அது 1989. திமுக ஆட்சி. பேராசிரியரை ராசிபுரம் பயணியர் விடுதியில் என் தாத்தாவோடு போய்ப் பார்க்கிறேன். நான் படித்துக்கொண்டிருந்தது ஏழாம் வகுப்பு. எங்கள் பகுதியில் பள்ளிக்கட்டடங்களைத் திறந்து வைக்க கல்வி அமைச்சர் என்கிற முறையில் அவர் வந்திருக்கிறார். என் தாத்தா, என்னைப் பார்த்து அண்ணாவின் பொன்மொழிகளைச் சொல்லு என்கிறார்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு..
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்..
ஒன்றே குலம் ஒருவனே தேவன்...
சொல்லிக்கொண்டிருக்கும்போதே அருகே அழைத்து மடியில் அமர வைத்துக்கொள்கிறார் பேராசிரியர். அன்றிலிருந்து அவர் மடியில் அமர்ந்த பேரனாகவே என்னை அவர் நடத்திக்கொண்டிருந்ததாக நினைவு.
1967ல் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தேர்தலில் என் தாத்தா கே.ஆர்.ராமசாமிதான் வேட்பாளராக திமுகவால் தேர்வு செய்யபட்டிருந்தார். கடைசி நேரத்தில் அண்ணா அழைத்து பேராசிரியரை டெல்லிக்கு அனுப்ப திருச்செங்கோட்டில் நிறுத்தப்போகிறேன் எனச் சொல்லி என் தாத்தாவை விலகிக்கொள்ளுமாறு சொன்னார். அன்பழகன் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்ய, தாத்தா தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டார். அத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக களமிறங்கிய காளியண்ணக் கவுண்டர் மிகப்பெரிய ஜமீன்தார், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர். அவரை வெல்வது என்பது எளிதன்று. அந்த தேர்தலில் பேராசிரியர் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். அப்போதுதான் தாத்தாவுடனான நட்பு பேராசிரியருக்கு மேலும் உறுதிப்பட்டிருக்கவேண்டும்.
முதல் சந்திப்புக்குப் பிறகு பலமுறை பேராசிரியரை சந்தித்துக்கொண்டிருந்தேன். என் குடும்பத்தில் எல்லோரும் படித்து வேறு நல்ல நிலைகளுக்குச் சென்றுவிட, நான் மட்டும் அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தேன். அது 1996 சமயம். நான் கல்லூரியில் படிக்கும்போது பேராசிரியரை சந்திக்க என் தாத்தாவிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் சென்னை தலைமைச் செயலகத்துக்குப் போனேன். காரணம் என்னுடன் படித்த சக நண்பர் ஒருவரின் தந்தை தொழில்நுட்ப கல்விப்பேராசிரியராக இருந்தார். திடீரென இதயப்பாதிப்பால் மரணம் அடைந்துவிட, அவனுக்கு சில தங்கைகள். குடும்பம் தவித்தது. குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் வேலை தருமாறு கேட்பதற்காக பேராசிரியரிடம் வந்திருக்கிறேன். அவர் அப்போதும் கல்வித்துறை அமைச்சர்தான். தலைமைச் செயலகத்தில் கே.ஆர்.ராமசாமியின் பேரன் என்று எழுதி சீட்டு அனுப்புகிறேன். உடனே வரச் சொல்கிறார்.
தாத்தாவை நலம் விசாரிக்கிறார். எப்போ வந்தே? என்ன என்று விவரம் கேட்கிறார். சொல்கிறேன்.
‘தாத்தாவைப் போல் மத்தவங்க பிரச்னைக்காக வர ஆரம்பிச்சிட்டியா?'' என சிரிக்கிறார். பிறகு ‘இப்படி வெறும் வார்த்தையால் சொன்னால் எப்படி? எழுதிக்கொடு' என்கிறவர் உதவியாளரை அழைத்து ஒரு தாள் கொடுக்கச் சொல்கிறார். அவர் முன்பே அமர்ந்து எழுதித்தருகிறேன். வாங்கிப் படித்தவர் அதில் குறிப்பு எழுதுகிறார். இன்னும் அது மனதில் இருக்கிறது. ‘கருதி வழங்கலாம்.' உடனே தொழில்கல்வி இயக்குநரிடம் பேசுகிறார். என்னை கிண்டியில் இருக்கும் அவரது அலுவலகத்துக்கு அனுப்புகிறார்.
என்னிடம் வாகனம் இல்லை என்பதை கேட்டு அறிந்தவர், தன்னுடைய அமைச்சர் வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறுகிறார். அமைச்சரின் காரே என்னைத்தாங்கி கிண்டி சென்றதும் அங்கே பரபரப்பு. அன்று மாலையே நண்பனுக்கு வேலை உத்தரவு கருணை அடிப்படையில் கிடைத்துவிடுகிறது.
