குறைந்த மதிப்பெண்ணா ? உங்களுக்கு இந்த உலகமே சொந்தம்!

குறைந்த மதிப்பெண்ணா ? உங்களுக்கு இந்த உலகமே சொந்தம்!
Published on

ப்ளஸ் 2 தேர்வில் அதிகமான மதிப்பெண்களை எடுத்தவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளைப் படிக்கச் சென்று விடுகிறார்கள். குறைந்த மதிப்பெண்கள் எடுத்தவர்கள், அல்லது பாஸ் மட்டும் செய்தவர்கள் என்ன செய்வது? அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் என்ன?

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டால் அவர்களின் வாழ்க்கையே இருண்டுவிடுமென அச்சம் கொள்கிறார்கள். ஆனால் அப்படி நினைக்கத் தேவையில்லை. ஏனெனில் குறைவான மதிப்பெண் எடுப்பவர்களுக்கு இந்த உலகமே சொந்தம் என்று சொல்லும் அளவுக்கு வாய்ப்புகள் குவிந்துள்ளன.

பத்தாம் வகுப்புவரை எல்லோருக்கும் பொதுவான பாடத்திட்டமே உள்ளது. அதன்பின்னர் மாணவர்கள் தங்களுக்கு எது பிரியமோ அந்த பாடப்பிரிவை எடுத்துப் படித்தல் நல்லது. ஆனால் பெரும்பாலும் பெற்றோர் வற்புறுத்தலின்பேரில் அறிவியல் பாடப்பிரிவை எடுத்துவிடுகிறார்கள். அதன் பின்னராவது ப்ளஸ் 2 மதிப்பெண்ணை மறந்துவிட்டு எது தங்களுக்குப் பிடித்திருக்கிறதோ அதைப் படிப்பது பாலபாடம்.

 விஷுவல் மீடியா தொடர்பான படிப்புகள் தற்போது பெருமளவில் வளர்ச்சி அடைந்துள்ளன. இவற்றில் சேர்ந்து படிக்க பெரிய அளவிலான மதிப்பெண்கள் தேவை இல்லை. ஆர்வம் மட்டுமே தேவை.

சாட்டிலைட் சானல்களின் வளர்ச்சியும் அது தொடர்பான இணை ஊடகங்களின் பெருக்கமும் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளன. காட்சி ஊடகங்கள் அல்லாமல் பண்பலை வானொலிகள், இணையதளங்கள் உருவாகி இருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மதிப்பெண் குறைந்துவிட்டதே என்று கவலைப்படாமல் ஒரு கலைக்கல்லூரியில் சேர்ந்து ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு படியுங்கள். அதே சமயம் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் மீது கவனம் வையுங்கள். கடினமாக உழைத்து சில ஆண்டுகள் படித்தால் இந்தத் தேர்வுகளில் வென்றுவிட முடியும். பொறியியல், மருத்துவம் படித்தவர்களே இப்போது இந்த போட்டித்தேர்வுகளுக்குப் படித்து அரசுப் பணிகளை பெறுகிறார்கள். அப்படி இருக்கையில் ஆரம்பத்திலிருந்தே இத்தேர்வுகளுக்குப் படித்துவந்தால் கலைப்பிரிவில் பட்டம் பெறுபவர்கள் இந்தப் போட்டித் தேர்வுகளில் வெல்ல முடியும். கடின உழைப்பு மட்டுமே வெற்றிக்கு முக்கியத் தகுதி. ப்ளஸ் 2 மதிப்பெண் அல்ல.

விஏஓ வேலைக்கான தேர்வு, அலுவலர்கள் வேலைக்கான தேர்வு என டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை திட்டமிட்டு முன்கூட்டியே அறிவித்து நடத்துகிறது. யுபிஎஸ்சி போலவே தமிழகத்திலும் தேர்வுகள் முறைபடுத்தப்பட்டுள்ளன. வி.ஏ.ஒ தேர்வில் 200-300 பேர்வரை பி.இ. படித்தவர்களே தேர்வாகிற நிலை இன்று உள்ளது. ஆகவே மதிப்பெண் அதிகம் பெறவில்லை என்ற கவலை யாருக்கும் வேண்டாம்.

