இந்திய - இலங்கை அரசுகளுக்கு இடையிலான உறவில், மிஞ்சியிருப்பது ‘மாகாணசபை’ என்ற ஒரே சொல் மட்டுமே. இந்த நிலையில், ஜோதிடர்களின் ஆலோசனைப் படி, எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில், இலங்கையின் வடமாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக, அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். வடக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளைப் பறித்து, அண்மையில் சிங்களவருக்கு வழங்கியதற்கான பத்திரங்களைக் கொடுக்கும் நிகழ்வில்தான், அவர் இதை அறிவித்தார்.
இலங்கையில் இன ரீதியான பிரச்னைக்கு தீர்வுகாணப்படவேண்டும் என்று இந்தியா நன்கு ’உணர்ந்ததன்’ பலனாகவே, வடக்கு - கிழக்கு இணைந்த மாகாண சபை ஆலோசனை இந்தியாவால் முன்மொழியப்பட்டது. அதன்படி, 1987 அக்டோபர் 29ஆம் தேதி இலங்கை - இந்திய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தாலும் கூட, தமிழ் மக்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கவேண்டும் என, அன்று தொடக்கம் இன்றுவரையில் இலங்கையின் ஆட்சியாளர்கள் எண்ணவேயில்லை. 1988 நவம்பர் 19-ல் வடக்கு - கிழக்கு இணைந்த நிலையில், மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றிருந்தது. இப்போதோ, தனியான வடக்கு மாகாணத்திற்கான தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
இந்திய அரசைப் பொருத்தவரை, ‘மாகாணங்களுக்கான அதிகாரம்’ என்ற அடிப்படையிலேயே தீர்வு அமையவேண்டும் என்ற நிலைப்பாடே இன்றுவரையில் காணப்படுகிறது. இலங்கை ஆட்சியாளர்களைப் பொருத்தவரை, தீர்வு வழங்கும் கட்டாய சூழல் ஏற்பட்டால் வடக்கு மாகாணத்திற்கு மட்டும் ஏதாவது சிறு சலுகைகளை வழங்குவதுடன் தமது கடைமை முடிந்துவிட்டதாக தோற்றங்காட்டலாம் என்று எண்ணுவதாகவே கருத முடியும். இதன் ஒரு கட்ட மாகவே, இந்தியாவின் ஆலோசனைக்கு அமைய, 1987 நவம்பர் 14-ல் இலங்கை நாடாளுமன்ற அரசியலமைப்பில், 13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணசபைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதன்படி அமைந்த வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைப்பை, 2006 அக்டோபர் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இலங்கை துண்டித்து விட்டது. இதன் மூலம் அப்போதே இந்தியாவிற்கு இலங்கை பூடகமான குறியீடாக, ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறது. இந்தியாவின் சொல்லுக்குள் முழுமையாகச் செயற்படப்போவதில்லை என்பதே அது.
இலங்கையில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும்கூட, ஆயுதப் போராட்டம் ஏற்படுத்திய தாக்கத்தின் பலனாக இலங்கை அரசுக்கு சர்வதேச நெருக்கடி உண்டானது. அதிலிருந்து மீள்வதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான சூழலுக்குள் இலங்கையின் ஆட்சி பீடம் தள்ளப்பட்டிருக்கின்றது. போர்க்காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து இலங்கையைக் காப்பாற்ற, இந்தியா எந்த அளவிற்கு தோள் கொடுத்ததோ, அதற்கு நிகராக தற்போதைய நெருக்கடியில் இருந்தும் வெளிவருவதற்கு, இந்தியாவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு முக்கியம். இந்தச் சூழலில்தான், இந்தியாவின் விருப்பையும் சர்வதேசத்தின் விருப்பையும் கரிசனையுடன் கவனத்தில் எடுப்பதாகக் காட்டிக்கொள்வதற்காகவே, வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டாலும், அதன் மூலம் ஆட்சியமைக்கும் கட்சி அல்லது இந்த மாகாணசபையின் ஆட்சி பீடத்துக்கு, எந்த அளவுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும் என்பது அடுத்து நிற்கும் கேள்வியாகும். மாகாண சபையை நிர்வகிப்பவர் முதலமைச்சராக உள்ள போதிலும், மாகாணசபைகளை நிர்வகிப்பதற்காக வடக்குக்கும் கிழக்குக்கும் தனித்தனி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆளுநர்கள் இருவரும் இராணுவத்தின் உயர்நிலை அதிகாரிகளாகக் கடமையாற்றியவர்கள் என்பதுடன், முதலமைச்சர்களைவிடக் கூடுதல் அதிகாரம் படைத்தவர்களாகவுமே விளங்கிவருகின்றனர்.
