கனவில் வரும் நடிகை யார்?

கேள்வி பதில்கள்
கனவில் வரும் நடிகை யார்?
Published on

கேள்வி:

அனுஷ்கா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, சமந்தா, லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், இவர்களில் உங்கள் கனவில் வரும் நடிகை யார்? (கோச்சிக்காதீங்க... சாரு என்கிற பிரியமான எழுத்தாளரிடம் உரிமையுடன் கேட்பது)

-ஜேம்ஸ், ராமநாதபுரம்.

பதில்: நீங்கள் என்னிடம் உரிமையாகக் கேட்டது பற்றி சந்தோஷம்.  எந்தக் காலத்திலும் ஒருவரை அணுகும் போது தயக்கமோ பயமோ இருக்கக்கூடாது என்பது என் கருத்து.  ஆனால் என் பதில்தான் உங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கலாம்.  நீங்கள்

சொல்லியிருக்கும் நடிகைகளில் பலருடைய பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை.  என்னுடைய உலகம் அப்படிப்பட்டது.  நான் தமிழ் சினிமா சம்பந்தமான செய்திகள் எதையுமே படிப்பதில்லை.  தமிழ் சினிமாவும் மிக அரிதாகவே பார்க்கிறேன்.  உங்கள் கேள்வியைப் பார்த்த பிறகுதான் அந்த நடிகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்தேன்.  தமிழ் நடிகைகள் பாவம். லட்சுமி ராய் இதுவரை சுமார் 45 படங்களில் நடித்திருப்பதாகத் தெரிகிறது.  ஆனாலும் இவர் படம் ஒன்று கூட நான் பார்த்ததில்லை.  ஆண்ட்ரியாவின் குரல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.  மற்றபடி சொல்ல எதுவும் இல்லை.  சமந்தாவை அஞ்சானில் பார்த்து நொந்து விட்டேன்.  கும்கி, ஜிகிர்தண்டா ஆகிய படங்களில் லட்சுமி மேனனைப் பிடித்திருந்தது.  ஸ்ருதிஹாசன் கமல்ஹாசனின் மகள் என்று தெரியும்.  ஆனால் அவர் படங்களில் நடிக்கிறாரா என்ன?

பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் வெறுமனே கவர்ச்சி அம்சத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.  ஆனால் இந்திப் படங்கள் அப்படி இல்லை.  தேவ் டியில் வரும் கல்கி கோச்லினின் கேரக்டரை ஒருவர் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.  அதேபோல் எனக்குப் பிடித்த நடிகை ப்ரியங்கா சோப்ரா.  பேரழகி என்பதால் அல்ல.  படு முட்டாள் பேரழகிகளை நான் சந்தித்திருக்கிறேன்.  ஆனால் ப்ரியங்கா வெறும் கவர்ச்சி காட்டி நடிப்பவர் அல்ல.   கமீனே ஒரு உதாரணம்.  ஆனால் ப்ரியங்காவைவிட எனக்குப் பிடித்த நடிகை கங்கனா ரெனாவத். கங்கனா ப்ரியங்காவை விட அழகி அல்ல.  சொல்லப் போனால் அழகியே அல்ல.  ஆனால் தன்னுடைய நடிப்பால் மிகப் பெரிய உச்சத்தை அடைந்து விட்டார்.   2013-இல் க்ரிஷ் 3 என்ற படம் வெளிவந்தது.  எந்திரன் என்ற குப்பையையும் க்ரிஷ்ஷையும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.  ராகேஷ் ரோஷன் தன்னுடைய மகன் ரித்திக் ரோஷனை வைத்து எடுத்த படம்.  மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட  சயன்ஸ் ஃபிக்ஷன் படம்.  எந்திரனுக்கும் இந்தப் படத்துக்கும்தான் எப்பேர்ப்பட்ட வித்தியாசம்!  இந்தப் படத்தின் வில்லி கங்கனா ரெனாவத்.  ரித்திக் ரோஷனை விடவும் பெரிதாகப் பேசப்பட்டார் கங்கனா.  அப்படியிருந்தது அவர் நடிப்பு.  முக்கியமான விஷயம், அப்படிப்பட்ட நடிப்புக்கு உரிய பாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.  அதிலும் தயாரிப்பாளரும் இயக்குநரும் அந்தப் படத்தின் ஹீரோவான ரித்திக் ரோஷனின் தந்தையான ராகேஷ் ரோஷன்.

