காலத்தின் குரல்

Published on

தமிழகத்தின் ஆகச்சிறந்த படைப்பாளுமைகளில் ஒருவரான அசோகத்திரன் அவர்களின் மறைவை ஒட்டி நீண்டகாலமாக எனக்குள் இருக்கும் கேள்வி மறுபடியும் உயிர்த்தெழுந்தது.

தமிழகச்சூழலில் ஒரு எழுத்தாளராக இருப்பது என்பது என்னவிதமானது?  அவர்கள் வாழ்ந்தகாலத்தில் சமூகத்தால் கொண்டாடப்படவோ, மறைந்த காலத்தில் ஒரு கணமேனும் துக்கித்து அஞ்சலிசெலுத்தவோ செய்யாமலே பல மகத்தான சகாப்தங்கள் முடிவுக்கு வந்துவிட்டன!

எழுதுவது மட்டுமே எனக்கு மிகவும் அதீத மகிழ்ச்சியும், சந்தோஷமும் அளித்துக்கொண்டிருந்த ஆரம்பகாலத்தில் ( அந்த ஒளிவட்டங்கள் மறைந்து இப்போது கொஞ்சம் மனது சமநிலையடைந்துவிட்டது!) எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் அவருக்கே உரித்தான புன்சிரிப்போடும், வாழ்க்கையை எள்ளி நகையாடும் எழுத்தாளருக்கேயுரிய அங்கதத்தோடும் சொன்னதை என்னால் எப்போதும் மறக்கமுடிந்ததில்லை.

“தமிழ் எழுத்தாளரா ? அப்போ சாப்பாட்டுக்கு என்ன செய்யறீங்க?!”

இங்கே எழுத்து என்பது  வாழ்வதற்கு அவசியமான பொருளீட்டுவதற்கான இடமாகக்கூட இல்லை என்கிற நிதர்சனத்தையெல்லாம் தாண்டி ஒருவிதமான புறக்கணிப்பையே முன் நிறுத்துவதாக உணர்கிறேன்..

தமிழக சமூக, அரசியல் நீரோட்டத்தில் எழுத்தாளர்களுக்கென எந்தத் தனியிடமும் இல்லை. வால்டோவையும், ரூசோவையும் படித்து புரட்சியில் இறங்கிய பிரான்சு மக்களைப் போலவோ,ஜோஸ் மாத்தியால் செல்வாக்கு செலுத்தப்பட்ட கியூபப் புரட்சியாளர்களைப் போலவோ நாம் பொங்கியெழாவிட்டால் கூட பரவாயில்லை. ஒரு சமூகத்தை, வாழ்வை, அரசியலை, நுணுக்கமாக அவதானிக்கிறவர்கள் என்கிற முறையில் எழுத்தாளர்களின் குரல் மற்ற சமூகங்களில் போர் முரசாக ஒலிக்கிறது. மக்கள் கிசுகிசுப்போடோ, சப்தமாகவோ அவற்றை உள்வாங்கி விவாதிக்கிறார்கள். அதன் தாக்கத்தைப் பொறுத்து அதிகார நாற்காலிகள் அசையவோ, ஆடவோ, கவிழவோ கூட செய்கின்றன்.

ஒரு எழுத்தாளர் காலத்தின் குரலாகவும், மக்களின் மனச்சாட்சியாகவும் ஒலிக்கிறார். இதைக்கூடவா நம் தமிழ் சமூகம் புரிந்துகொள்ளக்கூடாது?

இந்திய இளைஞர் காங்கிரசில் தேசியப் பொதுச்செயலாளராக இருந்தபொழுது சில வருடங்கள் கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்தேன். கட்சியில் தொடர்ந்து அரசியல் வகுப்புகளை நடத்துவார்கள்(அதனால்தான் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை காங்கிரஸ் கட்சி அங்கு தவறாமல் ஆட்சிக்கு வந்துவிடுகிறது!) அரசியல், பொருளாதாரம் இவற்றோடு இலக்கியமும்,எழுத்தாளர்களின் கருத்துக்களும் உரையாடலில் முக்கிய இடம்பெறுவதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். எழுத்தாளரின் காத்திரமான அரசியல் கருத்துக்களுக்கு முதல் அமைச்சர் முக்கியத்துவம் கொடுத்து பதிலளிப்பதையும். ஏனெனில் அந்தச் சமூகம் ஒரு படைப்பாளியின் குரலை ஆட்சியாளர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கவனிக்கும். அதனடிப்படையில் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை மதிப்பிடவும் செய்யும்.

இதே போல கர்நாடகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை எழுத்தாளர் நஞ்சுண்டன் சொல்லி நண்பர் ஒருவர் முகநூலில் பகிர்ந்திருந்தார்.

ஒருமுறை கன்னடத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரான யூ, ஆர். அனந்தமூர்த்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடுதிரும்பியிருந்தார். எழுத்தாளர் நஞ்சுண்டன் அவரோடு உரையாடிக்கொண்டிருந்தபொழுது தொலைபேசி அழைத்தது. எடுத்துப் பேசினார். மறுமுனையில் பேசியவர் தனது பெயர் கிருஷ்ணா என்றும் இப்பொழுது வீட்டுக்கு வந்து அனந்தமூர்த்தி அவர்களைப் பார்க்கமுடியுமா என்றும் கேட்டார். வரலாம் என்று சொல்லிவிட்டு எந்தக் கிருஷ்ணா? என்று எதார்த்தமாகக் கேட்டார். முதலமைச்சர் என்று எதிர்முனையில் இருந்து பதில்வந்தது!

இங்கோ அதற்கு நேரெதிரான ஒரு சமூகமாகவே நாம் இருக்கிறோம். ஒரு எழுத்தாளரின் மறைவிற்கு ஆட்சியாளர்கள் அஞ்சலி செலுத்துவதே கூட அரிது.

நமது தமிழ்நாட்டில் வீழ்சியடைந்த விழுமியங்களின் நீட்சியாகவே இதைப் பார்க்கவேண்டியிருக்கிறது. ஆனால் இதே மண் தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர்களைக் கொண்டாடியிருக்கிறது என்பதை சங்க இலக்கியங்கள் உட்பட பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்குச் சொல்கின்றன.

நம் வரலாற்றையும், பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் மீட்டெடுப்பதன் மூலமே நாம் நாம் நமது விழுமியங்களையும் மீட்டெடுக்க முடியும்.. அந்தப் பயணத்தை நாம் நமது காலத்தின் மகத்தான படைப்பாளிகளையும், படைப்புகளையும் கொண்டாடுவதிலிருந்தே துவங்க முடியும்.

(ஜோதிமணி, தமிழக காங்கிரஸின் ஊடகப்பேச்சாளர்)

ஏப்ரல், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com