காவிரி ஜீவநதி. ஆண்டுமுழுவதும் தண்ணீர்வரும். மூன்று மாதங்களுக்கு மட்டும் தண்ணீர் வரத்து சற்றுக் குறைவாக இருக்கும். நதியில் மணல் திட்டுக்கள் தென்படும். ஆடிப்பெருக்கென்றால் சின்னவயதில் எங்களுக்கு கும்மாளம்தான். வெள்ளம் பொங்கிவரும். காவிரிக்கரையில் இருக்கும் வெங்கூர் எங்கள் கிராமம். சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து தேர் செய்து இழுத்துவருவோம்.
அதில் விரும்பும் கடவுளின் படத்தை வைத்துக்கொள்வோம். பூக்களால் அலங்கரித்த அந்த தேரை காவிரியில் விட்டு, குளித்துவிட்டு வீடு திரும்புவோம்.இளம்பெண்களும் திருமணமான பெண்களும் பல சடங்குகளை காவிரிக்கரையில் செய்வார்கள். அது ஒரு கொண்டாட்ட தினம். வாலிப வயதில் ரயில் பாலத்தில் டயர்களுடன் ஏறி டயரை ஆற்றுக்குள் எ றிந்துவிட்டு நாங்களும் குதிப்போம். அந்த அளவுக்கு தண்ணீரின் போக்கு இருக்கும். இப்போ அங்கே மணல்தான் இருக்கு.
ஒரு கட்டத்தில் காவிரியில் தண்ணீர் குறைய ஆரம்பித்தது. ஓடையாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. பின் அதுவும் போய், ஊற்று நீரை எடுத்து ஆடிப்பெருக்கு நடக்கும். இப்போது அதுவும் இல்லை. போர் தண்ணீர்தான். வறண்டுபோன காவிரிக்கரைக்கு ஆடிப்பெருக்கு கொண்டாட ஏன் போகவேண்டும் என்று இப்போது வீட்டில் சும்மா இருக்கிறோம்’’
காவிரியில் தண்ணீர் இல்லை என்பதால்இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு அன்று சடங்குகள் செய்ய வருபவர்கள் வசதிக்காக திருச்சி மாநகராட்சி குழாய்களை ஏற்பாடு செய்திருந்தது. ஏற்கெனவே இந்த ஆண்டு முதல்முறையாக திருச்சி மெரினா என்று ஆற்று மணலில் மேடை போட்டு கடைகள் போட்டு காசு பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டதிருச்சிவாசிகளை எண்ணி காவிரித் தாய் கண்ணீர் வடித்திருப்பாள்.
– புலவர் முருகேசன், காவிரி வேளாண் கழக அமைப்பாளர்.
செப்டம்பர், 2012