என்ன பிரச்னை வந்தாலும் என் கிட்டே வர மறக்காதிங்க

சோ
சோ
Published on

நீங்க போடுற நாடகங்கள் ஏன் எல்லாவற்றையும் கேலி பண்ணுறதோட நின்னுருது?'' - முதல் சந்திப்பிலேயே சற்று வெப்பமான படி தான் ஆரம்பித்தது சோ அவர்களுடனான முதல் சந்திப்பு.

கொடைக்கானலில் மலைச்சரிவில் அப்போது அவருக்கு இருந்த வீட்டில் தான் சந்தித்தோம். உடன் அவருடைய நண்பர்கள். வெளியே சில்லென்ற இளம்குளிர்.

அப்போது இருபத்துமூன்று வயதிருக்கும் எனக்கு. இலக்கியப் பரிச்சயம் கொண்ட ஒரு வாசகனாகச் சந்தித்தபோது அவருக்கு எதிராக நான் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக அவருடைய பாணியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். பேசுவதை உற்சாகப்படுத்தினார்.

'' நாற்காலிகள் மட்டுமே உட்கார்ந்து பார்க்குமே.. அந்த நாடகங்கள் தான் உங்களுக்குப் பிடிச்ச நாடகங்களா?''& கேலியுடன்  பேசினார். அவருடைய அரசியலைப் பற்றியும் விமர்சித்தபோது ''எல்லோரும் இந்திராகாந்தியைப் பார்த்துப் பயப்படுறாங்க.. பெரிய கட்அவுட் மாதிரி இந்திரா நிக்கறப்போ நான் எதிர்த்து நின்னு என்னுடைய ஸ்டைலில் விமர்சனம் பண்றேன்ல.. அதை ஏன் பார்க்க மாட்டேங்கிறீங்க?''& என்றார் கனிவானபடி.

பேச்சு அரசியல், இலக்கியம், நாடகம் என்று நகர்ந்தபோது ஒருமணி நேரத்திற்கு மேல் ஆகியிருந்தது. அவரை விமர்சனம் பண்ணிப்பேசிய நிலையிலும் வெளிப்படையான விமர்சனத்தை ஆதரித்தார். ''முதல் சந்திப்பு மாதிரியே இல்லை.. எழுதுங்க.. பேச்சில் காட்டுற வேகத்தை எழுத்துக்குக் கொண்டு வாங்க,'' என்றார் புன்சிரிப்புடன்.

விடைபெறும்போது  பேச்சு வாக்கில் '' யாரையும் விட நான் உயர்ந்தவன் கிடையாது. அதே சமயம் யாரையும் விட நான் தாழ்ந்தவன் இல்லைங்கிறது இயல்பாக இருக்கு!'' என்று சொன்னதும் பலமாகச் சிரித்தார். ''இது தான் செல்ஃப் ரெஸ்பெக்ட். கீப் இட் அப்''

அடுத்த சில மாதங்களில் மதுரையிலுள்ள பொறியில் கல்லூரியில் இரண்டு மாணவர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தபோது துக்ளக்கிற்கு அனுப்பச் சொன்னார்கள். எழுதி முதல் கட்டுரை வெளிவந்தது.

அடுத்தடுத்து பல கட்டுரைகள். சோ&வுடன் பல சந்திப்புகள். மதுரையிலிருந்து
சென்னைக்கு வந்து பிரபஞ்சனும் நானும் தொடர்ந்து இரண்டு பத்திரிகைகளில் பணியாற்றியும் பத்திரிகை வெளிவரவில்லை.

சோர்ந்து போயிருந்த நேரத்தில் துக்ளக் அலுவலகத்திற்கு அழைத்துப் பேசினார் சோ. '' மதுரையிலிருந்து எங்களுக்கு ஒர்க் பண்ணுங்க.''

நிறைய சமூகப் பிரச்னைகளைப் பற்றிய கட்டுரைகள் வெளியாயின. இலங்கைப்பிரச்னையில் அவருடன் நேர் எதிரான கருத்தில் இருந்தேன். பாலகுமார் போன்றவர்களுடன் எனக்கு நட்பிருந்தது.

