ஒரே ரசனை, ஒரே பயணம்

இரட்டையர்கள் - ஜேடி- ஜெர்ரி
ஜேடி& ஜெர்ரி
ஜேடி& ஜெர்ரி
Published on

இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரியின் மீடியா பார்க் அலுவலக வரவேற்பறையில் காத்திருந்தேன். கண்ணாடித் தொட்டிக்குள் பெரிய வாஸ்து மீன் என்னைப் பார்த்தவண்ணம் நீந்திக்கொண்டிருந்தது.

முதலில் வந்தவர் ஜெர்ரி. மொட்டைத் தலை. கறுத்த மீசை. காதில் கடுக்கன். பின்னாலேயே ஜேடி உள்ளே வந்தார். சாந்தமான தோற்றம். குறுந்தாடி. ஜேடி-ஜெர்ரி இருவருக்கும் முன்பு அமர்ந்தேன். ஏதோ வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு அமர்ந்தது போல் இருந்தது. ஆனால் கேள்விகளை நானே கேட்டேன்.

“நானும் ஜெர்ரியும் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ஒன்றாக புள்ளியியல் படித்தோம். விடுதியிலும் ஒன்றாக இருந்தோம். உலகத் திரைப் படங்கள், இலக்கியங்கள் என ரசித்தோம். வாசித்தோம். ஒரே மாதிரியான சிந்தனை, ரசனை இருந்ததால் ஒரே பாதையில் பயணிக்க முடிவெடுத்தோம். அதன்பின்னர் சென்னையில் லயோலா கல்லூரியில் முதுகலை புள்ளியியல் படிக்க வந்தோம்.(புள்ளியியல் பாடம் ரொம்ப கஷ்டம். கலைத்துறையில் நாங்க இருப்பதற்கே இந்த புள்ளியியல்தான் காரணம்…:) :) ) ஆனால் எங்கள் கவனமெல்லாம் சினிமாவில்தான் இருந்தது. பாலுமகேந்திரா அவர்களிடம் வீடு, சந்தியாராகம், சக்கரவியூகம் போன்ற படங்களில் வேலைபார்த்தோம். பின்னர் இருவரும் சேர்ந்து தொலைக்காட்சித் தொடர்கள் பக்கம் வந்தோம். கனவுகளை நனவாக்கும் கம்ப்யூட்டர்னு ஒரு நிகழ்ச்சி, கல்லூரிக் காதல் கதைத் தொடர் எல்லாம் செய்தோம்.  அப்புறம் ஜீவா, தங்கர் பச்சான் போன்ற நல்ல காமிராமேன்களை வெச்சிகிட்டு சிறந்த இலக்கியப்படைப்புகளை திரைக்குக் கொண்டுவந்தோம். சுந்தரராமசாமி, வண்ணநிலவன், ஷங்கரநாராயணன் போன்றவர்களின் சிறுகதைகளைப் படமாக்கினோம்.  திலீப்குமாரின் கடிதம் என்கிற கதையைப் படமெடுத்தோம். அதுதான் எங்களுக்கு ஏபிசிஎல் நிறுவனத்தின் அறிமுகத்தைப் பெற்றுத்தந்தது. அவங்க தமிழ்ல படம் பண்ற திட்டத்தில் இருந்தாங்க. ஜெயாபச்சனிடம் கதை சொல்லி உல்லாசம் பட வாய்ப்பைப் பெற்றோம்” என்றார் ஜேடி.

‘நீங்க ரெண்டு பேரும் வேலைகளை எப்படிப் பிரிச்சுக் குவீங்க?”

