ஊரில் வருடாவருடம் பகுதியம்மன் சாட்டுவார்கள். ஏதாவது ஒரு காரணத்தால் ஓரிரு வருடங்கள் சாட்டாமல் விட்டுவிட்டால், அந்த வருடம் பார்த்து மழை இல்லாமல் வறட்சியும் வாட்டி எடுத்தால் உடனடியாக அம்மன் சாட்டுவார்கள். சாட்டினால் சாமி மனசு குளிர்ந்து மழை வந்துவிடும் என்பது, ஊரில் காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கை.
செவ்வாய் கிழமை சாமி சாட்டி, அடுத்த செவ்வாய்க்கிழமை கும்பம் தாளித்துக் (புது மண் கும்பத்தை வேப்பந்தழை வைத்து சாமிபோல கண், காது மூக்கு வைத்து அலங்கரித்து கோவில் கிணற்றில் இருந்து பூசாரி சாமியாடியபடியே தண்ணீர் எடுத்து வருவது) கொண்டு வந்து நோன்பு துவங்கும். கும்பத்தை அம்மனின் முன் உள்ள கல்தூரியில் வைத்து ஆட்டியபடி பூசாரி பாடும் பாடல்கள் காற்றில் மிதக்கும்!
அப்புறம் மாவிளக்கு, பொங்கல் என்று கோலாகலம் எல்லாம் முடிந்து இறுதிநாளில் எருமைக்கெடா வெட்டு நடைபெறும். சாட்டியதும் எருமைக்கெடா வாங்கிவந்து விடுவார்கள். பூசாரிகள் இருவர் அதை ஆற்றுக்கு அழைத்துப் போய் குளிப்பாட்டி, மாலைபோட்டு, தாங்களும் குளித்து அலகு குத்திக்கொண்டு கோவிலுக்கு அழைத்துவருவார்கள்.
பூசை செய்து தண்ணீரைத் தெளிப்பார்கள். அது துலுக்கினால் (தலையாட்டி தண்ணீரை உதறுவது) உடனடியாக வெட்டி தயாராக உள்ள குழியில் தள்ளி, குளிரக் குளிர தண்ணீர் ஊற்றி மூடிவிடுவார்கள். துலுக்காமல் நின்றுகொண்டிருந்தால் எவ்வளவு நேரமானாலும் வெட்டமுடியாது. துலுக்கவைப்பதற்காக மீண்டும் பூசை நடைபெறும்.
அந்த நிகழ்வைப் பார்ப்பதற்கு குழந்தைகள் அனைவரும் ஒரு அச்சம் நிரம்பிய எதிர்பார்ப்போடு நடுஇரவுவரை கூட காத்திருப்போம். எருமைக்கெடா குழி அருகில் வந்ததும் கூட்டத்தைப் பார்த்து மிரளும். எனக்குள் ஒரு இனம் புரியாத கலவரம் உருவாகி மனது கனக்கத் துவங்கிவிடும். எட்டுநாள் உற்சா கமும் வடிந்துவிட்டதுபோல சோர்ந்துபோய் வீடு திரும்புவேன்.
நோன்பு முடிந்து வெறிச்சோடிக் கிடக்கும் காலையில் அந்த இடத்தைக் கடக்கும் போது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றி மறையும். பிறகு நாட்கள் செல்லச் செல்ல மெல்ல மறந்துவிடும். சாமி சாட்டின் ஒரு உணர்வுப்பூர்வமான அங்கமாக விலங்குகளை ஆடு, எருமை, பசு (ரிக்வேதம் பசுவை பலியிடும் முறை பற்றி விரிவாகப் பதிவுசெய்திருக்கிறது) பலியிடுவது காலம்காலமாக மக்கள் மத்தியில் நிலவிவரும் சம்பிரதாயம். பல்வேறு அச்சங்களால் சூழப்பட்டுள்ள மனித மனங்களுக்கு கடவுள் எப்படி ஒரு நம்பிக்கையோ அதே போல கடவுள் சார்ந்த செயல்பாடுகளும், சடங்குகளும், சம்பிரதாயங்களும் ஒரு நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை காலத்திற்கு ஏற்ப மாறலாம், மாறாமலும் போகலாம். அது ஒரு சமூகத்தின் உரிமை. என்னளவில் விலங்குகளைப் பலியிடுவது இன்றளவும் பதற்றத்தை ஏற்படுத்துகிற ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு சாமி சாட்டின்போதும் மக்கள் மகிழ்ச்சி நிறைந்த முகங்களோடு வாழ்வின் பல்வேறு துயரங்களை எதிர்கொள்வதற்கான வலிமையோடும், நம்பிக்கையோடும் கலைந்துபோவதைக் கண்டிருக்கிறேன். சமூகத்தின் எளிய நம்பிக்கைகளை மாற்றுக்கருத்து உள்ளவர்கள் கூட புரிந்துகொள்வதும், ஏற்றுக்கொள்வதும் தான் நியாயமானதும், இயல்பானதும் ஆகும். விரும்பினால் நமது மாற்றுக்கருத்துகளை, நிலைப்பாடுகளை சமூகத்தோடு பகிர்ந்து கொள்ளலாம், உரையாடலாம், பலர் அதை ஏற்றுக்கொள்ளவும் கூடும். ஆனால் யார் மீதும் யாரும் எதையும் திணிக்க முடியாது. இது அரசு உட்பட அனைவருக்கும் பொருந்தும்.ஆனால் நாளை ஊரில் பகுதியம்மன் சாட்டினால் மத்திய அரசு வெளியிட்டுள்ள மிருகவதை தடுப்புச் சட்ட புதிய உத்திரவின் படி எருமைக்கெடா வெட்டுக்கு கன்றை வாங்கமுடியாது. கெடா வெட்டாத அம்மன் சாட்டை ஊரில் நினைத்துக்கூடப்பார்க்கமுடியாது. மக்களின் காலம் காலமான நம்பிக்கைகளைப்பறிக்க அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
ஊர் எல்லையில் மக்களின் நம்பிக்கையின் வடிவமாகவே காவல்தெய்வங்கள் அமர்ந்திருக்கின்றன. அரசும் காவல்தெய்வம் தான். மக்களின் நம்பிக்கையே அரசை உருவாக்குகிறது. மக்களின் நம்பிக்கையை, உரிமைகளை, வாழ்வைக் காப்பதே அரசின் கடமை. அவற்றைச் சிதைப்பதல்ல!
ஜூன், 2017.