இரண்டாயிரமாவது ஆண்டில் என் தாத்தா இறந்துவிடுகிறார். படத்திறப்புக்கு வந்தவர் எல்லாரையும் விசாரிக்கிறார். நான் மட்டும்தான் அப்போது என் குடும்பத்தில் அரசியலில் இருப்பதை அறிகிறார். அப்போது திமுகவில் ஒன்றிய துணைச்செயலாளர். ‘ நீதான் தாத்தாவின் அரசியல் வாரிசு. என்னை எதற்கும் எதிர்பார்க்காதே. கட்சியில் சொந்த உழைப்பில் முன்னுக்கு வா' என்று கூறுகிறார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றும்போது அவர் சொன்னது நினைவில் இருக்கிறது: ‘‘நாலுபேர் படித்தால் அது ராமசாமிக்கு மகிழ்ச்சி, நாலுபேர் வாழ்ந்தால் அது ராமசாமிக்கு மகிழ்ச்சி, நாலு பேருக்கு வேலை கிடைத்தால் அது அவருக்கு மகிழ்ச்சி. இதுதான் திமுகவின் கொள்கை. இதுதான் திராவிடம்''
அடுத்தமுறை அவர் நிதி அமைச்சர். எங்களூரில் மொழிப்போர் தியாகி ஒருவரின் மகளுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. முன்பு மொழிப்போர் தியாகிகளுக்கு இட ஒதுக்கீடு உண்டு. அதை முந்தைய அதிமுக ஆட்சியில் அகற்றிவிட்டிருந்தார்கள். நான் அவரிடம் முறையிடுகிறேன். செயலாளரை அழைத்துக் கேட்கிறார். ‘அது சட்டமாகிவிட்டது. ஒன்றும் செய்ய இயலாதே' என்கிறார் அதிகாரி.
நான் சற்று வேகமாக பேராசிரியரிடம் ‘உங்களால் முடியாதா?' என்று கேட்டுவிடுகிறேன். கூர்ந்து பார்க்கிறார்.
‘இருப்பா.. தலைவர்கிட்ட பேசுறேன்' என்று மட்டும் சொல்கிறார். என் வேகத்துக்காக நான் கொஞ்சம் கூச்சப்படுகிறேன்.
சொன்னபடி, மொழிப்போர் தியாகிகளுக்கான இட ஒதுக்கீடு திரும்பத் தரும்படி அரசாணை வருகிறது. அப்பெண்ணுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கிறது. இப்படி எத்தனையோ உதவிகளுக்காக பேராசிரியரைச் சந்தித்துக் கேட்டிருக்கிறேன். நியாயமான கோரிக்கை என்றால் எப்போது அந்த தன்மான இனமானப் பேராசிரியத் தாத்தா மறுத்ததே இல்லை!
2011ல் சேலத்துக்கு வந்தபோது உன் வீட்டுக்கு வரணும்யா என்றவர் சொன்னமாதிரி ராசிபுரத்துக்கு வந்தார். அந்த காலகட்டத்தில் எங்குபோனாலும் பழைய நண்பர்களைத் தேடித் தேடிப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். என் மகளை அழைத்தவர் அவள் கழுத்தில் தங்க சங்கிலி ஒன்றை அணிவித்தார். ''உனக்காக ரொம்ப நாளா வெச்சிருந்தேன்!'' என்றார் பிரியமாக. மகளிடமிருந்து வாங்கி பேராசிரியர் நினைவாக நான் தான் அதை இப்போதும் அணிந்திருக்கிறேன்.
அதே ஆண்டில் ஒரு நாள் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். பேசிக்கொண்டிருந்தவர், ‘அந்த வெள்ளைத்தாளை எடு' என்கிறார்.
உன்பேர் ராஜேஷ்குமார் என்பது வடமொழி. அழகான தமிழ்ப் பெயர் இருக்கு' என்றவர், அந்த தாளில் முத்துமுத்தான கையெழுத்தில் 'அரசிளங்குமரன்' என்று எழுதிக்கொடுக்கிறார்.
ஆனால் நான் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை! அதற்காக அவர் என்னிடம் ஏன் என்று திரும்பக் கேட்கவும் இல்லை! எதையும் செய்யவில்லையெனில் ஏன் செய்யவில்லை என்று கேட்காத குணம் அவருக்கு.
பேராசிரியர் இறுதியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு ஒரு மாதம் முன்பாக அவரை காலை பதினோரு மணி அளவில் பார்த்தேன். கையை இறுகப் பற்றிக்கொண்டவரின் கண்களில் நீர்! ஏனென்று புரியவில்லை!
மறுநாள் காலை அதே பதினோரு மணி. என்னை நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமித்து ஆணை வருகிறது! பேராசிரியரின் கண்ணீர்த் துளிகளே எனக்கு ஆசி மலர்களாக உதிர்ந்ததாக கருதிக்கொள்கிறேன்.!
(கே.ஆர்.என். ராஜேஷ்குமார், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்)
ஏப்ரல், 2020.