காத்திருத்தல்

மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம்
காத்திருத்தல்
Published on

நம் நம் வாழ்நாளில் யாருக்காக அதிக நேரம் காத்திருந்திருக்கிறோம்? யோசித்தால் நமக்கே ரொம்ப வெட்கமாக இருக்கிறது.

அதிகாரத்திலிருப்பவனின் பார்வையில் படவேண்டுமென பல மணி நேரம் காத்திருந்திருக்கிறோம்.

காதலியின் வருகைக்காக ரயில்நிலைய ப்ளாட்பாரம் தேயுமளவிற்கு நடந்திருக்கிறோம்.

கோவிலுக்கு குடும்பத்தோடு வரப்போகும் ஒரு அதிகாரிக்காக சர்க்யூட் ஹவுஸ் வாசலில் நாட்கணக்கில் உட்கார்ந்திருக்கிறோம். அல்லது நின்றிருக்கிறோம்.

அவ்வளவுதான் இல்லையா?

நான்கு வருடங்களுக்கு முன் ஒரு சாயங்காலத்தில் ‘வம்சி’யின் வாசலுக்கு, கையில் பேக் செய்யப்பட்ட ஒரு ப்ரேமுடன் ஒரு மனிதன் வருகிறார். அவர் நடையிலோ, பேச்சிலோ, வாழ்விலோ ஒரு பதட்டமுமில்லை. அருணாசலேஸ்வரர் கோவிலிருந்த கற்சிற்பம் ஒன்று ஒருநாள் விடுமுறை கேட்டு வெளியேறி வந்தது போன்ற முகம். நிதானம். வாசல் முன் நின்றவர் ஷைலஜாவைப் பார்த்துக் கேட்கிறார்.

“நான் பவா சாரைப் பார்க்க வேண்டும்”

இன்று அவர் அலுவலகத்திலிருந்து அப்படியே ஒரு கிராமத்திற்குப் போய் தாமதமாகத்தான் வருவேன் எனச் சொன்னார் என தன் கைபேசியால் என்னை அழைக்க முயல அவர் அதே நிதானத்தோடு அதை தடுக்கிறார்.

“வேண்டாம் மேடம், அவர் வரும் வரை காத்திருப்பேன்” வாசலிலிருந்த ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிறார். கடைக்கு உள்ளே இருக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்களும், வெளியே விரிந்திருக்கும் சிறுபத்திரிகைகளும் இப்போது அவருக்கு தேவையில்லை. ஒரு சந்திப்பிற்கான மனநிலை மட்டும் இது. இந்நேரத்தை எது கொண்டு நிரப்பிக் கொள்ளவும் அவருக்கு சம்மதமில்லை.

“டீ சொல்லட்டா சார்”

“வேண்டாம் மேடம் பழக்கமில்லை”

“உங்க பேர் என்னன்னும், எங்கிருந்து வர்றீங்கன்னும் எதுக்காக பவாவை பாக்கணுன்னும் தெரிஞ்சிக்கலாமா சார்?”

“மேடம், நான் ஒரு ஓவியன். என் சமீபத்திய ஒரு ஓவியத்தை பவா சாருக்கு தரணும் அவ்ளோதான்.”

“நீங்கள் அவருக்கு ஏன் உங்கள் ஓவியத்தை பரிசளிக்க வேண்டும்?”

“நான் அவரின் குறைந்த எழுத்துக்கு வாசகன்”

‘அதன் பிறகு அவரிடம் எதைப் பேசவும் எனக்கு திராணியில்ல பவா, இரவு எட்டுமணி வரை வாசலிலேயே காத்திருந்துவிட்டு, கடையை சாத்துகிற நிமிடம் எழுந்து நின்று அந்த ஓவியத்தை என் கையில் தந்து,இதை அவருக்கு நான் தந்தேன் என சொல்லிவிடுங்கள். நன்றி. என திரும்பாமல் அவர் சாலையில் ஓடிக்கொண்டிருந்த பல ஆயிரம் மனிதர்களோடு தனி ஒரு மனிதனாக போனார் பவா’- என அன்றிரவு அவ்ஓவியத்தை பிரித்துக் கொண்டே ஷைலஜா சொன்னபோது, மனிதர்களின் இயல்புகள் குறித்து என் ஆச்சர்யம் பல ஆயிரம் மடங்குக் கூடியது.

அவர் பாலசுப்ரமணியன். பாலு சார் மற்றவர்களுக்கு; எங்களுக்கு எங்கள் பாஸ்.

சந்திப்புகளற்ற பொழுதுகளிலும்கூட அவர் குறித்த ஆச்சர்யங்கள் எனக்குள் கூடிக் கொண்டேப் போகின்றது. அவதானிப்பின் உச்சம் என நான் கருதும் நண்பன் மிஷ்கின் ஒரு மதிய உணவின் போது சொன்னது நினைவுக்கு வருகிறது.