க்ரிஷ்ஷில் வில்லியாக நடித்த கங்கனா அடுத்த ஆண்டிலேயே க்வீன் என்ற படத்தில் நடித்தார்.  க்ரிஷ்ஷையும் க்வீனையும் நீங்கள் பார்த்தால் இந்த இரண்டு படங்களின் கதாநாயகி ஒருவர்தான் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்.  க்வீனில் ஒன்றும் தெரியாத வெகுளிப் பெண்ணாக பட்டையைக் கிளப்பியிருப்பார்.  க்வீனில் ஹீரோவே இல்லை.  எல்லாமே கங்கனா தான்.  பிரச்சினை என்னவென்றால், இப்படிப்பட்ட படங்கள் தமிழில் வருவதே இல்லை.

ஸ்மிதா பாட்டில், ஷபானா ஆஸ்மிக்கு நிகராக ஒரு தமிழ் நடிகையைச் சொல்லுங்கள் பார்ப்போம்.  ஆனால் நான் நடிகைகளை மட்டும் குற்றம் சொல்ல மாட்டேன்.  இங்கே அப்படிப்பட்ட நடிகைகள் உருவாவ தற்கான கலாச்சார சூழலே இல்லை.  பெண்ணின் உடலை பாலுணர்வுத் தூண்டுதலுக்கான பொம்மைகளாகக் காண்பிக்கும் தமிழ் சினிமாவில் தான் ரோகிணி போன்ற ஓரிரு நடிகைகளும் வந்தார்கள்.  ஆனால் அவர்கள் ஒரு ஆளுமையாகப் பரிணாமம் கொள்வதற்கான சூழல் இங்கே இல்லை.  ஆனால் முன்பு இருந்தது.  எம்ஜியார், சிவாஜி என்ற இமாலய ஹீரோக்கள் இருந்த போதே அவர்கள் அளவுக்கு சம அந்தஸ்துடன் இருந்தவர் பானுமதி.  எழுத் தாளரும் கூட.  அறுபதுகளில் டைட்டிலில் ஷர்மிளா டாகூர் பெயரைப் போட்டு விட்டுத்தான் ராஜேஷ் கன்னா பெயரையே போடுவார்கள்.  ஆனால் இன்றைய தமிழ் சினிமா ஹீரோவைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறது.  

பழைய சினிமாவில் எனக்குப் பிடித்த நடிகை தேவிகா.  ஆஹா என்ன அழகு! அதேபோல் இன்னொரு பேரழகி டி.ஆர். ராஜகுமாரி. ஹரிதாஸ் படத்தில் மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடலில் ராஜகுமாரி தியாகராஜ பாகவதருக்குக் கொடுக்கும் ஃப்ளையிங் கிஸ் அப்போது பெரிய புரட்சி.  1944-இல் வெளியான படம் அது.

தேவிகாவுக்கும் ப்ரியங்கா சோப்ராவுக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதை கவனித்திருக்கிறீர்களா?  பெண்களுக்கு முகத்தில்தானே உதடு இருக்கும்.  ஆனால் இந்த இருவருக்கும் முகமே உதடாக இருக்கும்.  அதிலும் ப்ரியங்காவுக்கு அடேங்கப்பா.  ரகளை ரகளை.  போதாக்குறைக்கு பல்லழகிகள் வேறு.  இப்பேர்ப்பட்ட அழகுக்கு அடிமையாக இருக்கலாம்.  இடையில் என் கனவுக் கன்னியாக இருந்தவர் மாதுரி தீட்சித்.  (மூவருக்கும் உள்ள ஒற்றுமையை கவனியுங்கள்.)

கேள்வி: மீன்களில் உங்கள் அனுபவத்தில் எந்த மீன் ருசியானது? அதே போல் சைவ உணவில் உங்களுக்குப் பிரியமானது எது?

லக்ஷ்மணன், குவைத்.

பதில்: எல்லோருக்கும் பிடித்த வஞ்சிரம் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.  விரால், நெத்திலி, கெண்டை பிடிக்கும்.  மீன்களில் அதிருசியானது tணூணிதt.  இது காஷ்மீரில் கிடைக்கும்.  ஏனென்றால், குளிர்ப் பிரதேசங்களில் உள்ள நன்னீர் ஓடைகளில் மட்டுமே இது வளரும்.  இங்கே ஊட்டியில் கிடைக்கும்.  சொல்லி வைத்து தான் வாங்க வேண்டும்.  மேலும் ஊட்டியில் இந்த மீன் தடை செய்யப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை.  ஹிமாசல், காஷ்மீர் பக்கம் போனால் நான் செய்யும் முதல் வேலை ட்ராட் மீன் சாப்பிடுவதுதான். 

