முகநூல், ட்விட்டர் போன்ற சமூக இணையத்தளங்களில் கருத்து தெரிவித்ததற்காக தமிழ்நாடு, புதுவை, மும்பை போன்ற இடங்களில் கைது, கருத்துச் சுதந்திரம் குறித்த பரவலான விவாதங்களை தொடங்கி வைத்துள்ளது. ஆனால் இக்கைதுகள் குறித்த கேள்விகள் மலைபோல் குவிந்துவருகின்றன.
சைபர் கிரைம் எனப்படும் இணையவெளி குற்றம் குறித்த பரபரப்பான வழக்கு ஒன்று 2007ம் ஆண்டில் நடந்தது.
திருநெல்வேலியைச் சேர்ந்த லக்சுமண கைலாஷ் என்ற மென்பொருள் பொறியாளர் பெங்களூரில் பணியாற்றி வந்தார். மாமன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து ஆர்குட் இணையதளத்தில் அவதுறாக எழுதிய குற்றத்திற்காக கைது செய்வதாக ஒருநாள் திடீரென லக்சுமண கைலாஷ் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக் கைதியாகவே சுமார் 50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட லக்சுமண கைலாஷ் ஒரு நாள் விடுவிக்கப்பட்டார். குற்றத்தில் தொடர்புடைய ஐபி எண், பொறியாளர் லக்சுமண கைலாஷுக்கு ஒதுக்கப்பட்டதல்ல, தவறான தகவல் காவல்துறைக்கு அளிக்கப்பட்டு விட்டது என்று ஏர்டெல் நிறுவனம் அளித்த தகவலின் அடிப்படையில் லக்சுமண கைலாஷ் விடுதலை செய்யப்பட்டார். செய்யாத குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு, செய்தியாக நாடு முழுவதும் பரப்பப்பட்டு, சிறையில் 50 நாட்களுக்கும் மேல் அடைக்கப்பட்ட லக்சுமண கைலாஷுக்கு ஏற்பட்ட அவலம் யாருக்கம் ஏற்படக்கூடியதுதான். நம் நாட்டின் குற்றவியல் புலனாய்வு இந்த அளவில்தான் உள்ளது.
தமிழ்நாட்டிலும்கூட இணையவெளிக் குற்றம் தொடர்பாக விந்தை வழக்குகள் நடந்துள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த கணிப்பொறி நிபுணர் செந்தழல் ரவி, பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில காரணங்களால் அவர்மீது பகை கொண்ட மூர்த்தி என்பவர், செந்தழல் ரவியின் புகைப்படம், தொடர்பு முகவரி உள்ளிட்ட தகவல்களை கொண்ட ஒரு போலியான கணக்கை ஆர்க்குட் தளத்தில் தொடங்கினார். இதன் மூலமாக கர்நாடக அடிப்படைவாத ஆர்க்குட் குழுமங்களில் விஷமத்தனமான கருத்துகளை மூர்த்தி பதிவு செய்தார். இதனால் செந்தழல் ரவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
சென்னை வந்த அவர், சைபர்கிரைம் காவல்துறையிடம் புகார் செய்தார். மூர்த்தியால் பாதிக்கப்பட்ட வேறு சிலரும்கூட காவல்துறையிடம் புகார் செய்தனர்.
மலேஷியாவில் பணியாற்றிய மூர்த்தி, ஏதோ காரணத்திற்காக தமிழ்நாட்டுக்கு வந்தபோது காவல்துறையிடம் வசமாக
சிக்கினார். விசாரணையில் அனைத்துக் குற்றங்களையும் அவர் ஒப்புக்கொண்டார். ஆனாலும் அவர்மீது வழக்கு தொடர்வதற்கு காவல்துறை எந்த முனைப்பும் காட்டவில்லை. வழக்கு பதிவு செய்தால் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
புகார் கொடுத்தவர்கள் சமூகத்தில் எந்த முக்கியத்துவமும் அற்றவர்கள் என்பதால் குற்றம் செய்தவரே, குற்றம் செய்ததை ஒப்புக்கொண்ட பின்னரும் சட்ட நடவடிக்கை எடுக்க அன்று தயங்கிய அதே காவல்துறையினர், தற்போது ஒரு பிரபல பாடகி புகார் கொடுக்கும்போது அவசரம் அவசரமாக நடவடிக்கை எடுக்கின்றனர். ஏறத்தாழ இதேபோன்ற நடைமுறைகளையே மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி கொடுத்த புகாரிலும் புதுவை காவல்துறையினரும் பின்பற்றியுள்ளனர். சிவசேனா தலைவர் பால் தாக்கரே மறைவைத் தொடர்ந்து மும்பையில் ஏற்பட்ட கட்டாய ஊரடங்கு குறித்து ஷஹீன் தாதா என்ற இளம்பெண், அக்கருத்து குறித்து ஆதரவு தெரிவித்த மற்றொரு பெண்ணையும் கைது செய்தது அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் கருத்துரிமை உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளையும் கேலிக்குள்ளாக்கும் செயலாகும்.
வணிக ஊடகங்கள் அனைத்தும் ஆளும் தரப்பின் குரலாகவும், செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவு சக்தியாகவும் இருக்கும் நிலையில், சமூக இணையதளங்கள் சாமானியனின் குரலாக உருப்பெறுவது இயல்பானதே! கேள்விகள் கேட்பதும், கருத்துகளை பகிர்வதும் உண்மையான கல்வியின் உரைகல்லாகும். இது அதிகரிப்பது மக்களாட்சி முறைக்கு வலு சேர்ப்பதாகவே அமையும். ஆனால் இவ்வாறு கேள்விகளை கேட்பவர்களும், கருத்துகளை பகிர்பவர்களும் அதனை அரசியல் ரீதியான விவாதமாகவும், தனி நபர் தாக்குதல்களும் இல்லாமலும் வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் அக்கருத்து மிக அதிகமான மக்களால் விவாதிக்கப்பட்டு ஆட்சிப் பொறுப்பில் இருப்போருக்கு ஒரு அரசியல் நெருக்கடியாக உருவெடுக்கும். இத்தகைய முயற்சிகளை முளையிலேயே கிள்ளிப்போட அரசு அமைப்புகளும், அதன் தோழமை சக்திகளும் தொடர்ந்து முயற்சி செய்யும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான பொது விவாதங்களில் சட்டமும் முக்கிய அம்சமாக விவாதிக்கப்பட வேண்டும். ஏனெனில் முற்காலத்தில் மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டங்கள், அண்மைக்காலமாக பன்னாட்டு வர்த்தக கழகங்களின் பரிந்துரைகளால் உருவாக்கப்படுகிறது. இந்த சட்டங்களில் உள்ள மக்கள் விரோதப்போக்குகளை, மக்களே விமரிசிக்கும் நிலை உருவாகும்போதுதான் உண்மையான சுதந்திரம் பிறக்கும்.
டிசம்பர், 2012.