காசு பணம், துட்டு Money Money

காசு பணம், துட்டு Money Money
Published on

அதிர்ச்சியூட்டும் ஐ.பி.எல். கதை- தமிழ் கோகுலன்

இரண்டு மாத தொடர் திருவிழா முடிந்தது. நிறைவோ, மகிழ்ச்சியோ இன்றி விழாக்குழுவினரான கிரிக்கெட் வாரியத்தினர் சங்கடத்தோடு கையைப் பிசைந்து நிற்கிறார்கள். சுலபமான புகழ். நினைத்துப் பார்க்க முடியாத பணம். உலகம் முழுக்க இருக்கும் கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.லை நோக்கி ஈர்ப்பது இதுதான். பணமும், புகழும் ஒருங்கே சேரும் இடத்தில் பக்க விளைவுகளாக வஞ்சகம், துரோகம், மோசடி என்று அத்தனை வில்லத்தனமான காரியங்களும் சேர்வது இயல்புதானே. கூடுதலாக அரசியலும், சினிமா கவர்ச்சியும். வருடா வருடம் நல்ல மசாலா படம் பார்த்த திருப்தி கிடைக்கிறது.

இந்திய கிரிக்கெட் என்பது எவ்வகையிலும் இந்திய அரசை சார்ந்ததோ, பிரதிநிதித்துவப்படுத்துவதோ அல்ல. ‘இந்தியா சில்க்ஸ்’ ‘இந்தியன் காப்பி’ ஷங்கரின் ‘இந்தியன்’ என்று பெயர் வைப்பதைப் போல ‘இந்திய கிரிக்கெட் அணி’. கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பெயரில் ‘இந்தியா’ இருப்பதால் மட்டுமே அது இந்திய அரசின் அதிகாரப்பூர்வமான விளையாட்டுப் பிரிவு என்று நாம் நினைத்துவிடக் கூடாது. அது ஒரு தனி நிறுவனம். எல்லா நிறுவனங்களையும் போலவே ‘லாபம்’ எதிர்ப்பார்க்கும் நிறுவனம். ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் கூட இதேமாதிரி தனியார் நிறுவனம் தான். இவர்களது வியாபாரம் கிரிக்கெட். என்ன செய்தால் வியாபாரம் செழிப்பாக நடக்குமோ, அதையெல்லாம் செய்வார்கள். செய்கிறார்கள்.

இந்த அடிப்படையை புரிந்துக்கொண்டு கிரிக்கெட் பார்த்தோமானால் நம்முடைய இரத்த அழுத்தம் எகிறாது. இந்தியா பாகிஸ்தான் போட்டிகளின் போது தேசிய உணர்ச்சி பீறிட்டுக் கிளம்பாது. ஆபிஸில் பொய்சொல்லி லீவு போட்டுவிட்டு மேட்ச் பார்க்க உட்காரமாட்டோம். பல கோடி ரூபாய் பணம் கொடுத்து ஒளிபரப்பு உரிமையை டிவி நிறுவனங்கள் பெறவேண்டியிருக்காது. மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்ஸிங் என்று நம் அபிமான வீரர்கள் (கிரிக்கெட்டில் என்ன வீரம் வேண்டிக் கிடக்கிறது? இவர்களைப்போய் ஏன் வீரர்கள் என்கிறோம்) குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படும்போதோ, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஆளாகும்போதோ கப்பல் கவிழ்ந்துவிட்டது மாதிரி தலையில் கை வைத்து உட்கார மாட்டோம்.

மொத்தத்தில் நாம் போலியாக உசுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். சினிமா ரசிகனை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முட்டாள் ஆக்குவதைப்போல, கிரிக்கெட் ரசிகனை பி.சி.சி.ஐ., ஐ.சி.சி., மாதிரி தனியார் நிறுவனங்களும், கிரிக்கெட் வீரர்களும், அரசியல்வாதிகளும், சினிமா நட்சத்திரங்களும் என்று கூட்டணி சேர்ந்து ‘கைப்புள்ள’ ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட் ஆடும் ஒரு விளையாட்டு வீரன் எவ்வகையிலும் நாட்டுக்காகவோ, நம் மாநிலத்துக்காகவோ, நம் ஊருக்காகவோ விளையாடுவதில்லை. இந்தியா, தமிழ்நாடு, சென்னை என்றெல்லாம் அணிகளுக்கு பெயர் இருப்பது வெறும் ‘வியாபாரம்’ மட்டுமே. ஜார்க்கண்ட் வீரரான தோனி சென்னைக்கு விளையாடி வெற்றிகளை குவித்தால் -இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அதனால் லாபம் சம்பாதித்தால்- சென்னைவாசிகளுக்கு என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது?

கிரிக்கெட் வியாபாரத்தின் லாபகரமான தயாரிப்பு ஐ.பி.எல். வருடத்துக்கு ஒருமுறை மெகா பட்ஜெட் படம் எடுப்பதைப் போல இந்த டோர்ணமெண்ட் நடக்கிறது. பல நூறு கோடிகளை முதலீடாக்கி  இந்தியாவின் முக்கிய நகரங்களின் பெயரில் (அந்தந்த ஊர்க்காரன்களை உசுப்பேத்ததான்) அணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சினிமாக்காரர்களும், தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் முதலாளிகள். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஆடு, மாடுகளைப் போல ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள். விளம்பரப் படங்களில் நடித்து, பார்ட்டிகளில் கூத்தடித்து, நடிகைகளோடு போஸ் கொடுத்து, ஊடகங்களுக்காக சிரித்து, உடை முழுக்க விளம்பர வாசகங்களோடு மைதானங்களில் சிக்ஸர் அடிக்கிறார்கள். விக்கெட் எடுக்கிறார்கள். பாய்ந்து கேட்ச் பிடிக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் மைதானங்களிலும், கோடிக்கணக்கானோர் டிவி முன்பும் தவம் கிடக்கிறோம். இப்படி ஒரு சூடு, சொரணையற்ற சமூகம் உலகில் வேறெந்த மூலையிலாவது இருக்குமா என்பதே சந்தேகம்தான்.

