கங்கைக் கரையில் வள்ளுவர்!

கங்கைக் கரையில் வள்ளுவர்!
Published on

பாஜக எம்.பி. தருண் விஜய்  நல்லநோக்கத்துடன் தான் திருவள்ளுவர் சிலையை ஹரித்வாரில் வைக்க முயன்றார் என்றே வைத்துக்கொள்வோம். அங்கே

சிலை வைக்க  உருவான எதிர்ப்பு தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இப்போதைக்கு உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் ஹரிஷ் ராவத் தலையிட்டு சிலையை வைப்பதற்கு  ஓர் இடத்தை தெரிவு செய்திருக்கிறார். இந்த பிரச்னையில் நடந்தது என்ன என்று உத்தரகாண்ட்  முதல்வரின் செயலாளரான டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஐஏஎஸ் அவர்களிடம் பேசினோம். தமிழகத்தைச் சேர்ந்தவரான இவர் அம்மாநிலத்தின் வீட்டுவசதித்துறை , தலைமைச்செயலக நிர்வாகம் ஆகிவவற்றையும் கூடுதல் பொறுப்பாகக் கொண்டுள்ளார். அத்துடன்  மிசௌரி டேராடூன் வளர்ச்சிக் கழக துணைத்தலைவராகவும் செயல்படுகிறார்.

“ஹரித்துவாரில் கங்கைக் கரையை ஒட்டிய ஹர்கிபாரி என்ற இடத்தில் கங்கையைப் பார்த்தாற்போல் வள்ளுவர் சிலையை நிறுவ தருண் விஜய் எம்பி முயற்சி செய்தார். அங்கே கங்கா சபா என்ற அமைப்பு உள்ளது. அவர்கள்தான்  கங்கைக்கு ஆரத்தி எடுத்தல் போன்றவற்றைக் கவனிப்பவர்கள். ஹரித்துவார் வளர்ச்சிக் கழகத்தின் துணைத்தலைவராகவும்  மேளா அதிகாரியாகவும் முருகேசன் என்ற தமிழ்நாட்டு அதிகாரிதான் உள்ளார். அவருடன் இணைந்து தருண்விஜய் செயல்பட்டார். முதலில் கங்கா சபா உறுப்பினர்களுடன் பேசியதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.  சிலையை நிறுவுவதற்கு இரண்டு நாள் முன்னதாகத் தான் கங்கைக் கரையில் தெய்வங்கள் அல்லாது பிற மனிதர்கள் சிலையை வைக்கக்கூடாது என்று கொள்கை முடிவு எடுத்திருப்பதாக அவர்கள் திடீரென சொல்லிவிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால் அங்கிருக்கும்  சங்கராச்சாரியார் சதுக்கத்தில் சிலையை வைக்க முடிவு செய்தார்கள். ஆனால் அதன் அருகேதான் அனைந்திந்திய அகாரா பரிஷத் என்கிற சாதுக்களின் கூட்டமைப்பு அலுவலகம் உள்ளது. அவர்களிடம் சரியான தகவல் தொடர்பு  ஏற்படுத்த வில்லை என்பதால் அவர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இருப்பினும் சிலையை வைப்பதற்கான விழா, திட்டமிட்டபடி  இரு மாநில ஆளுநர்கள் பங்கேற்புடன் அங்குள்ள தாம் கோட்டி என்ற இடத்தில் அதாவது நம்மூரில் சர்க்கியூட்  ஹவுஸ் என்று சொல்கிறார்களே அந்த இடத்தில் நடத்தப்பட்டுவிட்டது.  இதற்கிடையில் சிலையை அகற்றி ஓரிடத்தில் அதிகாரிகள் வைத்தது பெரிய அவமரியாதை ஆகிவிட்டது.  இந்த சமயத்தில் நானும் வெளிநாட்டில் இருந்தேன். நாடு திரும்பியபிறகு முதலமைச்சர்  என்னை அழைத்து இதைக் கவனிக்குமாறு உத்தரவிட்டார். கலெக்டரிடம் இது பற்றிக் கேட்டபோது பாதுகாப்பாக வைப்பதற்காக இப்படி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறினார்.  உடனே சிலை நிமிர்த்தி வைக்கப்பட்டு மாலை மரியாதைகள் செய்யப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தின்  பொருளாதாரம் சுற்றுலாப் பயணிகளால் நிகழ்வது. தமிழ்நாட்டு மக்கள் மனம் புண்படுவதை முதல்வர் விரும்பவில்லை. அவர் ஹரித்துவாரில் சாலைகள் சந்திப்பு ஒன்றில் வைக்கலாமா என்று ஆலோசித்தார். ஆனால் அதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு தடையாக இருந்தது. எனவே  திருவள்ளுவர் சிலைக்கு உரிய மரியாதை செய்யும் விதத்தில் கும்பமேளா விழாவைக் கவனிக்கும்  அலுவலகமும் காவல்துறை கட்டுப்பாட்டு மையமும் அமைந்திருக்கும் மேளா பவனில் சிலையை நிறுவுவதற்கு முதலமைச்சரே நேரில் வந்து அடிக்கல் நாட்டி இருக்கிறார். அத்துடன் அந்த இடத்தில் திருவள்ளுவர் பூங்கா என்ற ஒன்றையும் நிறுவ இருக்கிறோம். இந்த இடம் கங்கைக்கரையில் இருந்து அருகிலேயே உள்ளது. அனைவரின் பார்வையிலும் படும் இடமாகவும் உள்ளது.” என்று விளக்கம் தந்தார்.

இப்போது  வள்ளுவர் சிலை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இது அங்கே நிறுவப்பட்டு விடும்.   

ஆகஸ்ட், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com