கல்வி அமைச்சர் ஆக விரும்புகிறேன்!

கல்வி அமைச்சர் ஆக விரும்புகிறேன்!
Published on

சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும் நாட்களில், எந்த ஒரு விஷேச நாட்களுக்கும் புதுத் துணி எடுக்கும் நிலையில் குடும்பம் இல்லை. மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறைதான் புதுத் துணி எடுக்க முடியும். தீபாவளி,பொங்கல் போன்ற விழா நாட்களுக்கு அடுத்த நாள் அனைவரும் பள்ளிக்கு புதுத் துணி அணிந்து வருவார்கள். அதனால் அந்த நாட்களில் பள்ளிக்கு செல்வதை தவிர்த்து விடுவேன் அல்லது தாமதமாக செல்வேன்.காரணம் கேட்பவர்களிடம் மறந்து பள்ளிச்சீருடையிலேயே வந்ததாக பொய்க்காரணம் சொல்வேன். பள்ளிக் காலம் முழுக்கவே இதே நிலைதான்’ தன்னுடைய வலி மிகுந்த இளமை காலத்தை நினைவு கூர்கிறார் வருடத்திற்கு 10 கோடி ரூபாய் வியாபாரம் செய்யும் ‘புட் கிங்’ நிறுவனர் சரத்பாபு. மடிப்பாக்கத்தில் அவர் வளர்ந்த இடத்திற்கு அருகிலேயே உள்ள காபி ஷாப்பில் அமைதியான இரவு நேரத்தில் அந்திமழைக்காக சந்தித்தோம்.

சென்னை மடிப்பாக்கத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் சரத். இரண்டு அக்காக்கள், இரண்டு தம்பிகளுக்கு இடையில் நடுப்பிள்ளை. சிறுவயதிலேயே அப்பா குடும்பத்தை விட்டு சென்றுவிட்டதால் குடும்ப சுமை முழுக்க அம்மா மீது. சத்துணவு மையத்தில் வேலை பார்த்து வந்த சரத்தின் அம்மா,மீதி நேரத்தில் இட்லி வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்ற முனைந்திருக்கிறார்.குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது எண்ணம்.

 வசதியில்லாத மாணவன்,வசதியானவர்கள் படிக்கும் பள்ளியில் படிக்கும்போது ஏற்படும் அத்தனை இடறல்களையும் தாண்டியே வந்திருக்கிறார் சரத்.கல்வியை தனக்கான கேடயமாக சரத் பயன்படுத்தியதை சொல்கையில், “காலை நேரத்தில் அம்மாவுடன் இட்லி விற்கப்போய் விடுவேன். மனதிற்குள் உறுத்திக்கொண்டே இருக்கும். நம்முடன் படிக்கும் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நாம் மட்டும் தான் இப்படி கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே என்று... தற்செயலாக ஒரு பாடத்தில் முதல் மதிப்பெண் எடுத்ததற்காக வகுப்பறையே கை தட்டிப் பாராட்டியது. அப்போதுதான் புரிந்து கொண்டேன். நல்ல உணவு உண்ண பணம் வேண்டும், நல்ல உடை உடுத்த பணம் வேண்டும். ஆனால் நன்றாக படிக்க பணம் பொருட்டேயில்லை. அந்த சமயத்திலிருந்து கடுமையாக உழைத்து படிக்க ஆரம்பித்தேன். புராகரஸ் கார்டில் முதல் மதிப்பெண்ணுடன் ஸ்டார் ஒட்டி கொடுப்பார்கள்.என்னால் எவ்வளவு ஸ்டார் வாங்க முடியுமோ அவ்வளவு ஸ்டார்களை வாங்கி,அம்மாவிடம் பெருமையாக கொண்டுவந்து காட்டுவேன். கஷ்டமான சூழ்நிலையிலும் எங்களை படிக்க வைத்த அம்மாவிற்கு அந்த வயதில் என்னால் கொடுக்க முடிந்த சந்தோசம் அது மட்டும் தான்“ காபி யை அருந்தியபடியே பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறார் சரத்.

