குரல்தான் என்னோட சொத்து!”

டி.எம்.எஸ்.
டி.எம்.எஸ்.
Published on

திளதளக்கும் கெட்டித்தயிர். சற்றே இளகிய மெழுகு... டி.எம்.எஸ்.ஸின் கம்பீரமான குரலைக் கேட்டதும் மனதுக்குள் தோன்றும் சித்திரங்கள் இவை தான்.

எப்போது கேட்டாலும் சிறகை அசைக்காமல் வானில் பறக்கும் பறவையைப் போலிருக்கும் அந்தக் குரல்.

மதுரையில் சௌராஷ்டிர சமூகத்தினர் வசிக்கும் அரசமரம் பிள்ளையார் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் அவர் வந்து பாடுவார். அடர்த்தியான கூட்டம் பல மணி நேரங்களுக்குக் கட்டுப்பட்டு உட்கார்ந்திருக்கும். இளம் வயதில் நள்ளிரவு தாண்டியும் அவர் குதூகலத்துடன்  பாடுவார். பக்திப் பாடலில் ஆரம்பித்து, திரைப்படப் பாடல்களைப் பாடத் துவங்கும்போது கனிந்த பாவத்துடன்
சொல்வார் டி.எம்.எஸ்'' - மக்கள் விருப்பமே மகேசன் விருப்பம்''

சென்னைக்கு நான் வந்து வார இதழில் பணியாற்றியபோது  அவரை வீட்டில் சந்தித்தேன். அவரைப் பற்றி எழுதுவதற்காக மதுரைக்குப் போகப் போவதாகச் சொன்னதும் அவருடைய உறவினர்கள், வீடு இருக்கிற பகுதி அனைத்தையும் சொல்லிவிட்டுச்
 சொன்னார்.

'' போய்ட்டு வாங்க.. பேசலாம்''

தொகுளுவா மீனாட்சி அய்யங்கார் சௌந்தர ராஜன் - இது தான் அவருடைய முழுப்பெயர். அது சுருங்கி டி.எம்.எஸ்.

மதுரையில் தெற்குக் கிருஷ்ணன் கோவில் தெருவில் எளிய வீடு. அருகில் வரதராஜப் பெருமாள் கோவில். அப்பா கோவில்களில் பஜனைப் பாடல்கள் பாடுகிறவர். அவருடன் சேர்ந்து பாடல்களைப் பாடப் போயிருக்கிறார் சௌந்திர ராஜன் பால்ய வயதில்.

சௌராஷ்டிராப் பள்ளியில் படிக்கும் போதிருந்தே பாடுவதில் ஈடுபாடு. பி.யூ.
சின்னப்பாவும், தியாகராஜ பாகவதரும் - பாடலில் பிடித்தமானவர்கள், அதிலும் பாகவதர் பாடல்களைச்  சிறுவனான சௌந்தர ராஜன் பாடும்போது கிறங்கிப் போகிறவர்கள் '' பாகவதர் எதிரொலி '' என்று வாழ்த்தியிருக்கிறார்கள்.

காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம் கர்நாடக இசையைக் கற்றுக் கொண்டு மதுரை சத்குரு சமாஜத்தில் டி.எம்.எஸ்.ஸின் அரங்கேற்றம். திறமை, உச்சரிப்புச் சுத்தம் எல்லாம் இருந்தும் வீட்டில் தகுந்த பொருளாதார வசதி இல்லை.

திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் கோவையில் இருந்த சென்ட்ரல் ஸ்டூடியோவுக்குப் போய்ப் பாட வாய்ப்புக் கேட்டுப் படாதபாடு பட்டிருக்கிறார். ஆர்மோனியத்துடன் தரையில் அமர்ந்து பாகவதரின் பாடல்களை அப்படியே நகல் எடுத்த மாதிரிப் பாடிக் காண்பித்திருக்கிறார். அங்கிருந்த இயக்குநரான சுந்தர்லால் நட்கர்னி வீட்டில் சிறுசிறு வேலைகள் பார்த்திருக்கிறார்.

பிறகு தான் ஒருவழியாக  எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் 'கிருஷ்ண விஜயம்'' படத்தில் ''ராதே என்னைவிட்டு ஓடாதடி'' பாடல் பாடும் வாய்ப்பு. பெரிய இடைவெளிக்குப் பிறகு கூண்டுக்கிளி, மலைக்கள்ளன், தூக்குத் தூக்கி என்று பாடல்கள் வெளிவந்தபிறகு வெளியே தெரியவர ஆரம்பித்தார் டி.எம்.எஸ்.

மதுரையில் அப்போது சந்தித்த அவருடைய உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் டி.எம்.எஸ்.ஸின் வாழ்வின் துவக்க காலப் பக்கங்களை விவரித்தார்கள்.

சென்னைக்குத் திரும்பி வந்து டி.எம்.எஸ்.ஸைச் சந்தித்தபோது மதுரைக்குப் போய் வந்தது குறித்து ஆர்வத்துடன் விசாரித்தவர் பிறகு தன்னைப் பற்றிப் பல மணி நேரம் பேசினார். பாடிக்காண்பித்தார். சிரித்தார். குரலில் வெவ்வேறு பாவங்களை மாற்றிப் பேசிக் காட்டினார்.

