குழந்தைகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள்!

குழந்தைகளுடன் மனம்விட்டுப் பேசுங்கள்!
Published on

என் மகள் மாலையில் பள்ளி முடிந்து வந்ததும் ஒரு மணி நேரம் டியூசன், அப்புறம் டான்ஸ் கிளாஸ்.

காலையில் சீக்கிரமே எழுந்து ஹோம் ஒர்க் பண்ணிடுவா. அப்புறம் சனி ஞாயிறுல அவளுக்கு ரோபோட்டிஸ், அபாகஸ், நீச்சல் போன்ற வகுப்புகளுக்கு அனுப்புறோம். போட்டித்தேர்வுகளுக்கும் இப்பவே தயார் ஆகிறாள்” பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு அம்மா. அவரது மகள் படிப்பது நான்காம் வகுப்பு.

இதுவாவது  பரவாயில்லை. எல்கேஜி படிக்கும் பையனுக்கு இன்னும் 13 ஆண்டுகள் கழித்து நீட் தேர்வு எழுதவேண்டும் எந்த பயிற்சி மையம் நல்லது என்று கேட்கும் தாய் தந்தையர்களும் இங்கு உண்டு. இப்படியெல்லாம் தங்கள் ஆசைகளை பிள்ளைகள் மேல் சுமத்தும்போது பிஞ்சுகள் நசுங்கிவிடுகின்றன.

பக்கத்து வீட்டுப்பிள்ளைங்களோட தெருவில சுத்துவீங்களா? மரம் ஏறுவீங்களா? ட்ரெஸ் எல்லாம் டர்ட்டி ஆகிடாது என்று கேட்கும் குழந்தைகளை சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல,  சிறுநகரங்களிலும் பார்க்கிறோம்.

பள்ளிக்குழந்தைகள் மன அழுத்தத்தால் சரியாகப் பேசமறுக்கிறார்கள் என்று மனநல ஆலோசகர்களிடம் பெற்றோர் அழைத்துப்போவது இப்போது சகஜமான காட்சி.

பள்ளி செல்லும் குழந்தைகள் படிப்பு, நட்பு, பெற்றோர் - ஆசிரியர் தரும் நெருக்கடிகள் என ஏதேனும் ஒரு வகையில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் கண்டறிவது எப்படி? எந்த வகையில் எல்லாம் மன அழுத்தம் ஏற்படுகிறது? அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் என்னென்ன?

என்பது குறித்து விளக்குகிறார் உளவியல் நிபுணர் ஹேமமாலினி.

  • குழந்தைக்கு சில மணித்துளிகளாவது நேரம் ஒதுக்கி அவர்களது குறைகளைக் கேட்கவோ, நிறைகளைப் பாராட்டவோ செய்ய வேண்டும். அதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்

  • அலுவலகத்தில் இன்று என்ன நடந்தது என்று பெற்றோர்கள் அவர்களுடன் உட்கார்ந்து பேசும்போது பள்ளியில் இன்று என்ன நடந்தது என சொல்ல முன்வருவார்கள். குழந்தைகள் என்ன சொன்னாலும் கேட்கத் தயாராக இருக்க வேண்டும்.

  • குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல மறுத்தால் அதற்கு கோபப்படாமல் ஏன், என்ன பிரச்னை எனப் பொறுமையாகக் கேட்டால் குழந்தைகள் பயமின்றி பெற்றோர்களிடம் சொல்வார்கள்.

  • நேரத்திற்கு சாப்பிடுகிறார்களா? என்று பார்க்க வேண்டும். மன அழுத்தத்தில் இருக்கும்போது எளிதாக செரிக்கக் கூடிய உணவுகளைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் மன அழுத்தத்திற்கும் உட்கொள்ளும் உணவுக்கும் தொடர்பு இருக்கிறது. எளிதில் செரிமானமாகாத உணவுகள் உடலில் அதிக ஹார்மோனைச் சுரக்க செய்யும். இதனால் மன அழுத்தம் இன்னும் அதிகமாகும்.

  • எங்கே போகும்போது மற்றும் எந்த நேரத்தில் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். பள்ளிக்குச்

  • செல்லும்போதே, வீட்டுக்கு வரும்போதே அப்படி ஆகிறார்களா என்று பார்க்க வேண்டும்.

  • குழந்தையின் பள்ளி ஆசிரியரோடு தொடர்பில் இருக்க வேண்டும். குழந்தை வகுப்பில் நன்றாகப் படிக்கிறானா? சோர்வாக இருந்தானா? என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வது அவசியம்.

  • தலைவலி, காய்ச்சல், கால்வலி என்று ஏதேனும் சொல்லி பள்ளி செல்வதைத் தவிர்ப்பார்கள். அப்படியானால் பள்ளியில் என்ன பிரச்னை என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

  • படிப்பில் கவனமில்லாதபோது குழந்தைகள் எளிதாக முடிக்கக்கூடிய வேலைகளைக் கொடுத்து முடிக்கச் செய்து பாராட்ட வேண்டும். உன்னால் இதைச் செய்ய முடிகிறதே என்று பாராட்டிப் பேசும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

  • மதிப்பெண்களை விட மதிப்பீடுகள் முக்கியம் என்பதை உணர்த்த வேண்டும்.

  • வீட்டில் செல்லப் பிராணிகளோ அல்லது செடி வகைகளோ வளர்த்து அதைப் பராமரிக்கும் பொறுப்பை ஒபப்டைக்கும்போது தனக்கும் பொறுப்பு இருக்கிறது என குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். மனம் அமைதியும் அடையும்.

  • தினமும் ஒருமணி நேரமாவது வெளியே சென்று நண்பர்களுடனோ, பூங்காக்களிலோ விளையாடச் செய்ய வேண்டும். மன அழுத்தத்தைப் போக்குவதில் விளையாட்டுக்குப் பெரும்பங்கு இருக்கிறது.

  • குழந்தை எப்போதும் போல் இல்லை எனும்போது என்ன நடந்தது என கேட்டுத் தெரிந்துகொள்ள குழந்தைகளின் நண்பர்களுடனும் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும்.

  • அதிகமான நாட்கள் அதாவது இருபது நாட்களுக்கு மேலாக மன அழுத்தத்தில் இருந்தால் உடனே தகுந்த மருத்துவரை அணுகுவது நல்லது.

அக்டோபர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com