தென் தமிழகத்தில் அகதிகள் முகாம் ஒன்றிற்கு துக்ளக் நிருபராக நான் போனபோது கடுமையான தாக்குதலைச் சந்திக்க வேண்டியிருந்தது. பத்திரிகையின் பெயரைச் சொன்னதும் தாக்கப்பட்டு ஓர் அறையில் தள்ளப் பட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து வேறு சில அதிகாரிகள் வந்தபிறகு விடுவிக்கப்பட்டு சோ&விடம் பேசினேன். தாக்கப்பட்டதைச் சொன்னதும் பதற்றமானார். உடனே காவல்துறையில் இருந்த உயர் அதிகாரிக்குத் தகவல் சொல்லி என்னைப் புகார் கொடுக்கச் சொன்னார். மறுத்துவிட்டேன். ''உங்க மேல் அவர்களுக்கு இருக்கிற எதிர்ப்புணர்வை நேரடியாக என்னிடம் காட்டிவிட்டார்கள். விட்டுருங்க சார்''&
என்றேன். ஆனால் தாக்குதல் நடத்தியதை அவரால் ஏற்கமுடியவில்லை.

சில பிரச்னைகளில் அவருடைய கருத்துக்கு நேர் எதிரான பார்வையோடு நான் எழுதியபோதும் அதைப் பிரசுரிக்க அவர் மறுத்ததில்லை, அத்வானி ஏக்தா யாத்ராவை கன்னியாகுமரியில் துவக்கியபோது அந்த விழாவில் கலந்து கொண்டு துக்ளக்கில் எழுதினார் சோ. அதே இதழில் அத்வானியின் யாத்ராவில் கூடவே பயணம் செய்து விமர்சித்து எழுதியபோது மாற்றப்படாமல் வெளிவந்தது அந்தக் கட்டுரை.

எம். ஜி. ஆர் உடன் சோ
எம். ஜி. ஆர் உடன் சோபடம் உதவி : ஞானம்

கூடங்குளம் அணுமின்நிலையத்தைத் துவக்குவதற்கான முயற்சிகள் நடந்தபோது அவருக்கு உடன்பாடு இல்லை என்றாலும் போய் எழுதச்
சொன்னார். கூடங்குளம் போய்விட்டு மதுரைக்குத் திரும்பியபோது சில மணி நேரங்களுக்கு முன்னால் என்னுடைய தந்தை உயிரிழந்திருந்தார். உடனே அழைத்துப் பேசி வருத்தம் தெரிவித்தார் சோ.

இறந்த மறுநாளே கூடங்குளம் குறித்த கட்டுரையை ஏதோ ஒரு வேகத்தோடு எழுதி அனுப்பியபோது தொலைபேசியில் அழைத்து என்னிடம் உரிமையுடன் 'இதற்கிடையில் எழுதி அனுப்பணுமா? என்ன
அவசரம்?' என்று கடிந்து கொண்டார்.

துக்ளக்கில் அடுத்தவாரம் கூடங்குளம் பற்றி அவருடைய பார்வையில் அணுஉலையை வரவேற்று சோ எழுதிய கட்டுரையும், அணுஉலை அமைப்பதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையும் ஒரே இதழில் வெளியாகியிருந்தன.

சில கட்டுரைகளுக்காகக் கூடுதல் உழைப்பிருந்தால் வெகு சிக்கனமான வார்த்தைகளில் பாராட்டுவார். 'தமிழகம் &பிரச்னைக்குரிய முகங்கள்' என்ற என்னுடைய முதல் புத்தகத்தை வெளியிடுவது குறித்து அவரிடம் சொல்லி முன்னுரை கேட்டபோது கிண்டலும், கேலியும் கலந்த பாராட்டுணர்வுடன் முன்னுரை எழுதிக் கொடுத்தார்.

தனியாக விழா நடத்த வேண்டாம் என்றவர் 'துக்ளக்' ஆண்டுவிழாவிலேயே புத்தகத்தை வெளியிட்டு விடலாம் என்று மேடையில் அவருடைய பாணியில் கிண்டல் பண்ணியபடி நூலை வெளியிட்டார் சோ. அதைப் பெற்றுக் கொண்டவர் கலைவாணருக்கு நெருங்கியவரும், எழுத்தாளருமான பரந்தாமன் என்ற நாராயணன்.

