குறும்பட உலகிலிருந்து வெள்ளித்திரை உலகுக்கு

குறும்பட உலகிலிருந்து வெள்ளித்திரை உலகுக்கு
Published on

தற்காலத் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி யோசிக்கும் எந்த நபரும், குறும்படங்களை இயக்கிய இயக்குநர்களை மறந்துவிடவே முடியாது என்ற அளவில் தமிழில் தற்போது குறும்படங்களை இயக்கி, பின்னர் திரைப்படங்களை இயக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

காரணம் எளிது. சில வருடங்களுக்கு முன் துவங்கப்பட்ட ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி, குறும்படங்களுக்கு ஒரு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதனாலேயே பல குறும்படங்கள் பெரிதாகப் பேசப்பட்டன. இவர்களில் பலரும் இப்போது வெற்றிகரமான இயக்குநர்களாக மாறிப் பல படங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். குறும்படங்களின் மூலம் பல்வேறு கதைகளையும் கருக்களையும் எளிதில் இவர்களால் வெளிப்படுத்த முடிந்தது. இதனாலேயே குறும்படங்களுக்கு மிகப்பெரிய சந்தையும் அமைந்தது. அவர்களில் சிலரைப் பற்றி நாம் கவனிக்கலாம்.

குறும்படங்களில் இருந்து திரைப்படங்களுக்கு வந்தவர்களில் முதலாவதாகப் பேசப்பட்டவர்கள் கார்த்திக் சுப்புராஜும் நலன் குமரசாமியும். இவர்கள் இருவருமே திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சி.வி.குமாருக்கே முதல் படங்கள் இயக்கினார்கள். இவர்களில் கார்த்திக் சுப்பராஜ்தான் முதலாவதாக, ‘பீட்சா’ திரைப்படத்தை இயக்கினார். கார்த்திக் சுப்புராஜ், மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து, பெங்களூரைச் சேர்ந்த சஞ்சய் நம்பியாரிடம் திரைப்படக்கலையைக் கற்றவர்.

சஞ்சய் நம்பியார், இப்படிப் பலரையும் தயார்ப்படுத்தியிருக்கிறார். அவ்வப்போது திரைப்படப் பட்டறைகள் நடத்துவதில் பிரபலமானவர். அவரிடம் திரைப்படக் கலையைக் கற்றுக்கொண்டு, பின்னர் பல குறும்படங்களை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அவைகளில், ‘பெட்டிகேஸ்’, ‘காட்சிப்பிழை’, ‘டார்க் கேம்’, ‘லாஸ்ட் டிரெய்ன்’ முதலிய பல்வேறு படங்கள் அடக்கம். குறும்படங்கள் மூலம் பிரபலமாகி, பின்னர் பீட்சா திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றவர். முதலில் எழுதி வைத்திருந்த ‘ஜிகர்தண்டா’ திரைக்கதையை எடுக்கும் வாய்ப்பு கிடைக் காமலேயே பீட்சாவை எழுதி இயக்கினார். பின்னர் ஜிகர்தண்டா வெளியானது. இறைவி படத்தை முடித்துவிட்டு, இப்போது பிரபுதேவாவை வைத்து, ‘மெர்க்குரி’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். தற்போதைய இளையதலைமுறை இயக்குநர்களிடையே பிரபலமானவர்.

