கொங்கு நாட்டுக் கவியுலகம்!

கொங்கு நாட்டுக் கவியுலகம்!

Published on

மூதறிஞர் இராசாசியைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைப் படிக்கையில் அவர் பிறந்த ஊர் கூறப்பட்டிருக்கிறது. ‘‘அவர் சேலம் மாவட்டம் தொரப்பள்ளியில் பிறந்தார்'' என்பதே அது.

சேலம் மாவட்டத்தில் நான் குறுக்கும் நெடுக்குமாகச் சுற்றிப் பார்த்துவிட்டேன். தொரப்பள்ளி என்ற ஊரையே காணவில்லை. பிற்பாடு ஒரு வேலையின் பொருட்டு ஓசூரில் அலைந்துகொண்டிருந்தபோது அதன் புறநகர்ப் பகுதியில் அழகிய

 சிற்றூர் ஒன்று இருந்தது. அதன் பெயர் ‘தொரப்பள்ளி'. அவ்வூரை அலசி ஆராய்ந்ததில் அங்கே இராசாசி பிறந்த வீடு இருந்தது. அது இப்போது அரசினரால் அவருடைய நினைவில்லமாகக் காக்கப்படுகிறது. சேலத்திலிருந்து ஏறத்தாழ நூற்றைம்பது கிலோ மீட்டர்களுக்கும் அப்பால் இருக்கும் ஊர்தான் தொரப்பள்ளி. ஆனால், அது சேலம் மாவட்டம் என்றே குறிக்கப்படும். ஆனால், அவ்வூர் தமிழகக் கருநாடக எல்லையில் பெங்களூரினை ஒட்டி இருக்கிறது என்பதே உண்மை.

இன்னொரு நிகழ்வினையும் சேர்த்துக் கூற வேண்டும். மூத்த நடிகர் பி. எஸ். வீரப்பா பிறந்த ஊர் கோவை மாவட்டத்தில்  ‘சிவன்மலை' என்ற ஊரில் பிறந்தார் என்றிருக்கும். உண்மையில் சிவன்மலைக்கும் கோவைக்குமிடையே எண்பது கிலோமீட்டர்கள் தொலைவு.

இவ்விரண்டு கூற்றுகளும் உணர்த்துவது என்ன? கொங்குநாடு என்பது அவ்வளவு பரந்து விரிந்தது. இங்கே பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் பரப்பளவும் ஐரோப்பியக் கண்டத்தின் சிறு நாட்டின் பரப்பளவுக்கு நிகரானது. கொங்கு நாடு இருபத்து நான்கு நாடுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது என்கையிலேயே அதன் பெரும்பரப்பளவு விளங்கும். வரலாற்றுக் காலந்தொட்டு இவ்விடத்தில் தனித்த பண்பாட்டுக் கூறுகளும் கலை இலக்கியச் செழுமையும் பொலிவுற்று விளங்குகிறது.

கொங்கு நாட்டின் கொடுமணல் பகுதியில் அகழ்வாய்வுகள் நடக்கின்றன. வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் உருவாகும் நொய்யல் நதி காட்டாறாகப் புரண்டு பாய்கிறது. அவ்வாற்றின் வெள்ளப்புரள்வு குறைந்து ஓரளவு சமநிலத்தில் பாயும் இடம்தான் கொடுமணல்.

சென்னிமலைக் குன்றுக்குத் தென்கிழக்கில் இருக்கின்ற வளமான பகுதி. அங்கே அகழ்வாய்வில் கிடைத்த தடயங்கள் சங்க காலத்து மக்கள் வாழ்வுக்குக் கட்டியம் கூறுகின்றன. மேற்குக் கடற்கரைத் துறைமுகத்திலிருந்து கிழக்கு கடற்கரையோர ஊர்களுக்குச்

செல்லும் பெருவழியானது முற்காலத்தில் ‘இராசகேசரிப் பெருவழி' என்று அழைக்கட்டது. அத்தட வழியில் அமைந்திருக்கும் ஊர்தான் கொடுமணல். கீழடியைப்போல் பரந்த அகழ்வாய்வு செய்யப்படாமல் வைக்கப்பட்டிருக்கும் கொடுமணலைத் தோண்டி னால் வியக்கத்தக்க உண்மைகள் வெளிப்படும். உடுமலைப்பேட்டையை ஒட்டியுள்ள ஆன்பொருநை ஆற்றங்கரையிலும் தொல்லியல் எச்சங்களைக் காணலாம்.