துக்ளக்கில் பதின்மூன்று ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் அதை விட்டு விலகி இன்னொரு பத்திரிகையில் சேருவதற்கு முன் சோ&வைச் சந்தித்தபோது வாழ்த்துச் சொல்லிவிட்டு மென்சிரிப்புடன் சொன்னார்:

''எதையும் நேரடியாச் சொல்லிடுற பழக்கம் உங்க கிட்டே இருக்கு.. அதை எப்படி மத்தவங்க எடுத்துப்பாங்கன்னு தெரியலை, என்ன பிரச்னை வந்தாலும் என் கிட்டே வர மறக்காதீங்க.. என்ன?''

வார இதழில் சேர்ந்து அடுத்தடுத்து சில பத்திரிகைகளில் உயர்பொறுப்புக்கு வந்தபோது சந்தோஷப்பட்டார். அதே பத்திரிகையிலிருந்து நான் விலகியது தெரிந்ததும் வரச்சொன்னார்.

காலை நேரத்தில் துக்ளக் அலுவலகம். அவருடைய அறைக்குப் போனதும் என்னிடம் கோபப்பட்டார். அமைதியாக இருந்தேன். உதட்டைக்கடித்தபடி பேசினார். ''என்னமோ எனக்கு நீங்க விலகினது பிடிக்கலை.. விலகியாச்சு. இனி என்ன பண்ணப் போறீங்க? நல்ல பொறுப்பிலே வேற அங்கே இருந்துட்டீங்க..சரி.. உங்களுக்காக இன்னொரு பத்திரிகையோடு நான் பேசுறேன்'' என்றவர் மறுநாள் வரச்சொன்னார்.

போயிருந்தேன். கோபம் கூடியிருந்தது அவருடைய முகத்தில். ''பாருங்க.. உங்களுக்காகப் பேசிப் பார்த்துட்டேன். உங்க எழுத்தைப்பற்றி அவர்களுக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனா எதுக்கு ஊர்லே இருக்கிற ஆட்களை எல்லாம் அந்த நிறுவனத்திலே சேர்த்துவிட்டுட்டு திரிஞ்சீங்க.. இப்போ பாருங்க,அது தான் உங்களுக்குப் பிரச்சினையா இருக்கு.. அவங்க நிறுவனத்திலே இருக்கிற சிலர் வேலைக்காக உங்களோட பேசினது தெரிஞ்சு உங்களை இப்போ வேண்டாம்னு சொல்றாங்க... ஏன் உங்க வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு உங்களாலே இருக்க முடியலை..சொல்லுங்க. இப்போ. நான் என்ன பண்றது?''

&&& சொல்லிவிட்டு என்னைச் சமாதானப்படுத்த எடுத்துக் கொண்ட இரண்டு மணி நேரக் கனிவும், அன்புமான தருணங்களை நினைக்கும்போது இப்போதும் நெகிழ்வு.

அவருடைய வாழ்வைச் சொல்லும் தொடரை
எழுத்தாகப் பதிவு பண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் அவரைத்தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருந்தேன். மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருந்தபோதும் வரச்சொல்லிச் சந்தித்திருக்கிறோம்.

ஒருமுறை அவருடைய செல்போனிலிருந்து மிஸ்டுகால்கள் அடுத்தடுத்து வந்திருந்தன. பேசியபோது அவரால் பேச முடியவில்லை.

நேரே மருத்துவமனைக்குப் போயிருந்தேன். ஐ.சி.யூ.வில் மூக்கில் டியூப்கள் இணைக்கப்பட்டிருந்தன. பேச இயலாத நிலைக்குப் போயிருந்தார்.

உள்ளே போனதும் அந்த நிலையிலும் புன்சிரிப்பு.

''என்ன சார்..மிஸ்டு கால் கொடுத்திருக்கீங்க?'' கேட்டதும் அருகில் சிலேட்டைப் போல வைத்திருந்த வெள்ளை போர்டில் மார்க்கர் பேனாவால் குறும்புடன் எழுதிக் காண்பித்துச் சிரித்தார்.

''மிஸ்டுகால் கொடுத்தால் உடனே வாங்கன்னு அர்த்தம்!''

ஜூலை, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com