“பள்ளியில் கட்டணம் கட்ட முடியாமல் பல நாட்கள் வகுப்பறைக்கு வெளியே நின்றிருக்கிறேன்.அப்போதெல்லாம் என்னுடைய வேண்டுதல் நான் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு விடக்கூடாது.இன்னும் இரண்டு மூன்று மாணவர்கள் என்னுடன் இருந்தால் பரவாயில்லை என்பதே. அதே மாதிரி நடக்கும்;ஆனால் இரண்டு நாட்களில் அவர்கள் பணம் கட்டிவிட்டு உள்ளே சென்று விடுவார்கள்.திரும்பவும் நான் மட்டும் தனியே நிற்க வேண்டியிருக்கும்.அப்போது அதை ஒரு சவாலாகவே எடுத்துக் கொள்ள ஆரம்பித்தேன்.வகுப்பறைக்கு உள்ளே அமர்ந்து கவனித்தால் மட்டும் தான் முதல் மதிப்பெண் வாங்க முடியுமா? வெளியே நின்றாலும் இங்கிருந்தே பாடங்களை கவனித்து முதல் மதிப்ப்பெண் எடுத்து காட்டுகிறேன் என்பதுதான் அது. பள்ளி படிப்பு முடிக்கும் வரை முதல் மதிப்பெண் என்பது மட்டும் மாறவே இல்லை” எந்த சூழ் நிலையையும் தனக்கு சாதகமானதாக மாற்றிக்கொள்ளும் சரத் உற்சாகமாக சொல்கிறார்..

  “9 ஆம் வகுப்பு படிக்கும்போது லெதர் கம்பெனி ஒன்றில் பார்ட் டைம் வேலை பார்த்தேன். அதுவரை வீட்டில் மின்சாரம் கிடையாது. விளக்கு வைத்துதான் படிக்க வேண்டும். வருத்தப்படுவதால் ஒன்றும் நடந்துவிடாது என்று புரியும் வயசு. மற்றவர்கள் வீட்டில் மின்சாரம் இருக்கிறது.அதனால் அவர்களுக்கு வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் தெரியும். டி.வியில் எதாவது நிகழ்சிகள் அவர்களை திசைதிருப்பக்கூடும்.ஆனால் நமக்கு அப்படி எந்த பிரச்னையும் இல்லை.விளக்கு வெளிச்சமும் புத்தகமும் மட்டுமே. நாம் நன்றாக படிக்கலாம் என்று அதையும் சாதகமாகவே யோசித்தேன்”. வெற்றியாளர்களுக்கான தனி குணத்துடன் பேசுகிறார்.

“12 ஆம் வகுப்பு நல்ல மதிப்பெண்ணுடன் முடித்தவுடன் நண்பர்களின் அறிவுரைப்படி பிட்ஸ் பிலானியில் விண்ணபித்தேன்.அட்மிஷனும் கிடைத்தது.அக்காவின் நகை அடகு வைத்து,வட்டிக்கு வாங்கிய கொஞ்சம் பணம் என்று ராஜஸ்தான் புறப்பட்டு விட்டேன். அங்கும் பள்ளியில் இருந்த அதே நிலைதான்.சென்னை குடிசை பகுதியில் பிறந்து, பஞ்சாயத்து போர்டு டிவியை மட்டுமே பார்த்தவனிடம் ஹாலிவுட் நடிகர்களை பற்றி பேசினால் என்ன தெரியும்? அதுவும் ஆங்கிலமும் சரியாக பேசத் தெரியாது அப்போது. மீண்டும் தனிமைப்பட்டுப் போனேன். ஒரே ஒரு நண்பன் தான். இரண்டு வருட முடிவில் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்தேன். அப்போது என்னுடைய ஒருங்கிணைக்கும் தன்மையைப் பார்த்து உனக்கு மேனேஜ்மெண்ட் நன்றாக வருகிறது,முயற்சி செய் என்றார்கள்.அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று விசாரித்த போதுதான், ஐஐஎம் அகமதாபாத் பற்றி தெரிந்து கொண்டேன். அங்கு படிப்பு முடித்தவர்களுக்கு வருடத்திற்கு ஒரு கோடி வரை சம்பளம் கிடைக்கும் என்று தெரிந்ததும் ஆர்வம் அதிகமானது.அடைக்கவேண்டிய கடன் நிறைய இருக்கிறதே...” காபியை முடித்து விட்டு சிரிக்கிறார்.

