ஒரு நாளுக்கு ஒரு பெண் என்று ஓர் ஆண்டில் 365 பெண்களுடன் டேட்டிங் போகிறேன் எனச் சென்னையைச் சேர்ந்த ’ப்ளேபாய்’ சுந்தர் ராமு கிளம்பியுள்ளார் என்பது இந்திய ஊடகங்களைத் தாண்டி சர்வதேச ஊடகச் செய்தி ஆகிவிட்டது. யார்ப்பா நம்ம ஊரில் இப்படி ஒரு மச்சக்கார மனுஷன் என்று தேடிப்பிடித்தேன். பார்த்தால் நம்ம சுந்தர். மயக்கமென்ன படத்தில் ரிச்சாவை நண்பன் தனுஷிடம் பறிகொடுக்கும் படுபாவமான பாத்திரத்தில் அறிமுகம் ஆனவர்.
சினிமாவுக்கு வரும் முன்பே சுந்தர் ராமு நாடறிந்த பேஷன் புகைப்படக் கலைஞர். இதுவரை 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் டேட்டிங் போய் இருப்பதாகக் கேள்விப்பட்டதால் காது நிறைய புகையுடன் அவரை அணுகியபோது சுந்தர் மிகவும் மாறுபட்ட நபராக இருந்து நம் முகத்தில் கரியைப் பூசினார்:
நீங்க யாரு? இதுக்கு முன்னாடி என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க?
நான் பிறந்தது பெங்களூர். மூணு வயதிலிருந்து புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். ஏனெனில் நான் படித்த பள்ளி அப்படி. தி வேலி ஸ்கூல். (ஜி.கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷன் நடத்திய பள்ளி) அங்க படிப்பு மட்டுமில்லாமல் தச்சுக்கலை, புகைப்படக்கலை, ஏரோ மாடலிங் அப்படின்னு ஏராளமான விஷயங்களைச் சொல்லித் தருவாங்க. புகைப்படக்கலை எனக்குப் பிடிச்சது. ஆனால் அதை விட நாடகத்துறை எனக்குப் பிடிச்சிருந்தது. நானே நாடகம் எழுதுவேன். நடிப்பேன். ஒன்பதாம் வகுப்புப் படிக்கையில் நான் இயக்கிய நாடகம் பல விழாக்களுக்குப் போகும் வாய்ப்பு கிடைத் தது. உடனே இந்தியாவைச் சேர்ந்த 24 நாடகத்துறைப் புள்ளிகள் கலந்துகொண்ட ஒரு நாடக ஒர்க்ஷாப்புக்குத் தேர்வானேன். லிசா ரிஸ்கின் என்கிற அமெரிக்க நாடகக் கலைஞர் ஏற்பாடு செய்த ஒர்க்ஷாப் அது. அதில் மிகவும் சின்னப்பையன் நான் தான். அலெக் பதம்சி போன்ற மிகப்பெரிய ஆட்கள் அதில் இடம் பெற்றிருந்தாங்க. என்னோடு அதில் டீம் மேட்டா இருந்தது மகேஷ் தத்தானி! பெரிய நாடகக் கலைஞர்!
பள்ளிப்படிப்பு முடிஞ்சதும் தேசிய நாடகப்பள்ளியில் சேர கிரிஷ் கர்னாட் போன்ற கலைஞர்களின் சிபாரிசுடன் போனேன். அங்கே முதுகலைதான் படிக்க முடியும்ங்கறதால் சின்னதா நடிப்பு கோர்ஸ் முடிச்சுட்டு வந்துட்டேன். அப்பா கடலூரில் பிறந்தவர். பெங்களூர்ல பிறந்ததால் எனக்கு தமிழ் சரியா பேசவே வராது. நீ சென்னைக்குப் போ. தமிழ் கத்துக்கோ என்று சென்னை லயோலாவில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க அனுப்பிட்டார்!
