எது உண்மையான படைப்போ அது காலத்தில் நிற்கும்!

எது உண்மையான படைப்போ அது காலத்தில் நிற்கும்!
Published on

இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது சோ.தர்மன் எழுதிய ‘சூல்' நாவலுக்கு கிடைத்திருக்கிறது. கோவில்பட்டியைச் சேர்ந்த அவருக்கு வாழ்த்துச் சொல்லிப் பேசினோம்.

“சூல் நாவலில் எல்லா சாதிக்காரர்களும் பாத்திரமாக படைக்கப்பட்டுள்ளார்கள்.  இந்த நாவலில் நகைச்சுவை கொட்டிகிடக்கிறது. கிராமத்து மக்களிடம் இயற்கையாகவே நகைச்சுவை ததும்பும்.  அவர்களால் நகைச்சுவை உணர்வு இல்லாமல் பேசமுடியாது. சூல் நாவலிலும் கேலி, கிண்டல்,, பகடி எல்லாவற்றையும் எடுத்துவந்து வடித்து வைத்திருக்கிறேன்,'' என்கிறார் தர்மன்.  பொதுவாக அவர் ஒரு நாவல் எழுதி முடிக்க பத்து ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். 1996 -இல் தூர்வை. 2005 -இல் கூகை, 2016 -இல் சூல். சூல் நாவலின் மையக்கரு நீர் மேலாண்மைக்காக உருவாக்கப்பட்ட கண்மாய்கள் பற்றியதாகும்.

சமீபத்தில் அடையாளம் பதிப்பகம் மூலமாக வெளிவந்திருக்கும் நாவல் ‘13வது மையவாடி.' இந்த நாவலுக்குமே பத்து ஆண்டுகள் உழைத் ததாகக் கூறுகிறார். இவரது தாய்மாமன், எழுத்தாளர் பூமணி. இவருமே அஞ்ஞாடி என்ற நாவலுக்காக 2017&ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். ‘‘உறவுகளுக்கும் விருதுக்கும் சம்பந்தம் கிடையாது. தகுதியான படைப்புக்குத்தான் கொடுக்கிறார்கள். பூமணி என்னுடைய அம்மாவோடு உடன்பிறந்தவர். எங்க அம்மாதான் குடும்பத்தில் மூத்தவள். அவர்களோடு சேர்த்து மொத்தம் 5 பெண்கள் 2 ஆண்கள். இதில் ஒவ்வொரு வீட்டிலும் ஆறு ஆறு பிள்ளைகள் இருக்கிறார்கள். இதனால் பூமணிக்கு  24 மருமக்கமார்கள் இருக்கிறோம் இந்த 24 மருமக்கமார்களில் நான் ஒருவன்தான் கொஞ்சம் அவர் முன்னாடி போய் நின்று பேசுவேன்.. மற்றவர்கள் அவர் முன்னாடிகூட நிற்க மாட்டார்கள், அவ்வளவு மரியாதை. அவர் தெருவில் வரும் போது பீடி குடித்துக்கொண்டிருந்தால் தூர எறிந்துவிடுவார்கள். மது குடித்துக்கொண்டிருந்தால் ஊரைவிட்டே ஓடி விடுவார்கள். பேரன்மார்களும் கண்ணில் படமாட்டார்கள். எங்க பழக்கம் அப்படி. தற்போது குடும்பங்களில் இந்த மரியாதையான பழக்கம் காணாமல் போய்விட்டது. அதற்கு காரணம் வாழ்வியல் முறையில் மாற்றம் நிகழ்ந்ததுதான். முன்னாடி விவசாயம் வாழ்வியல் முறையாக இருந்தது. பிறகு தொழிலாக மாறியது அப்புறம் தொழிற்சாலை வந்தது. அதற்கு தகுந்தாற்போல் மக்களின் குணமும் மாறியது. தற்போது தொழிற் சாலை மறைந்து தனிமனிதர்களின் மூளை வேலை செய்கிறது. அதற்கு ஏற்றாற்போல் வாழ்க்கை மாறுகிறது. இப்படி மாறிக்கொண்டே இருப்பது நமது உறவுமுறைகளையும் பாதிக்கிறது,'' என்று மண் வாசனையுடன் ஆதங்கப்படுகிறார்.

‘‘தலித் இலக்கியம் என்ற குரலே கிடையாது; அது ஒருவகையான நுண்அரசியல். என்னை தலித் எழுத்தாளர் என்று சொன்னால், மற்றவர்களை எந்த சாதி எழுத்தாளர் என்று சொல்லவேண்டும்?  நீங்களே சொல்லுங்கள். தலித் இலக்கியம் என்று

சொல்லிவிட்டால், யாரும் வாசிக்கவேண்டாம் அதில் ஒரு வசதி இருக்கிறது. அவர்களின் பிரச்னைகளை எழுதியிருப்பார்கள். நாம எதற்கு அதை படிக்கணும் என்று எளிதாக தவிர்த்து விடலாம். மேலும் உன்னுடைய பிரச்னையைப் பற்றி மட்டும் எழுது, வேறு எதையும் எழுதாதே என்ற ஒரு அரசியலும் இருக்கு. எது உண்மையான படைப்போ அது காலத்தில் நிற்க போகிறது இதில் வேறொன்றும் சொல்லுவதற்கில்லை'' என்று ஆவேசமும் காட்டுகிறார்.

  1780 - களையொட்டி தென்மாவட்டங்களில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை மையப்படுத்தி ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவல் எழுத அவர் திட்டமிட்டுள்ளார். அதில் நூற்றைம்பது பக்கங்கள் எழுதி  முடித்தும் விட்டார். அவரது வழக்கப்படி பார்த்தால் வெகு காத்திரமாக வர இருக்கும் இந்நாவலை நாம் வாசிக்க பத்து ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்!

ஜனவரி, 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com