இதைவிடவும், அனைத்தையும் தீர்மானிக்கும் வல்லமை படைத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே இலங்கையில் நிலவி வருகின்றது. உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி முதல் பல்கலைக்கழகத் துணைவேந்தர்வரை நியமனம் வழங்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது. இந்த நிலையில் ஒரு மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தின் பலம், எந்த அளவுக்கு இருக்கும் என்பதை எளிதாக உணரமுடியும்.
வடக்கு மாகாண சபையை, தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கின்ற ஏதாவது ஒரு கட்சி கைப்பற்றிக் கொண்டாலும் கூட, அவர்களால் வலுவான நிர்வாகம் ஒன்றை நிர்வகிக்க முடியாது என்பதே பட்டவர்த்தனமான உண்மையாகும். இலங்கையில் ஒன்பது மாகாண சபைகள் உள்ள நிலையில், வடக்கு தவிர்த்த மற்ற மாகாண சபைகளின் அதிகாரம், மத்திய ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழேயே உள்ளது. இந்த நிலையில் அதிகாரங்களை வழங்குகின்ற போது, மற்ற மாகாண சபைகளிலோ நாடாளுமன்றத்திலோ பெரும்பான்மையுடன் எடுக்கப்படும் முடிவுகள், தமிழ் மக்களுக்கு சார்பான தீர்வைத் தந்துவிடப்போவதில்லை என்பதே உண்மையான விஷயமாகும். இதற்கு சமீபத்திய உதாரணமாக, கடந்த பிப்ரவரி 16ம் தேதி அன்று பதுளையில் நடைபெற்ற 31 ஆவது மாகாண முதலமைச்சர்களின் மாநாட்டில், ‘13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் கோரப்பட்ட போலீஸ் அதிகாரம், இப்போதைக்கு மாகாணங்களுக்கு தேவையில்லை’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையைக் குறிப்பிடலாம்.
தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டாலும் கூட, வடக்கு மக்களின் தேர்தல் ஆர்வமானது மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. தேர்தலில் வாக்களிப்பு வீதமும் குறைவான விழுக்காட்டினையே பிரதிபலிக்கும். போரின் வடுக்களில் இருந்து மீளாத நிலையிலேயே இன்றுவரையில் வடக்கு மாகாண மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் என நடைபெற்று முடிந்த தேர்தல்களில் ஐம்பது சதவீதமான மக்கள்கூட வாக்களிப்பில் பங்கெடுக்கவில்லை.
போர் மூலம் வெற்றி பெற்ற அரசாங்கம் வடக்கு மக்களின் மனங்களையும் வென்றிருக்கின்றோம் என்று காட்டுவதற்கான முனைப்பிலும் தீவிரம் காட்டிவருகின்றது. பொருத்தமான வேட்பாளர்களை முன்னிறுத்தவேண்டும் என்பதற்காகவே ஆளும்தரப்பில் நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுவந்தது. இந்நிலையில், தேர்தலுக்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த சிலரையும் மத்தியில் ஆளுந்தரப்பு வேட்பாளர்களாக களம் இறக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
ஒட்டுமொத்தத்தில் பெரும் எதிர்பார்ப்புக்களைத் தோற்றுவித்துள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தல் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஓரளவு ஆறுதலான விஷயமாக அமைந்தாலும் கூட வடக்கு மக்களுக்கு எந்தவித நன்மையையும் தந்துவிடப் போவதில்லை என்பதே நிதர்சனம்.
மே, 2013.