உடும்பு தடை செய்யப்பட்டிராத கால கட்டத்தில் , அதாவது, 40 ஆண்டுகளுக்கு முன்பு, நாகூரில் எங்கள் வீட்டில் வாரம் ஒரு முறை உடும்பு சமைப்போம்.  அது என் நினைவில் தங்கிப் போன ஒரு விஷயமாகி விட்டது.  பிறகு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் ஒரு கள்ளுக் கடையில் உடும்புக் கறி கிடைத்தது.  அதிக அளவில் எலும்பு எலும்பாக இருந்ததால் அவ்வளவாக ரசிக்கவில்லை.

இலங்கைத் தமிழர்கள் செய்யும் ஒடியங்கூழ் அட்டகாசமாக இருக்கும்.   ஒருமுறை ஷோபா சக்தி செய்து கொடுத்தார்.  பிரமாதமாக இருந்தது.  இலங்கை போனால் சாப்பிட வேண்டும் என்று இருக்கிறேன்.

அசைவத்தில் இன்னொரு அற்புதம் மாசிக் கருவாடு.  அது இந்தியாவில் கிடைக்காது.  மொரீஷியஸ், இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளில் மட்டுமே கிடைக்கும்.  அதை நாம் மிக்ஸியில் போட்டு ரெண்டு ஓட்டு ஓட்டி, அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு லேசாகத் தண்ணீர் தெளித்து சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் கடுகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து அதில் இதைக் கலந்து அடுப்பை ஸிம்மில் வைத்து ஐந்து நிமிடம் கழித்து கொத்துமல்லித் தழை போட்டு எலுமிச்சை பிழிந்து மூடி வைக்க வேண்டும். உலக டேஸ்ட்.  எதுவும் இதற்கு இணையில்லை.  இதை எனக்கு அறிமுகப்படுத்தி மாசிக் கருவாட்டையும் கத்தரிலிருந்து அனுப்பி வைத்தவர் நிர்மல்.  இலங்கையிலிருந்து தருவித்துக் கொடுப்பவர் மதுரை மருது.  

சைவத்தில் அக்கார அடிசில் ரொம்பப் பிடிக்கும்.  இந்த விஷயத்தில் நான் ஒரு முழுப் புத்தகம் எழுதினால் தான் உங்கள் கேள்விக்கு நியாயமான பதிலைத் தர முடியும்.  தமிழர் உணவில் எனக்கு மிகவும் பிடித்தது அரைத்து விட்ட சாம்பார் மற்றும் ரசம்.  20 வகை ரசம் உண்டு.  அடுத்தது, பூசணி போட்ட மோர்க் குழம்பு. இன்னொரு அழிந்து போன உணவுப் பண்டம் உள்ளது.  வேப்பிலைக் கட்டி.  பிராமணர்கள் சாப்பிட்டது.  பெயரில் வேப்பிலை இருந்தாலும் அதற்கும் வேப்பிலைக்கும் சம்பந்தம் இல்லை.  நார்த்தங்காய் இலையில் செய்வது இது.  ஆவி பறக்கும் சோற்றில் இந்த வேப்பிலைக் கட்டியைப் போட்டுப் பிசைந்து கொஞ்சமாய் நல்லெண்ணெய் (செக்கில் ஆட்டியது) விட்டுப் பிசைந்து சாப்பிட்டால் அட அடா. வேப்பிலைக் கட்டி செய்யும் முறை (வழங்கியது அறுசுவை):

காம்பு, நரம்பு நீக்கிய தளிர் இலைகள்

நாரத்தை இலை - 3 கைப்பிடி, எலுமிச்சை இலை - 1 கைப்பிடி, மிளகாய் வற்றல் - 8, ஓமம் - 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத் தூள் -1/2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு மிளகாய் வற்றல், உப்பு இரண்டையும் லேசாக வறுத்து ஓமம், பெருங்காயத்தூள் சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.

இலைகளையும் சேர்த்து அரைத்து உருட்டி காற்று புகாத பாட்டில்களில் போட்டு வைக்கவும்.

நவம்பர், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com