ஜேடி சிரிக்க ஜெர்ரி பதில் சொல்கிறார்: “குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. இருந்தாலும் நான் நிர்வாகம் பார்ப்பேன். அவர் கிரியேட்டிவ் சைட்  கவனிப்பார். ஆனாலும் எல்லாவற்றிலும் இரண்டுபேரும் சேர்ந்து தான் பண்ணுவோம். ஆரம்பத்திலேயே பேப்பர் வொர்க் முழுமையா பண்ணிடுவோம். இரண்டு பேர் வேலை செய்யறது ரொம்ப ஈஸியா இருக்கும். ஒருத்தர் காமிராமேன் கூட இருந்து ஷாட் வைக்கும்போது இன்னொருத்தர் ஆர்ட்டிஸ்ட் கூட இருக்கமுடியும்.”

“நீங்கள் ஆவணப்படங்களும் செய்துள்ளீர்களே?’

“அதுதான் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த விஷயங்கள். கலம்காரி, நாதஸ்வரம், மெலட்டூர் பகவத மேளா என்று செய்துள்ளோம்”

“மீடியா பார்க் என்கிற இந்த விளம்பர நிறுவனத்தின் வெற்றிக்கதை பற்றி ”

“இதை நிறைவை நோக்கிய பயணம் என்று சொல்லலாம். அப்பல்லாம் இலக்கியம் சார்ந்த விஷயங்கள் பண்ணும்போது பணம் ஒரு பிரச்னையாக இருந்தது. ஆனால் விளம்பரத்தில் பணம் ஒரு பிரச்னைதான். ஆனால் அந்த அளவுக்கு இல்லை. அந்த வகையில் இது இன்னொரு தளத்திற்கு வந்துள்ளோம் என்று சொல்லலாம்” என்று நிறுத்தினார் ஜெர்ரி.

“500 விளம்பரத்துக்கு மேல் பண்ணி ஒரு ட்ரண்ட் செட் பண்ணிட்டோம். இங்கிருக்கும் எல்லாவிதமான முன்னணி நிறுவனங்களுக்கும் ஒரே சமயத்தில் விளம்பரம் பண்ணக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.தென்னிந்தியாவின் முக்கியமான எல்லா ப்ராண்டுகளின் முதலாளிகளுடன் நேரடியாகப் பழகும் வாய்ப்பு கிடைத் தது. அவங்கல்லாம் ஒரு நாளைக்கு குறைந்தது 20 மணி நேரம் உழைக்கிறாங்க. அவங்க அடைந்த வெற்றி மாஜிக் இல்லை. கடும் உழைப்பால் பெற்றதுதான். இதெல்லாம் பார்த்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது” என்று தொடர்ந்தார் ஜேடி.

“உல்லாசம், விசில், பாண்டவாஸ் போன்ற படங்களை அடுத்து நீங்கள் வேறு படங்கள் செய்யவில்லை. விளம்பரத்துறையில் அதிக கவனம் செலுத்தியதுதான் காரணமா?”

இக்கேள்விக்கு பதில்சொல்ல முன்வந்தார் ஜெர்ரி. “நாங்க பண்ண படங்கள் எல்லாமே இன்னிக்கு யோசித்துப் பார்த்தால் காலத்தால் முன்னோக்கிய படங்கள். அவை சற்றுப் பின்னால் வந்திருந்தால் அவற்றுக்கு வரவேற்பு வேறுமாதிரி இருந்திருக்கலாம். நாங்கள் பார்த்த படங்கள், கற்ற விசயங்களை வெச்சு வேகமாகவே சில விஷயங்களைப் பண்ணினோம். அதனால் அவை மாபெரும் வெற்றியைப் பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றும் அவை கவனிக்கப்படுகின்றன. பேசப்படுகின்றன. இன்னும் அவை வீரியத்துடன் இருப்பது காலத்தில் முந்தி அவற்றை எடுத்துவிட்டோமோ என்ற கேள்வியை உறுதிப்படுத்துகிறது. விளம்பரத்தில் அதிகம் ஈடுபட்டது இன்னொரு காரணமாக இருக்கலாம்”.