நலன் குமரசாமியும் அதே நாளைய இயக்குநர் மூலம் பிரபலமானவரே. திருச்சியைச் சேர்ந்தவர். நாளைய இயக்குநர் முதல் சீசனில் இவர் எடுத்த படங்கள் மிகவும் பிரபலமானவை. படம் எடுப்பதைப் பற்றியே, ‘ஒரு படம் எடுக்கணும்’ என்ற குறும்படத்தை எடுத்து அறிமுகமானவர். பின்னர் ‘உண்மையை சொல்லணும்னா’, ‘தோட்டா விலை என்ன’, ‘முடிவுக்குப் பின்’, நெஞ்சுக்கு நீதி’ ஆகிய குறும்படங்களை எடுத்தார். இவைகளில் நெஞ்சுக்கு நீதியே முதல் சீஸனில் வெற்றிபெற்றது. அதன்மூலம் ‘சூது கவ்வும்’ திரைப்படம் எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. நலன் குமரசாமியின் விசேட குணம், அனைவரையும் அரவணைத்துச் செல்வதில் சிறந்தவர் என்பதே. கூடவே, ஹாலிவுட் படங்கள் மற்றும் உலகப் படங்களில் நல்ல விஷய ஞானம் உள்ளவர். அப்படங்களின் இசைக்குறிப்புகளைக் கவனிப்பவர். கய் ரிட்சீ, க்வெண்டின் டாரண்டினோ முதலிய இயக்குநர்களின் ரசிகர். கூடவே, சமகால அரசியல் சூழல் பற்றிய விஷயங்களும் அறிந்தவர். இயல்பிலேயே ப்ளாக் ஹியூமர் இழையோடும் வண்ணம் எழுதுவதில் கைதேர்ந்தவர். இவரது அத்தனை குறும்படங்களிலும் இது முக்கியமான அம்சம். சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு படங்களிலும் ப்ளாக் ஹியூமரே முக்கியமான பங்கு வகிக்கும். குறிப்பாக, சூது கவ்வும் படத்தில், சமகாலத் தமிழகத்தை பகடியில் ஒரு கை பார்த்திருப்பார். இவரும் கார்த்திக் சுப்பராஜும்தான் தற்காலத்திய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரங்கள் எனலாம்.

அடுத்ததாக, பாலாஜி மோகன். இவரும் நலன் மற்றும் கார்த்திக் சுப்பராஜோடு நாளைய இயக்குநரின் முதல் சீஸனில் பங்குபெற்றவர். இவரது ‘காதலில் சொதப்புவது எப்படி’ குறும்படம் பலத்த பாராட்டுக்களைக் குவித்த படம். அதையே பிறகு திரைப்படமாகவும் தமிழிலும் தெலுங்கிலும் இயக்கினார். பின்னர் ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தைத் தமிழிலும் மலையாளத்திலும் இயக்கி, தனுஷை வைத்து ‘மாரி’ எடுத்துவிட்டு, As I am suffering from Kaadhal வெப் சீரீஸை இயக்கி, இப்போது மாரி 2 படத்தை எடுக்கப்போகிறார். துவக்கத்தில் பெரிதும் நம்பிக்கை அளித்தவர், மாரியில் விழுந்தார். மாரி 2 படத்தில் எழுவார் என்று நம்புவோம்.

இந்த மூவருக்குப் பிறகு, நாளைய இயக்குநர் மூலம் பிரபலமான பல இயக்குநர்கள் உண்டு. அவர்களில் பண்ணையாரும் பத்மினியும் இயக்கிய அருண்குமார், முண்டாசுப்பட்டி எடுத்த ராம், இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய ஆர்.ரவிக்குமார், பீச்சாங்கை படத்தை இயக்கிய அசோக், 4எ படம் இயக்கிக்கொண்டிருக்கும் வெங்கட் பாக்கர், பஞ்சுமிட்டாய் படத்தை இயக்கியிருக்கும் குக மோகன், தெகிடி படத்தை இயக்கிய ரமேஷ், பீட்சா 2 படத்தை இயக்கிய தீபன் என்ற ஒரு பெரிய பட்டாளமே உண்டு. இவர்கள் அனைவருக்குமே இருக்கும் பொதுவான குணநலன்கள், இவர்கள் அனைவருமே திறமையை மதிக்கத் தெரிந்த இயக்குநர்கள். இவர்களில் ராம், ஒரு நல்ல கார்ட்டூனிஸ்ட். இப்போது ராட்சசன் என்ற திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். ஆர்.ரவிக்குமார், பொதுவுடமைத் தத்துவத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர். திருப்பூரில் இவர்கள் குடும்பத்துக்கே பலமான கம்யூனிஸ்ட் பின்னணி உண்டு. இன்று நேற்று நாளைக்குப் பின், மிக விரைவில், முற்றிலும் வேறுபட்ட ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.  வெங்கட் பாக்கர், ஷங்கரிடம் ‘ஐ’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்.  இவர்களைத் தவிரவும், இன்னும் பல இயக்குநர்கள், தங்களது முதல் படங்களில் தற்போது வேலைசெய்துகொண்டிருக்கிறார்கள்.

