கடை திறப்பு

கடை திறப்பு
மனோகர்
Published on

ஒவ்வொருநாளும் கடைதிறப்பதென்பது என் போன்ற கடைவைத்து நடத்துகிறவர்களுக்கு தனி அனுபவம்தான். அது எத்தனைபேருக்கு வாய்க்கும் என்பது தெரியாது. சொல்லப்போனால் கடைக் காரர்களுக்கே கூட அப்படி வாய்ப்பது அரிதுதான். 

கடைதிறப்பது என்பதை சாதாரணமாக நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் என்பதால்,கடை திறப்பதை கோயிலின் நடை திறப்புக்கு ஒப்பாய் கடை திறப்பு என்கிற பதத்தை இங்கே உபயோகப்படுத்துகிறேன். ஏனென்றால், சாதாரணமாக வீட்டிலிருந்து கிளம்பி சாவியை எடுத்துக்கொண்டு வழியில் நிற்கிற பிள்ளையார் சன்னதியிலும் ஆஞ்சநேயப் பெருமானுக்கும் ‘என்னைக் காத்தருள’ச் சொல்லி அன்போடு கட்டளை இட்டு, முடிந்தால் சன்னதியினுள் சென்று பிரசாதம் வாங்கி சூடிக்கொண்டோ வாயில் அதக்கிக்கொண்டோ கடைக்குவந்து ‘ஆண்டவா...!’  என பிரார்த்தனையோடு கடையைத் திறந்து ஏவாரத்தைத் தொடக்குவது என நினைத்தால் அது அதி சாதாரணம். அதில் சொல்ல எந்தஒரு செய்தியுமில்லை ஆனால் எனது கடை திறப்பு அசாதாரணமானது.நான் ஒரு சாதி சமூகத்திற்குச் சொந்தமான கட்டிட வளாகத்தில் கடைநடத்தி வருகிறேன். நகரத்துக் கடைகளைப்போல இங்கே ஒன்பதுமணி பத்துமணிக்குக் கடைதிறக்கலாம் என நம்போக்கில் இருக்கமுடியாது. அதிகபட்சமாக காலை ஏழுமணிக்கு திறந்தாக வேண்டும். ஹோட்டலென்றால் அதிகாலை நாலரைக்கும், பலசரக்குக் கடைகள் காலை ஆறுமணிக்கும் வந்து திறப்பது என்பது எழுதப்படாத விதி. மற்ற எல்லாக்கடைகளும் ஏழுமணிதான். மறந்துவிட்டால் தெருவில் கேலிபேசுவார்கள். அதுகூட தோணாது ஒரு ஒண்ணரை ரூபாய்க்கு பொருள் வாங்கவிருப்பவன் வீட்டுக்கு வந்து சத்தம் கொடுப்பான். “ஏப்பா.. புது மாப்பிள்ளன்ன நெனப்பா ஒனக்கு பொழுது இன்னமும் விடியலியா.. யேந்திரிச்சு வாப்போய்.. ”

அவர்களுக்கு பயந்தே அதிகாலையில் எழுந்து வரவேண்டும். வந்தால்...  மாட்டுவண்டிகள் கடையின் முன்புறமோ அல்லது கடையை மறித்தோ கிடக்கும். ஒன்றிரண்டு நாட்களில் வண்டிச்சக்கரத்திலோ நுகத்தடியிலோ மாடுகளும் பிணைத்துக் கிடக்கும். கடைதிறக்கிறபோது நாம்தான் வண்டிகளை இழுத்து ஓரம்கட்ட வேண்டியிருக்கும். அதிலும்கூட நிறைய பிரச்னைகள். வண்டியை இழுத்து எங்கே விட்டாலும் அது அடுத்த கடையின் வாசலை மறைத்துதான் நிற்கும். அந்த கடைக் காரரின் பொல்லாப்பை ஏற்கவும் வேண்டும். இதனால், நிறுத்தி இருக்கும் வண்டிக்காரரைத் தேடி சமயத்தில் அவரது வீட்டுக்குப்போய்க் கூப்பிட்டு வந்து வண்டியை நகர்த்த வேண்டியிருக்கும். தினசரி இதே வேலையை செய்கிறபோது, நமக்கும் சலிப்புவர சத்தம் போடுகிற நிலைமைக்கு நாம் ஆளாக நேரிடுகிறது. நம்மை அறியாமலேயே சில வார்த்தைப் பிரயோகம் சண்டித்தனமாய் வந்து விழும். நமக்கே ஆச்சர்யமாய் இருக்கும். நாம்தானா அது. நமக்குஇத்தனை தில்லாகபேசக்கூடவருமா.. கொட்டிக் கொட்டியே புள்ளப்பூச்சிய கொட்லாங்குழவியா ஆக்கிட்டாய்ங்களே .. என்று வியக்கிற சமயத்தில், மாட்டு வண்டிக்காரரின் வீட்டம்மாளோ சொந்த அம்மாளோ வந்து நமது மமதையினை இறக்குகிற மாதிரி டோஸ் விட்டுப் போவார்கள். அன்றையநேரம் நமக்கு நல்லநேரமாக இருந்தால்,  வேடிக்கை பார்ப்பவர்களில் யாராவது ஒருவர் நம்மேல்  இரக்கப்பட்டு, “ஏம்மா ஒரு ஏவாரக்கடய மற்ச்சாப்ல இப்பிடி வண்டிய நிறுத்திக்கிட்டா யாருக்குதே கோவம் வராது.?  ஒங்க சமுதாயக் கடைனா அதுக்கு வாடக தாரார்ல வேணும்னா நீயே வாடகயக் குடுத்து ஒம் மாடுகள நிறுத்திக்க வேண்டிதான. பாவம் வாய்செத்த மனுசன் வாய்க்கிவந்தபடிபேசாதீங்க..” என்று அவர்களைக் கடிந்து அனுப்புவதும் உண்டு. இல்லையானால் விதியே என்று வாசலில் கிடக்கும் சாணம் இன்னபிற குப்பைகளை நாமே அள்ளிக்கொட்டிவிட்டு நல்ல பிள்ளையாய் வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியதுதான்.