ஐ.பி.எல். என்பது லலித்மோடி என்கிற மிகச்சிறந்த தொழிற்முறை சூதாட்டக்காரரின் எண்ணத்தில் விளைந்த லாபம் கொழிக்கும் புதுமுறை சூதாட்டம். இந்த சூதாட்டத்தில் சக சூதாடிகளை சில சூதாடிகள் மோசடி செய்துவிட்டார்கள் என்பதுதான் சமீபத்திய பிரச்னையே தவிர, இது தேசத்தின் தலைகுனிவோ, இந்திய விளையாட்டு அமைச்சரே கண்கலங்கி டிவி கேமிராக்கள் முன்பாக வேதனைப்படக்கூடிய நிகழ்வோ அல்ல.

மேட்ச் பிக்ஸிங் என்பது எந்த அணி வெற்றி பெறும் என்று பெட் கட்டி விளையாடும் விளையாட்டு, டெஸ்ட் மேட்ச் மாதிரி. ஸ்பாட் பிக்ஸிங் என்பது ஒவ்வொரு பாலுக்கும் என்ன நடக்கும் என்று யூகித்து பெட் கட்டி விளையாடும் விளையாட்டு. ஐ.பி.எல். என்பதே சட்டப்பூர்வமாக கோடிக் கணக்கானோரை ஏமாற்றி விளையாடப்படும் ஒரு சூதாட்டம்தான். இதை முன்வைத்து குட்டி, குட்டியாக திரைமறைவில் நடக்கும் சூதாட்டம்தான் சமீபத்திய நிகழ்வுகள். இந்த மொத்த விவகாரத்திலும் சமீபத்தில் நாம் கவனிக்க முடிந்த சில வேடிக்கை வினோதங்கள் :

  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த மூன்று வீரர்கள் கைது செய்யப்பட்டபோது கிரிக்கெட் ரசிகர்கள் ஒன்றுமே தெரியாததைப் போல ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைவதுதான் நமக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. ஊழல் சகஜமாகிவிட்ட இந்திய சமூகத்தில் சராசரி இந்தியன் இன்னமும் தனிமனித நேர்மை மீது அப்பாவியாக நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பதையே இது காட்டுகிறது.

  • முன்பெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் இதுபோல புக்கிகளோடு தொடர்புடையவர்கள் என்றோ அல்லது வேறு ஒழுங்கீன நடவடிக்கைகள் ஈடுபட்டவர்கள் என்றோ மீடியாக்களில் செய்திவந்தால் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்தான் நடவடிக்கை எடுக்கும். சில ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதோ, அல்லது வாழ்நாள் முழுக்க விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதோ என்றுதான் அதிகபட்ச நடவடிக்கை இருக்கும். அஸாருதீன், ஜடேஜா, மனோஜ் பிரபாகர் எல்லாம் கைது செய்யப்படவில்லை என்பது நினைவில் இருக்கலாம். இப்போது காவல்துறை உள்ளே புகுந்து வீரர்களை கைது செய்து சட்டத்தின் முன்பாக நிறுத்தும் அளவுக்கு நிலைமை முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

  • புக்கிகளின், வீரர்களின் டெலிபோன் பேச்சுகளை ஒட்டுக்கேட்டதில் தொடங்கி மைதானத்தில் அவர்களது நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தது வரை புலனாய்வுப் புலிகளாக செயல்பட்டு இந்திய மக்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றிருக்கிறார்கள் டெல்லி போலிஸார். டெல்லியின் கமிஷனர் ஹீரோ ரேஞ்சுக்கு மக்களால் இப்போது போற்றப்படுகிறார். சில மாதங்களுக்கு முன்புதான் டெல்லியில் நடந்த தொடர் கற்பழிப்பு சம்பவங்களால் இதே போலீஸார் பொதுமக்களால் கிழித்து தொங்கவிடப்பட்டார்கள் என்பதை நினைவுகூர வேண்டியது அவசியமாகிறது. மிகக்குறுகிய நாட்களிலேயே கிரிக்கெட் எப்படி தலைகீழான ஒரு இமேஜை ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

ஏன் இப்படியெல்லாம் சிரமப்பட வேண்டுமோ தெரியவில்லை. கிரிக்கெட் சூதாட்டத்தை பேசாமல் சட்டப்பூர்வமாக்கி விடலாம். எந்த குதிரை முதலில் ஓடி ஜெயிக்கும் என்று பெட் கட்டி விளையாடுவதை உச்சநீதிமன்றமே ஒப்புக்கொள்ளவில்லையா. அதுபோல எந்த பவுலர் எந்த பாலில் சிக்ஸர் விடுவார், எந்த பேட்ஸ்மேன் எத்தனையாவது நிமிடத்தில் எல்.பி.டபிள்யூ ஆவார் என்று டிவி லைவ் ரிலேவிலேயே ‘பெட்’ கட்டி சூது ஆடினால் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கூடுதலாக இன்னும் சில ஆயிரம் கோடிகள் வருமே. வீரர்களை சீட்டுக்காரம்மா மாதிரி ஏலத்துக்கு விடும் கிரிக்கெட் வாரியம் இதற்குப்போய் தயங்கலாமா? எதற்கு இந்த லாபத்தை போய் புக்கிகளுக்கு வீணாக அழவேண்டும்?

ஜூன், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com