குறும்படம் எடுக்கறது எளிது; அதைப் பார்க்க வைக்கறதுதான் கஷ்டம்!

குறும்படம் எடுக்கறது எளிது; அதைப் பார்க்க வைக்கறதுதான் கஷ்டம்!
Published on

சன், விஜய், கலைஞர் என்று அனைத்து தனியார் தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த அனுபவமுடையவர் கே.ஜி.ஜெயவேல். சுருக்கமாக ஜேவி. இவர் தனது ஜேவி மீடியா ட்ரீம்ஸ் நிறுவனத்தின் மூலமாகப் பல நிகழ்ச்சிகளை உருவாக்கியிருக்கிறார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் நிகழ்ச்சி இவரது தயாரிப்பு தான் ‘நாளைய இயக்குநர்  சீசன் 6 விரைவில் தொடங்கப்போகிறது’ என்ற தகவலுடன் நம்மிடம் பேசத் தொடங்கினார் ஜேவி.   “தூர்தர்ஷன்ல என் அண்ணன் கேமிராமேனா இருந்தார்.

சின்னவயசுலயே, அப்பா கேமிரா வாங்கித்தந்தார். கேமிராவை எடுத்துட்டு ஏவிஎம் வருவேன். உள்ளே நுழைய அனுமதி கொடுக்கமாட்டாங்க. ஆனால் நான் எல்லா ஆர்ட்டிஸ்டையும் போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். இப்பவும் பல ஆர்ட்டிஸ்ட் வீடுகள்ல நான் எடுத்த போட்டோ இருக்கும். அப்புறமா, என்னை ஏவிஎம்முக்குள்ள அனுமதிச்சாங்க. 1991ல நான் பிஎஸ்சி மேத்ஸ் முடிச்சேன். காலேஜ் படிக்கறப்பவே, நிறைய ஒளிப்பதிவாளர்கள்கிட்ட வொர்க் பண்ணிட்டு இருந்தேன். அதுக்கப்புறம், அப்பா என்னை தூர்தர்ஷன்ல வேலைக்கு சேர்த்துவிட்டார். அங்கயிருந்த வொர்க்கிங் ஸ்டைல் எனக்கு பிடிக்கலை. அதனால, பூமாலை வீடியோ மேகஸின்ல வேலை செய்யப்போயிட்டேன். சன் டிவி ஆரம்பிச்சப்போ, அதுல வேலை செஞ்சேன். அதுக்கப்புறம் விஜய்டிவிக்கு போனேன்.

”கலைஞர் தொலைக்காட்சியில நாளைய இயக்குநர் பண்றதுக்கு முன்னால, கலா மாஸ்டரோட  சேர்ந்து ’மானாட மயிலாட’ நிகழ்ச்சி பண்ணோம். ’கானாகுயில் பாட்டு’ன்னு ஒரு நிகழ்ச்சியை தயாரிச்சோம். சாவுக்காக பாடிட்டு இருந்த கானாவை பெட்ரூம் வரைக்கும் கொண்டுபோனோம். அந்த நிகழ்ச்சி ஒரு நல்ல அனுபவம். அந்த நிகழ்ச்சி மூலமா கானா பாலா, கானா செல்வம், வேல்முருகன் உட்பட பலர் வெளியே தெரிஞ்சாங்க.

அப்போதான் நாளைய இயக்குநர் நிகழ்ச்சி பண்ற ஐடியா வந்தது. குறும்படப் போட்டியை ஒரு நிகழ்ச்சியா பண்ணலாம்னு எழுதி கலைஞர்கிட்ட கொடுத்தோம். முதலில் ஏற்கப்படலை. அப்புறம் ராமநாராயணன் பார்த்துட்டு, அதன் தனித்துவத்தைப் பாராட்டினார்.  அமிர்தம் சார்கிட்ட கொடுக்கச் சொன்னார். அவர் பார்த்துட்டு ஓகேன்னு சொன்னார். முதல் சீசன்ல பிரதாப்போத்தன் மற்றும் மதன் சாரை நடுவரா அழைச்சிட்டு வந்தோம்.

இதுக்கான பைலட் எபிசோடு பண்றப்போ, கே.எஸ்.ரவிக்குமாரை கெஸ்டா கூப்பிட்டிருந்தோம். அப்போ இயக்குநர் சங்கத் தேர்தல் நடக்கறதா இருந்துச்சு. அதனால, அவரைப் பார்க்க சுமார் பத்து இயக்குநர்கள் செட்டுக்கு வந்தாங்க. அவங்க இந்த நிகழ்ச்சியைப் பார்த்துட்டு கருத்து  தெரிவிச்சாங்க. அதை அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். அவங்க வாழ்த்திப் பேசுனதால, முதல் சீசன்ல கலந்துகிட்டவங்கள்ல கிட்டத்தட்ட எட்டு பேர் இப்போ இயக்குநர்களாகிட்டாங்க. கடைசி சீசன் வரை கலந்துகிட்டவங்க இப்போ படம் பண்றாங்க.

இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப எபிசோடுகளுக்கு டி.ஆர்.பி. கம்மியா கிடைச்சது. வருமானமும் குறைவாத்தான் இருந்தது. பீட்சா படம் வெளியானபிறகுதான் ரீச் அதிகமாச்சு.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகிட்டவங்கள்ல பல பேர் 25 வயசுக்கும் குறைவானவங்க. காலேஜ் முடிச்சவங்க அல்லது வேலைக்குப் போய்கிட்டு இருந்தவங்க. அவங்க நிறைய ஆசைப்படுவாங்க. பிராக்டிகலா  சில விஷயம் பண்ணமுடியாது. திடீர்னு நைட் போன் பண்ணி, ஷூட்டிங் பெர்மிஷன் கிடைக்கலைன்னு சொல்லுவாங்க. தி.நகர்ல, மவுண்ட்ரோட்டுல ஷூட் பண்ணப் போயிருக்காங்க. ஒரு தடவை இவங்க கன் ஷூட் பண்ணிட்டு இருந்ததைப் பார்த்து கம்ப்ளெய்ண்ட் பண்ணி, ஒரு பெரிய பட்டாலியன் வந்து டெரரிஸ்ட்னு பிடிச்சுட்டுப் போயிட்டாங்க. அப்புறம் காவல்துறையில உண்மையைச் சொல்லி விடுவிச்சோம். இதுமாதிரி நிறைய பிரச்சனைகள் இருந்துச்சு.

முதல் சீசன் அறிவிச்சப்போ, எங்களுக்கு எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட குறும்படங்கள் வந்துச்சு. அதை முழுக்கப் பார்த்து முடிக்கறதுக் குள்ள, நாங்க ஒரு வழி ஆயிட்டோம். நான்காவது சீசனுக்கு பிறகு, 5 Dயில தான் ஷூட் பண்ணனும்னு சொல்லிட்டோம். அதனால எண்ணிக்கை மூவாயிரமா குறைஞ்சிடுச்சு. ஆனால், மூவாயிரமும் செலக்ட் ஆகுற மாதிரி இருந்துச்சு. ஒவ்வொண்ணும் ஏதோ ஒருவிதத்தில் கவனிக்குற மாதிரி குவாலிட்டியோட இருந்துச்சு.  காரணம், அதுல கலந்துக்கிட்டவங்கள்ல பல பேர் விஸ்காம் முடிச்சவங்க, ஐ.டி.யில வேலை செய்றவங்கன்னு இருந்ததுதான்.

இப்போ சீசன் 6 ஆரம்பிக்கலாம்னு ஐடியாவுல இருக்கோம். இதுல இரண்டு டாக்டர்கள் இருக்காங்க. அதுல ஒருத்தர் திருவண்ணாமலையில இருக்குற வெங்கட். நிகழ்ச்சி ஆரம்பிக்கறதுக்கு முன்னாலேயே, இப்போவரைக்கும் மூணு ஷார்ட்பிலிம் பண்ணிட்டார். இங்க வந்துபோய், ஒரு முழுநீள சினிமா எடுக்கற அளவுக்கு மாறிட்டார். இப்போ அவரோட கிளினிக்கை அவங்க மனைவிதான் பார்த்துக்கறாங்க. அந்தளவுக்கு கிரியேட்டிவிட்டியோட இருக்கறவங்க தான், இந்த நிகழ்ச்சிக்கு வர்றாங்க.

குறும்படம் எடுக்கறது ஈஸி. அதை பார்க்க வைக்கறதுதான் கஷ்டம். ஒருத்தர் ஆபீஸ்ல இருந்து கோயம்பேடு கிளம்பறார்னு ஸ்கிரிப்ட் யோசிச்சா, இரண்டு, மூன்று ஷாட்கள்ல அவர் எப்படிப்பட்ட கேரக்டர்னு சொல்லிரணும். இண்டர்வெல் பிளாக்ல ஒரு சஸ்பென்ஸ் வைக்கணும். அதுக்கப்புறம் எந்தவொரு கேரக்டரையும் மிஸ் பண்ணாம, கரெக்டா பினிஷ் பண்ணனும்.

நாளைய இயக்குநர்ல பண்ண எல்லா குறும்படங்களும் கமர்ஷியலா யோசிச்சதுதான். அதனாலதான் இதுல கலந்துக்கிட்டவங்க வெற்றிகரமான இயக்குநர்களாக இருக்குறாங்க.

நாளைய இயக்குநர் முதல் எபிசோடுல இருந்து கடைசி சீசன் வரைக்கும் எல்லா ஷார்ட்பிலிமையும் கே. பாலசந்தர் சார் பார்த்திருக்கார். அவரோட அட்வைஸ்லதான் நிகழ்ச்சி நடந்தது. நடுவர்கள் பார்க்கறதுக்கு முன்னாடியே, கே.பி.சார்கிட்ட படத்தை காண்பிச்சு ஒப்பீனியன் வாங்கிருவோம். அந்த நிகழ்ச்சியோட ஒரு அங்கமாகவே அவர் இருந்தார்.

கடைசியா அவர் ஹாஸ்பிடல் போறதுக்கு முன்னாடி கூட, ’பைனல்ஸ் வந்துர்றேன்’னு சொன்னார். அவரோட அசிஸ்டெண்ட் மோகன்கிட்ட நோட் பண்ணிக்கச் சொன்னார். ஆனால் ஹாஸ்பிடல்ல இருந்து அவர் திரும்பவேயில்லை. எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு அது.

நாளைய இயக்குநர் தந்த நம்பிக்கையில ’விழா’ன்னு ஒரு படம் பண்ணோம். மக்கள்கிட்ட அது ரீச் ஆச்சு. இப்போ இரண்டு வருஷமா பிலிம் இன்ஸ்டியூட் நடத்திட்டு வர்றோம். இதுல டைரக்‌ஷன், ஆக்டிங் கோர்ஸ் ரெண்டும் இருக்கு. எல்லா இயக்குநர்களும் இங்க வந்துட்டு போயிருக்காங்க.

அதுபோக, நாளைய இயக்குநர்  அடுத்த சீசனுக்கான வேலை நடந்துகிட்டு இருக்கு.  பல புதுமைகள் அதுல சேர்த்திருக்கோம்” என்கிறார் ஜேவி.

நவம்பர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com