ஐயா, எங்களை கொன்று விடாதீர்கள்!
கடந்த ஞாயிறன்று உரி ராணுவ முகாம் தாக்கப்பட்டவுடன், காஷ்மீரில் எழுபது நாட்களுக்குப் பிறகு அசாதாரண அமைதி நிலவியது. கல்லெறி சம்பவங்கள் ஏதுமில்லை. தீவிரவாதி புர்கான் வானி கொல்லப்பட்ட ஜூலை 8 முதல் தினந்தோறும் சராசரியாக 15 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த ஸ்ரீநகரின் முக்கியமான மருத்துவமனையில், அன்று எந்த ஆர்ப்பாட்டக்காரரும் சிகிச்சைக்கு வரவில்லை. ஸ்ரீ நகரின் முக்கிய வீதிகளில் எதிர்பாராத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காவலர்களை கொண்டு சரி செய்யுமளவிற்குப் போனது. இரண்டு நாட்கள் கழித்து கலவரக்காரர்கள் மீண்டும் தெருவிற்கு வந்து விட்டார்கள்.
இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்றுள்ளது. பாதுகாப்புப் படையினரை தாக்குவதை ஒருபோதும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்பது உணர்த்தப்பட வேண்டும். மனித நேயமும், சகோதரத்துவமும் கடைப்பிடிக்கப்படுவது முக்கியம் என்றாலும்கூட பாதுகாப்புப் படையினர் தீவிரவாதியை கொன்றதால் கலவரக் கும்பல் அவர்களை தாக்கலாம் என்று பொருள் கொள்ளலாகாது.
ஆனால் காஷ்மீர் நிலவரம் எப்படி இந்தமுறை இவ்வளவு மோசமானது?
உரி தாக்குதலை கூர்ந்து கவனிக்கும் போது, காஷ்மீர் நிலவரத்தையும் சேர்த்தே பார்க்கவேண்டும். 75 நாட்களாக இந்த பிரச்னை இருக்கிறது. ஊடகங்கள் தெரிவிக்காவிட்டாலும், காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் பாகிஸ்தான் கொடி இப்போது பறந்து கொண்டிருக்கிறது. தற்போதைய அமைப்புக்கு ஆதரவான அரசியல் விமர்சகர்கள் சொல்வது போல் இது அங்கே எப்போதும் பறப்பது அல்ல. தற்போது நடப்பது வேறுபட்டது. ஞாபகம் இருக்கிறதா? 2015 மார்ச் மாதம் பாகிஸ்தான் தினத்தில் அடிப்படை வாத முஸ்லிம் இயக்க தலைவர் ஆசியா அன்ராபி ஒரு சிறிய அறையில் பாகிஸ்தான் கொடியை ஏற்றினார். அதுவும் சில நிமிடங்களில் முடிந்து விட்டது. ஆனால் இப்போது பாகிஸ்தான் கொடி எல்லா போராட்டங்களிலும் ஒரு பகுதியாகிவிட்டது.
அரசு மற்றும் காவல்துறை நிர்வாகம் முற்றிலுமாக செயலிழந்துவிட்டது என்பதே உண்மை. பெரும்பாலான காவல் துறையினர் பணிக்கு செல்லவே பயப்படுகின்றனர். சில உயர் அதிகாரிகள் உட்பட பலர், கலவர கும்பலை எதிர்கொள்ள நேர்ந்தால் சமாளிப்பதற்காக, சாதாரண குடிமகனுக்காக அடையாள அட்டைகளைச் செய்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைகள் காயம்பட்ட காவல் துறையினரை சேர்க்க மறுக்கின்றன. மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு சப் இன்ஸ்பெக்டருக்கு மருத்துவமளிக்க மறுத்துவிட்டது காஷ்மீரின் முக்கியமான மருத்துவமனை. வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டார். கலவரக்காரர்களால் தாக்கப்பட்ட ஆளும் மக்கள் ஜன நாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் முகமது காலிலை மாவட்ட மருத்துவனையில் சேர்க்க முடியாமல், ஸ்ரீநகரி லுள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளார்கள்.