சங்கத்தில் பற்பல புலவர்களும் அரசர்களும் கொங்குப் பகுதியில் வாழ்ந்து வளங்கொழித்திருக்கிறார்கள். தான் போர்ச் சிறையனாக அடைபட்டிருக்கும் சூழலில் காலந்தாழ்ந்து தரப்பட்ட தண்ணீரைக் குடியாமல் வடக்கிருந்து உயிர்துறந்தவன் இந்நிலத்தின் சிற்றரசன். அதியமான் ஔவை நெல்லிக்கனி என்று அறிகின்றோம். அதியமானின் தகடூர் பண்டைய கொங்கு நாட்டிற்குள் வருவதுதான்.

சேர சோழ பாண்டிய நாடுகளாகப் பிரிவுற்றிருந்த பண்டைய தமிழகத்தில் கொங்குநாடு

சேரநாட்டின் ஒரு பகுதியாக விளங்கியது. அதற்கு முன்னரும் பின்னரும் கொங்கு நாட்டின் வெவ்வேறு பகுதிகள் தனித்த திறனுடைய சிற்றரசர் களால் ஆளப்பட்டுமிருக்கின்றன. மலைகளும் காடுகளும்

காட்டாறுகளுமாய் விளங்கிய இந்நிலத்தில் சிறுசிறு நாட்டுப்பகுப்பு தவிர்க்க முடியாதது. சேரப் புலவர்களாய் அறியப்பட்ட பலரும் கொங்கினைச்

சேர்ந்தவர்கள். சங்க காலப் புலவர்களில் பெரும்பாலோர் ஊர்ப்பெயர்களால் அறியப்படுபவர்கள். அவ்வூர்ப் பெயரை முன்வைத்து ஆழ்ந்த ஆய்வுகள் எவையும் செய்யப்படவில்லை என்பது கண்கூடு.

பெருங்காப்பியப் படைப்புகளில் கொங்கு நாடும் தன் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறது. பெருங்கதை யாத்த கொங்கு வேளிர் இந்நாட்டுப் புலவர். மதுரையில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் தோன்றி தமிழை வளர்த்தன. நான்காம் தமிழ்ச்சங்கம் கொங்கு நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. தற்போது கருநாடகத்தில் உள்ள சரவணபெலகுள என்னும் பகுதி இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் தென்னிந்தியாவின் சமண மதப்பெருநகராக விளங்கியது. அதற்கு நிகரான பெருமையோடு தமிழகத்தில் விளங்கிய நகரம் கொங்கு நாட்டின் விசயமங்கலம். இந்த விசயமங்கலத்தில்தான் நான்காம் தமிழ்ச்சங்கம் செயல்பட்டது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் விசயமங்கலத்திற்கு அருகில் ‘செங்கப்பள்ளி' என்றொரு சிற்றூர் இருக்கிறது.

சங்கப்பள்ளிதான் செங்கப்பள்ளி ஆகியிருக்க வேண்டும். நான்காம் தமிழ்ச்சங்கத்தின் கொடைகளில் ஒன்றுதான் பெருங்கதை. கொங்கு வேளிர் அச்சங்கத்தின் தலைமைப் புலவராக விளங்கியிருக்கக் கூடும். அவரும் அப்பகுதியின் சிற்றரசர்தான். உதயணன் வாசவதத்தையைப் பற்றிய கதையே பெருங்கதை. விசயமங்கலத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. அதில் பொறிக்கப்பட்டிருந்த சொற்றொடர் மெய்சிலிர்க்கச் செய்வது. ‘‘இந்தக் கற்றளி பெருங்கதையின் காப்பியச் சுவையில் ஆழ்ந்திருக்கிறது' என்னும் பொருளுடைய சொற்றொடர் அது என்கிறார் கல்வெட்டறிஞர் புலவர் இராசு.

