அப்போது அவர் தமிழக
சட்டப்பேரவைத் தலைவர். நான் ஜூனியர் விகடன் செய்தியாளர்.அவரைச் சந்திக்க கோட்டையில் உள்ள அவரது அறைக்குச் செல்கிறேன். ''அண்ணனைப் பார்க்க வேண்டும்'' என்கிறேன். ''ஐயா பிஸியாக இருக்கிறார்கள்' என்று
சொன்னார் உதவியாளர். ''என்னுடைய பெயரை எழுதி கொடுங்கள்'' என்று சொல்லிவிட்டு எழுதிக் கொடுத்தேன். உடனே அழைப்பு வந்தது.உள்ளே போகிறேன். எந்தப் பரபரப்பும் இல்லாமல் மதியம் 12 மணிக்கு மாபெரும் ஆசனத்தில் காலை மடக்கி உட்கார்ந்து மடியில் மகாபாரத்தை வைத்து படித்துக் கொண்டு இருந்தார்.
பேரவைத் தலைவர் அறை என்பது வீடு மாதிரி இருக்கும். பெரியது. அதில் அவர் மட்டும் தான் இருந்தார். உடன் யாரும் இல்லை. மகாபாரதம் இருந்தது...தருமனும், நகுலனும்
சகாதேவனும் சகுனியும் பாஞ்சாலியும் கண்ணனுமாக இருந்தார் கா.காளிமுத்து.
எப்போது போனாலும் புத்தகம் பற்றித் தான் பேச்சாக இருக்கும். அரசியல் இருக்காது. நிச்சயமாக அக்கப்போர் அரசியல் இருக்காது. அவரைப் பற்றி, இவரைப் பற்றி இருக்காது.
''..படிக்க விடமாட்டேன்றாங்க... அதுனால தான் யாரையும் உள்ளே விடாதே என்று சொல்லிவிட்டு படித்துக் கொண்டு இருக்கிறேன்,'' என்று சொல்லி மகாபாரதம் தொடங்கினார். ''படிக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்து மகாபாரதம் படிக்கிறேன். ஒவ்வொரு முறையும் நேற்று வெளியான புத்தகம் மாதிரியே இருக்கிறது. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் வேறுவேறு பாத்திரங்கள் நமக்கு பிடிக்கிறது. ஒரு முறை பாஞ்சாலிக்காக பரிதாபம் வருகிறது. இன்னொரு முறை கர்ணன் கண்ணீர் வர வைக்கிறான். அர்ஜுனன் மட்டும் தான் இயல்பான மனிதனாக இல்லாமல் இருக்கிறான். மற்றவர்கள் யார் யாரோ மாதிரியாக நமக்கு உணர்த்துகிறார்கள்,''என்று சொல்லிவிட்டு பல்வேறு மகாபாரத உரைகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். என்ன நினைவாற்றல்? என்ன சொற்கோவை? எந்நா? அது காளிமுத்துவுக்கே வாய்த்த நா!
மிகச் சிறுவயதிலேயே வாசிக்க வாசிக்க அப்படியே மனப்பாடம் ஆனதாகச் சொன்னார். ''சங்க இலக்கியத்தில் உள்ள நூறு பூக்களின் பெயரையும்
நீங்கள் ஒப்பித்ததைக் கேட்டிருக்கிறேன்'' என்றேன்.
''1967 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் சீனிவாசனை ஆதரித்து பிரசாரம் செய்யும் குழுவுக்கு நான் தான் பொறுப்பாளர். அப்போது அந்த தொகுதிக்கு உட்பட்ட அறுபது ஊராட்சிகளின் பெயரையும் ஒரு மேடையில் சொன்னேன். பேசி முடித்துவிட்டு கீழே இறங்கிய போது ஒருவர் கையைப் பிடித்துக் கொண்டார். 'இந்த ஊர்லயே வாழ்ற எங்களால் கூட இவ்வளவு ஊரைச் சொல்ல முடியாது. அடுத்த கூட்டத்துல வாக்காளர்கள் பெயரையும் மொத்தமும் சொல்லிருவியா தம்பி' என்று கேட்டார். எதையும் முழு ஈடுபாட்டுடன் படித்தால் அது முழு மனப்பாடம் ஆகிவிடும்'' என்று சொல்லிவிட்டுச் சொன்னார்... ''மூளை மூலமாகப் படிக்கக் கூடாது, இதயம் மூலமாகப் படிக்கவேண்டும்'' என்றார். அவரது இதயம் படித்துக் கொண்டே இருந்தது.
உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் இருந்தார். அப்போது அவரைச் சந்திக்க நான் சென்றிருந்தேன். எனக்கு முன்னால் இருந்தவரிடம் 'இன்னா நாற்பது இனியவை நாற்பது' பற்றி பேசிக் கொண்டு இருந்தார். அதன் பழைய பதிப்பை வாங்கித் தரச் சொல்லி கட்டளை யிட்டுக் கொண்டு இருந்தார். 'மருத்துவமனையை நூலகம் ஆக்கிய காளிமுத்து' என்று ஆனந்த விகடனில் எழுதினேன். மீண்டும் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த நேரத்தில் ஒரு முறை சென்றிருந்தேன். அப்போது அவரைப் பார்க்க முடியவில்லை. அவர் படித்துக் கொண்டு இருந்திருக்கலாம். அல்லது இதுவரை படித்த புத்தகங்கள் அவரது இதயத்துக்குள் விரிந்து மூளைக்குள் அனுப்பி வைக்கப்படும் நேரமாகவும் அது இருந்திருக்கலாம். அந்தளவுக்கு புத்தக முத்து அவர்.
காளிமுத்துவை விட அதிகம் படித்தவர்கள் நிறைய உண்டு. ஆனால் அதனை அடுத்தவர் கேட்கச் சொல்லத் தெரியாது. காளிமுத்துவுக்கு அதுதான் வரம். கன்னித்தமிழும் உண்டு. கத்தித்தமிழும் உண்டு. இடதுகையில் சிறு துண்டை வைத்துக் கொண்டு வலது கையால் ஒலிபெருக்கியைப் பிடித்துக் கொண்டு நின்றால் ஒன்றரை மணிநேரம் தானும் ஆடமாட்டார். தலையும் ஆடாது. உதடு மட்டும் தான் ஆடும்.
கேட்பவர்களும் தானும் ஆடமாட்டார்கள். தலையும் ஆடமாட்டார்கள். அவர்கள் கைமட்டும் தான் அதிர்ச்சியால் அதிரும். அப்படி ஒரு பேச்சாளர்.
வடசென்னையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் காளிமுத்து பேசுகிறார் என்று கிளம்பிவிட்டேன். அது கண்டுபிடிக்க முடியாத கீழடியாக இருந்தது. இடது வலது என்று பலரும் திருப்பி விட்டு நான்கு கிலோமீட்டர் நடந்த களைப்பு. இதயத்தின் மீது காலும் வயிறும், சண்டையிட்டுக் கொண்டு இருந்தது.இவை அனைத்தும் ஒலிபெருக்கி முன் அவர் வரும் வரை தான். நின்று கொண்டே கேட்டேன், ஒன்றரை மணிநேரம்.
என்ன உதாரணம்? என்ன மொழிநடை?
''சில அரசியல்வாதிகள் உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது, மாவு விற்கப் போனால் காற்று அடிக்கிறது'' என்றார்.
''அரசமரத்தின் மீது விழுந்த அடி, அரசமரத்து அடியில் இருந்த பிள்ளையாரையும் தாக்கியது போல'' என்றார்.
''நீயே அயிரை மீன், உனக்கு ஏன் விலாங்குச்
சேட்டை?'' என்றார்.