அரசு அதிகாரிகள் வேலைக்குச் செல்ல பயப்படுகிறார்கள். சின்ன பிரச்னைக்கு கூட காவலர்கள் நேரில் சென்று தகவல் சேகரிக்காமல் தொலைபேசியிலேயே எல்லாவற்றையும் விசாரித்து எப் ஐ ஆர் பதிவு செய்கிறார்கள். ஒரு பத்திரிகையாளர், தன் நண்பர் ஒருவருக்கான சிறிய அரசாங்க அனுமதி கோப்பு ஒன்று சிறிதும் நகராமல் இரண்டு மாதமாக தலைமையகத்தில் மாட்டிக் கொண்டிருப்பதாக நம்மிடம் குறிப்பிடுகிறார்.
இதுவரை அமைதியாக இருந்த பகுதிகளுக்குள்ளும் இந்த முறை கலவரம் பரவியிருக்கிறது. உதாரணமாக பட்காம் பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக எந்த தீவிரவாத நிகழ்வும் நடைபெற்றதில்லை. ஆனால் தற்போது மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு படையினருக்கும் கலவரக்காரர்களுக்குமிடையே பெரும் போரே நடந்து கொண்டிருக்கிறது.
இம்முறை இட்டிஹாத் இ மில்லத் என்ற அமைப்பு அடிப்படை வாத அமைப்புகளான ஜமாத் இ இஸ்லாமி மற்றும் ஜமியத் இ அஹ்லேஹடித் போன்ற அமைப்புகளிலிருந்து உறுப்பினர்களைச் சேர்த்து களமிறங்கியுள்ளது. இதன் தலைவர்கள் முக்கியமாக தென் காஷ்மீர் போராட்டங்களில் உரையாற்றும்போது தற்போதுள்ள அரசியல் கட்சிகளை புறக்கணிக்குமாறு மக்களை உறுதி எடுக்கச் சொல்கிறார்கள். பாராமுல்லா பகுதியிலுள்ள பல முக்கியமான நபர்கள் அவர்களின் அரசியல் தொடர்புகளுக்காக மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டுள்ளனர். தீவிரவாத அமைப்புகள் தங்களுக்கு பலமான பகுதிகளில் மக்களிடம் வரி வசூலிப்பது போன்று, இந்த அமைப்பு அடுத்த மாதத்திலிருந்து வரி வசூலிக்கப் போவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்காம் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர், “ஒருவேளை நான் ஜம்முவுக்குச்
சென்றிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய வீட்டிற்கு போராட்டக்காரர்கள் வந்து ‘ நாளை நடக்கும் போராட்டத்தில் அவர் கலந்துகொண்டு இந்தியாவிலிருந்து சுதந்திரம் கேட்டு உரையாற்றவேண்டும்’ என்றால், எங்கள் குடும்பத்தினர் ‘ அவர் ஜம்முவில் இருக்கிறார்’ என்பார்கள். ‘ நீங்கள் இங்கே வாழவேண்டுமென்றால் அவரை வரச் சொல்லுங்கள் ‘ என்றால் நான் என்ன செய்ய முடியும், அவர்களுடன் சேர்ந்து அவர்கள் சொல்வதை செய்வதைத் தவிர“ என்கிறார்.
அரசியல்வாதிகளின் வீடுகளும், உடமைகளும் தாக்குதலுக்கு உள்ளாகும் போது, தென் காஷ்மீரை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் ஒருவரின் வீடு எவ்வித தாக்குதலுக்கும் உள்ளாகாமல் எப்படி தப்பித்தது என்று பத்திரிகையாள நண்பரை விசாரித்தால், “தாக்குதலிலிருந்து குடும்பத்தாரை காப்பாற்றிக் கொள்ள தலைவரின் சகோதரர் கலவரக்காரர்களுடன் இணைந்து கல்லெறிந்து கொண்டிருக்கிறார். பிரச்னை ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை தலைவர் வீட்டிற்கு வரவேயில்லை’ என்கிறார்.
எப்படி தொடங்கியது இது?
2013 ல் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட போது கூட குறைவான எதிர்ப்பலைகளே இருந்தன. பிரச்னையின் தொடக்கமாக காவல் துறையினர் சொல்வது, பிஜேபியின் துணையுடன் பிடிபி ஆட்சி அமைத்து மறைந்த முப்தி முகமது சையத் முதல்வரானதிலிருந்து என்றுதான். பதவியேற்றவுடன் 2010-ல் காஷ்மீர் கலவரத்திற்காக கைது செய்யப்பட்ட முஸ்லிம் அடிப்படைவாத தலைவர் மசரத் ஆலமை அவர் விடுதலை செய்தார். ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவரும் ஆசிய ஆன்ரபியின் கணவருமான காசிம் பக்தூவையும் விடுதலை செய்யும் எண்ணத்தில் அவர் இருந்தார்.