சோழமன்னனோடு பிணக்குற்ற கம்பர் கொங்குநாட்டுச் சிற்றரசர் களின் காப்பில் சிறிதுகாலம் இருந்தார். அவ்வமயம் அவர் யாத்ததாகச் சொல்லப்படும் பாடலொன்று தனிப்பாடலாக உலவுகிறது.

‘‘நீரெல்லாம் சேற்று நாற்றம்

நிலமெல்லாம் கல்லும் முள்ளும்

ஊரெல்லாம் பட்டி தொட்டி

உண்பதோ கம்பஞ் சோறு

பேரெல்லாம் பொம்மன் திம்மன்

பெண்களோ நாயும் பேயும்

காருலாவுங் கொங்கு நாட்டைக்

கனவிலும் கருத ஒண்ணாதே''

என்பது அந்தப் பாடல். வஞ்சப் புகழ்ச்சியாய் எழுதப்பட்டுள்ள இப்பாடல் கம்பருடையதில்லை என்போரும் உளர். சோழநாட்டுச் சமநிலத்தில் அலைந்து திரிந்த கம்பருக்குக் கொங்கு நாட்டின் காடளாவிய நிலப்பரப்பு புதிராக இருந்திருக்கிறது.

தமிழ் இலக்கணத்திற்குத் தொல்காப்பியத்தையே முன்னூலாகக் கொள்கிறோம். நம்மிடமுள்ள இலக்கண நூல்களில் அதுவே காலத்தால் பழையது. அதனை அடுத்தொரு நூலைக் கைவிளக்காகக் கொள்ள வேண்டும் எனில் அது நன்னூலே. நன்னூலை இயற்றிய பவணந்தி முனிவர் கொங்கு நாட்டில் பெருந்துறையை அடுத்த சீனாபுரத்தைச் சேர்ந்தவர். இவ்வூரும் விசயமங்கலத்திற்கு அருகே இருக்கும் ஊர்தான். பவணந்தியாரின் பிறப்பிடம் தொண்டைநாட்டில் இருக்கும் ஊரே என்று மதங்கொள்வாரும் உளர். பிற்பாடு சிற்றிலக்கியக் காலம் தொடங்கியவுடன் அதனில் பங்காற்றிய புலவர் பெருமக்கள் பலர் கொங்குநாட்டினைச்

சேர்ந்தவர்கள்.

அவற்றையெல்லாம் கடந்து தற்காலத்திற்கு வருவோம். விடுதலைப் போராட்டத்தில் எண்ணற்றவர்கள் இப்பகுதியிலிருந்து பங்கேற்றனர். கொடிகாத்த குமரன் உள்ளிட்ட பலரும் அவ்வேள்வியில் தம் உயிரை நீத்தனர். நாமக்கல் கவிஞர் விடுதலை உணர்ச்சியூட்டும் பாடல்களை எழுதினார். ‘‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'' என்று காந்தியாரின் அறப்போராட்டத்தை முன்மொழிந்தவர்.

