“நீர்தான் கட்டபொம்மன் என்பவரோ?”
“நீர்தான் ஜாக்ஸன் துரை என்பவரோ?”
என எங்கேயோ கேட்ட குரல்கள் மீண்டும் இனி பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குள் ஒலிக்கத் துவங்கினால் ஆச்சர்யப்படுவதற்கில்லை யாரும். சினிமாவில்தான் பார்ட் 2 சீசன் வரவேண்டுமா என்ன? இந்திய அரசியலிலும் இது பார்ட் 2 சீசன்தான். என்ன அன்றைக்கு ஒரு கிழக்கிந்தியக் கம்பெனி. இன்றைக்கோ கிழக்கு..மேற்கு...தெற்கு எனச் சகல திசைகளிலும் நம்மை ஆப்படிக்க வரும் வால்மார்ட், டெஸ்கோ எனும் இத்யாதிகள்.
டீசல் விலை ஏற்றம் ஏன்? மண்ணெண்னை விலை ஏற்றம் ஏன்? அத்யாவசியப் பண்டங்களின் விலை ஏற்றம் ஏன்? என்றெல்லாம் கேட்டால் “எலே கச்சா எண்ணெய்க்கு அவன் வெல ஏத்தீட்டானில்ல.பொறவு என்ன செய்ய?” என்கிறது அது. இதுக்குப் பேசாமல் ஒரு மளிகைக் கடைக்காரரையே பிரதமராக ஆக்கியிருக்கலாம்.(அவர் இவரை விடவும் நிச்சயம் சிறப்பாக இருப்பார் என்பது வேறு விஷயம்) போதாதற்கு ”வளமான எதிர்காலத்திற்காக கசப்பான முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்கிற ”அருள்வாக்கு” வேறு.
வளம் யாருக்கு? கசப்பு யாருக்கு? என்பதுதான் கேள்வியே.
அமெரிக்காவின் வால்மார்ட் எத்தனை விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கியது... எத்தனை வணிகர்களை தெருவில் நிறுத்தியது..எத்தனை சிறு முதலாளிகளை தலையில் துண்டைப் போட வைத்தது... என்பதெல்லாம் இந்தப் பொருளாதார மேதைக்குத் தெரியாது என்று நினைத்தால் நம்மை விட சுப்ரமண்யன்சாமி வேறு யாரும் இருக்க முடியாது. தெரியும்.
வால்மார்ட் உள்ளே வருகிறது என்றால் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பறிபோகப் போகிறது என்று அர்த்தம்.
வால்மார்ட் உள்ளே வருகிறது என்றால் அதைச் சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக ஆகப்போகிறது என்று அர்த்தம்.
வால்மார்ட் உள்ளே வருகிறது என்றால் அதைச் சுற்றிலும் உள்ள நிலங்கள் மத்தியதர வர்க்கம் கற்பனை செய்தாலும் வாங்கிவிட முடியாத அளவுக்கு உச்சத்தில் போய் நிற்கப்-போகிறது என்று அர்த்தம்.
அவ்வளவு ஏன்.. ’மீதி அஞ்சு ரூபா நாளைக்குத் தர்றேன் அண்ணாச்சி.’ என்கிற உரிமையோடு வீடு திரும்பி மறுநாள் உறவோடு திருப்பித் தரும் வாழ்க்கை முறை மாறி பிளாஸ்டிக் டப்பாக்களில் இரசாயனங்களால் பதப்படுத்தப்பட்ட பண்டங்களை சொன்ன விலைக்கு வாங்கவும் முடியாமல்... வாங்கினால் உண்ணவும் முடியாமல்... உண்டது செரிக்கவும் செய்யாமல் சீரழியப்போகும் வாழ்க்கை முறை வருவதற்கான அறிகுறிதான் இந்த வால்மார்ட்.
ஆக.. ஏறக்குறைய எல்லாவற்றிலும் அந்நிய முதலீட்டிற்கான அச்சாரம் போட்டாயிற்று. ஒன்றிரண்டைத் தவிர. அதில் ஒன்றுதான் பத்திரிகைத் துறை. பிறவற்றில் அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் பத்திரிகைகள் இதில் மட்டும் ஏன் அந்நியத் தலையீட்டை எதிர்க்கிறார்கள்? அவர்கள் வந்தால் நமது கலாச்-சாரத் தையும் பண்பாட்டையும் அடியோடு சீரழித்து விடுவார்களாம். ஒரு முறை நீதியரசர் கிருஷ்ணய்யர் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. “அவர்கள் சொல்வதும் சரிதான். நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அந்நியர்கள் சீரழிப்பதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கவே முடியாது. ஏனென்றால் அந்த உரிமை நமக்கு மட்டும்தான் இருக்கிறது.”
ஏற்கெனவே எதிலோ.. எப்பவோ எழுதிய விஷயம்தான்... இப்பவும் எழுத வேண்டி இருக்கிறது. ”நீதானே என் பொன்வசந்தம்” நிகழ்ச்சியைப் கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். நமக்குத்தான் தலைவன் இளையராஜா கிக் அதிகமாச்சே.. அதில் யாரோ ஒரு திரைப்படப் பிரமுகர் ” இவர் ஒருத்தர்தான் தன் பேரை முழுசா வெச்சிருக்கார்” என்று பாராட்டிக் கொண்டிருந்தார். பேரை முழுசா வைக்கலாம் சரி. அப்பா பேரையும் சேர்த்து வைக்கலாம் சரி. அதற்காக
சாதிப்பேரையுமா தூக்கிச் சுமக்க வேண்டும்.. கௌதம் வாசுதேவன் மேனன் என்று? தமிழ்த் திரை உலகில் எந்த இயக்குநராவது இப்படி சாதி பேரை தூக்கி வைத்துக் கொண்டு அலைகிறார்களா? ஹண்ரட் பெர்சண்ட் லிட்ரசி என்று பீற்றிக் கொள்கிறார்களே தவிர...படித்த படிப்பிற்குரிய பண்பாட்டைக் காணோம் இந்த சேர நாட்டினருக்கு மட்டும். தெறமையக் காட்டுங்க ஏத்துக்கறோம். சாதிய பாலக்காடு பார்டரோட விட்டுட்டு வாங்க உங்களுக்கு கோடிப் புண்ணியமாப் போகும்.
அப்பாடக்கர் ஆலோசனை
எல்லா பத்திரிகைகளும் வாசகர்களுக்கான சோப்பு சீப்பு ஷாம்பு என அள்ளிவீசும் போது “அந்திமழை” மட்டும் ஏன் வாயைப் பிளந்து கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்? என்று யோசித்துக் கொண்டே போன இதழைப் புரட்டினேன். கண்ணில் சட்டென்று தட்டுப்பட்டது கடைசி உள் அட்டை.. அடடடா.. தாம்பத்திய வாழ்க்கையை ஓகோன்னு கொண்டுவர ஒரு ஸ்ப்ரேவாம்... ஏம்ப்பா அதையாவது அந்திமழை வாங்கும் வாசகர்களுக்கு இனாமா குடுத்தா சர்க்-குலேஷன் எக்கச்சக்கமாப் பிச்சுக்காது? (கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்)
யோசிங்க..யோசிங்க.. யோசிச்சுகிட்டே இருங்க.
அக்டோபர், 2012.