கேசினி இனி இல்லை!

கேசினி இனி இல்லை!
Published on

இருபது ஆண்டுகள் விண்ணில் வலம் வந்து லட்சக்கணக்கான படங்களைப் பூமிக்கு அளித்துவிட்டு சமீபத்தில் தலைமையிட உத்தரவுப்படி தன் மரணத்தைத் தானே தேடிக் கொண்டது கேசினி.

இது சனிக்கிரகத்தை ஆராய நாசாவால் அனுப்பப்பட்ட விண்கலம். 1997ல் ப்ளோரிடாவில் இருந்து ஏவப்பட்ட காசினி, வீனஸ், ஜூபிடர் போன்ற  கிரகங்களைத் தாண்டி பயணம் செய்து சனிக்கிரகத்தை அடைய ஏழு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. மணிக்கு பல்லாயிரம் மைல்கள் வேகத்தில் பயணப்பட்டு, போகப்போக வேகத்தை மேலும் கூட்டி, சனிக்கிரகத்தின் சுற்றுப்பாதையில் தன்னை நிறுத்திக்கொண்டபோது அது 2004-ஆம் ஆண்டு. அதிலிருந்து 13 ஆண்டுகள் சனிக்கிரகத்தை சுற்றிச்சுற்றி வந்து மனிதகுலத்துக்காகப் படங்களை எடுத்து அனுப்பிக்கொண்டே இருந்தது. சனிக்கு ஏராளமான நிலவுகள். அவற்றில் டைட்டன் என்பதே பெரிது. அதன்மீது ஹெய்கன் என்ற ஒரு ஆய்வுக்கருவியை  இறக்கி, மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்து பூமிக்கு விவரங்களை அனுப்பியது கேசினி.

மனிதன் 400 ஆண்டுகளாக விண்வெளியை தொலைநோக்கி கொண்டு ஆய்ந்துவருகிறான். கலிலியோ சனிக்கிரகத்தைப் பார்த்து முதன்முதலாக அதன் இரு நிலவுகளைக் கண்டறிந்தார். பின்னர் கிரிஸ்டியன் ஹுய்ஜென் என்பவர் அதன் பெரிய நிலவான டைட்டனை ஆராய்ந்தார். ஜியோவின்னா கேசினி என்ற வானியல் அறிஞர், சனியைச் சுற்றி இருக்கும் மேலும் நான்கு நிலவுகளைக் கண்டறிந்து அவற்றுக்குப் பெயரிட்டார். சனியைச் சுற்றி இருக்கும் வட்டங்களில்  இருக்கும் இடைவெளிகளையும் அவரே சொன்னார். இதெல்லாம் நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக.

இப்போது சனியை நேரடியாக ஆராய அனுப்பிய விண்கலத்துக்கு ஏன் கேசினி என்றும், சனியில் இறங்கி ஆய்வு செய்யும் கருவிக்கு ஹுய்ஜென் என்று ஏன் பெயரிட்டார்கள் எனப் புரிந்திருக்கும்!

இந்த விண்கலம் அனுப்பியிருக்கும் தகவல்கள் என்ன?

நாஸா எல்லா உண்மையையும் உலகுக்கு வெளிப்படையாகச் சொல்லிவிடும் என்று நம்பிவிடும் குழந்தைகள் அல்ல நாம். ஏராளமான படங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றில் மிக அழகாக இருக்கிறார் சனிபகவான். கிறிஸ்டோபர் நோலனின் இண்டர் ஸ்டெல்லார் படத்தில் வருவதுபோலவே இந்தப் படங்களும் இருப்பது வியப்பு.

சனிக்கோள் வாயுக்களால் ஆனது அதன் மேற்பரப்பு புயல்களால் நிறைந்திருக்கிறது. அதற்கு என்று நிரந்தரமான பருவநிலை இல்லை. மாறிமாறி வரும். சனியில் ஓராண்டு என்பது பூமியில் 30 ஆண்டுகளுக்குச் சமம். கிட்டத்தட்ட அக்கோளின் ஆறுமாதங்களுக்குச் சற்றுக்குறைவாக கேசினி அதனுடன் சுற்றிவந்து ஆய்வு செய்திருக்கிறது!  அதன் நிலவுகளில்  டைட்டன், என்சிலாடஸ் ஆகியவை முக்கியமானவை. ஏனெனில் அங்குதான் ஏதோ ஒரு வகையில் உயிர்கள் வாழ ஏற்ற சூழல் இருக்கலாம் என்று ஐயம். டைட்டனைப் பற்றி அது அளித்திருக்கும் தகவல்கள் பிரமிப்பூட்டுகின்றன. அது கிட்டத்தட்ட பூமியைப்போல் தோற்றம் கொண்டது. நீர்நிலைகள், கடல்கள் உண்டு. ஆனால் அவை நிரம்பியிருப்பது மீத்தேன் திரவத்தால். அந்த ஏரி, கடல்களில் அலைகளும் வீசுமாம். மீத்தேன் மழையும் புயலுமாக டைட்டனின் பருவநிலை சிக்கலானது.

 என்சிலாடஸ் என்கிற நிலவின் தென் துருவப்பகுதியில் கடலுக்கு அடியில் இருந்து நீரும் பனிக்கட்டியும் பீய்ச்சி விண்நோக்கி அடித்துக்கொண்டே இருப்பதை காசினி படம் எடுத்துள்ளது. மைல்கள் கணக்கில் நீண்ட பனிக்கட்டியாய் உறைந்த பரப்பின் அடியிலிருந்து பீய்ச்சி அடிக்கும் உப்பு நீர் அது! இந்த பனிப் பீய்ச்சலில் பெரும்பகுதி என்சிலாடஸ் மீதே மீண்டும் விழுகிறது. இந்த பனிப்பொழிவால் அந்த நிலவு வெண்ணிறத்தில் இருக்கிறது. இது போன்று பீய்ச்சி அடிக்கும் துளைகளில் இருந்துதான் ஆதிகாலத்தில் பூமியில் உயிர்கள் தோன்றி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஒருவேளை இந்த நிலவும் பூமியைப்போல் உயிர்கள் தோன்றுவதற்கு  முன்பிருந்த காலகட்டத்தில் இருக்குமோ என்ற ஆய்வும் உள்ளது. பூமியை விட 763 மடங்கு பெரியது சனி. அதைக்கிட்ட சென்று பார்த்துப் படம் எடுத்து ஆய்வுகள் செய்துவிட்டு அதே கிரகத்தின் வான்வெளியில் இறங்கி எரிந்து சாம்பல் ஆகிவிட்டது கேசினி. பூமியைத் தவிர வேறுகோள்களில் உயிர்கள் உண்டா என்ற ஆய்வின் முக்கியமான படிகளில் இதுவும் ஒன்று!   

அக்டோபர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com