பேஷன் போட்டோகிராபி
கல்லூரியில் படிக்கும்போது சுனிதா பஞ்சாபி என்கிற மாடல் கலைஞருக்கு புகைப்படம் எடுத்துக்கொடுத்தேன். அவங்க மிஸ் பெமினா போட்டியில் அரை இறுதி வரைக்கும் போனாங்க. அதிலிருந்து ஒரு புகைப்படக் கலைஞனா எனக்கு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பிச்சுது. இந்தியா முழுக்க இருக்கிற முக்கியமான 20க்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் என் படங்கள் வந்தன. Elle, Vogue. Marieclaire இப்படி பல பத்திரிகைகள். அப்புறம் நிறைய சேலை விளம்பரங்கள்.
இதற்கு இடையில் என்னுடைய நாடகப் பங்கேற்பையும் விடலை. தொடர்ந்து நடிச்சிட்டே இருந்தேன். பரத நாட்டியம் தெரியும். சென்னைக்கு வந்து வெஸ்டர்னும் ஒரு பத்து வருஷம் கத்துகிட்டேன். எனக்கு வயலின் கூடத் தெரியும்.பெங்களூர்ல ஆர்.ஆர். கேசவமூர்த்திதான் என் குரு. அவரைத் தவிர வேறு யார்கிட்டயும் கத்துக்கக் கூடாதுன்னு சென்னை வந்ததும் வயலினைத் தொடலை! இப்படி பிஸியான புகைப்படக்காரனாக 18 வருஷம் போச்சு. இப்ப என்ன தோணுச்சின்னா, எல்லாரும் இப்ப டிஜிட்டல் யுகத்தில் படம் எடுக்க ஆரம்பிக்கிறாங்க. அத்தோட புகைப்படம் என்பது என்னைப்பொறுத்த வரை ஒரு கலை. பத்திரிகைகளிலும் அதற்கு பல காரணங்களால் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கிறதில்லை. எனவே அதை நிறுத்திட்டேன். சேலை விளம்பரங்களும் அப்படித்தான். எல்லா புகைப்படங்களும் ஒரே மாதிரி எடுக்க வேண்டியிருக்கு. அதனால் இப்ப ஃபைன் ஆர்ட் போட்டோகிராபி பக்கம் கவனம் செலுத்துகிறேன். அழகா படம் எடுத்து அதை ஒரே ஒரு பிரிண்ட் போட்டு என்னோட Arkanza கேலரியில் விக்கறேன். யாரு வேணும்னாலும் வாங்கிப்போய்க்கலாம். ஓவியம் மாதிரிதான். நான் வளர வளர நீங்க வாங்கி வெச்சிருக்கிற புகைப்படத்தின் மதிப்பும் கூடும்!
சினிமா மயக்கம்
சினிமாவுக்கு கடந்த பதினெட்டு வருஷமா போகணும்னு தோணலை. கல்லூரியில் சூர்யா என் பேட்ச் மேட், விஜய் என் கிளாஸ் மேட்.. நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க. யார் கிட்ட கேட்டிருந்தாலும் வாய்ப்பு கிடைச்சிருக்கும். ஆனால் நான் போகலை. அப்புறம்தான் தோணுச்சி. நாடகத்தை விட்டுட்டு காமிராவுக்கு முன்னால் போய் நிக்கலாமேன்னு. தனுஷ் கூட மயக்கமென்ன படம் கிடைச்சுது. நான் என்னதான் நாடகத்துறையிலிருந்து வந்திருந்தாலும் தனுஷ் கிட்ட இருந்து நிறைய கத்துகிட்டேன். விஷால், அதர்வா, ஜீவா இப்டி நிறைய பேர்கூட ஒர்க் பண்ணி நிறைய தெரிஞ்சிகிட முடிந்தது. அதர்வா கூட கணிதன் படம் முடிஞ்சிருக்கு. பார்வதி மேனன் ஜோடியா வசந்த் சார் இயக்கத்தில் ஒரு படம் போய்க்கிட்டிருக்கு.
