கலப்பும் கௌரவமும்

Published on

அவர் பெயர் பச்சமால் தேவர். வாசக் கதவு தட்டும் உயரம். 23ம் புலிகேசி மீசை இவரைப் பார்த்துதான் வடிவேலுக்கு வைத்தார்களோ என்கிற வகையில் மீசை இருக்கும். அதிகம் யாரிடமும் பேசமாட்டார். அதிகாலை 6 மணிக்கு நடக்க ஆரம்பிப்பவர் 8 மணிவரை நடந்து கொண்டே இருப்பார். எதிரே வருபவர்கள் வணக்கம் போட்டால் சிறுபுன்னகையோடு கடந்து போவார்.

அவ்வளவு இறுக்கமாக இருப்பார். காலை உணவு முடிந்தவுடன் தியானம் அப்புறம் நூலகம் தான். மாலை 5 மணிவரை நூலகம்தான். இடையிடையே மனு வந்தால் மட்டும் போய் வருவார்.

மதுரை மத்திய சிறையில் தான் பச்சமால் தேவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. 1999ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆண்டு வரை நான் ஆயுள் சிறைவாசியாக வசித்தபோது பல்வேறுபட்ட மனிதர்களை சந்தித்தேன். அதில் முக்கியமானவர் இந்த பச்சமால். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சார்ந்தவர். மனித சகவாசம் மறுதலித்து கதைப்புத்தகங்களோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார். சிறையில் அனேகபேரின் கதையை கேட்கும்போது கவலைகளும் கோபமும் என்னைத் தழுவிக்கொள்ளும். அப்படி வழக்குகள் ஏறக்குறைய போலீசால் புனையப்பட்டவை தான். பச்சமால் தேவரின் கதை மட்டும் நமக்கு சொல்லப்படவே இல்லை.  இவருக்காகவே பல நாவல்களை வாங்கி வரச்செய்தேன். தினமும் மாலை 5மணிக்கு லாக்கப் போகும் முன்பு என்னைச் சந்தித்து உரையாடிவிட்டு ஏதாவது நாவலை வாங்கிவிட்டுப்போவார். ஒரு நாள் மனுவுக்கு போய்விட்டு வந்தவர் அப்படியே பிள்ளையார் கோவில் அரச மரத்தடியில் ஏதோ யோசனையாய் உட்கார்ந்திருந்தார். எதற்காக இப்படி இரட்டை ஆயுள் தண்டனையை கழிக்கிறீங்க? என்ன தப்பு செஞ்சிட்டு வந்திங்க என்று கேட்டபோது அவரது மவுனம் கலைந்தது. ரொம்ப நாளா உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சி தம்பின்னு பேசினார்.

உசிலம்பட்டியில் சாதிசனங்களோடு கவுரமாக வாழ்ந்துவந்த பச்சமால் தேவருக்கு இரண்டு மூன்று பெண்பிள்ளைகள். மூத்த பிள்ளையை சொந்த தாய்மாமனுக்கே தடபுடலாக கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார். ஒரு நாள் திடீரென இரண்டாவது மகள் யாரையோ கூட்டிட்டு ஓடிபோய்ட்டா என்கிற இடி விழுகிற செய்தி அவரை நிலை குலையச் செய்தது. பக்கத்து ஊரு பையன் தான். ஆனால் தலித் பையன். இது தான் பச்சமால் தேவரை கொதிக்க வைத்தது. இது நாள் வரை கட்டிக்காத்த கவுரத்தை கீழ்சாதி பையன் காவு வாங்கிட்டு போய்ட்டானே என்று புலம்ப ஆரம்பித்தார். பல ஊர்களுக்கு ஆட்களை அனுப்பி தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அப்படியே மன நலம் பாதிக்கப்பட்டவர் போல ஊர் மந்தையில் உள்ள சாவடியில் கிடந்தார். சாதி சனங்கள் தன்னை மதிக்கவில்லை என்று புலம்பினார். கல்யாண பத்திரிக்கை கொடுக்க வருபவர்கள், தங்கள் வீட்டை புறக்கணித்துவிட்டு மற்ற வீடுகளுக்கு கொடுப்பதை போல உணர ஆரம்பித்தார். சாதி சனத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டதாக புலம்பினார். காலங்கள் ஓடின. திடீரென தன் மகள் இருக்கும் இடம் தெரிந்தது. ஓடிப்போய் பார்த்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.