தமிழ்க் கவிதை இலக்கியத்தில் தனிப்பாய்ச்சலை நிகழ்த்திய வானம்பாடி இயக்கம் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டதே. வானம்பாடி இதழில் ஒரு படியினை ஏறத்தாழ இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைம்மாற்றிப் படித்தார்கள் என்று கவிஞர் புவியரசு என்னிடம் கூறியிருக்கிறார். ‘‘ஐயையையோ... அந்த இதழை வெளிக்கொண்டு வருவதற்குள் நாங்கள் பட்டபாடு இருக்கிறதே, கொஞ்ச நஞ்சமல்ல. எந்த நேரம் வேண்டுமானாலும் வீட்டுக் கதவை போலீஸ்காரன் தட்டுவான். அவ்வளவு நெருக்கடிக்கு இடையேயும் அந்த இதழைக் கொண்டு வந்தோம்'' என்றார். வானம்பாடியால் புகழ்பெற்றவர்கள் வானம்பாடிக் கவிஞர்கள் என்றே அழைக்கப்பட்டனர். வானம்பாடியில் எழுதியவர்களில் மு. மேத்தா, சிற்பி பாலசுப்பிரமணியன், அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், புவியரசு, கோவை ஞானி, சக்திக்கனல், கங்கைகொண்டான், மீரா, அக்கினிபுத்திரன், தமிழ்நாடன், சி. ஆர். இரவீந்திரன், பிரபஞ்சன், பாலா ஆகியோர் ( இதில் எல்லோரும் கொங்கு மண்டலத்தவர் அல்லர்)  எழுபது எண்பதுகளின் தமிழ்க் கவிதையுலகைப் புரட்டிப் போட்டனர். வானம்பாடி என்ற ஓர் இயக்கம் தோன்றியிருக்கவில்லை எனில் தமிழ் வெகுமக்கள் வாழ்வில் இலக்கணத்தை மீறிய புதுக்கவிதைகள் இவ்வளவு நெருக்கமானதாக ஆகியிருக்காது. எழுத்து சிற்றிதழ் வழியாக அவ்வமயம் தோன்றிய நவீன கவிதைப்போக்கு தனிச்சிறு கூட்டத்தினரால்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். இதற்கிடையில் நிறைய மரபுக் கவிதை நூல்களை வெளியிட்ட வெள்ளியங்காட்டான் என்பவரும் குறிப்பிடத்தக்கவர்.

வானம்பாடி இயக்கம் தன் வரலாற்றுக் கடமையைச் செய்து முடித்ததும் ஓய்ந்தது. அதனால் புகழ்பெற்ற கவிஞர்கள் தமிழ்க்கவிதையுலகில் புகழ்பெற்ற உடுக்களாக உலவி வந்தனர். மேடைகளில் ஆரவாரம் செய்தனர். கல்விப் புலத்தில் அவர்களுடைய கவிதைகளே மேற்கோள்கள் ஆயின. அரசியல் மேடைகள் அவர்களுடைய வரிகளைப் பயன்படுத்திக்கொண்டன. அவர்களில் பலரும் பிற்காலத்தில் தமிழ் எழுத்திற்கான  சாகித்திய அகாதமி விருதினைப் பெற்றார்கள்.

வானம்பாடிக்குப் பிறகு நவீன கவிதைப் போக்கு முன்னணிக்கு வந்தது. வானம்பாடிகள் கைக்கொண்டிருந்த சிற்றளவிலான எதுகைமோனை, முரணழகு, யாப்பில் இல்லையெனினும் ஓசைகுன்றாத வரிகள், மரபு அறிந்த புலமை ஆகிய பலவற்றையும் நவீன கவிதைப்போக்கு கைவிட்டது. அதனால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்ற நிலை.

