“உங்கள் மனைவிக்கு இருப்பது கேன்சர்தான். அதிகபட்சமாக இன்னும் மூன்று மாதங்கள்தான் அவர் உயிரோடு இருப்பார்?”
மருத்துவ அறிக்கையைக் கொடுத்து, கூடவே உயிரை உறையவைக்கும் தகவலையும் சொல்கிறார்கள் டாக்டர்கள்! மனைவியிடம் அதைச் சொல்லவில்லை அந்தக் கணவன். வேதனையை மனதுக்குள் புதைத்துக் கொண்டு மறுகுகிறான். ‘ஆண்டவா! இது உண்மையாக இருக்கக்கூடாது!'' என வேண்டியபடியே இன்னொரு மருத்துவமனை செல்கிறான். ஆணித்தரமாக எழுதப்பட்டிருந்த குறிப்புகளைப் பார்த்துவிட்டு அவர்களும் அதையே சொல்கிறார்கள்.
ஊரிலிருக்கும் பல மருத்துவர்களிடமும் தன் மனைவியின் மெடிகல் ரிப்போர்ட்டுகளை எடுத்துக் கொண்டு போய் ஆலோசனை கேட்கிறான் கணவன். எல்லோரும், 'மூன்று மாதம்' என்பதையே உறுதிப்படுத்துகிறார்கள். 'அவ ஆசைப்படும் வெளிநாட்டுக்கு அழைச்சிட்டுப்போ..', 'கோயில் குளத்துக்கெல்லாம் கூட்டிட்டுப் போ..', 'உறவுக்காரர்களுக்கெல்லாம் சொல்லிடு..', 'வேதனைப்படாம பகவான்கிட்ட போக மருந்து மாத்திரையெல்லாம் இப்ப இருக்கு, கவலைப்படாதே'. இப்படி ஆலோசனை பொழிகிறார்கள்.
மகள் உடல் நலமில்லாமல் இருப்பது கேள்விப்பட்டு சென்னைக்கு ஓடி வருகிறார்கள் வெளியூரில் வசிக்கும் அவளது பெற்றோர். சகோதரர்களும் பறந்து வருகிறார்கள். ‘‘இன்னும் சில நாட்கள் இங்கேயே இருங்களேன்'' என அனைவரிடமும் கேட்கிறான் அந்தப் பெண்ணின் கணவன்”.
சாப்பாடு தூக்கமில்லாமல் அலைந்து கொண்டிருக்கும் தன் கணவனைப் பார்க்கையில் ஏதோ ஒரு விபரீதம் என லேசாக உறைக்கிறது அந்தப் பெண்ணுக்கு.
ஓரிரு நாட்களில் தனக்கு மட்டும் தெரிந்த ரகசியத்தை மனைவியின் சகோதரர்களிடம் கூறிக் கதறுகிறான் கணவன். அரசல் புரசலாக அனைவருக்கும் விஷயம் தெரியவருகிறது.
சுற்றியிருக்கும் அத்தனை பேரும் அவளிடம் காட்டும் பிரியமும் அவர்கள் முகத்தில் அப்பிக்கிடக்கும் கவலையும் அந்தப் பெண்ணை ஒரு முடிவெடுக்க வைக்கின்றன.
அந்த முடிவுக்கு முன்னர்.. இடியை இறக்கிவைத்த மருத்துவ அறிக்கைக்கு முன்னர்.. அந்தப் பெண் சந்தித்த சங்கடங்களும் மிக அதிகம்!
அழகும் அறிவும் கொண்ட 33 வயதுப் பெண் அவள். பொறுப்பான கணவன். புத்திசாலி மகன். அளவான குடும்பம். வசிப்பது சென்னையில்.
கணவனுக்கு சொந்தத் தொழில். சிறிய அளவில் வணிகம் செய்து வருகிறான். மனைவிக்கு வீட்டை நிர்வகிக்கும் பணி. மகிழ்ச்சிகரமாகத்தான் இருக்கிறது வாழ்க்கை.