மதிய உணவு!
இப்ப நம்ம நாட்டை எடுத்துகிட்டா எங்கபார்த்தாலும் பெண்களை நாம் நடத்தற விதமே சரியில்லை. அவங்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகுது. எந்த மீடியாவை எடுத்தாலும் ரேப் செய்திதான்! நான் ஒவ்வொரு வருஷமும் மூணுமாதம் ஐரோப்பாவுக்கு பயணம் போய்விடுவேன். முதலில் அங்கே இந்தியன் என்றால், யோகா, ஆன்மீகம் என்பார்கள். இப்ப ரேப் என்கிறார்கள். சந்தேகமாக பார்க்கிறாங்க. இதை மாத்தணும். சின்ன அளவில் நம்ம எதாவது செய்வோமே என்பதுதான் இந்த பொண்ணுங்களுடன் லஞ்ச் சாப்பிடற பிளான்! ஆண்களுக்கு பெண்களை சமமா நடத்தணும்! அவங்களும் நம்மளை மாதிரிதான் என்று உணர்த்துவதற்காக, இந்த செய்தியை வலுவாகச் சொல்றதுக்குதான் இதை பண்றேன். தினமும் ஒருமணி நேரம் செலவு பண்ணா போதும்! அவங்க செலவில் சாப்பிட்டு அவங்களைப் படம் எடுத்து சோஷியல் மீடியாவில் போடறேன்! அவங்களைப் பத்தி எழுதறேன். இதுக்கு எவ்வளவு வரவேற்பு தெரியுமா?
சிங்கப்பூர்ல இருந்து ஒரு பொண்ணு வந்து என்கூட சாப்பிட்டுட்டு போயிருக்காங்க. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற இடங்களில் கூட வரவேற்பு. நிறையபேர் அங்கே வரும்போது அவங்களுடன் சாப்பிடணும்னு அழைச்சிருக்காங்க. வெனிசுலாவில் இருந்து ஒரு பொண்ணு என்கூட டேட்டிங் போகணும். தென்னமெரிக்காவுக்கு எங்க வந்தாலும் சொல்லுங்கன்னு செய்தி அனுப்பி இருக்காங்க. அவ்ளோ அழகான பொண்ணு அவங்க. பெங்களூரில் Hundred saree pact அமைப்பில் என்னைப் பேசக்கூப்பிட்டிருக்காங்க. கேரளாவில் இருந்து ஒரு திருமணமான பெண் தானும் இதுபோல் 365 ஆண்களுடன் மதிய உணவு சாப்பிடப்போறதாகச் சொல்லி இருக்காங்க. ஆண்- பெண் இடையே ஒரு ஆரோக்கியமான உறவு ஏற்படணும்! பொண்ணுங்களை அப்படியே மொறைச்சு பார்த்துகிட்டே நிக்கறதுதான் நம்ம ஊர் பையங்க கிட்ட இருக்கு!
யார் யார்?
நான் 21 வயது பொண்ணுகூடயும் லஞ்ச் சாப்பிடிருக்கேன். 105 வயதான என்னோட பாட்டி குள்ளஞ்சாவடியில் இருக்காங்க. அவங்களைப் போய் பார்த்து அவங்ககூடயும் லஞ்ச் சாப்பிட்டிருக்கேன். எல்லா வயசுலயும் எல்லா பேக்ரவுண்ட்லையும் உள்ளவங்களோடையும் லஞ்ச் சாப்பிடறேன். திருமதி. துர்க்கா ஸ்டாலின் வீட்டுல சாப்பாடு, எங்க அபார்ட்மெண்ட் குப்பை அள்றவங்களோட சாப்பாடு, தர்பூசணி, இளநி விற்கிற அம்மாங்களுடன் மதிய உணவு. ஒரு பொண்ணு பாம்பேல போட்ல அழைச்சுட்டு போய் லஞ்ச் தந்தாங்க. இங்கேயே இன்னொருத்தங்க மீன் பிடிக்கிற இடத்துக்கு அழைச்சுட்டுப்போனாங்க. திருவல்லிக்கேணி காசி வினாயகா மெஸ்லர்ந்து பைவ் ஸ்டார் ஹோட்டல் வரைக்கும் எல்லா இடங்களிலும் சாப்பிடறோம். மும்பையில் ஷ்ரேயா கூட சாப்பிட்டேன். அப்புறமா அவங்க நடத்தற ஸ்பாவுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அது முழுக்க கண்ணு தெரியாதவங்களே வேலை செய்யற இடம்!
