பதினைந்து தேதிக்கு மேல் ஆகிவிட்டால் போதும்..மனசு திக் திக் என்று அடித்துக் கொள்ளும். அய்யோ... அந்திமழையில் இருந்து அழைப்பு வருமே.. இந்த முறை எதை எழுதுவது? என்று. சரி இருபதாம் தேதி வாக்கில் உட்கார்ந்து அப்போது எழுதிக் கொள்ளலாம் என்று ஒருவாறு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு வேறு வேலைகளைப் பார்க்க ஆரம்பிப்பேன். இருபதும் வரும்... அதைப்போலவே அழைப்பும் வரும்.
“என்னண்ணே இந்த இதழுக்கு ரெடி பண்ணியாச்சா?” என்று. காலையில் இருந்து இரவு வரைக்கும் நண்பர்களோடு மயிர் பிளக்கும் விவாதங்களை நடத்திக் கொண்டிருந்தாலும் எதை எழுதுவது என்பது மட்டும் பிடிபடாது. நீங்கள் வாழாவெட்டிகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சம்சாரபந்தத்தில் இருந்தாலும் ஆளுக்கொரு பக்கம் மூஞ்சியைத் திருப்பி கொண்டு வாழாமல் வெட்டியாய் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அப்படி நான் ஒரு எழுதாவெட்டி. (கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடியின் மொழிக்கு நான் அளித்திருக்கும் வார்த்தைக் கொடை : ”எழுதாவெட்டி”. இதற்கான காப்பிரைட் இனி நமக்கானது)
சரி எதை எழுதுவது?
அண்ணல் அம்பேத்கருக்கு அப்புறம் வந்து உதித்திருக்கும் ”மேதை” ராகுல்காந்தி காங்கிரசின் துணைத் தலைவராக “தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை” எழுதுவதா?
கன்றினைக் கொன்ற பாவத்திற்காக தவறு செய்தவன் தன் மகனே ஆயினும் தேர்க்காலில் இட்ட மனு நீதிச் சோழனின் மறுவடிவம் ”கம்யூனிஸ்ட்” கருணாநிதி பற்றி எழுதுவதா? இப்படி ஏகப்பட்ட குழப்பம்.
ஆனால் கட்டுரை எழுதுவது ஒன்றும் அவ்வளவு கடினம் கிடையாது. நாம் எதை எழுதத் தீர்மானிக்கிறோம் என்பதில்தான் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். எதை எழுதுவது என்பது தீர்மானம் ஆகி விட்டால் போதும் பிற்பாடு அது பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும். எந்தக் கர்மத்தை எழுதினாலும் படிப்பதற்குத்தான் வாசகர்கள் கிடைத்து இருக்கிறார்களே. வாய்ப்பிருக்கிறது என்பதற்காக லாண்டரிக் கணக்கை எழுதிய எழுத்தாளர்களும் இருந்திருக்கிறார்கள்.. நாய்க்கு பிஸ்கெட் வாங்கும் விவகாரங்களை விலாவாரியாக சிலாகிக்கும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். தொலைதூரத்தில் காத்திருக்கும் தன் துணையைப் பார்க்கப் போவதற்குக்கூட கையில் காசில்லாத துயரத்தில் ஒவ்வொரு மாதமும் தவணை சொல்லி வாழ்ந்த புதுமைப்பித்தனைப் போல எழுத்தாளர்களும் இருந்திருக்கிறார்கள். இதில் நாம் எந்த வகை என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
”மிகுந்த பிரசவவலியோடு எனது படைப்பை உங்கள் முன் வைக்கிறேன்” என்கிற வகையறாக்களைப் பார்க்கும்போது எனக்கு சிரிப்புத்தான் வரும். நான் பிரசவவலியோடு எழுதுகிறேனோ இல்லையோ.. ஆனால் என்னிடம் ஒரு கட்டுரை வாங்குவதற்குள் பத்திரிகையாளர்களுக்கு பிரசவவலி கண்டுவிடும் என்பது மட்டும் நிச்சயம். அம்புட்டு சுறுசுறுப்பு. எழுத வேண்டும் என்றாலே வார விடுமுறை முடிந்து ஸ்கூலுக்குப் போகும் மனநிலை வந்துவிடும்.
