எனக்கு அடையாளம் இதோ இந்தக் குரல் தான்!

மறக்காத முகங்கள் : தங்கவேலு
எனக்கு அடையாளம் இதோ இந்தக் குரல் தான்!
Published on

தம்பீ.. சாப்பிடுங்க''

‘‘ இல்லைங்க.. நான் சாப்பிட்டுத் தான் வந்தேன்''

‘‘ அட.. இதைப் பாரு.. தங்கவேலு வீட்டுக்கு வர்றவங்க பட்டினியாவா வருவாங்க..

சாப்பிட்டுட்டுத் தான் வருவாங்க.. இருந்தாலும் இங்கே கொஞ்சம் சாப்பிடலாம்.. சாப்பிடுங்க..

சாப்பிட யோசிக்காதீங்க.. என்ன?''

-எண்பதுகளின் துவக்கத்தில்  சென்னை தியாகராய நகரில் ராஜாபாதர் தெருவில் இருந்த பெரிய வீட்டுக்குள் நுழைந்ததுமே இப்படி ‘டணால்' குரலில் வரவேற்றார் தங்கவேலு.

இயல்பாக ஒரு சட்டை, லுங்கியுடன் கேஷூவலாக இருந்தவரைப் பேட்டி காணப் போகும் போது ‘‘தம்பி.. இப்போ ராவு காலமா இருக்கு.. இன்னும் அரைமணி நேரம் இருக்கு.. அப்படியே சின்னதா ஒரு ரவுண்ட் நடை நடந்துட்டு வீட்டுக்குள் வாங்களேன்.. வந்து ஆரம்பிச்சுறலாம்'' என்று சொல்லியிருந்தார் அதற்கு அரை மணி நேரத்திற்கு முன்.

அதன்படியே வந்த பிறகு தான் இந்த உபசரிப்பு.

காரைக்காலில் தன்னுடைய பால்ய காலத்து வாழ்க்கையைச் சொல்லிக் கொண்டு போனவர் பத்து வயதில் பாய்ஸ் கம்பெனி நாடகங்களில் நடிப்பதை விலாவாரியாக விவரித்தவர் சற்று நிறுத்தினார்.

‘' தம்பி.. நான் சொல்றதை நீங்க சரியா எழுதியிருக்கீங்களான்னு அப்பப்போ பார்த்துக்கணும்.. எங்கே.. நீங்க எழுதியிருக்கிறதை என் காதுபட வாசீங்க..பார்ப்போம்''& சொன்னதும் பள்ளிக்கூட நினைவு வந்தது.

வாசித்த பிறகே பேட்டியைத் தொடர்ந்தார். குரலில் ஏகப்பட்ட நெளிவு சுளிவு தெரிந்தது. அரிதாரம் பூசிய அனுபவத்தைச் சொன்னது அவருடைய முகம்."

‘ என்னை வாழ வைச்சவர் கலைவாணர் தாங்க. நான் மட்டுமில்லை. என்னை மாதிரி பல நாடகக் கலைஞர்களை நடிக்க வைச்சு, சினிமாவுக்குக் கூட்டியாந்தவரும் அவர் தான்.. அவரோட படத்திலே நடிக்க வாய்ப்புக் கிடைச்சது பாக்கியம்'' என்றவர் கலைவாணர் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வை ரசனையோடு சொன்னார்."

‘ வில்லுப்பாட்டு நடத்துறதுலே கலைவாணருக்கு நிகர் அவர் தான் ஒரு சமயம் காந்தியை பற்றி ஒரு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி. கலைவாணருடன்

சின்னதாக அவரோட குழுவினர் உட்கார்ந்திருக்காங்க. கூடவே பின்பாட்டு பாடிக்கிட்டிருந்தவருக்கு

அடுத்தவரி மறந்து போச்சு.