குறும்படங்கள் என்பது ஒரு சிறிய விளம்பரப்படத்தைப் போல நமது கவனத்தைக் கவரும் சக்தி படைத்தது. உலகெங்கும் பல்வேறு குறும்படங்கள் பல விருதுகளை வென்றிருக்கின்றன. தமிழில் அப்படிப்பட்ட குறும்படங்கள் அதிகம் இல்லை என்றாலும், இயக்குநர் ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கியிருந்த Wind என்ற குறும்படத்தைப் பற்றி எழுத  விரும்புகிறேன். ஒரு சில வருடங்களுக்கு முன்னர் பெரிதும் பேசப்பட்ட படம் இது. தற்போது இணையத்தில் இது கிடைப்பதில்லை. ஆனால் இது விருது வாங்கிய குறும்படம். வசனமே இல்லாதது. காக்கா முட்டை மணிகண்டன் அந்த வகையில் குறும்படங்களை இயக்கி, அதன்மூலம் திரைப்படங்களுக்கு வந்தவரே. ஒளிப்பதிவையும் முறையாகத் தனியார் திரைப்படக் கல்லூரி ஒன்றில் படித்தவர். இதுவரையில் மூன்று படங்களை இயக்கிவிட்டார். மூன்றுமே பெரிதும் பேசப்பட்டவை. இவரைப்போலவே அல்ஃபோன்ஸ் புத்திரனுமே குறும்படங்கள் மூலமே பிரபலமானவர்தான்.

தற்போதைய காலகட்டத்தில் குறும்படங்கள் மிக அதிக அளவில் தமிழில் பெருகிவிட்டன. படங்களில் இருக்கும் ஒரு சிறிய குறை என்ன என்றால், இவைகளில் பல படங்கள் ஒரே மாதிரியான வார்ப்புருவில் இருக்கின்றன. சமகாலப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு, அவற்றைப் பிளந்து பார்க்கும் வகையிலான படங்கள் மிகக்குறைவு. நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு மொபைல் ஃபோனில் கூட இப்போதெல்லாம் தரமான குறும்படம் ஒன்றை இயக்க இயலும். நமக்குத் தேவையெல்லாம் நல்ல கரு. அப்படி எடுத்தால், ஒரே படத்தின்மூலம் உலக அளவில் பிரபலம் அடைய எளிதில் முடியும். உலகநாடுகளில் பிரபலமான குறும்படங்களை லேசாகக் கவனித்தாலே போதும். குறிப்பாக, மார்ட்டின் ஸ்கார்ஸேஸி, க்ரிஸ்டோஃபர் நோலன், ராபர்ட் ரோட்ரிகஸ் ஆகிய இயக்குநர்கள் இயக்கியிருக்கும் சில குறும்படங்களைப் பார்க்கலாம். பலவிதமான நல்ல அம்சங்கள் அவற்றில் இருந்து நமக்குக் கிடைக்கும். இப்படி நம்மை நன்றாகத் தயார் செய்துகொண்டு பின்னர் குறும்படங்களில் குதித்தால் அவற்றின் மூலம் அவசியம் நன்மைகள் உண்டு. அப்போது, குறும்படங்களை வெறுமனே ஒரு

விசிட்டிங் கார்டாக உபயோகித்துத் திரைப்படங்களில் நுழைவதற்குப் பதில், குறும்படங்களின் மூலமே பல்வேறு பிரச்னைகளை அலசி ஆராயும் சூழல் உருவாகும். அது, தமிழ்நாட்டின் குறும்பட உலகின் மீது உலகின் வெளிச்சத்தைப் பாய்ச்சும். அப்படி நிகழ்வது அவசியம் நமக்கு நல்லது.

நவம்பர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com