எப்படி இவ்ளோ சந்தோஷம் ?

Published on

மருத்துவமனையில் பல்வேறுபட்ட நபர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவம் இது திருமணமான ஒரே வாரத்தில் கட்டிய தாலி ஈரம் காய்வதற்குள் அந்த தம்பதியினரின் வாழ்வில் விதி விளையாடிவிட்டது. இரு சக்கர வாகனத்தில் மனைவியை பின்னால் வைத்து ஓட்டி வந்த கணவன் வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்குவதற்குள் ஏதோவொரு லாரி மோதிவிட்டது. மனைவி அடிபடாமல் தப்பித்தார். கணவனுக்கு பலமான அடி. மருத்துவமனையில் சேர்த்தார். சுயநினைவே போய்விட்டது. கோமா நிலையில் இருந்து அவர் வெளிவரவில்லை. முதல் ஒரு வாரம் ஏராளமான உறவினர்கள், நண்பர்கள் கூட்டம் மருத்துவமனையை மொய்த்தது. நாளாக நாளாக கூட்டம் வடிந்து, கடைசியில் மனைவி மட்டும் எஞ்சி, கணவனைப் பார்த்துக்கொண்டார். கணவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அந்தப் பக்கமாகச் செல்லும்போதெல்லாம் எப்படி இருக்கிறார் என்று கேட்பேன். ஒவ்வொருமுறையும் அந்தப் பெண் மலர்ச்சியான முகத்துடன் எனக்குப் பதிலளிப்பார்:

“ சார், நல்லா இருக்கு சார். முன்னாடி இருந்ததை விட இப்ப நல்லா இருக்கார். கண்ணெல்லாம் அசையுது சார்”

ஆனால் எந்த முன்னேற்றமும் இன்றி அந்த இளைஞன் காய்கறிபோல் ஆகிவிட்டான். அவனை சக்கர நாற்காலியில் வீட்டுக்குக் கொண்டுபோனார்கள். இன்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த பெண் தன் கணவனை பரிசோதனைகளுக்காக இங்கே கொண்டுவந்துகொண்டிருக்கிறார். ஒவ்வொருமுறையும் என்னை வந்து பார்ப்பார். அதே மலர்ச்சியான முகம். அதே சந்தோஷமான பதில்!

அவரிடம் இருக்கும் மகிழ்ச்சி எங்கிருந்து வந்தது? மகிழ்ச்சி என்றைக்குமே வெளியில் இருந்து வருவதில்லை. நம் மனதுக்குள் இருந்துதான் வருகிறது. என்ன பிரச்னையாக இருந்தாலும்கூட, எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் வெளியிலிருந்து எதுவும் நடப்பதில்லை. எல்லாம் நமக்குள்ளிருந்துதான் வருகிறது. கணவன் எவ்வளவு நோய்வாய்ப்பட்டிருந்தாலும் அந்த பெண் புன்னகைப்பதற்கு அவர் மனசுக்குள் இருக்கும் நம்பிக்கை தரும் மலர்ச்சிதான் காரணம்.

பொதுவாக நமக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறது? தொலைக்காட்சி வாங்கிக் கொடுத்தால் மகிழ்ச்சி வந்துவிடுமா? வரும் எனில் அது அந்த தொலைக்காட்சியிலிருந்து வருவதில்லை. மனசுக்குள் இருந்துவருகிறது. சினிமா பார்த்தால் மகிழ்ச்சியா? ம்ஹும். சினிமா என்பது ஒரு சாதனமே. உங்கள் உள்ளமே மகிழ்ச்சியைத் தருகிறது. எனவே சந்தோஷம் வெளியில் இல்லை என்று பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

நல்லா இருக்கீங்களா என்று கேட்டால் எத்தனைபேர் நல்லா இருக்கேன் என்று சொல்கிறோம்? நூறுக்கு தொண்ணூறுபேர் ..ஏதோ இருக்கேங்க என்று சொல்கிறோம். இத்தனைக்கும் நல்ல வசதி இருந்தும் கூட மகிழ்ச்சி இல்லை. ஏன்?

இங்கே ஒரு சின்ன சம்பவம். ஒரு பெரிய தொழிலதிபர் இருந்தார். அவருக்கு அந்த ஆண்டு வருமானத்தில் சில கோடிகள் வீழ்ச்சி. கவனியுங்கள். நஷ்டம் இல்லை. பத்து கோடி வருமானம் வரும் இடத்தில் நாலு கோடி குறைந்துவிட்டது. அவருக்குத் தாங்கமுடியவில்லை. தான் தோல்வியுற்றதாக நினைத்து துன்புற்றார். ஒரு கட்டத்தில் தற்கொலை எண்ணம் வந்துவிட்டது. காரை எடுத்துக்கொண்டு செத்துவிடலாம் என மலை உச்சியை நோக்கிச் சென்றார். வழியில் ஒரு நட்சத்திர உணவகத்தில் வாகனத்தை நிறுத்தினார். உள்ளே போய் அமர்ந்தார். அங்கே முகமெல்லாம் சிரிப்பாக சக்கர நாற்காலியில் சுற்றிக்கொண்டிருந்தவரைக் கண்டார். அவரது கால்கள் சூம்பி இருந்தன. முகமும் அவலட்சணமாக இருந்தது. ஆனாலும அவரிடம் காணப்பட்டது கண்டதும் தொற்றிக்கொள்ளும் சந்தோஷம். அவர் அங்கங்கே இருக்கும் பூக்களை மாற்றிவிட்டு புதிய பூக்களை வைக்கும் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். பணியாளர்கள் எல்லோரும் அவரிடம் அன்பாகப் பேசினார்கள். நம் தொழிலதிபர் மெல்ல எழுந்துபோய், ‘அய்யா.. இவ்வளவு சந்தோஷம் உங்களுக்கு எப்படி வந்தது?’ என்றார்.

‘கொஞ்சம் என் சக்கர நாற்காலியை அந்த பூங்கொத்து இருக்கும் இடத்துக்குத் தள்ளி வருகிறீர்களா?  சொல்கிறேன்”

தொழிலதிபர் தள்ளிக்கொண்டு போனார். அங்கிருந்த பூவை மாற்றி புதியதை வைத்துவிட்டு அந்த பூக்களைப் போல வெளிச்சத்துடன் சிரித்த அந்த மனிதர் கூறினார்: “நீங்கள் பெரும் பணக்காரர். நானோ ஓட்டாண்டி. இருப்பினும் என்னுடைய சக்கர நாற்காலியை நீங்கள் தள்ளினீர்கள் அல்லவா? இதைவிட மகிழ்ச்சி அடைய என்ன தேவை எனக்கு?”

(கட்டுரையாளர் சென்னையில் உள்ள  ஒரு மருத்துவமனையின் பொதுமேலாளர்)

மார்ச், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com