நிர்வாகஸ்தகர்களிடம் இதுபற்றி புகார் சொல்லப்போனால் அவர்களோ கர்மவீரர் டைப் ஆசாமிகள். ’ஆகட்டும் பார்க்கலாம்’ என பதில் மட்டும் சொல்வார்கள்.

அதனால் என்ன நடந்தாலும் அது அன்றைய தினப்பலன் என தன்னைத் தானே ஆறுதல்படுத்திக் கொண்டு வேலையில் இறங்கிவிடுவது என்பது பழகிப்போனது..

இன்றைக்கும் அப்படித்தான். ஒதுக்கவேண்டியதை ஒதுக்கி விட்டு கடைதிறப்பு முடித்தேன். ஷட்டரைத்திறந்ததும் வழக்கம்போல் அன்றைய செய்தித்தாள் கண்ணில் பட்டது. தலைப்புச்செய்தி கொஞ்சம் கதிகலங்கச் செய்தது. “தண்ணீரையும் தனியாருக்கு  தாரை வார்க்க இருக்கும்” தகவலைச்சொன்னது. வாக்காளப் பெருமக்கள் இனி, தண்ணீருக்கும் விலை கொடுக்கவேண்டிய நியாயமான காரணத்தைச் சொல்லி எதிர்வரும் தேர்தல்களில் மீட்டருக்குமேல் போட்டுக்கொடுக்கச்சொல்லி ஓட்டுக்கு துட்டுக்கேட்க வழி பிறந்துவிட்டது. வாழ்க ஜனநாயகம் !.

பக்கத்துக்கடை வாடகைக்குப் பொருள்கள் தருகிற கடை. அது மற்றகடைகளைக் காட்டிலும் கொஞ்சம் தாமதமாகத் திறக்கும் வழக்கம் உண்டு. அன்று அவர் எப்போதும்போல திறப்பு நேரத்திற்கு சரியாக வந்தவர் இரவில் கடைச் சாவியினை தொலைத்து விட்டதாகப் பதறிக் கொண்டிருந்தார். அதனைச் சொல்லி எல்லோரிடமும் ‘கண்டீர்களா எனது கடைச்சாவியினை’ என சாலையோரக் கடைகள் அத்தனையிலும் கேள்வியினைப் போட்டு வைத்தார். கடைசி முயற்சியாக சாவியினை எடுத்துப்போன திசைவழியில் ஒருதரம் நடந்துபோய் தேடியும் பார்த்தார். பிரயோசனமில்லை.

பஜாருக்குப்போய் பூட்டுக்குச் சாவிபோடுகிற ஒருநபரை அழைத்து வந்தார். அந்தாள் ”இது சொந்தக்கடதான சார். வில்லங்கம் விவகாரம் ஏதுமில்லியே” என பலமுறை கேட்டு, பக்கத்துக்கடைக்காரர்களிடம் விசாரித்து தெளிவுபடுத்திக்கொண்ட பிறகே பூட்டை கையில் திருப்பிப் பார்த்தார். ”இது நவ்தாள் பூட்டு சார். சாவி எல்லாம் போட்டுத் தெறக்க ஏலாது. மொதல்ல ஒடச்சிருவம் அப்பறமா என்னோட எடத்துல போய் வேற சாவி போட்டுத் தாரேன்” என பேரம் பேசினார்.