ஆலம் விடுதலையானதும் இதுதான் நடந்தது: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலிஷா கிலானி ஒவ்வொரு வருடமும் காஷ்மீரின் கடுமையான பனிக் காலத்தில் டெல்லியில் இருப்பார். ஏப்ரல் மாதத்தில் அவர் காஷ்மீர் திரும்பிவருவது சாதாரணமான நிகழ்வு. ஆனால் 2015 ஏப்ரல் 16 ல் கிலானியின் வருகையை ஒட்டி பெரிய வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துகிறார் விடுதலையான ஆலம். ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய ஊர்வலத்தில் கதாநாயகனாக கிலானி வருகிறார். ஊர்வலம் டிஜிபி அலுவலகத்தை தாண்டும்போது, ‘ பாகிஸ்தானிலிருந்த வந்த செய்தி என்ன? காஷ்மீர் பாகிஸ்தானாக்கப்படும்’ ‘வாழ்க பாகிஸ்தான்’ என்று கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.
முதல்வர் முப்தி முகமதுவின் அறிவுறுத்தலின்படி ஊர்வலத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘ இந்த நிகழ்வு காஷ்மீர் விடுதலை என்பது கானல் நீர் என்று நினைத்துவந்த இளைஞர்களின் மனதை மாற்றியிருக்கிறது’ என்கிறார் காவல் துறை உயரதிகாரி ஒருவர். ‘இதே சமயத்தில் தான் புர்கான் வானி என்ற பெயர் அடிபடத் தொடங்கியது. அதுவரை அவருடைய பெயரை எவரும் கேள்விப்பட்டு கூட இருக்கவில்லை. டெல்லியிலிருந்து வந்திறங்கிய பத்திரிகையாளர்கள் புதிய தீவிரவாத தலைவராக வானியை முன்னிலைப்படுத்திவிட்டார்கள்’ என்கிறார் அந்த அதிகாரி.
வானி சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்களை திரட்ட, கடைசி புள்ளியாக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் பிப்ரவரி மாதம் சில காஷ்மீர் இளைஞர்கள் இந்திய எதிர்ப்புக் கோஷங்கள் எழுப்பினர். ‘உளவுத்துறையினர் அவர்கள் அனைவரையும் யாரென்று கண்டுபிடித்து விட்டனர். ஆனால் யாரையும் தொடவில்லை. அதற்கு பதிலாக கன்னையா குமார் பலிகடா ஆக்கப்பட்டார்’ என்கிறார் காவல் அதிகாரி.
இதன் விளைவாக பிரிவினைவாதிகள் அனைவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஒன்றாக கைகோர்த்து விட்டனர். மையநீரோட்ட அரசியல்வாதிகளின் கெஞ்சலுக்கு அடங்க மறுத்து உறுதியாக வலம் வருகிறார்கள்.
இச்சமயத்தில் மத்திய அமைச்சர்கள் குழந்தைத்தனமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். உண்மை என்னவெனில், காஷ்மீர் யானையாகவும் அதனை கையாளும் அரசியல்வாதிகள் யானையை தடவிப்பார்த்த குருடர்களாகவும் இருக்கிறார்கள்.
2011-ல் எழுதிய கட்டுரை ஒன்றில் பாகிஸ்தானிய எழுத்தாளர் ஹனிப், பூட்டோவின் அரசை ராணுவப் புரட்சி மூலம் ஜெனரல் ஜியா உல் ஹக் கவிழ்க்கவிருந்த இரவில் நடந்தது பற்றி எழுதி உள்ளார். தன்னுடைய வலது கரமாக இருந்த ராணுவ அதிகாரியின் காதில் ரகசியமாக ,’ எங்களை கொன்றுவிடாதீர்கள்’ என்று பூட்டோ சொன்னதாக எழுதியிருக்கிறார். காஷ்மீர் விவகாரத்தை கவனிக்கும் பாஜக முக்கிய தலைவரிடம் யாராவது போய் ‘ ஐயா, எங்களை கொன்று விடாதீர்கள்’ என்று சொல்ல வேண்டும்.
(Firstpost.com இணையதளத்தில் பத்திரிகையாளர் ராகுல் பண்டிடா எழுதிய கட்டுரை அவர் அனுமதியுடன் இங்கே. தமிழில்: இரா.கௌதமன்)
அக்டோபர், 2016.