தீடீரென ஒரு நாள் கடும் காய்ச்சல் அவளுக்கு. வழக்கமான காய்ச்சல் போலின்றி, இம்முறை தொண்டையில் ரணம். காதுகளுக்குள் வலி.
அருகே இருக்கும் மருத்துவமனைக்குச் செல்கிறாள். 'ஆ' காட்டச் சொல்லி ஆராயும் டாக்டர், மாத்திரைகள் எழுதிக் கொடுக்கிறார். ‘வெண்ணெய், நெய் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். தொண்டைப்புண் சீக்கிரம் குணமாகும்'' என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மாத்திரைகள் தீர்ந்ததே தவிர, வேதனை தொலையவில்லை! தயிர் சாதம் சாப்பிட்டாலும் வாய்க்குள் நெருப்பு!
மறுபடியும் அதே மருத்துவமனை. அதே டாக்டர். 'எண்டோஸ்கோபி எடுத்துப் பார்க்கலாம்'' என்கிறார் இப்போது. அதையும் எடுக்கிறார்கள்.
‘டான்சில்ஸ் கட்டி இருக்கு. பதினஞ்சு நாள் ஆண்டிபயாடிக்ஸ் ட்ரிப்ஸ் போட்டா கரைஞ்சுடும்'' என்கிறார் டாக்டர். அதையும் செய்கிறார்கள். ஆனால், தொண்டையில் இருந்த கட்டி துளியும் கரையவில்லை.
காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு, 'ஆ' காட்டச் சொல்கிறார்கள் அதே மருத்துவமனையில் இப்போது.
‘அநேகமாக இது டி.பி.யாக இருக்கலாம். எதுக்கும் ஒரு மேன்டோ டெஸ்ட் எடுத்துடலாம்'' என்கிறார்கள். அதன்படி, கையில் ஒரு ஊசி போட்டு, தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ளச் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள்.
மூன்று நாட்கள் கழித்து ஊசி போட்ட இடத்தில் வீக்கம்! ‘யெஸ்.. இது டி.பி.யேதான்'' என்கிறார்கள். நொந்து போகிறாள் அவள். ஆனால், ஒரு நல்ல காரியம் செய்கிறாள். அத்தனை ரிப்போர்ட்டுகளையும் எடுத்துக் கொண்டு வேறொரு மருத்துவமனைக்குச் செல்கிறாள். காசநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஒருவரைச் சந்திக்கிறாள்.
‘மென்டோ டெஸ்ட் எல்லாம் ஆதி காலத்து பரிசோதனை. அந்த ஊசியை எனக்குப் போட்டாலும் வீக்கம் வரும்'' என்று கூறும் அந்தப் பெண் மருத்துவர், பயாப்சிக்கு சிபாரிசு செய்கிறார். பிரச்னை இருக்கும் பகுதியிலிருந்து துளி விள்ளலை பெயர்த்தெடுத்து சோதனை செய்வதே பயாப்சி.
மயக்க மருந்தெல்லாம் கொடுத்த பின்னர் கத்தி எடுக்கத் தயங்குகிறார் பயாப்சி செய்ய வந்த சீனியர் டாக்டர். ‘என் அனுபவத்தில் சொல்கிறேன்.. இது டி.பி.தான். சிகிச்சையை ஆரம்பியுங்கள்'' என பெண் மருத்துவருக்கு போன் போட்டுச் சொல்கிறார். ம்ஹூம்.. பயாப்சி செய்தே ஆக வேண்டும் என பிடிவாதமாகக்கூறி விடுகிறார் பெண் மருத்துவர்.
பயாப்சி ரிப்போர்ட்டில் டி.பி. இல்லை எனத் தெரிய வருகிறது!
‘கவலைப்படாதே.. உனக்கு டி.பி. இல்லை'' என்று ஆறுதல் சொல்லிய பெண் மருத்துவர், இம்யுனோஹிஸ்டோகெமிஸ்ட்ரி எனும் இன்னொரு சோதனை செய்து கொள்ளப் பரிந்துரைக்கிறார். சென்னையின் மிகப் பெரிய மருத்துவமனை ஒன்றில் அந்தச் சோதனையையும் செய்து கொள்கிறாள் அவள்.