‘'காந்தி உப்பெடுத்தார்.. உப்பெடுத்தார்ன்னு சொல்லிக்கிட்டே இருக்கார்.. ஜனங்களும் பொறுமையாக் கேட்டுக்கிட்டிருக்காங்க. பார்த்தார் கலைவாணர்.

இடையில் புகுந்தார்.

‘‘ நீங்க எல்லோரும் இதோ பாடுறவரு அடுத்தவரியை மறந்துட்டாரா? அதனால் தான் ஒரே வரியைத் திரும்பத் திரும்ப பாடுறார்''ன்னு நினைச்சிருப்பீங்க.. அது தான் இல்லை. காந்தியடிகள் உப்பெடுத்தார்ன்னா ஒரு தடவையா குனிஞ்சு உப்பெடுத்தார்.. எத்தனை தடவை குனிஞ்சு உப்பெடுத்திருப்பார்.. அதனால் தான் இவரும் அப்படிப் பாடியிருக்கார்.. பாருங்கன்னு சாமாளிச்சுருக்கார் பாருங்க.. சக கலைஞனை எந்த விதத்திலும் விட்டுக் கொடுக்காத அந்த அபூர்வமான குணம் யாருக்குங்க வாய்க்கும்? அவர் வாழ்ந்து எத்தனையோ விஷயங்களை எங்களுக்கு அமைதியாச் சொல்லிட்டுப் போயிருக்கார்..'' என்றவர் திரைத்துறையில் சேர்த்த பணத்தை வீடுகளில் பாதுகாப்பாக முதலீடு பண்ணியதை நினைவுகூர்ந்தார்.

பேசும்போது ஹாலின் குறுக்கே கடந்து போனார் எம்.சரோஜா. அவரை அறிமுகப்படுத்திவிட்டுச் சொன்னார். ‘‘ இவங்களோட அத்தனை படங்கள்லே ஜோடி சேர்ந்து நடிச்சாச்சு..சேர்ந்து வாழ்றதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும். அது எனக்குக் கிடைச்சிருக்கு.. காமெடி நடிகருங்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை இருக்கும்.. எனக்கு அடையாளம் இதோ இந்தக் குரல். குரலைக் கச்சிதமா ஏற்ற இறக்கம் கொடுத்துப் பேசுவேன். அது எடுப்பட்டுருச்சு.. ‘டணால்'ன்னு என் பெயர் கூட ஒட்ட வைச்சிருச்சு.''

‘‘அடுத்தவீட்டுப் பெண்'' படத்தில் தனக்காக ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே' பாடலைப் பாடிய பி.பி.ஸ்ரீனிவாஸின் மென்குரலை, தன் குரலைப் பிரதியெடுத்ததைப் போலப் பாடிய கிருஷ்ணனை, தனக்குத் தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ஸ்ரீதர் என்று பலரைப் பாராட்டிச் சொன்னவர் சட்டென்று சொன்னார்.

‘‘ பத்து வயசிலிருந்து நாடகத்திலும், சினிமாவிலும் நடிச்சிக்கிட்டிருக்கேன். யாரையும் திட்டி எதுவும் பேச மாட்டேன்.எந்த வாக்கு பலிக்கும்னு நமக்குத் தெரியாது இல்லையா? ஆபாசமான எந்த வார்த்தையைப் பேசச் சொன்னாலும் பேச மாட்டேன். மறுத்துருவேன். அப்படிச் சம்பாதிச்சு நாம நம்ம வயித்தை வளர்க்கணுமா? சொல்லுங்க..''

அடுத்து அவர் சொன்னதை லேசில் மறக்க முடியவில்லை.

‘‘ ஒரு நாடகம் நடக்குது. அதில் மூத்த நடிகர் ஒருத்தர் நடிச்சிக்கிட்டிருக்கார். அவரோட குழுவில் இன்னொரு நடிகருக்கு லட்சணமான முகம். அதிலும் அரிதாரம் பூசிட்டா தெய்வக் கடாட்சம் பொருந்தினது மாதிரி இருக்கு. அவர் மேடைக்குப் போனா ஜனங்க கையெடுத்துக் கும்பிடுறாங்க.. அந்த அளவுக்கு அவர் மேலே ஈர்ப்பு.