அப்புறம் பல வருசத்துக்கு முன்னால் நான் போட்டோ எடுத்த மாடல் ஒருத்தங்களுக்குப் போன் பண்ணேன். அப்போ அவங்க மூணு தெரு நாய் வளத்துகிட்டு இருந்தாங்க. இப்போ அவங்ககிட்ட 100 நாய்கள் இருக்கு. செங்குன்றத்தில் தனிவீடு எடுத்து அங்கே இருக்காங்க. பாக்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருந்துது. 100 நாய்க்கும் சாப்பாடு போடறதுன்னா சும்மாவா? எதாவது செய்யணும்!
நாம ஒவ்வொருத்தரும் தினமும் ஒரு அரைமணி நேரமாவது சமூகத்துக்கு எதாவது செஞ்சா இந்த உலகம் எங்கியோ போயிடும். உதாரணத்துக்கு எங்க ஏரியாவில் ஒரு பிரெட் கடை இருக்கு. அதில் காலையில் செய்ற பிரட், மாலை வரைக்கும் விப்பாங்க. விக்காததை வேஸ்ட்ல போட்டுருவாங்க. ஆனால் அதை நாலு நாள் வரைக்கும் வெச்சி சாப்பிடலாம். தரமா இருக்கும். நான் ஒவ்வொரு நாளும் சாயந்தரம் அவங்கிட்ட மிச்சம் இருந்தா என்னை அழைங்கண்ணு சொல்லிருக்கேன். அதை வாங்கிட்டுபோய் வீடு இல்லாத, சாப்பாடு இல்லாதவங்களுக்கு கொடுத்துருவேன். இது ஒரு சின்ன வேலைதான். ஆனால் இது சகமனிதன் மேல இருக்கற அக்கறையை எனக்கே என்னைப் புரிஞ்சிகிற தன்மையைக் கொடுக்குது.
இதையெல்லாம் நான் பண்றதோ, வெளியே சொல்றதோ பெருமையாகக் காட்டிக்கிறதுக்கு இல்லை. ஒரு அஞ்சு பேராவது நாமும் இப்படிப் பண்ணலாமே அப்படின்னு நினைச்சாலே போதும் என்கிற எதிர்பார்ப்பில்தான். பசிவந்தால் புகழையோ பேரையோ சாப்பிடமுடியாது அப்படிங்கறது எனக்கும் நல்லா தெரியும்!
கால்பந்து: சுந்தர் பதினாறு வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கால்பந்து அணிக்காக தேர்வானவர்.
பெங்களூரில் இவரது பெற்றோர் டெக்கான் ஸ்கூல் என்ற பெயரில் தமிழர்கள் அதிகம் வாழும் இடத்தில் பள்ளி நடத்துகிறார்கள்.
சாப்பாட்டுக்கு பெண் தான் இடத்தைத் தேர்ந்தெடுக்கவேண்டும். பணமும் பெண்தான் கொடுக்கவேண்டும்.
தன்னுடைய பழைய ஐபோனில்தான் லஞ்ச் டேட்டிங்கை படம் எடுக்கிறார். ஐபோன் கம்பெனி இந்த படங்களை நூல் வடிவில் வெளியிட இருக்கிறார்களாம்!
ஜூன், 2015.