அதன் ரிப்போர்ட்டில்தான் மூன்று மாத கெடு விதித்து, போடுகிறார்கள் புலவாமா வெடிகுண்டு!
மருத்துவ அறிக்கைகளை எடுத்துக் கொண்டு தன் தூரத்து உறவினர் ஒருவரைச் சந்திக்கிறாள் அந்தப் பெண். அவரும் ஒரு மருத்துவர்தான்.
அறிக்கையின் விவரத்தை, சுற்றி வளைத்துச் சொல்கிறார் அவர். ‘கவலைப்படாதே, கடவுள் உன்னைப் பார்த்துப்பார்'' என்று நம்பிக்கை கொடுக்கிறார். கூடவே, காஞ்சிப் பெரியவர் படத்தையும் நாராயணீயம் ஸ்லோகத்தையும் கொடுக்கிறார். தன் நிலை புரிந்தும் புரியாமலும் தவிக்கும் அந்தப் பெண், உறவுக்கார மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வேறொரு மருத்துவமனைக்குச் செல்கிறாள். அங்கே அந்த நாராயணீயே இன்னொரு பெண் மருத்துவர் வடிவில்!
‘அட.. நீ என்ன அழகா இருக்கே! என் கண்ணே பட்டுடும் போல இருக்கே!'' என நெடு நாள் பழகியது போல பேசுகிறார் அந்தப் பெண் மருத்துவர். பேசிப் பழகி, பரிச்சயமான பின்.. மொத்தத்தையும் பொறுமையாக விளக்குகிறார். நடுங்கி ஒடுங்குகிறாள் அவள்.
‘நாலு கீமோ, முப்பத்தொன்பது ரேடியேஷன் கொடுத்தால் போதும்.. எல்லாம் சரியாகிடும். நீ என்னவெல்லாம் செய்ய நினைச்சிருக்கியோ.. எதையெல்லாம் இலக்கா அடைய நினைச்சிருக்கியோ.. அதையெல்லாம் திரும்பத் திரும்ப நினைச்சுக்கிட்டே இரு. அதை அடையும்வரை உனக்கு ஒண்ணும் ஆகிடாது'' என்று சொன்ன மருத்துவரின் வார்த்தைகளை முழுதும் நம்புகிறாள். நாராயணீ ஸ்லோகப் புத்தகத்தை அந்த மருத்துவரும் கொடுக்கிறார்! ஓருசில நிமிடங்களில் தன்னைப் பற்றியிருக்கும் நிஜத்தை ஏற்றுக்கொள்ளும் மன வலிமை பெறுகிறாள்.
சிகிச்சைக்குச் செல்லும்போதெல்லாம் அவளது அழகு குறித்தும், உடையலங்காரம் குறித்தும் அன்பாகப் பேசிப் பாராட்டும் மருத்துவரின் புன்னகை, மருத்துவமனை சகவாசத்தை மலர்ச்சியாக்குகிறது.
கீமோ சிகிச்சையின்போது தன் தலை முடி பொசுங்குவதாக உணர்கிறாள் அந்தப் பெண். அதுவாக உதிர்வதற்கு முன்னர் நாமாகவே நீக்கிவிட வேண்டுமென நினைக்கிறாள். வழக்கமாகச் செல்லும் பெண்கள் அழகு நிலையம் செல்கிறாள். விஷயம் கேள்விப்பட்டு, கண்ணீரோடு மறுக்கிறார்கள். அதுவரை போயிராத ஆண்கள் சலூனுக்குச் செல்கிறாள். கண்ணீரும் பிரார்த்தனையுமாக தலை முடியை வழித்தெடுத்து அனுப்புகிறார் கடைக்காரர்.
அதிர்ந்து போகிறார்கள் குடும்பத்தினர் அனைவரும். ‘‘ஏன் இப்படிப் பதட்டமாகுறீங்க? இது எனக்கு சவுகரியமா இருக்கு'' எனப் புன்னகைக்கிறாள் அவள். மழித்த தலையோடும் முளைத்த மனோதிடத்தோடும் அவளைப் பார்த்து கண்ணீர்ச் சிலையாகிறார்கள் அனைவரும்.
