கடைசி மனிதனின் தலை

கடைசி மனிதனின் தலை
Published on

அதிகாலை. சாளரத்தின் திரையை விலக்கினேன். வெளியே ஒரு கொன்றை மரம். மலர்கள் காற்றில் அசைந்தன. அந்த மஞ்சள் சிணுங்கல் அத்தனை அழகு. எங்கிருந்தோ ஒரு கருநீல வண்டு அந்தக் கொன்றைப் பூவைத் தொட்டுவிடும் அரை நொடி தூரத்தில் சிறகடித்துக் கொண்டிருந்தது.

பிரின்ஸ் கஜேந்திரபாபுவை நான் அலைபேசியில் அழைத்தேன். காங்கேயம் வாசகர் வட்டத்தில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், நிறைந்த ஒரு கூட்டத்தில், உலக வர்த்தக அமைப்பு குறித்தும், விலை பேசப்படும் கல்வி குறித்தும் பேசியிருக்கிறார். அது பற்றிக் கேட்டேன்.

அவருடைய பேச்சு சாதி மறுப்பிலிருந்து தொடங்கியிருக்கிறது. இளவரசன்... கோகுல்ராஜ்...

சங்கர். “கோகுல்ராஜை  ஒரு இன்ஜினியரிங் காலேஜ் உயிராகக் கூட நம்மால் பார்க்க முடியவில்லை ஏன்? 68 ஆண்டுகளாக நாம் பயிலும் கல்வி இதைக் கூட நமக்கு புரியவைக்கவில்லையே?” என்று கேட்டிருக்கிறார்.கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து    “நீங்கள் சாதி பற்றியெல்லாம் இங்கே பேசக் கூடாது. யுவராஜ் எனது ஹீரோ” என்று சொல்லியிருக்கிறார். கோகுல்ராஜைக் கொலை செய்த வழக்கில் விசாரணைக் குற்றவாளியாக இருக்கும் யுவராஜை கதாநாயகனாகக் கொண்டாடும் சம்பவத்தின் முன்னால் எனது எல்லா வார்த்தைகளும் சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றன. சங்கர், கவுசல்யா இருவரையும் அரிவாளால் வெட்டிப் பிளக்கும் கொலைக்காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துப் பல இரவுகள் தூங்க முடியவில்லை என்றார்.

கவுசல்யாவின் அப்பா, கொலைக்கு நான் தான் காரணம் என்று சாதிப்பெருமையுடன் நீதிமன்றத்தில் சரணடைகிறார். கவுசல்யா, “கொல்லச் சொன்ன என் அம்மாவை கைது பண்ணீட்டிங்களா.. மாமாவைக் கைது பண்ணீட்டிங்களா” என்று காயங்களில் இரத்தம் வழிய வழியக் கேட்கிறார். கொலையிலிருந்து தப்பித்த கவுசல்யா காதலை இழந்து பெற்றோரை உதறி... ‘என் படிப்பைத் தொடர உதவுங்கள்’ என்கிறார். இந்த இடத்தில் கஜேந்திரபாபு சொன்ன இன்னொரு தகவலையும் கண்டிப்பாகப் பதிவிட வேண்டும். அந்தக் குறிப்பிட்ட சாதியினர் வசிக்கும் பகுதிகளில் பெரும்பாலோர் தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் மற்ற பிள்ளைகளோடு தங்கள் பிள்ளைகள் சேர்ந்து படிப்பதை அவர்கள் விரும்பவில்லை என்றார். காங்கேயம் கூட்டத்தில் கஜேந்திரபாபுவை எதிர்த்துக் கேள்வி கேட்டவரைத் தூண்டிவிட்டதே இரண்டு தலைமை ஆசிரியர்கள் என்பது அதை விடக் கொடுமையானது. ஒரு பெருமூச்சோடு மீண்டும் சாளரத்திற்கு வெளியே கவனித்தேன்..

வண்டு என்ன கேட்டது?

பூ என்ன சொன்னது?

இரண்டுமே தெரியவில்லை.

வார்த்தைகளற்ற உரையாடல்.

குவிந்திருந்த பூவின் இதழ்கள் விரியத் தொடங்கின. விரிந்திருந்த வண்டின் சிறகுகள் குறுகத் தொடங்கின.

ஒன்றோடு ஒன்று

ஒன்றுக்குள் ஒன்று

நல்ல வேளை அந்த மஞ்சள் பூவுக்கும் கருநீல வண்டுக்கும் சாதிகள் இல்லை. இருந்திருந்தால், வீட்டுக்குப் பக்கத்தில் தான் ரயில் நிலையம். யாதும் ஊரே யாவரும் கேளீர்,சாதி இரண்டொழிய வேறில்லை, சாதிகள் இல்லையடி பாப்பா, சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே எல்லாச் சொற்களும் தண்டவாளங்களுக்கு இடையில் சரளைக் கற்களாகக் கிடக்கின்றன.

ஆல்பெர் காம்யுவும் நானும்

முதல் மனிதனைத் தேடி

நடந்து கொண்டுருக்கின்றோம்..

தண்டவாளத்தில்

துண்டாகிக் கிடந்தது

கடைசி மனிதனின் தலை.

 (கட்டுரையாளர் , கவிஞர் மற்றும் திரைப்படப் பாடலாசிரியர்)

ஏப்ரல், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com