தான் உயிருக்குயிராக வளர்த்த செல்லமகள் இன்னொரு உயிரை சுமந்து நிற்பதைக்கண்டு கட்டிப்பிடித்து அழுதார். மருமகனின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. வளைகாப்பு வைக்கவேண்டும். நடந்தது நடந்துவிட்டது. இதையாவது எனக்கு செய்ய ஆசையம்மா என்று அழுக ஆரம்பித்தார். தந்தையின் கண்ணீர் அவர் வழி நடக்கச்செய்தது. எல்லோரும் பேசி, மருமகனோடும் மகளோடும் உசிலம்பட்டிக்கு திரும்பிக்கொண்டிருந்தார் பச்சமால். அன்று ஊரே இதைப்பற்றிதான் அசைபோட்டுக்கொண்டிருந்தது. சொந்தபந்தங்கள் வந்து எழவு விசாரிப்பது போல விசாரித்து திரும்பினார்கள். மருமகனும் அவரோடு வந்த சொந்தங்களும் நிறைமாத மகளை விட்டுவிட்டு, அன்றைக்கே ஊர் திரும்ப இருப்பதால் மகளுக்கு செய்ய வேண்டிய சீர் அத்தனையும் செய்தார். மஞ்சள் தடவி, வளையல்களை கை நிறைய போட்டு, புது புடவ அது இது என்று புள்ளத்தாய்ச்சி பொண்ணை அழகு பார்த்தார் பச்சமால். மாலை 7மணிக்கெல்லாம் அவரவர் வீடு திரும்பினார்கள். மருமகனும் மாமனாரும் மனைவியிடம் சொல்லிவிட்டு ஊர் திரும்பினார்கள். இரவு 11மணியாகிவிட்டது. ஊரே தூக்கத்திற்குள் முடங்கி இருந்தது. மார்கழி குளிர்பொழுது, நாய்கள் ஆங்காங்கே ஓலமிட்டுக்கொண்டிருந்தன. பச்சமால் தேவர் மட்டும் தூங்கவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். ஆசை ஆசையாய் வளர்த்த மகளை மீண்டும் மீண்டும் பார்த்து அழ ஆரம்பித்தார்.

அப்பா அழுவதைப்பார்த்து திடுக்கிட்டு எழுந்த மகள், கண்ணீரை துடைத்துக் கொண்டே, ஏம்பா என்று கட்டிப்பிடித்தார். போயும் போயும் ஒரு பள்ளப்பயலா  உனக்கு கிடைச்சாம்மா, நம்ம சாதி கவுரத்தையே கெடுத்திட்டியே என்று சொல்லிக்கொண்டே மூலையில் வைத்திருந்த மண்ணெண்னை டின்னை அப்படியே மகள் மீது கவிழ்த்தினார். தீப்பட்டியை பற்ற வைக்க ஓலமிட்டபடி எரிந்து சாம்பலானாள்.

இந்த கவுரகொலை செய்தமைக்குத்தான் பச்சமலைதேவர் இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 1991ல் தண்டனை பெற்று 8 ஆண்டுகளாக சிறையிலிருந்தவரை 1999ல் சந்தித்த வரை, பரோல் விடுமுறையில் ஓரிரு முறை ஊருக்கு போய் வந்ததாக சொன்னார். சாதி கவுரத்தையும் குடும்ப கவுரத்தையும் காப்பதற்காக இந்தியா முழுக்க பல படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெற்ற மகளை விட சாதிதான் பெரிது என்று படுகொலைகளை துணிச்சலாக அரங்கேற்றி வருகின்றனர்.