‘யாரும் கவலைப் படாதீங்க. அந்த வியாதி, மூணு மாசம் கெடுவெல்லாம் மெடிகல் ரிப்போர்ட்ல மட்டும்தான் இருக்கு. என் மனசில் இல்லை. உடம்புக்காக நான் எடுத்துக்கற சம்பிரதாயம்தான் இந்த சிகிச்சை. என் பையன் படிச்சு முடிச்சு பெரிய ஆளாவதைப் பார்க்காம.. அவன் தன்னோட பிள்ளைங்களோட சந்தோஷமா வாழ்றதைப் பார்க்காம நான் இந்த உலகத்தை விட்டுப்போக மாட்டேன்,'' தெள்ளத்தெளிவாகக் கூறிவிட்டு சிகிச்சைக்குக் கிளம்புகிறாள்!
மூன்று மாதங்கள் நகர்ந்து, முப்பது மாதங்கள் கடந்து, ஏறக்குறைய ஐந்து வருடங்கள் ஓடி விட்டன!
இரண்டு வருட சிகிச்சைக் காலத்தில் படாத பாடுபட்டு, மருத்துவ அறிக்கைகளுக்கெல்லாம் மரண அறிவிப்பு கொடுத்த தன்னம்பிக்கை மனுஷியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் பெயர்.. தீபா ரவிக்குமார். சந்திக்கச் சென்றபோது, வாலை ஆட்டியபடியே குரைத்த இரண்டு நாய்களுடன் வரவேற்றார். ‘ஷைனி, ஹைடி.. இவங்கதான் இப்ப என் முழு நேர நண்பர்கள்'' என்றவர், அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் கூறிய ஒரு முக்கியமான கருத்தையும் தெரிவித்தார்.
‘குடும்பத்துக்காகவே தங்களை முழுதாக அர்ப்பணிக்கும் நம் வீட்டுப் பெண்கள், அவங்க நலனில் அக்கறை காட்டுவதில்லை. ஆசாபாசங்களை வெளிக்காட்டுவதில்லை. திருமணத்துக்குப் பிறகு தங்கள் பழைய நண்பர்களுடனான நட்பைத் தொடர்வது பெண்களுக்கு வாய்ப்பதில்லை. அதனால் மனம்விட்டுப் பேசவும் முடிவதில்லை. அதன் விளைவாக மன அழுத்தம் ஏற்படுகிறது. பல நோய்கள் பற்றுகின்றன. எனக்கு நேர்ந்ததும் அப்படிப்பட்ட ஒன்றுதான். வளர்ப்புப் பிராணிகள் பெண்களின் மன அழுத்தத்தைப் போக்கும் மிகச்சிறந்த மருந்து,'' என்றார்.
‘மாசடைந்த காற்று, சத்தில்லாத உணவுகள்.. இவையும் எனக்கு அந்த நோய் வந்ததற்கான காரணங்கள். கேன்சர் நோயாளிகளுக்குக் கொடுக்கும் மருந்துகளில் பெரும்பாலானவை வைட்டமின் மாத்திரைகள்தான்'' என்றும் சொன்னார் தீபா. சொல்வதோடு நிறுத்தவில்லை.. செயலிலும் இறங்கியிருக்கிறார்.
சத்துள்ள உணவு வகைகளை விதம் விதமாகச் செய்து பழகி, அதை சகலருக்கும் சொல்லிக்கொடுக்கும் சமையல் கலை நிபுணராகவும் புது அவதாரம் எடுத்து விட்டார். பல தொலைக்காட்சிகளில் இவரது சமையல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி இருக்கின்றன. கவிதை, எம்ப்ராய்டரி, கலைப்பொருட்கள் தயாரிப்பு.. என தான் ஒளித்து வைத்திருந்த அத்தனை கலைகளிலும் இப்போது சக்கைப்போடு போடுகிறார். அம்மாவின் அரவணைப்பில் மகன் ஸ்விதான் 'யங் சயிண்டிஸ்ட்' என பாராட்டுக்கள் வாங்கிக் குவித்திருக்கிறான். நிகழ்காலத்தைப் பற்றி நிறையப் பேசி சகஜமானதும், கடந்து வந்த கடும் காலத்தைப் பற்றியும் பேச்சுக் கொடுத்தேன்.
