றால் வீட்டின் மாடியில் தனியாக வந்து அமர்ந்து விடுவேன். தனியாக தட்டும் டம்ளரும் கிண்ணமும் வைத்துக்கொண்டேன். அனைவரும் முகக்கவசம் அணிந்துகொண்டு சமூக இடைவெளியை இயன்ற அளவில் கடைபிடித்துக்கொண்டு இருந்தேன். இருப்பினும் அச்சம் விலக மேலும் சில நாட்கள் ஆயின.
இந்த இரண்டு மாதங்களில் மனதளவிலும் உடலளவிலும் சந்தித்த இடர்களைப் பார்க்கும்போது என்னுடைய சக ஊழியர் ஒருவர் திருவனந்தபுரத்தில் கூறியது நினைவில் வந்தது: ‘‘நீங்கள் இந்தியாவிலேயே ஏன் உலகத்திலேயே பாதுகாப்பான இடமான திருவனந்தபுரத்தில் இருக்கிறீர்கள். தற்போது சென்னைக்குச் செல்வதைத் தவிருங்கள்'' என்று சொன்னார். அது ஏப்ரல் மாதம். அங்கு கொரோனா பாதிப்பு மிகக்குறைவாக இருந்த சமயம்.
ஆனால் விதி வலியது. அது என்னை கொரோனா சுழலில் தள்ளி உறவுகளைப் பறிகொடுத்து தவிக்க வைத்து வேடிக்கைப் பார்த்தது. இப்போது நானும் தள்ளி நின்று கடந்த இருமாத நிகழ்வுகளை மனக்கண்ணில் ஓடவிட்டு வேடிக்கை பார்க்க பழகிக்கொண்டிருக்கிறேன்.
(கட்டுரையாளர் இந்திய கணக்கு மற்றும் தணிக்கைப் பணி அதிகாரி. திருவனந்தபுரத்தில் தலைமை தணிக்கை அதிகாரியாக பணிபுரிகிறார். கட்டுரையில் இடம்பெற்றிருப்பவை அவரது சொந்தகருத்துகள். அவர் பணிபுரியும் நிறுவனத்துடன் தொடர்புடையவை அல்ல.)
ஆகஸ்ட், 2020.