சரி அவருக்கான பயிற்சி அவ்வளவுதான் போலிருக்கிறது. கடைதிறக்க தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் லாப விரையம். மேலும் கடைச்சாவி தொலைந்து போன செய்திபரவுவது வியாபாரத்திற்கு அவ்வளவு நல்லதுமல்ல. ஆகவே கடைக்காரர் பூட்டை உடைக்கச் சொல்லிவிட்டார். பூட்டை அடித்து உடைக்கும்போது கடைக்காரர் அந்த பூட்டு வாங்கிய காலத்தையும் அது எத்தனை கடைகளை , வீட்டை, காத்து வந்திருக்கிறது எனவும் அது தனக்கு யார்மூலமாக வந்து சேர்ந்தது என்ற வரலாறும் சொல்ல லானார். அவர் சொல்லச் சொல்ல பூட்டு அடிவாங்கியதேஒழிய திறக்கிறபாடில்லை. சின்ன சுத்தியில் துவங்கிய அடி கொஞ்சம் பெரிசு, அடுத்தது, அடுத்தது என மாறி நாலாவதாய் முணு ராத்தல் சுத்தியின் அடிக்கு பூட்டு தாள் விலக்கியது. அதற்குள் கடையைச் சுற்றிலும் கூட்டம் கூடிவிட்டது. கட்டிடத்துக்குப் பொறுப்பாளரும் வந்துவிட்டார். ‘ஷட்டருக்கு சேதாரம் ஆகாம பாத்துக்குங்க’ என எச்சரிக்கைக் குரல் விடுத்த வண்ணம் பூட்டு திறக்கும்வரை அருகிலேயே இருந்தார். திறந்ததும் முதல்வேலையாய் ஷட்டரைச் சரிபார்த்தார்.

உடைத்தபூட்டை சாவிபோட்டுக்கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு, சம்பளம் வாங்கிகொண்டு அவர் கிளம்ப, கடையைத் திறந்து பொருட்களை வெளியே எடுத்துவைத்து வழக்கமான வியாபாரத்தைத் துவக்கலானார் கடைக்காரர். அதற்கு முன்னதாக பூட்டைத்திறக்க உதவியாக இருந்த மற்றகடைக்காரர்களுக்கு  கும்பலுக்கு  காப்பி வாங்கிக்கொடுத்து நன்றி தெரிவிக்க வேண்டியது எழுதப்படாத சட்டம். அதற்காக கடைப்பையனிடம் பணம் கொடுத்து தலையை எண்ணி டீ, காப்பி வாங்கிவரச் சொன்னார். பையனின் தலைமறைந்ததும் ஒவ்வொருவரும் தத்தம் பூட்டு உடைத்த கதைகளை எடுத்துவிட ஆரம்பித்தனர்.

அந்தநேரம் ஒரு பதினாறு வயதொத்த சிறுவன் கடைக்காரருக்கு வணக்கம் சொல்லி வந்து நின்றான். அவன் பூட்டு உடைக்கும் பொழுதிருந்து நிற்பதாய் கடைக்காரருக்கு ஞாபகம். “என்னா வேணும்ப்பா..? ” எனக்கேட்டார்.

“ பஸ்ஸ்ட்டாண்டு பலசரக்குகட பையந்தான்... கண்ணன் ஸ்டோர்..! ” என ஒருத்தர் அவனை அடையாளம் வேறு சொன்னார்.

“ ஆமாங்கண்ணே..” என்றவன், “எங்க ஓனரு இத ஒங்ககிட்ட குடுத்துவரச்சொன்னாரு.. ” என்று சாவிக் கொத்து ஒன்றை நீட்டினான்.  கடையில் கூடியிருந்த கூட்டம் அப்படியே ஒருகணம் ஸ்தம்பித்து நின்றது. மூச்சுகூட யாரும் விட்டதாய்த் தெரியவில்லை.

அந்த இடைவெளியில், “அப்பாத ஒருக்கா வந்தண்ணே... கூட்டமா இருந்தாக அப்பறம் போய்ட்டே... ” என ஏதுமறியாத பசுங்கன்றாய் பேசியதும் கடையிலிருந்த அத்தனைபேரும் மொத்தமாய் சிரித்தனர். கடைக்காரர் உட்பட.

அதன்பிறகும் அந்தப் பையன் தன் பேச்சை நிறுத்தவில்லை “வீதில கெடந்திச்சின்னு யாரோ கொணாந்து குடுத்தாகலாம். சாவிக்கொத்துல ஒங்க பேரப் பாத்து ஓனரு குடுத்துவரச் சொன்னாரு இது ஒங்களுதுதாண்ணே.. ? ” கடைசியாய் கேள்வியும் கேட்டான்.

அவனை நிறுத்தி வைத்து கடைப்பையன் வாங்கிவந்த காப்பியில் அவனுக்கும் ஒரு தம்ளர் ஊற்றிக்கொடுத்து அனுப்பினார் கடைக்காரர்.

மார்ச், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com