''உப்புமூட்டையை எடுத்துப் போனால் விற்கலாம், அழுக்கு மூட்டையை எடுத்துப் போனால் விற்க முடியாது,'' என்றார். இப்படி ஒன்றரை மணிநேரத்தில் ஓராயிரம் உதாரணங்கள். அப்போது நான் 'விகடன் பேப்பர்' என்ற மாலை நாளிதழ் நிருபர். இரவு திருவல்லிக்கேணியில் எனது அறைக்கு நான் வந்து சேர்வதற்கு ஒரு மணி ஆகிவிட்டது. தூக்கம் வரவில்லை. மாலை நாளிதழ் என்பதால் பணிநேரம் என்பது காலை 6 முதல் 2 வரை. அதிகாலையில் அலுவலகம் சென்றேன். எந்தக் குறிப்பும் எடுக்கவில்லை.மனதில் இருந்த உரையை அப்படியே எழுத ஆரம்பித்தேன். 20 பக்கம் வந்தது. ஆசிரியர் கதிர் அவர்கள் பத்து மணிக்கு வந்தார். அவரிடம் கொடுத்தேன். மாலை நாளிதழில் அரைப்பக்கத்துக்கு வந்தது அந்த உரை. காளிமுத்து பாணியில் சொல்வதாக இருந்தால் காது வழியாக அல்ல, இதயம் வழியாக உள்ளுக்குள் இறங்கிய சொற்கள் அவை. ஒரு வாரம் கழித்து எழும்பூர் குரு உணவகத்தில் காளிமுத்து தங்கி இருந்தார். இணை ஆசிரியர் குமார் அவர்களும் நானும் சென்று காளிமுத்துவை சந்தித்தோம். ''டேப் செய்தீர்களா?'' என்று கேட்டார். ''அவர் கேட்டதை அப்படியே அடித்துவிட்டார்' என்று குமார் சொன்னார். ''ஆச்சர் யமாக இருக்கே' என்று சொன்னார். அதுதான் முதல் சந்திப்பு. ''எனது தாத்தா இளங்குமரனார்'' என்றேன். ''அவர் எனது ஆசான், வாழும் தொல்காப்பியர், வாழும் திருவள்ளுவர் அவர்'' என்றார். மதுரையில் பாவாணர் ஆய்வு நூலகத்தை திரு.இளங்குமரனார் அவர்கள் அமைத்தபோது காளிமுத்து அவர்கள் தான் திறந்து வைக்க வந்திருந்தார்கள். அப்போது சிறுவனாய்ப் பார்த்திருக்கிறேன். 90களின் இறுதியில் நிருபராய் பார்த்தது தான் நெருக்கமான காலமாக ஆனது.
அவரை 2001ல் பேரவைத் தலைவராக அறிவித்தார். மதுரையில் இருந்து சென்னை வந்து குரு உணவகத்தில் தங்கி இருந்தார். இன்னும் அவர் பதவி ஏற்றுக் கொள்ளவில்லை. பொதுவாக அதிமுகவினர் யாரும் பத்திரிகைகளுக்கு பேட்டி தரமாட்டார்கள். பேரவைத் தலைவராக ஆகிவிட்டாரே கொடுப்பாரோ மாட்டாரோ என்று நினைத்தேன். எனக்கு மட்டும் பேட்டி அளித்தார். ''நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர், அப்படிப்பட்டவர் மிகவும்
சிக்கலான சபாநாயகர் பதவியில் சிறப்பாக செயல்பட முடியுமா?' என்று கேட்டேன். ''நான் பக்குவம் அடைவதற்காகத்தான் இந்த பதவியை அம்மா கொடுத்துள்ளார்'' என்றார். இதுதான் அவரது
சாமர்த்தியம்.
'இந்து' நாளிதழில் எழுதிய கட்டுரை, பேரவை மாண்பைக் கெடுக்கிறது என்ற சர்ச்சை கிளம்பியது. 'இந்து' அதிபர்களைக் கைது செய்ய பேரவைத் தலைவர் என்ற அடிப்படையில் காளிமுத்து தீர்ப்பளித்தார். அதிபர்கள் தலைமறைவானார்கள். அப்போது அவரைச் சந்திக்கச் சென்றேன். மிக நீண்ட பேட்டியைக் கொடுத்தார். ''பாரம்பர்யம் உள்ள பத்திரிகையை இப்படி பழிவாங்கலாமா?''என்று நான் கேட்டேன். ''பாரம்பர்யம் பேசுபவர்கள் அந்த பாரம்பர்யத்துக்கு ஏற்ப நடக்க வேண்டும்'' என்றார். இப்படித்தான் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக இருக்கும் அவரது வார்த்தைகள்.
ஒப்பீடுகளும் உதாரணங்களும் தான் காளிமுத்து. இந்திஎதிர்ப்பு போராட்டத்தில் தீக்குளித்த இருவர் சிவலிங்கம், அரங்கநாதன்( சென்னை தியாகராயர் நகரில் இருக்கும் அரங்கநாதன் பாலம் அவர் பெயரால் தான் இருக்கிறது!). இவர்களைப் பற்றி ஒரு கூட்டத்தில் சொன்னார்: ''சிவனும் அரங்கனும் சைவர்க்கும் வைணவர்க்கும் தெய்வமானதைப் போல தமிழ்க்குலத்தின் வழிபாட்டுத் தெய்வங்கள் சிவலிங்கமும் அரங்கநாதனும்' என்றார்.
