கற்பின் அரசியல்

கற்பின் அரசியல்
Published on

புதுடெல்லியில் ஓடும் பேருந்தில் பெயரற்ற மருத்துவ மாணவியொருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதன் பின்னணியில் எழுந்துள்ள கொந்தளிப்புக்கள் குறித்து ஏதாவது  சொல்ல விரும்பினால் ஒருவர் முன்னெப்போதையும்விட அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கிளர்ச்சியாளர்கள் எழுப்பிய கோரிக்கைகளை எந்தக் கேள்வியுமில்லாமல் ஆதரிப்பதிலிருந்துதான் அவர் எதையும் சொல்லத் தொடங்க வேண்டியிருக்கும். இது கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது, குற்றவாளிகளை நாய்களைப் போல சுட்டுத்தள்ள வேண்டும், பொது இடத்தில் கழுவேற்ற வேண்டும், மரணதண்டனைக்கெதிரான குரல்கள் வலுப்பெற்று வருவதைப் பொருட்படுத்தாமல் இதுபோன்ற கற்பழிப்புக் குற்றங்களுக்கு  மரணதண்டனை வழங்க வேண்டும், ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என்பன போன்ற ஆவேசமான முழக்கங்களுக்கு அடிபணியாமல் யாரும் எதையுமே சொல்ல முடியாது.

பாலியல் வன்முறை என்னும் சொல் திட்டவட்டமான முறையில் புழக்கத்திற்கு வந்து ஏறக்குறைய இருபதாண்டுகள் கடந்துவிட்டன.  ஆனால் பெரும்பான்மை ஊடகம் பிடிவாதமாக அந்தச் சொல்லைப் புறக்கணிக்கிறது. கற்பழிப்பு என்ற சொல் கிளர்ச்சியூட்டும் ஒன்றாக இருப்பது மட்டுமல்ல காரணம். கற்பு ஒரு கலாச்சார அடையாளம். இந்தியத்தன்மையின் குறியீடு. பாலியல் ஒழுக்கமுள்ள ஒரு பெண்ணின் கற்பைச் சூறையாடுவது என்பது அந்தப் பண்பாட்டு அடையாளத்தைச் சிதைப்பது. இந்தியத்தன்மையை அவமதிப்பது. ஒரு முழு தேசமும் கிளர்ந்தெழுந்ததற்குப் பின்னால் உள்ள காரணங்களில் இது முக்கியமானது. 

ஆனால் கற்பு பற்றிய இந்த வரையறை ஆபத்தானது. எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதற்குப் பல உதாரணங்களைத் தரமுடியும். சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல்நிலையத்தில் காவலர்களால் பாலியல் வன்முறைக்குள்ளான பத்மினி வழக்கு விசாரணையின்போது  ‘பத்மினி பாலியல் ஒழுக்கமுடையவர் அல்ல’ என்னும் பொருள்படும்படியான ஒரு கருத்தை வழக்கை விசாரித்த பெண் நீதிபதியே முன்வைத்தார். இது பெண்ணியலாளர்கள், மனித உரிமையாளர்களின் கடும் கண்டனத்திற்குள்ளானது என்ற போதிலும் நீதிபதியின் அந்தக் கருத்திற்கெதிராக பொதுமனம் கிளர்ந்தெழவில்லை.

சென்ற ஆண்டு பெரியகுளம் அருகே பேருந்து நிறுத்தமொன்றில் தனது குழந்தையுடன் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துச்சென்ற போலீசார், காவல் நிலையத்தில் வைத்து அவரைப் பாலியல் வன்முறைக்குட்படுத்திய கொடுமை ஊடகக் கவனம் பெற்றபோதும் அது பொதுச் சமூகத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

வாச்சாத்தியில் பழங்குடிப்பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பொதுச் சமூகத்தைப் பாதிக்கவே இல்லை. அதே போல் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது அதிரடிப் படையினரால் பழங்குடியினப் பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டதும் கொடூரமான முறையில் அவர்களது உடல்கள் சிதைக்கப்பட்டது பற்றியதுமான செய்திகளும் பொதுச் சமூகத்தைப் பாதிக்கவில்லை. மராட்டியத்தின் கயர்லாஞ்சியில் தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டபோது அந்தக் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிப்பதற்காக எந்தக் கிளர்ச்சியும் வெடிக்கவில்லை. தலித் பெண்களைப் பாலியல் வன்முறைக்குட்படுத்துவதைப் பொதுச் சமூகம் கொடிய குற்றமாகக் கருதியதில்லை.  தலித்துகள், பழங்குடிப் பெண்கள் மீது பாலியல் வன்முறை பிரயோகிக்கப்படும்போது அவற்றைப் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்படும் கமிஷன்கள்கூட பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதைப்பற்றிய விஷயத்திற்கே அதிக முக்கியத்துவத்தை அளித்தன.

