ஐ.டி துறை: ஆறு லட்சம் பேரின் வேலைக்கு ஆபத்து

ஐ.டி துறை: ஆறு லட்சம் பேரின் வேலைக்கு ஆபத்து
Published on

அவருக்கு ஐ.டி.யில் வேலை. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம். ஒன்றரை லட்சத்துக்கும் மேல் சம்பளம். முதலில் சின்ன காரும், சின்னதாய் ஒரு வீடும் வாங்கியிருந்தார். அவற்றுக்கான மாதாந்திரத் தவணை முடிந்த பின்னர் பெரிய வீடு ஒன்றை மாதாந்திரத் தவணையில் வாங்கினார். காரும் பெரியதாக பிஎம்டபிள்யூ காருக்கு மாறினார். புதுவீட்டின் உள் அலங்காரம் மட்டுமே 35 லட்ச ரூபாய்க்குச் செய்திருந்தார். சமீபத்தில் ஒரு நாள் அலுவலகம் போனார். அங்கே அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மூன்று மாதம் அவகாசம் தருகிறோம். வேலையை விட்டு விலகிவிடுங்கள் என்று அவர் வேலை பார்த்த நிறுவனம் சொன்னது. மூன்று மாதங்களில் அவர் வேலை தேட முடியவில்லை.வெளியே வந்த அவரால் அடுத்த மாதங்களில் வீட்டுக்கான மாதாந்தரத் தவணை கட்ட முடியாமல், புதுவீடு ஏலத்துக்குப் போனது. அவருக்கு மிஞ்சியது பழைய வீடு மட்டும்தான். வசதியான கார், பெரிய வீடு என்று பழகியவரின் வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது. அவருக்கு 45 வயது. இரண்டு குழந்தைகளின் பள்ளி கல்லூரிப் படிப்புகளுக்கு உதவவேண்டிய நிலையில் இப்படியொரு அதிர்ச்சியை அவர் எதிர்கொண்டுள்ளார்.

இப்போது இந்தியாவில் உள்ள ஐ.டி. நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை பலரையும் சுனாமி போல் தாக்கி இருக்கிறது. இதில் ஒருவரின் நிலைதான் மேற்சொன்னது. திடீரென வேலை போவது என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் சகஜம். அங்கு ஆண்டுக்கணக்கில் வேலை செய்துகொண்டிருக்கும் ஒருவர் ஒரு நாள் நிறுவன வாசலிலேயே நிறுத்தப்படுவார். அவர் மேசையில் இருக்கும் பொருட்கள் ஒரு பையில் போடப்பட்டு தயாராக இருக்கும். வாசலில் இருக்கும் காவலர் கொஞ்சம் இருங்க; உங்கள் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு, அவரது மேசையில் இருக்கும் பொருட்கள் அடங்கிய பையையும் கூடவே சில மாதங்களுக்கான சம்பளப் பணத்தையும் அளித்து அனுப்பிவிடுவார்கள். “அமெரிக்க நிறுவன வேலை, அமெரிக்கப் பாணி உணவு, அமெரிக்கப் பாணி வாழ்க்கை என்று இந்தியாவில் வாழ்கிறவர்கள், அமெரிக்க பாணியில் வேலையிலிருந்து நீக்கப்படுவதையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்,” என்கிறார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் மூத்த அதிகாரி.

முக்கியமான ஐ.டி. நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ எங்கள் நிறுவனத்தில் தற்போது குறிவைக்கப்படுகிறவர்கள் 15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர்கள். அதே சமயம் அவர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளமும் மிக அதிகம். இப்போது ஒரு பிரிவில் எட்டு பேர் வேலை செய்துவருகிறார்கள் என்றால் அதில் திறன்படச் செயல்படுவதில் பலவீனமாக இருக்கும் இரண்டு பேர் கட்டம் கட்டப்படுகிறார்கள். அவர்களுக்கு 3, 6, 9 மாதங்கள் வரை முன்னறிவிப்பு கொடுத்து அவகாசம் தரப்படும். அதற்குள் வேலை தேடிக்கொண்டு அவர்கள் வெளியேறிவிடலாம். அதன்பிறகு தொடர அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதுதான் நடைமுறை,” என்கிறார்.

சரி வெளியேற்றப்பட்டால் வேறு வேலை தேடிக்கொள்ளலாமே என்றால் அதிலும் சிக்கல் இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த அமுதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மாதம் 4 லட்சம் சம்பளத்தில் இருந்தவர். அவர் வேலை நீக்கம் செய்யப்பட்டதும், வெளியே வந்து வேலை தேடினார். நிறுவனத்தில் துணைத்தலைவர் என்ற பொறுப்பில் இருந்தவர். அவருக்குத் தகுதியான வேலையோ அதே சம்பளமோ கிடைக்கவில்லை. பரவாயில்லை; குறைந்த சம்பளத்துக்கே வேலை செய்கிறேன் என்றாலும் யாரும் வேலை கொடுக்கவில்லை. இப்போது அவர் தான் ஆரம்ப கட்டத்தில் பார்த்த தொடக்கநிலை வேலைகளை வீட்டிலிருந்தே பார்த்துக்கொடுத்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.