''தனது மண்டையோடு சிதறி சிதம்பரத்து மண்ணை சிவப்பாக்கிய சிவகங்கை ராசேந்திரன்'' என்றார் இன்னொரு கூட்டத்தில்.
சிவகங்கையில் ப.சிதம்பரத்தை எதிர்த்து காளிமுத்து போட்டியிட்டார். அப்போது சிதம்பரத்தின் சின்னம் சைக்கிள். ''சைக்கிள் சின்னம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் சைக்கிளிலேயே பயணம் செய்கிறார் சீமான் வீட்டுப்பிள்ளை சிதம்பரம். சீவாத தலைகள், காய்ந்த வயிறுகள், செருப்பு இல்லாத கால்கள் பார்த்ததுண்டா இந்த பழனியப்பன் சிதம்பரம்?'' என்று கேட்டார். இதை சில ஆண்டுகள் கழித்து நான் சொல்லிக் காட்டியபோது, ''நானே மறந்துவிட்டேன்'' என்றார்.
ஒரு நாள் மதிய இடைவேளையில் அவரைச் சந்தித்தேன். இலக்கியம், அரசியல் இல்லாமல் சில நிகழ்வுகளை மனம்விட்டு பேசிக் கொண்டு இருந்தார். ''ஜெயலலிதாவிடம் பெர்சனலாக பேசி இருக்கிறீர்களா? அவர் பேசுவாரா?'' என்று கேட்டேன். அதாவது அலுவல், கட்சிப்பணிகள் என்று இல்லாமல் என்பதுதான் அந்தக் கேள்வியின் பொருள். ''அப்படிப் பேசிவிட மாட்டார்'' என்று சொன்னார். ஒருமுறை, நடிகைகள் பற்றி ஏதோ பேச்சு வந்ததாம். அந்தக் காலத்து நடிகைகள் ஒவ்வொருவரது அழகு, ஸ்டைல், நளினம், உடை, அலங்காரம் பற்றி ஜெயலலிதா சொன்னாராம். ''எல்லோருமே அவருடன் போட்டியாளர்கள். அவர்களது நல்ல விஷயங்கள் அனைத்தையும் சொன்னார்'' என்றார் காளிமுத்து. இப்படி பல செய்திகளைச் சொன்னார். அதை, விகடன் ஆசிரியர் கண்ணனிடம் சொன்னபோது, உதித்தது தான் 'அள்ளிட்டு வந்தோம்' என்ற தொடர். ஒருவரை சென்று சந்தித்து அவரிடம் உள்ள பல்வேறு தகவல்களை துணுக்குகளாக வெளியிடுவது என்ற பகுதி. முதல்வாரம்: கா.காளிமுத்து. கறியை எப்படி சாப்பிட வேண்டும் என்று நடிகர் செந்தில் சொன்னதைச் சொல்லி இருப்பார். காண்டேகரின் 'யயாதி' அவருக்கு பிடித்த நூல்.
அவருக்குள் ஓர் இலக்கியவாதி இருந்ததைப் போலவே சினிமாக்காரரும் இருந்தார். இளைஞராக இருக்கும்போது நாடகங்களில் நடித்திருக்கிறார்.
சினிமா வாய்ப்புக்காக சென்னைக்கு வந்திருக்கிறார். எஸ்.எஸ்.ஆரை சந்திக்க கடிதம் கொண்டு வந்தார் என்று நினைக்கிறேன். அதற்கான சூழ்நிலை அமையாத காரணத்தால் மீண்டும் ஊருக்கே திரும்பினார். விருதுநகர் கல்லூரியில் படிக்கும்போதுதான் தமிழ்நாடு முழுக்க நடந்த பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெறுகிறார். மதுரை தியாகராயர் கல்லூரி 'காளிமுத்து' என்ற போராளியை உருவாக்கியது. அங்கு பேராசிரியர் இலக்குவனார் பணியாற்றிய காலம் அது. 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு முன்னதாக மதுரை வந்த கலைஞர் பேசிய கூட்டத்தில் மாணவர் காளிமுத்து பேசினார். ''இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பை மாணவ மான்களுக்கு வழங்குங்கள். எங்களுக்கு கானல் நீரைக் காட்டிவிட்டு நீங்கள் மட்டும் போராட்ட நீரைப் பருகப் போய்விடாதீர்கள்'' என்றார்.