“பாலு, குளத்தாமரை பூவைப் போல தன்மீது படியும் அழுக்கு, மழைநீர், பறவை எச்சம், மனித கொய்தல் எதுவும் அத்தாமரையின் இலைகளையோ பூக்களையோ என்ன செய்துவிடமுடியும். அதைத் தழுவி செல்வதைத் தவிர. அதன் பிறகும் அது புதிதாய் துளிர்விடும், புதிது புதிதாய் பூக்கும். தாமரை கொடியென அவரைச் சொல்வது கூட பொருந்தாது. தாமரைப்பூ. அதன் உயிர்ப்பை கவனித்திருக்கிறீர்களா பவா, அது யாருக்காகவும், எதற்காகவும் பக்கவாட்டில் சாயாது. அதன் ஒரே நீட்சி சூரியன்தான். அது சூரியனை நோக்கி மட்டுமே உயரும். இதழ்கள் வாடி நீரில் வீழ்ந்து அழுகிய போதும் தன் அடுத்த மலர்தலையும் அது சூரியனை நோக்கியே அனுப்பும். நம் பாலு அத்தாமரைப்பூ மாதிரிதான் பவா!”.

எளிய மனிதர்களுக்காக தினம் தினம் பூக்கிற கலைஞன் பாலு.

அவரின் நாட்களை நட்புகளிலிருந்து அவதானித்தால் மூன்று சொற்களில் அடங்கிவிடக்கூடிய ஜீவிதம் பாலு சாருடையது.

காத்திருத்தல், துறத்தல், ஒப்புக்கொடுத்தல்.

“சீனு எங்கடா இருக்க?”

“வீட்ல பாஸ்”

‘’பொறப்பட்டுப் போய் ஜிம்மி பில்டிங் வாசல்ல நில்லு நான் எட்டரைக்கு வந்தடறன்”

“சரி பாஸ்”

அவரின் சக ஹிருதயன், சக ஓவியன் சீனுவாசனுக்காக அதிக வார்த்தைகளை செலவழித்து அவர் நடத்திய உரையாடல் இது.

தன் யமஹாவில் ஜிம்மி பில்டிங் வாசலில் காலை எட்டரைக்கு நிற்க ஆரம்பிக்கிறார் சீனு, சீனுவாசன் ஒருமுறைகூட தன் கடிகாரத்தைப் பார்க்கவில்லை. அருகிலுள்ள போன் பூத்துக்குப் போகவில்லை. அவர் மறந்துவிட்டாரா என நினைவு படுத்தவில்லை.

பல கோல்ட் பிளாக் பில்டர் கிங்ஸ் காலடியில் நசுங்க அங்கேயே கிடக்கிறார். இரவு எட்டு மணிக்கு பாலுசார் அங்கு வருகிறார். ஏன் தாமதம் என்ற கேள்வியே அங்கு இருவருக்குமே எழவில்லை.

இது பைத்தியக்காரத்தனத்தின் உச்சம். அல்லது அபத்த நாடகத்தின் ஒரு காட்சி. அப்படித்தானே!

இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. அவர் தன் நண்பனுக்காக காத்திருக்கிறார். எந்த எதிர்பார்ப்புமற்ற காத்திருந்தல் அது. காதலிக்காக காத்திருத்தல் கூட சில முத்தங்களை யாசித்துப் பெறுவதற்காக இருக்கலாம். இது அதுகூட இல்லை. சரி அப்படி காத்திருக்காமல் நீங்கள் பரபரப்பாக இயங்கினீர்களே என்ன செய்துவிட்டீர்கள் நண்பர்களே! பாலு சாரைவிட அதிகமாய் எதை நீங்கள் பெரிதாய் சாதித்துவிட்டீர்கள்?

பல நாட்களாய் தைல வண்ணம் பூசப்பட்டு தன் முன் மர ஸ்டேண்ட் மீது நிற்கும் கேன்வாசில் எங்கு இந்த இரத்த சிவப்பு புள்ளியை வைப்பது என அவர் அவதானித்து வைப்பாரே! அக்கணத்தின் பெருமிதத்தை விட பெரிதா உங்கள் ஓட்டமும், பரபரப்பும், சாதனையும்?

இந்திய திரைப்படங்களின் ஒளிப்பதிவு மேதை பி.சி.ஸ்ரீராம் அந்த மே மாதம் தன் காரில் வீட்டைவிட்டு வெளியே வருகையில் அம்மரத்தடியை கவனிக்கிறார்.

ஒரு இளைஞன் அவரை எதிர்பார்த்து, அவர் கண்களில் பட்டுவிட வேண்டுமென நிற்கிறான். அவர் கார் அவனை சுலபமாக கடந்துவிடுகிறது.

டிசம்பர், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com