ஜே.டி: “ விளம்பரம் என்பது ஒரு கமிட்மெண்ட். ஆடி முடிந்தால் கோடைக்கால விளம்பரம். ஒவ்வொரு இரண்டு மாதத்துக்கும் ஒரு விளம்பரம் செய்யவேண்டியிருக்கும். அதற்கான இசை, நடிகர் நடிகை தேடல்னு அதன் பின்னாலேயே போகவேண்டியிருக்கும். நாங்க எவ்வளவோ பேரை அறிமுகப்படுத்தியிருக்கோம். ஹன்சிகா, டாப்ஸி, சமந்தா போன்றவர்கள் காமிராவை முதலில் ஃபேஸ் பண்ணதே எங்க விளம்பரங்களில்தான்.”

ஜெர்ரி: “ப்ராண்ட்டுக்கு ஓர் அடையாளத்தை உருவாக்குவது என்பது மிகமுக்கியம். உதாரணத்துக்கு ராம்ராஜ் வேட்டிகளுக்கு நாங்கதான் முதலில் விளம்பரப்படம் எடுத்தோம்.  ‘சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்’  என்று நம்முடைய பண்பாட்டு உடையான வேட்டிக்கு ‘ஸ்லோகன்’  தயாரித்தோம். அந்த உடையை அணிபவர் பெரிய காரில் வருவார். பெரிய ஓட்டலுக்குப் போகும்போது மரியாதை கிடைக்கும். வேட்டின்னா கிராமத்தவர்கள் மட்டுமல்ல பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கறவனும் கட்டலாம் என்று அதை முன்னிறுத்தினோம். அது பெரிய வெற்றியை அடைந்தது. இப்ப கிரிக்கெட் வீரர் அஸ்வினை வெச்சுகூட ஒரு விளம்பரம் அவங்களுக்கு எடுத்திருக்கிறோம்”

ஜேடி: ‘’நிறைய பிரபலங்களுடன் பணிபுரிகிறோம். மம்முட்டி, சத்யராஜ், அஸ்வின், திரிஷா, , ஹன்சிகா, சமந்தா, டாப்ஸி, காஜல் அகர்வால், தமன்னா...பிரியா ஆனந்த் என்று நிறைய பேருடன். பிரபலங்களைக் கையாளுவது ஒரு தனிக்கலைதான். தமன்னா மட்டுமே எங்ககூட பதினெட்டு விளம்பரம் பண்ணியிருக்காங்க...”

“ஒரு நடிகராக ஜெர்ரி?”

“பரதேசில நடிச்சதக் கேட்கிறீங்க. தொடர்ந்து நடிப்பேன். நடிகன் என்பதை விட ஜேடி ஜெர்ரி என்ற அடையாளம் மிகவும் கஷ்டப்பட்டு அடைந்தது. அதற்கு குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

“நீங்கள் இருவரும் வாழ்க்கையில் சந்திக்காமலே போயிருந்தா என்ன ஆகியிருக்கும்?”

சற்று மவுனத்துக்குப் பின்னால் ’எப்படியிருந்தாலும் நாங்க மீடியாவில் தான் இருந்திருப்போம்” என்றார் ஜேடி. ஜெர்ரியை நோக்கித் திரும்பினேன். ‘இது ஜேடியின் பதில்தான். நான் இன்னும் சொல்லவில்லை’ என்று சஸ்பென்ஸ் வைத்தவர் “ஜேடியை சந்திக்காமல் இருந்திருந்தால் இந்த இலக்கியம், சினிமா, நடிப்பு எதுவுமே என் வாழ்க்கையில் வந்திருக்காது. நான் வேறு ஏதாவது ஒரு துறையில் இருந்திருப்பேன். நான் நிச்சயமாக ஜேடியின் பாதையில் பின் தொடர்ந்து வந்ததனால்தான் இந்த இடத்தில் இருக்கிறேன்” என்றார்.

சற்று அமைதிக்குப் பின் விடைபெற்றேன்.

ஏப்ரல், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com