ஈழத் தமிழ்ப் பெண்கள் மீது இலங்கை ராணுவம் கட்டவிழ்த்துவிட்ட பாலியல் கொடுமைகள் பற்றிய செய்திகள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்ட போதும் இந்தியச் சமூகம் கொந்தளிக்கவில்லை. 2001 செப்டம்பர் 11 அன்று உலக வர்த்தக மையக் கட்டடம் தகர்க்கப்பட்ட பிறகு பயங்கரவாதத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அமெரிக்கர்கள், புஷ் அரசுக்கு பயங்கரவாதத்தின் பெயரால் எல்லாவிதமான பயங்கரவாதச் செயல்களையும் நிகழ்த்துவதற்கான ஒப்புதலை அளித்தார்கள்.  இப்போது உலகம் ஒரு புதிய ஒழுங்கை ஏற்றுக்கொண்டுவிட்டது. பழி தீர்ப்பது ஒரு அறக்கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. மும்பைத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அமெரிக்கர்களைப் போலவே இந்தியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

சதுக்கங்களில்கூடி பாகிஸ்தானைப் பழி தீர்க்கும்படி முழக்கமிட்டார்கள். ஆனால் இந்தியா அமெரிக்கா அல்ல.  பிடிபட்ட ஒரே ஒரு குற்றவாளியைத் தூக்கிலிடுவதற்கு கிட்டத்தட்ட அதற்கு நான்காண்டுகள் தேவைப்பட்டன.

பெயரற்ற மருத்துவ மாணவியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றவாளிகளைப் பயங்கரவாதிகளுக்கு நிகரானவர்களாகக் கருத முடியுமா? பொது மனத்தின் விருப்பத்திற்கேற்ப அவர்களைப் பொது இடத்தில் கழுவேற்றுவதோ, நாய்களைப் போல நடுத்தெருவில் நிறுத்திச் சுட்டுக்கொல்வதோ ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதோ சரியான நடவடிக்கையாக இருக்க முடியுமா?

ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகும்போது அது அவளுடைய தவறாகவே பார்க்கப்படுகிறது. எந்தப் பொது மனம் பாலியல் குற்றவாளிகளை நடுரோட்டில் சுட்டுத்தள்ள வேண்டுமென விரும்புகிறதோ அதே பொதுமனம்தான் பாதிக்கப்பட்ட பெண்ணின்  மீதே குற்றம் சுமத்துகிறது.   லெஸ்பியன்களும் சேர்ந்து வாழும் பெண்களும் நமது பண்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பவர்கள் என்று யாராவது ஒரு சாமியார் சொல்வதை எந்தக் கேள்வியுமில்லாமல் ஏற்றுக்கொள்கிறது. பாலியல் தொழிலாளர்களுடைய உடல்கள் பொதுவாக்கப்பட்டவை. அவர்களைக் கற்பழிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. 

நம் பொது மனநிலையின் ஆபத்தான இந்தப் போக்கு, அடிப்படையில் பெண்களின் வாழும் உரிமையை முற்றாக நிராகரிக்கும் நிலவுடமை மனோபாவத்தின் ஒருபகுதி என்பது புரிந்துகொள்ளப்படாததுதான் சோகம். கற்பழிப்புக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டுமெனக் கோருபவர்களில் பலர் பெண்களுக்கு உடைக்கட்டுப்பாடு அவசியம் என்பதையும் சேர்த்தே வலியுறுத்தத் தொடங்கியிருப்பதைக் கவனிக்க வேண்டும்.

 கற்பு பற்றிய புனிதமான நம்பிக்கைகளைக் குலைக்கும்வரை ‘கற்பழிப்பு’ என்பது பெண்களின் மீதான வன்முறையாகத் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பெரும்பாலான நேர்வுகளில் கற்பழிப்பில் ஈடுபடுபவர்களது நோக்கம் காமம் அல்ல.

நாம் நிச்சயமாகப் பின்னோக்கிச் செல்ல முடியாது. பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு கல்வி, பண்பாடு சார்ந்த தளங்களில் செயல்படுவது பலனளிக்கக்கூடியது.  பொதுமனநிலையைத் தனது அதிகாரப் பரப்பை விஸ்தரிப்பதற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் யோசனைகளைக் கைவிட்டுவிட்டு இந்தப் பிரச்சினையின் சமூக உளவியல் காரணிகளைப் புரிந்துகொள்வதற்கும் தீர்வுகளைத் தேடுவதற்கும் அரசு முயல வேண்டும்.

பிப்ரவரி, 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com