இப்போது வேலையை விட்டு அனுப்பப்படும் யாரும் அதுபற்றிப் பேசமுடியாது. ஏனெனில் இதுபோல் பிறர் வேலையிலிருந்து தூக்கப்படும்போது அதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அல்லது அதைச் செய்தவர்களே இவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். பணிப்பாதுகாப்பு என்பது தனியார் துறைகளில் கிடையாது. இருந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்பும் பஞ்சாகப் பறந்து செல்கிறது என்பதைத்தான் ஐடி துறை வேலை இழப்புகள் நமக்குச் சொல்கின்றன.

கடந்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான ஐ.டி. துறைப் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஐ.டி. துறையில் 40 லட்சம் இந்தியர்கள் பணிபுரிகிறார்கள் என்று ஒரு கணக்கீடு கூறுகிறது.அதில் கணிசமானவர்கள் தமிழர்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம். இதில் சுமார் 12 லட்சம் பேர் மெல்லக் கழற்றிவிடப்படுவார்கள், ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் என்ற வீதத்தில் என்று

சொல்லப்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் தலைவரான க்ரிஷ் லட்சுமிகாந்த் இந்த அளவுக்கு முன் எப்போதும் மேலாளர்கள் மட்டத்தில் இருப்பவர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டதில்லை. காக்னி -சண்ட் நிறுனத்தில் மட்டுமே 1500 மேலாளர்கள் அனுப்பட்டுவிட்டனர் என்கிறார். அத்துடன் நாஸ்காம் சந்திப்பு ஒன்றில் மெக்கின்ஸிகி நிறுவனம் அளித்த அறிக்கையை ஆய்வு செய்ததில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் அடுத்த மூன்று ஆண்டுகளில் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்கிறார். ஆக மொத்தம் ஆறு லட்சம் பேருக்கு ஆபத்து!

இதற்கான காரணங்கள் என்ன?

1)         நிறைய விஷயங்கள் தானியங்கி முறைப்படி நிகழ்கிறமாதிரி வளர்ச்சிகள் ஏற்பட்டு விட்டபடியால் அதைச் செய்ய ஆட்கள் குறைவாகவே தேவைப்படுகிறார்கள்.

2)         பணிபுரியும் காலகட்டத்தில் தங்களை மேலும் மேலும் திறனை வளர்த்துக்கொள்ளவும், புதிய தொழில்நுட்பங்களைக் கற்கவும் தவறியிருப்பவர்களை கழற்றிவிட நிறுவனங்கள் எண்ணுகின்றன.

3)         அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து பல பணிகளை அங்கேயே செய்யுமாறு நிறுவனங்கள் வற்புறுத்தப்படுகின்றன. அங்கேயே செய்யும்போது செலவு அதிகம் ஆகிறது (இந்தியாவில் செய்தால் செலவு குறை என்றுதானே இங்கே படையெடுத்தன அந்த நிறுவனங்கள்). இப்போதுஅமெரிக்காவிலேயே வேலைகளைச் செய்வதால் செலவு அதிகம் ஆகிறது அதற்கான செலவைக் குறைக்க இங்கே ஆட்குறைப்பு செய்கிறார்கள். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அரசியல் கொள்கைகள் விசா கெடுபிடிகளும் இதன் பின்னணியில் உள்ளன.

ஆனால் வேலையே இல்லை என்று நினைக்கக்கூடாது. புதியவர்கள் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதே வேகத்தில் தலைகளும் உருண்டுகொண்டு இருக்கின்றன.

ஆனால் இதுதான் இனி எதார்த்தம் என்பதை நம்மவர்கள் புரிந்துகொண்டு இவற்றை சமாளிக்கப் பழகவேண்டும். ஐ.டி.யில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பெரும்பாலும் செய்வது மாதத்தவணையில் வீடு வாங்குவது; கார் வாங்குவது போன்றவைதான். உதாரணத்துக்கு திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தில் இருந்து வந்தவர் அவர். அவரும் அவரது மனைவியும் ஐ.டி. ஊழியர்கள். அவர்கள் படிப்படியாக சம்பாதித்து மூன்று வீடுகள் வாங்கினர். முதல் வீட்டுக்குத் தவணை முடிந்தது. மற்ற இரு வீடுகளுக்குமான மாதத்தவணை அவர்களின் சம்பளத்தில் 65 சதவீதம். இந்நிலையில் அவருக்கு வேலை போகிறது. புதிய இரு வீடுகளுக்குமான தவணை கட்டமுடியாது. அவற்றை விற்கவேண்டும். விற்கும்போது இழப்புதான். முதலில் வாங்கிய வீடு மட்டும்தான் மிச்சப்படும். இதுபோல் தவறான முதலீடுகளால் வேலை இழப்பைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறவர்களிருக்கிறார்கள். இதை விடுங்கள் பல்லாண்டுகள் வேலை செய்து,வெளியேற்றப்பட்டு, சொந்தத் தொழில் என்று முழு சேமிப்பையும் போட்டு அதையும் இழந்து நிற்கிற சோகக்கதைகளும் உண்டு.

ஆரம்பத்திலிருந்தே சேமிப்பை முறைப்படுத்திச் செய்யும் அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியமானது. இனி திடீரென வேலை இழப்புகள்தான் எதார்த்தநிலை என்பது பற்றிய புரிதலும் தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஒரே வேலையைச் செய்துகொண்டிராமல் கூடுதலாக வேறு சில விஷயங்களில் கவனம் செலுத்தி திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும். வேலைக்கு ஆபத்து என்கிறபோது நெஞ்சை நிமிர்த்தி நடந்து செல்லலாம்!

ஜூலை, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com