பேசாப்பொருளைப் பேசுவது புதுமையின் முதல் இலக்காக இருந்தது. மொழி பின்னுக்குப் போனது. கொங்கு நாட்டுக் கவிகள் அந்தப் போக்கிலும் தம் கவிதைகளை முன்னணியில் வைத்தனர். கோவை ஞானி வெளியிட்ட தொலைவிலிருந்து என்ற கவிதைத் தொகுப்பினை வானம்பாடிப் போக்கிற்கும் நவீனப் போக்கிற்கும் இடைப்பட்ட கவிதை நூல் என்று கருதலாம். அந்நூல் எண்பத்து ஒன்பதாம் ஆண்டு வெளியானது. தொண்ணூறுகளில் நவீன கவிதைகளை நான் எழுதத் தொடங்கினேன். என் முதல் மூன்று தொகுப்புகளின் கவிதைகள் அக்காலத்தில் எழுதப்பட்டவை. நான் எழுதத் தொடங்கியபோது இப்பகுதியின் கவிஞர்களாக வானம்பாடிகளே அறியப்பட்டிருந்தார்கள். நவீன கவிதை இலக்கியத்தில் சேலத்தைச் சேர்ந்த சி. மணி அறியப்பட்டிருந்தார். சுகுமாரன், பாதசாரி ஆகியோரும் அறியப்பட்டிருந்தனர். நவீன கவிதைப்போக்கில் எண்ணிலடங்காத கவிஞர்கள் தத்தம் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டார்கள். ஒன்றிரண்டு தொகுப்புகளுக்குப் பின்னர் அவர்களால் தொடர்ந்து செயல்படமுடியவில்லை. அல்லது உரைநடைக்குச் சென்றுவிட்டனர் (நவீன கவிதையே உரைநடைதானே என்கிறீர்களா? அதுவும் சரிதான்). தென்பாண்டியன், ஸ்ரீபதி பத்மநாபா, பாலைநிலவன், முத்தமிழ் விரும்பி, சிபிச் செல்வன், பழ. புகழேந்தி என்று சில பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. தனித்த குரலுடன் ஒலித்த பெண்பாற் கவிஞர் என சுகந்தி சுப்ரமணியனைக் கூறுதல் வேண்டும். எண்ணிக்கையில் அளவாயினும் தரமான கவிதைகளை எழுதியோர் என க. மோகனரங்கன், சூத்ரதாரி ஆகியோரைச் சொல்லலாம். இசை, இளங்கோ கிருஷ்ணன் போன்றோரும் கவிதை, கவிதையியல் சார்ந்து தொடர்ந்து ஊக்கத்துடன் செயல்படக் கூடியவர்களாக அறிகிறேன். இன்றைய கவிதை இலக்கியப் போக்கில் ஊரடையாளத்தோடும் இலக்கிய அமைப்புகளின் அடையாளத்தோடும் கொங்கு நாட்டுக் கவிஞர்கள் தனித் தனியே இயங்குகின்றனர். பொள்ளாச்சியிலிருந்து இரா. பூபாலன், அம்சப்ரியா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவாறு எழுதுகிறார்கள். கோவையிலேயே பல இலக்கிய அமைப்புகள் இருக்கின்றன. சேலத்தில் இலக்கியச் சுவைஞர்களாகத் தென்படுபவர்கள் பலர். அவர்களில் சிலர் முயன்றால் முன்னணிக்கு வருவதும் கைகூடும். நல்ல கவிஞர்களாக மலர்ந்திருக்க வேண்டியவர்கள் முகநூல், சிட்டுரை என்று அங்கே கடை விரிக்கப் போய்விட்டார்கள். இன்றைக்கு மாவட்ட எல்லைகள் தகர்ந்துபோய்விட்டன. இன்னார் இவ்விடத்திலிருந்து எழுதுகிறார் என்று அடையாளப்படுத்தவே அச்சமாக இருக்கிறது. ஏனென்றால் ஏதோ ஒரு சூழ்நிலையில் படைப்பிலக்கியத்தில் செயல்படுவோர் சென்னையில் குடியேற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் பிற பகுதிக்குச் சென்று வாழ்கிறார்கள். இங்கேயே பிறந்து படித்து வளர்ந்து வாழ்ந்து வரும் படைப்பாளியால்தான் இந்நிலத்தின் அழகையும் வலியையும் தொடர்ந்து கண்ணுற முடியும். காலம் அத்தகைய வாய்ப்பை எல்லார்க்கும் வழங்கிவிடவில்லை. அத்தகைய வாய்ப்பினைப் பெற்ற சிலரால்தான் இந்நிலத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அவர்தம் வாழ்க்கையைப் பற்றியும் சிறப்பாக எழுத முடியும்.

செப்டெம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com