‘என் எதிரிக்குக் கூட அந்த வேதனை வரக்கூடாது'' என்று ஆரம்பித்தார்.. ‘கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். என்னைப் போன்ற பலருக்கு பொதுவாக ட்யூப் வழியாகத்தான் உணவு கொடுப்பார்கள். மல்லுக்கட்டி, வாய் வழியாகவே திரவ ஆகாரம் எடுத்துக் கொண்டேன். ஒவ்வொரு அசைவுக்கும் செத்துப்பிழைப்பேன்'' என்றார்.
‘ஒருநாள் கூட என் பையனைப் பிரிந்து இருந்ததில்லை நான். ஆனால் சிகிச்சையின்போது நான் படும் வேதனையை அவன் பார்த்துத் துயரப்படக்கூடாது என்பதால் அவனை விட்டு பிரிந்தேன். என் மாமனார் சுப்ரமணி & மாமியார் மீனாட்சி இருவரும் எனக்குக் கிடைத்த இன்னொரு பெற்றோர். என் பையனை அவர்கள்தான் பார்த்துக் கொண்டார்கள். சிகிச்சைக்குப் பிறகு என் வாய்க்குள் உமிழ் நீர் சுரப்பது நின்று போயிருந்தது. ஒரு கவளம் சாதம் சாப்பிடுவதற்கே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாக வேண்டும். வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை பயிற்சிக்குச் சென்றேன். யோகா பயின்றேன். உமிழ் நீர் சுரப்பு சரியானது. இப்போது நான் நார்மல் நிலைக்கு முழுவதுமாக வந்து விட்டேன்,
'' வெகு சாதாரணமாகப் பேசினார், எமனையே எட்டி உதைத்த அந்த அசாதாரணப் பெண்.
‘கடவுள் நம்பிக்கை, மன உறுதி, யோகா, சத்தான உணவு.. இவை தவிர என்னைச் சுற்றியிருந்தவர்களின் அன்புதான் நான் இன்று உங்கள் முன் நின்று பேசிக்கொண்டிருப்பதற்கான முக்கியமான காரணம். என்னைப் பற்றி எழுதும்போது மறக்காமல் அவர்கள் பெயர்களையும் எழுதுங்கள்'' என்றார்.
‘எனக்கு டி.பி. சிகிச்சை அளிக்க மாட்டேன் எனக் கூறி சரியான வழிகாட்டிய டாக்டர் திலகவதி, என் உறவுக்கார டாக்டர் விஜி மாமி, அடையாறு மருத்துவமனை டாக்டர் ரேவதி ஆனந்த், என்னை நானாக்கிய டாக்டர் சுமனா பிரேம்குமார், சிகிச்சையளித்த டாக்டர்கள் சரவணன் பெரியசாமி, சுந்தரி..''
‘தன் இமைபோல என்னைப் பார்த்துக்கொண்ட கணவர் ரவிக்குமார், எனக்காக பிரார்த்தித்தபடியே உடனிருந்த அம்மா ராஜி, அப்பா கணேசன், அக்கா சுபா, துணையாக இருந்த அண்ணா சங்கர், தம்பி மணி, கணவரின் சகோதரர் பிரசாத், அத்தை மகள் கீதா, அத்தை மருமகள் மீனா, சம்பளத்தை இழந்து என்னுடனேயே இருந்த தோழி ஷர்மிளா பானு, எங்கள் ஃப்ளாட்டில் வசித்த கிறிஸ்துவ நண்பர்கள்..''
நன்றி நவின்று கொண்டிருந்த தீபாவைப் பார்த்தபோது, பேரன்பே ஆகச்சிறந்த சிகிச்சை என்ற உண்மை புரிந்தது!
மார்ச், 2019.