 “நான்காவது வருடம் பிட்ஸ் பிலானியில் படிக்கும் போது பீகாருக்கு டிரெயினிங்கிற்காக சென்றிருந்தேன்.அப்போது செய்தித்தாளில் படித்த தகவல் என்னை அதிர்ச்சி அடைய வைப்பதாக இருந்தது.இந்தியாவில் 30 சதவீதத்திற்கு அதிகமானோர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர் என்ற தகவல்தான் அது. அவ்வளவு பேர் சரியாக இரவு உண்ணாமல் தூங்கச்செல்கிறார்கள் என்ற எண்ணமே என்னை உலுக்கியது. பசின்னா என்னன்னு எனக்கு தெரியும். அதுவரை நாமும், நம்மை சுற்றி சிலரும் தான் இப்படி இருக்கிறோம் என்று எண்ணியிருந்த எனக்கு, அந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்தது.அப்போதே முடிவு செய்தேன். நாம் கம்பெனி ஆரம்பித்து ஒரு லட்சம் பேருக்கு வேலை கொடுக்க வேண்டும். அதேபோல் நூறு பேர் செய்தால் கூட 100 லட்சம் பேரின் பசியை போக்க முடியுமே?.ஆனால் கனவை செயல்படுத்த கொஞ்ச காலம் தேவைப்பட்டது. கடனை அடைக்க இரண்டரை ஆண்டு காலம் வேலை செய்தேன். அந்த சமயத்திலேயே கேட் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்து விட்டேன்.முதல் இரண்டு முறை கிடைக்கவில்லை.மூன்றாவது முறை வைரஸ் காய்ச்சலுடன் பரிட்சை எழுதி ஐஐஎம் அகமதாபாத்தில் நுழைந்து விட்டேன். அங்கு முடித்தவுடன் நிறைய சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் என்னுடைய கனவை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் 2006 ல் அகமதாபாத்தில் ‘புட் கிங்’ என்ற கம்பெனியை இரண்டாயிரம் ரூபாய் முதலீட்டுடன் தொடங்கினேன். இன்போசிஸ் நாராயண மூர்த்தி அதனை தொடங்கி வைத்தார். கல்வி நிறுவனங்கள், ஐடி கம்பெனி போன்றவற்றிற்கு சாப்பாடு கொடுக்கும் கம்பெனி. ஐஐஎம்மில் படித்துவிட்டு சாப்பாட்டு கம்பெனி ஆரம்பித்திருக்கிறானே என்று என்னை பார்த்து சிரித்தவர்களும் உண்டு. நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப் படவில்லை.”

2008 ல் சென்னையிலும் புட் கிங் கிளைகளை தொடங்கிவிட்டார்.வியாபாரத்தில் இவருடைய கனவு ஒரு லட்சம் பேருக்கு வேலை கொடுப்பது என்பதே.

வறுமை ஒழிப்பு தினம் என்று அக்டோபர் (10-10) பத்தாம் தேதியன்று அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்குவதை ஒரு இயக்கமாகவே வளர்த்து வருகிறார் சரத்பாபு. அக்டோபர் பத்திற்கான காரணம்? பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்கள். இந்த பத்து வந்தால் பசி பறந்து போக வேண்டும் என்பதுதானாம்.

பெரிய அளவில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமெனில் கம்பெனி நடத்தினால் மட்டும் போதாது.அரசியலுக்கும் வர வேண்டும் என்பது சரத்தின் எண்ணம்.இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால் மட்டுமே மாற்றத்தை உண்டாக்க முடியும் என்று நம்புபவர்.ஒரு வருடத்திற்கு முன்பாக ராகுல் காந்தி இவரை கட்சியில் சேர அழைத்திருக்கிறார்.ஆனால் சரத் சேரவில்லை.2009 நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் சுயேட்சையாக நின்று இரண்டரை சதவீதம் வாக்குகள் பெற்றிருக்கிறார். தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன்புதான் சின்னம் பெற்று சுயேட்சையாக  அவர் வாங்கிய வாக்கு சதவீதம் நம்பிக்கை அளித்திருக்கிறது. மீண்டும் 2011 ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 5 சதவீத வாக்குகளைப் பெற்றதுடன் மூன்றாவது இடத்தை பெற்றிருக்கிறார்.அடுத்த சட்டமன்ற தேர்தல் இவரது இலக்கு. அரசியலில் இவரின் கனவு கல்வி அமைச்சராகி அனைவருக்கும் தரமான கல்வியை அளிக்கவேண்டுமென்பதே.

ஏப்ரல், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com