''அருவி நடைத் தமிழ் காட்டிய மாணவத்தம்பி காளிமுத்து அவசரப்படுகிறார். களம் செல்லும் வீரர்களுக்கு வேல் வடித்துத் தரும் கொல்லர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும். பகை எல்லை மீறி ஊருக்குள்ளே புகுந்து விடும்போது கொல்லர்களும் வந்துவிடுவார்கள்'' என்றார் கலைஞர்.
மொழிப்போராட்டத்தின் ஆரம்பமாக குடியரசு தினம் அன்று கருப்புக்கொடி ஏற்ற அனைத்து மாணவர்களும் திட்டமிட்டபோது அரசியல்
சட்டத்தை எரிப்பது என்று முடிவெடுத்தவர்கள் தான் காளிமுத்துவும் நா.காமராசனும். ஆறு மாத காலம் சிறையில் இருந்தார்கள். அந்த உணர்வோடு தான் 1980களில் ஈழப்போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது அமைச்சராக இருக்கிறோம் என்றும் கருதாமல் இந்திய அரசுக்கு எதிராக கொந்தளித்தார் காளிமுத்து.
இது அன்றைய காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து எச்சரிக்கையாகவே எம்.ஜி.ஆருக்கு வந்தது. ''அவர் பேசுவது என்னுடைய கருத்துதான்'' என்று எம்ஜிஆர் ஒரு முறை சொன்னார். அந்தளவுக்கு போனார் காளிமுத்து. அது பற்றி ஒருமுறை சொன்னார்: ''எப்போதும் கனகவிசயருக்கும் நமக்கும் மோதல் இருந்து கொண்டே தான் இருக்கும். கனகவிசயர்களும் மாறிக் கொண்டே இருப்பார்கள்,
செங்குட்டுவனும் மாறிக்கொண்டே இருப்பார்கள். இருவரது குணமும் மாறவே மாறாது'' என்று சொன்னார். ''தேசியத்தீயை மிதித்து வளர்ந்தது திராவிட இயக்கம், அதனால் எந்தக் கரையானும் அரிக்க முடியாது'' என்றும் சொன்னார்.
அவர் சொன்னதில் மறக்க முடியாத கதை இது:
''பாம்புப் புற்றின் மீது நின்று கொண்டு ஒரு வேடன், யானை மீது அம்பு எய்கிறான். அம்பு பட்டு யானை வீழ்ந்து மடிகிறது. அப்போது புற்றிலிருந்து வெளிப்பட்ட பாம்பு, அந்த வேடனைக் கொத்திவிடுகிறது. உடனே அந்த பாம்பை கொல்கிறான் வேடன். பிறகு நஞ்சு உடலில் ஏறி அந்த வேடன் மரணம் அடைகிறான். அந்த வழியாக ஒரு நரி வருகிறது. அந்த நரி, நாக்கில் எச்சில் ஒழுகப் பார்க்கிறது. ஒரு பக்கம் யானை, இன்னொரு பக்கம் வேடன், இன்னொரு பக்கம் பாம்பு ஆகியவை கிடக்கிறது.
யானையை ஆறு மாதம் சாப்பிடலாம். மனிதனை ஏழு நாள் சாப்பிடலாம். பாம்பை ஒரு நாள் உணவாக வைத்துக்கொள்ளலாம். நரி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த வேடன் வைத்திருந்த வில்லில் தோல் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அதை அந்த நரி பார்க்கிறது. 'இப்போது இந்தத் தோலை சாப்பிடுவோம்' என்று நரி முடிவெடுக்கிறது. அந்த தோலைக் கடிக்கிறது. தோல் விடுபட்டதும் நிமிர்ந்த வில், நரியின் தொண்டைக்குள் இறங்கியது. நரி மரணம் அடைகிறது.'' - இப்படி பலப்பல கதைகள்
சொன்னவர் அந்தக் கதை முத்து. அவரது பேச்சே தமிழின் சொத்து. அவரைப் போல் பேச வந்து தோற்றவர் உண்டு. அவர் மேடை சரியவே இல்லை. இந்த யூடியூப் உலகத்தில் அவர் இல்லையே என்பதுதான் பெரும் கவலை!
அக்டோபர், 2019.