எம்.ஜி.ஆருக்கு, சிவாஜிக்கு, ஜெமினிக்கு,
ஜெய்சங்கருக்கு என்று விதவிதமாகத் தன் குரலை எப்படிக் கீழிறக்கிப் பாடுகிறேன் என்பதைப் பாடிக்காட்டிய கணங்கள் அழகானவை. அதிலும் திருவிளையாடல்& படத்தில் வரும் ''ஞ்ஞ்ஞா..'' என்று கார்வையுடன் ஆரம்பித்து '' பாட்டும் நானே'' பாடலைப் பாடிய விதம் பற்றிப் பாடிக் காட்டினார். '' யார் அந்த நிலவு?'' - குரலை மிருதுவாக்கிப் பாடிக் காண்பித்தார். அருணகிரி நாதர் பாடலை அட்சரம் பிசகாமல் துல்லியமான உச்சரிப்புடன் சில வரிகளைப் பாடினார்.

'' சௌராஷ்டிரா மொழி என்னுடைய சொந்த மொழி. ஆனா சமஸ்கிருதமோ, தமிழோ, தெலுங்கோ சுருதி சுத்தமா உச்சரிப்பு மாறாம இருக்கணும்கிறதிலே ரொம்பவும் கவனம் எடுத்துக்கிடுவேன். ஒவ்வொரு பாடலுக்கும் என்ன பாவம் வேணும்கிறதை உணர்ந்து அதுக்கேத்தபடி பாடுவேன்.

ஒரு சமயம் கவிஞர் கண்ணதாசனோட பாட்டு. 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு'. 'ரத்தத் திலகம்' படம். அதில் கவிஞரே மேடையில் பாடுற மாதிரியான காட்சி. அந்தப் பாடலை  நான் பாடி முடிச்சதும், 'நான் எழுதறப்போ கூடத் தெரியாத  மகிமை உன் குரலில் இருந்து வர்றப்போ இருக்குய்யா' ன்னு அவ்வளவு உரிமையோடு பாராட்டிச் சொன்னார் கவிஞர்''

பட்டினத்தார், அருணகிரி என்று சில படங்களில் கதாநாயகனாகப் பாடி நடித்திருக்கிறார். சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பக்திப் பாடல்களுக்கு அவரே இசையமைத்துப் பாடியிருக்கிறார்.

'' இன்னைக்கும் மதுரைக்குக் காலையில் அஞ்சு மணிக்கெல்லாம் போய்ப் பாருங்க.. பல டீக்கடைகளில் நான் பாடிய 'மண்ணானாலும்', ' உனைப் பாடும் தொழிலன்றி', 'உள்ளம் உருகுதய்யா' பாடல்கள் ஒலிச்சுக்கிட்டிருக்கும்.. அதே மதுரையில் ஒரு காலத்தில் பாடுறதுக்கு அவ்வளவு சிரமப் பட்டிருக்கேன். நினைச்சுப் பார்க்கிறப்போ  அந்த முருகப் பெருமானோட செயல்னு தெரியுது'' என்று பேசிக் கொண்டு போனவரிடம் ஆதங்கங்களும் இல்லாமல் இல்லை.

பன்னிரெண்டாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியும் இந்தி மொழியில் பாடிய பாடகர்களுக்குக் கிடைக்கும் மதிப்பு இங்கு கிடைக்கவில்லை என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

'' இந்தக் குரல் இருக்கே ..இது தான் என்னோட
சொத்து.. லண்டனில் இருக்கிற பி,பி.சி நிறுவனத்திலே இந்தியாவில் இரண்டு குரல்களைத் தான் பவர்ஃபுல் வாய்ஸ்னு அங்கீகரிச்சு ரிக்கார்ட் பண்ணினாங்க. முதலாவது லதா மங்கேஷ்கர் குரல். இரண்டாவது என்னோட குரல். ஜி.ராமநாதன், சுப்பையா நாயுடுவில் இருந்து இளையராஜா வரைக்கும் எத்தனையோ இசையமைப்பாளர்கள் கிட்டே பாடியிருக்கேன். இருந்தும் இங்கே அவ்வளவு மதிப்புக் கொடுக்கப்படலை.. அது ஏன்னு தெரியலை..

எந்தவொரு இசைக்கும் மொழியில்லைங்க.. எந்த மொழியில் பாடினாலும் அந்தக் குரலும், இசையும் சேர்ந்து மனசை அமைதிப்படுத்திச்
சாந்தப்படுத்தணும்..அதைத் தான் நாங்க செய்றோம். பாடுறவங்க உள்ளம் உருகப் பாடினா கேட்கிறவங்க மனசு உருகத் தான் செய்யும்'' என்று சொன்னவர் தன் முன்னோடியாக நான்கு  பேரை அடுக்கினார்.

'' உச்சரிப்புத் தெளிவுக்கு கே.பி.சுந்தராம்பாள், பாவத்திற்கு எம்.எஸ்.சுப்புலெட்சுமி, சாரீரத்திற்கு தியாகராஜ பாகவதர், லயிச்சுப் பாடுறதுக்கு மணி அய்யர்- இந்த நான்கு பேர் தான் காரணம். அவங்களால் தான் நான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன்.இதைவிட என்னை நெகிழ வைக்கிற ஒரு விஷயம், எம்.எஸ்.வி இசையில்  தமிழ்த்தாய் வாழ்த்தை நானும் பாடுற வாய்ப்பு கிடைச்சது தான். எந்த விழாவுக்கும் போனாலும் அந்தப் பாடலைப் பாடுறாங்க. அதுக்கு ஜனங்க எழுந்து நின்னு மரியாதை கொடுக்கிறாங்க..அதுவே எவ்வளவு பெரிய விஷயம்?''- சென்னை மந்தைவெளி வீட்டின் உள்ளறையில் மனோன்மணியம் சுந்தரனார் பாடிய வரிகளைச் சன்னமான குரலில் பாடிக் காண்பித்தபோது காதில் அந்த வசியக் குரல் நுழைந்து பரவசம் கூடியது.

'' நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்.''

செப்டெம்பர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com