கிராமத்தின் ஜனாதிபதி!

Published on

கிராமங்கள் திருவிழாவுக்கு தயாராகி விட்டன. ஆண்டுக்கொரு முறையான கோவில் திருவிழா அல்ல, ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் ஜனநாயகத் திருவிழா. அது ஊராட்சித் தேர்தல். பொதுவாக உள்ளாட்சித் தேர்தல் என்று சொல்லாமல் ‘ஊராட்சித் தேர்தல்‘ என்றுக் குறிப்பிடக் காரணம் இருக்கிறது. மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாநகராட்சிக் கவுன்சிலர், நகராட்சிக் கவுன்சிலர் என பலப் பதவிகளுக்கு தேர்தல் நடந்தாலும் ‘ஊராட்சித் தலைவரு‘ க்கானத் தேர்தல் தான் சிறப்பானது.

அரியலூர்  நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றிய என் தந்தையாரை  1965 உள்ளாட்சித் தேர்தலில் தேவனூர் கிராமத்திற்கு அழைத்து சென்று போட்டியின்றி ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். 1970லும் போட்டியின்றித் தேர்வு. எந்த செலவும் கிடையாது. அது ஒரு காலம், ஜனநாயகத்தின் பொற்காலம்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் 10 ஆண்டுகள் நிறுத்தப்பட்டு, மீண்டும் 1986ல் நடத்தப்பட்டது. அப்போது என் தந்தையார் ஒன்றியப் பெருந்தலைவர் பதவிக்கு போட்டியிட்டார், வெற்றிப் பெற்றார். அப்போது பிரச்சார செலவு தான். எளிமையாக நடந்தது தேர்தல்.

1996ல் உள்ளாட்சித் தேர்தல். நான் அப்போது வேட்பாளராக களம் இறங்கினேன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு. வெறும் நோட்டீஸ் அடித்த செலவு தான், வெற்றிப் பெற்றேன். 2001ல் மீண்டும் மாவட்ட ஊராட்சி  உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டேன். அப்போதும் குறைந்த செலவு தான். ஆனால் அந்த சமயத்தில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டவர்கள் என்னை விட கூடுதலாக செலவு செய்ததைக் கண்டேன். 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைக் கொண்டது ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு.

ஊராட்சி மன்றத் தலைவர் பதவி , ஒரு தனி அந்தஸ்து கொண்டதாகப் பார்க்கப்படுகிறது. ஊராட்சி மன்றத் தலைவர்கள் பச்சை இங்க் பேனா பயன்படுத்திக் கையெழுத்து போடலாம். அந்தப் பேனாவை பையில் வைத்துக் கொள்வதே ஒரு கௌரவம் என நினைக்கும் குரூப் உண்டு. சில ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்களை அந்த கிராமத்தின் ‘ஜனாதிபதி‘ யாகவே நினைத்துக் கொள்வதும் உண்டு. இரண்டுப் பதவியும் ‘பிரசிடென்ட்’ என்பதால் போலும்.

2001க்கு பிறகு ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலுக்கு செலவு கூடுதலாக ஆரம்பித்தது. ஓட்டுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தார்கள். அதற்கு முன் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது, பிறகு எல்லாப் பகுதிக்கும் பரவிவிட்டது.

வித்தியாசமான தேர்தலும் உண்டு. பெரம்பலூர் மாவட்டத்தில் மருவத்தூர் என்று ஒரு ஊராட்சி . அதில் மருவத்தூர், பேரளி, பனங்கூர் ஆகிய கிராமங்கள் உள்ளடங்கும். பேரளியை சேர்ந்தவர்கள் தங்கள் ஊர்க்காரர்களே பொறுப்பிற்கு வர வேண்டுமென முடிவெடுத்தார்கள். ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை ஏலம் விட்டார்கள். மூன்று பேர் ஏலத்தில் பங்கு கொண்டு, ஒருவர் 5 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். ஊர் கோவிலுக்கு பணம் கட்டினார். தேர்தலில் அவருக்கு அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக வாக்களித்தார்கள், அவர் வெற்றி பெற்றார். மூன்று தேர்தலாக இந்த ஏலம் தொடர்கிறது, தொகை மாத்திரம் ஏறிக் கொண்டிருக்கிறது.

இன்னும் ஒரு கிராமம் உண்டு. அங்கு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் தங்களுக்குள் ஒருவரை நிறுத்தி அவருக்கு வாக்களித்து வெற்றிப் பெற வைக்கின்றனர்.  சில கிராமங்களில் எழுதப்படாத ஒப்பந்தமாக ஒவ்வொரு முறையும் ஒரு சாதிக்கென ஒதுக்கிக் கொள்கிறார்கள். சண்டையின்றி, செலவின்றி தேர்தலை நடத்துகிறார்கள்.

ஒரு ஊராட்சியில் கருங்கல் ஜல்லி குவாரி இருக்கிறது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட இருவருமே குவாரி முதலாளிகள். வெற்றி பெற்றவரும் ஒரு கோடி செலவு செய்தார், தோல்வி அடைந்தவரும் ஒரு கோடி செலவு செய்தார். அப்படி என்ன தான் செலவு என்று ஆராய்ந்தால், மூன்று வேளையும் சப்ளை செய்யப்பட்ட மது பாட்டில்களே பெரும் செலவு.

சிலர் தோல்வி அடைவோம் என்று தெரிந்தே போட்டி இடுவார்கள். காரணம் இரண்டுத் தேர்தல்களில் தோல்வி அடைந்தால், மூன்றாவது தேர்தலில் அனுதாபத்திலேயே வெற்றி பெற்று விடலாம் என்று. குழந்தைகளை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, மறு கையில் விஷப் பாட்டிலை வைத்துக் கொண்டு, ‘கடந்தத் தேர்தல்களில் எல்லாவற்றையும் இழந்து விட்டோம், எங்கள் உயிர் உங்கள் கையில் தான்‘, என்று அனுதாபம் திரட்டியே வெற்றிப் பெற்றவர்களும் உண்டு.

மதுபாட்டிலும், விஷப் பாட்டிலும் முடிவை நிர்ணயிக்கும் ஜனநாயகத் திருவிழா, இந்த ஊராட்சி மன்றத் தேர்தல்.

அக்டோபர், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com