நாடகம் முடியுற நேரம். மூத்த நடிகர் பொறுமையா அந்த நடிகருக்குக் கிடைச்ச வரவேற்பை எல்லாம் பார்த்துக்கிட்டிருந்தார். நாடகம் முடிஞ்சதும் மேக்கப் கலைக்கப் போன அந்த நடிகர் மூகத்திலே ஆசிட்டை ஊத்தினார் பாருங்க.. அந்த நடிகர் துடிச்சுக் கீழே விழுந்து புரண்டு தவிச்சுப் போயிட்டார்.. அவரோட அழகான முகம் கோரமாப் போச்சு.. அந்த மாதிரி நடிகர்களும் இதே துறையில் இருந்திருக்காங்க தம்பீ.. யாரா இருந்தாலும், எந்த உயரத்துக்குப் போனாலும், அவனும் வாழணும்.. மத்தவனையும் வாழ விடணும்..''& சொல்லிவிட்டுச் சலிப்பேறிய முகத்துடன் மௌனமாக அமர்ந்திருந்தவர் பேசிக் கொண்டிருந்த சப்ஜெக்ட்டை மாற்றினார்.

நாடகம் முடியுற நேரம். மூத்த நடிகர் பொறுமையா அந்த நடிகருக்குக் கிடைச்ச வரவேற்பை எல்லாம் பார்த்துக்கிட்டிருந்தார். நாடகம் முடிஞ்சதும் மேக்கப் கலைக்கப் போன அந்த நடிகர் மூகத்திலே ஆசிட்டை ஊத்தினார் பாருங்க.. அந்த நடிகர் துடிச்சுக் கீழே விழுந்து புரண்டு தவிச்சுப் போயிட்டார்.. அவரோட அழகான முகம் கோரமாப் போச்சு.. அந்த மாதிரி நடிகர்களும் இதே துறையில் இருந்திருக்காங்க தம்பீ.. யாரா இருந்தாலும், எந்த உயரத்துக்குப் போனாலும், அவனும் வாழணும்.. மத்தவனையும் வாழ விடணும்..' சொல்லிவிட்டுச் சலிப்பேறிய முகத்துடன் மௌனமாக அமர்ந்திருந்தவர் பேசிக் கொண்டிருந்த சப்ஜெக்ட்டை மாற்றினார்.

தன்னுடைய வீட்டில் நவராத்திரி தோறும் விடியவிடிய பிரபல பாடகர்களை வைத்துக் கச்சேரி நடத்திவருவதைப் பெருமிதத்துடன் சொன்னார். ஒரு பாடகர் பத்து மணி நேரத்திற்கு மேல் பாடியதைப் பூரிப்புடன் விவரிக்கும்போது முகத்தில் அலாதியான பூரிப்பு.

‘‘ இன்னும் சினிமாலே இருக்கிற பல நடிகர்களைப் பத்திச் சரியா யாருக்கும் தெரியலை.. இங்கே தி.நகர்லே தான் ‘அய்யா தெரியாதய்யா' ராமராவ் இருக்காரு.. அவரைப் போய் ஒரு நாளைக்குப் பார்த்துட்டு எழுதுங்களேன்.. நம்ம முகரை மட்டுமே வரணும்னு நான் நினைக்கக் கூடாது இல்லையா? சரி தானேப்பா! இங்கே பக்கத்துலே வாப்பா. அட கூச்சப்படாம வா... நீ நல்லாயிருக்கணும்ப்பா..''' என்று தலையில் உள்ளங்கையை வைத்து வாழ்த்திச் சிரித்த அந்தக் கணம் மெல்லிய கனத்தோடு ஞாபகத்தில் பதிந்திருக்கிறது.

டிசம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com