திவ்யா - இளவரசன், உடுமலைப்பேட்டை சங்கர் - கவுசல்யா, சேலம் கோகுல்ராஜ், அரியலூர் நந்தினி என்று தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கின்றன. காதலையும் வீரத்தையும் தமிழர்களின் உயரிய பண்பாடாக போற்றும் தமிழகத்தில், காதல் கொலை செய்வதுதான் வீரமாக மாறிப்போனது. தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு 88 ஆணவப்படுகொலைகளும், இந்தியா முழுக்க 579 ஆணவப்படுகொலைகளும் நடந்திருப்பதாக தேசிய ஆவணக்காப்பகம் தமது அறிக்கையில் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.

பொதுவாக இம்மாதிரி படுகொலைகளை உள்ளூர் காவல்துறை பெரும்பாலும் சந்தேக மரணங்கள் என்றும் தற்கொலை என்றே பதிவு செய்து வழக்கை மூடிவிடுவார்கள். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் தான் தற்போது ஆணவக்கொலைகளை அம்பலத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. வடமாவட்டங்களில் இந்தப்படுகொலைகள் சாதாரண நிகழ்வாக நடந்து கொண்டிருந்தவை. பெரியார் மண்ணான தமிழகத்தில் இப்படுகொலைகள் மிகமிக குறைவாக இருந்தன. தற்போது தருமபுரி கலவரத்திற்கு பிறகு காதல் பிரச்சனையை அரசியலாக மாற்றி, அனைத்து சமுதாய பேரவை என்று தலித்துகளுக்கு எதிராக பரப்புரை செய்ததுதான் இன்றைக்கு இருக்கிற சாபக்கேடு. உலகமயமாதலில் கலப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. தூய்மைவாதம் என்பது ஒரு வித பாசிசம்தான்.

உலகத்தில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை தூண்டுவதாகவும் வளர்ப்பதாகவும், பெண்களை அடிமைப்படுத்துகிற நாடாக காட்டுகிறார்கள். அப்படிப்பட்ட நாட்டில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிபடுத்துகிற வழியில் அக்டோபர் 6, 2016 அன்று ஆணவப்படுகொலைகளுக்கு எதிராக சட்டம் ஒன்றை பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குறைந்த பட்சம் 25ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அதிகபட்சமாக மரண தண்டனையுமாக சட்டம் இயற்றி உள்ளனர். அதில் மரண தண்டனையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இரக்கத்தோடு இறங்கி வந்தால்தான் ரத்து செய்ய அதிகாரம் உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது.

பெரிய சனநாயகம் பேசுகிற இந்தியாவில் இது குறித்து பேசுவதே அரிதாக இருக்கிறது. சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்து நிறுத்தாத வரையில் எந்த நாடும், சமூகமும் முன்னேறியதாகவே கருத முடியாது. அதற்கு பிறகுதான் நாடு ‘வல்லரசு’, ‘விஞ்ஞானம்’ என்று பெருமை அடித்துக்கொள்ளலாம்.

மதுரை சிறையிலிருந்து நான் விடுதலையாகி வெளியே வரும்போது அய்யா பச்சமால் தேவரிடம் கேட்டேன். “இப்படி மகளை தீக்கிரையாக்கிவிட்டு சிறைத் தண்டனை அனுபவிப்பது உங்களுக்கு துயரமாகத் தெரியவில்லையா? என்று. அவர் ‘தம்பி என்னுடைய சாதி கவுரவத்தை காப்பாத்த தான் அன்னைக்கு அந்த கொடுமைய செஞ்சேன். இப்ப அந்த சாதிசனம் கூட என்ன பார்க்க வரல. பரோல்ல ஊருக்கு போனா கூட கொலைகாரன்னுதான் சொந்த சாதிகாரங்களே காது பட பேசுறாங்க. என் ஆசை பொண்ணை கொன்னுட்டு இப்ப அனாதையா இருக்கேன்’ என்று அழுதார். ஆறுதல் சொல்லிவிட்டு வெளியேறினேன்.  படுகொலைகள் நடக்கிற இடத்துக்கு போகும் போதெல்லாம் எனக்குள்ளே பச்சமால் தேவர் வந்து வந்து போவார்.

(வன்னிஅரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்)

மார்ச், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com