கடந்த வாரம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் என்னோடு விவாதத்தில் கலந்து கொண்ட எழுத்தாளர் கவலையோடு சொன்னார்... ஒரு மகத்தான எழுத்தாளர் ஒருவருடைய புத்தகம் வெளிவந்து பதினைந்து ஆண்டுகளாகியும் இன்னும் விற்றுத்தீராமல் கட்டி வைக்கப்பட்டிருப்பதாக கொஞ்சம் ஆச்சர்யம்தான் எனக்கு. மக்களுக்கும் எழுத்தாளர்களுக்குமான இடைவெளி இருக்க இருக்க இவை தவிர்க்கமுடியாதவை.
இந்தமுறை எதைத்தான் எழுதுவது? போனவாரம் போன புத்தகக் கண்காட்சி பற்றி எழுதலாம் என்றால் ஏறக்குறைய அதைப்பற்றி எழுபது முறை எழுதியாயிற்று. கூடங்குளம் பற்றி? அதுவும் ஆயிற்று... சில்லறை வர்த்தகம்... அதுவும் ஆயிற்று... வேண்டுமானால் ஒன்று செய்யலாம்.. கட்டுரை எழுதாமல் டிமிக்கி கொடுப்பது எப்படி? என்று வேண்டுமானால் ஒரு கட்டுரை எழுதலாம்... என்ன சொல்றீங்க பிரதர்?
அப்பாடக்கர் ஆலோசனை:
நம்ம ஒலகநாயகன் படம் ரிலீசுக்குப் பின்னாடி நூறு நாள் ஓடுதோ இல்லையோ... ஆனா ரிலீசுக்கு முன்னாடி இருநூறு நாள் ஓடீருது. மொழிப்போரில் தங்கள் இன்னுயிரை மாய்ச்சுகிட்டவங்க தினம்... ஈழத்தின் இனப்படுகொலையைத் தாங்க மாட்டாது தன்னைத் தானே தீய்த்துக் கொண்ட தம்பி முத்துக்குமாரின் தினம்... தொடரும் சாதிய வெறியின் உச்சம்... கரண்ட்டு கட்டு.... என சகலத்தையும் பின்னுக்குத் தள்ளீட்டு முன்னாடி நீட்டிகிட்டு நிக்குது கமலோட விஸ்வரூப சமாச்சாரம். இப்படி ஒன்ன எடுத்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வெச்ச மாதிரி நாளைக்கு கிறிஸ்தவர்களைக் கிண்டல் பண்ணி ஒரு படத்த உட்டா ஒலகமே பேசும்.. அவ்வளவு ஏன் ஒபாமாவே பேசுவாரு. ஆனா அதப்பண்ண மாட்டாரு ஆழ்வார்பேட்டை அநாதரட்சகன். ஏன்னா போட்டிருக்கிற ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தம் பாழாப் போயிடும். அதனால் அன்னாரது சமூகத்துக்கு தெண்டனிட்டு சமர்ப்பிக்கும் விண்ணப்பம் யாதெனில், இந்த மெமரிலாஸ்... அம்னீஷியா.. ன்னு வர்ற எத்தனையோ படங்க மத்தீல Narcissistic Personality Disorder பத்தி ஒரு படத்த எடுத்து உடுங்க. ஏன்னா “நார்சிசம்” பத்தி எடுக்கறதுக்கான சகல தகுதியும் திறமையும் உள்ள ஒரே ஆள் நீங்கதான். அடுத்த ரவுண்ட ஆரம்பீங்க ராசா.