தொழில்சார்ந்த டிப்ளமோ கல்வியில் கவனம் செலுத்தலாம். இன்று நகர்புறங்களில் வீடுகளில் ஏற்படும் சாதாரண மின் பழுது, தண்ணீர்க் குழாய் பழுது ஆகியவற்றைச் சரிசெய்ய நல்ல ஆட்கள் கிடைப்பது இல்லை. இவற்றைப் படித்தவர்கள் சரியான ஒருங்கிணைப்புடன் ஒரு குழுவாகச் செயல்பட்டால் பெருமளவு பொருளீட்ட இயலும். என்ன செய்கிறோம் என்பதை விட எப்படிச் செய்கிறோம் என்பதே இதில் முக்கியமானது.

தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் எம்.டெக் படித்துள்ளார். இப்போது அவர் செய்வது ஆடு மேய்ப்பது. ஆமாம். அவரது தந்தை 20 ஆடுகள் வைத்திருந்தார். அதை வைத்துத்தான் இவரை எம்.டெக் வரை படிக்கவைத்தார். இப்போது இவர் 2500 ஆடுகள் வைத்துள்ளார். அதிகப்படியான ஆடுகளை வளர்க்க அவர் தன் எம்டெக் அறிவைப் பயன்படுத்திக் கொண்டார். ஆடுகளை பல கிராமங்களில் உள்ளவர்களிடம் பிரித்துக் கொடுத்து வளர்க்கச் செய்கிறார். விற்கும்போது இவருக்கு 70%. வளர்ப்பவருக்கு 30%. இதுபோன்ற தொழில்களில் நம் மாணவர்கள் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு உதவக்கூடிய பட்டங்களைப் படிக்கவேண்டும். குறைந்த மதிப்பெண் எடுத்திருக்கிறோம் என்று கவலைப்படாமல் தொழில் தொடங்கினால் நாளை அதிக மதிப்பெண் எடுத்த பட்டதாரிகளை வைத்து வேலை வாங்கலாம்.

முன்பெல்லாம் தொழில் தொடங்க பெரும் முதல் தேவைப்பட்டது. அதைத் திரட்டுவதும் சிரமாக இருந்தது. ஆனால் இன்று வங்கிகள் பெருகிஉள்ளன. கடன் வசதி உள்ளது. தேவை எல்லாம் ஊக்கமும் நம்பிக்கையும்தான். அதிக மதிப்பெண் அல்ல.

ராணுவம். விமானப்படை, கப்பற்படை போன்ற துறைகளிலும் ஆண்டுதோறும் வேலை வாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கின்றன.  சமீபத்தில் சென்னை அருகே விமானபடைக்கு ஆள் எடுக்கும் முகாம் நடைபெற்றது. அதில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் அறிவிப்பு செய்தார்கள். ஓர் அதிகாரியிடம் ஏன் தமிழில் அறிவிக்கவில்லை என்று கேட்டேன். அவர், தமிழ் நாட்டில்தான் இந்த முகாம் நடத்தப் படுகிறது. இருப்பினும் இதில் கலந்துகொள்ள தமிழ்இளைஞர்கள் யாரும் வருவது இல்லை என்றார் வருத்தத்துடன்.

இன்றைக்கு காலத்துக்கு ஏற்ப தொழில்வாய்ப்புகள் மாறிவருகின்றன. செல்போன் ரீசார்ஜ், சர்வீஸ் போன்றவை புதிய தொழில்களாக உருவெடுத்துள்ளன. இன்று வட்டிக்கடைகளில் எல்லாம் செல்போன் ரீசார்ஜ் செய்யப்படுவதைக் காண்கிறோம். 

வளர்ந்துவரும் இன்னொரு துறை ஹோட்டல் மற்றும் சுற்றுலாத் துறை. இது தொடர்பான படிப்புகளையும் படித்துக்கொண்டால் வருங்காலத்தில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. பொதுவாக தமிழர்களிடம் தொழில்கள் தொடங்குவதில் ஆர்வம் இல்லை என்று சொல்லப் படுவதுண்டு. குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களிடம் அதை மாற்றி அமைக்கும் வல்லமை உள்ளது.

(தாமரைச் செல்வன், கனவு ஆசிரியர் அமைப்பின் இயக்குநர். நம் செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)

ஏப்ரல், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com