எண்டம்மே ஜிமிக்கி கம்மல்...

எண்டம்மே ஜிமிக்கி கம்மல்...
Published on

தமிழர்கள் பலரை மன அழுத்தம் தாங்காமல் தற்கொலையிலிருந்து காப்பாற்றி வருவது இளையராஜாவின் இசை மட்டுமே’ என்று அவருடைய பிறந்த நாளில் யாரோ பதிவிட்டிருந்தார்கள். உண்மைதான்.

இவிங்களுக்கு மத்தியில வாழ்றதே பெரிய               சாதனைதான் என்று சொல்லி நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இசை மட்டுமின்றி நாகேஷ் முதல் கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, சூரி,யோகி பாபு வரை நம் மனதை இலகுவாக் குபவர்களின் பட்டியல் பெரிது. மன அழுத்தம் என்ற வார்த்தையே சில பல ஆண்டுகளாகத்தான் நமக்குத் தெரியும். அதற்கு முன்னால் மன அழுத்தம் இல்லையா அல்லது அதைக் கண்டுபிடிக்கத் தெரியவில்லையா என்பது விடை தெரியாத கேள்வி.

’கூட்டுக் குடும்பமாக சந்தோஷமாக அண்ணன், அக்கா, பாட்டி, தாத்தா என்று வாழ்ந்து கொண்டிருந்தோம். ஆனால் மேலை நாட்டினரைப் பார்த்து அவர்களைப் போலவே வாழவும், வேலை செய்யவும் விருப்பம் கொண்டு நியூக்ளியர் பேமிலியாக ஆகிவிட்டோம். மனம் திறந்து பேச வீட்டில் ஆளில்லை. யாருக்கும் நேரமில்லை. அதனால் மன அழுத் தத்தில் தவிக்கிறோம்’ என்று பிக் பாஸில் கமல் வையாபுரியிடம் சொல்லியிருந்தார். எல்லோருக்கும் அப்படி வாழத் தான் ஆசை இருக்கிறது. ஆனால் யாரும் அதற்குத் தயாராக இல்லை. எப்படி லட்சங்களில் சம்பளம் வாங்குவதற்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டே இரண்டு வேட்டி, ஒரு சட்டையுடன் மறைந்த தலைவரைப் பற்றி உணர்ச்சி பொங்க பேஸ் புக்கில் பதிவிடுகிறோமோ அப்படி. எல்லோரும் பக்கத்து வீட்டுக்காரரைவிட, அலுவலகத்தில் பக்கத்து சீட்காரரைவிட வசதியாக வாழ்வது எப்படி என்று திட்டமிட்டால் மன அழுத்தம் கூடாமல் என்ன செய்யும்?

அன்றைய வாழ்க்கையில் மன அழுத்தத்தை குறைக்க அப்படி என்னதான் இருந்தது?

சினிமா வருவதற்க்கு முன்பு கூட்டம் கூட்டமாக சென்று தெருக்கூத்து பார்த்தார்கள். மேட்டுக் குடியினர் இசைக் கச்சேரி கேட்டார்கள். குலசாமிக்குப் பொங்கல் வைத்தார்கள். திருவிழா கொண்டாடினார்கள். வீடுகளில் தாயம், பல்லாங்குழி,சொக்கட்டான், ஆடு புலி ஆட்டம் என்று வித விதமான விளையாட்டுக்கள் இளைப்பாற இருந்தது. தெருவில் ஓடி ஆடி விளையாட கபடி, கில்லி தண்டா, பச்சக் குதிர, கோலி என்று சொல்லிக் கொண்டே போகலாம். பிராஜக்ட், ரிப்போர்ட், அனலிசிஸ் எல்லாம் இல்லாத வாழ்க்கை. அதனால் ஸ்ட்ரெஸ் இருந்திருக்காது என்பதை தைரியமாக நம்பலாம். அதன் பிறகு சினிமா நம்முடைய பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்துவிட்டது. தனித்தனியாக இசை, நடனம், நாடகம் என்ற எல்லா வடிவத்தையும் விழுங்கிப் பெரும் அரக்கனாக உருவெடுத்து விட்டது.

சினிமா பார்க்கும் அனுபவம் என்பது தியேட்டருக்கு செல்லும் வழியில் மொபைல் போனில் புக் மை ஷோவில் டிக்கெட் எடுத்து, உள்ளே நுழைந்தவுடன் Fdfs Excited என்று ஸ்டேட்டஸ் போடுவதில் இல்லை. மாலைக் காட்சிக்கு மதியமே தயாராகத் தொடங்கி, மாட்டு வண்டிகளில் குடும்ப சகிதமாக இரண்டு மணி நேரம் பயணித்துப் படம் பார்த்து நடுச்  சாமத்தில் வீடு திரும்பிய கதையைப் பாட்டி பல முறை சொல்லக் கேட்டிருக்கிறேன்.

 தியேட்டரில் விளக்கை அணைத்தவுடன் நிகழ் உலகம் நழுவி அகன்று விடுகிறது. பெரும் ஜனத்திரளுடன் வேறொரு புனைவுலகிற்குள் நுழைந்து ஒன்றாகச் சிரித்து, அழுது வேறொரு உலகத்தில் வாழ்கிறோம்; இன்றைய உலகின் கவலைகள் அனைத்தையும் மறந்து.

மன அழுத்தத்திலிருந்து விடுபட சினிமாவை பொழுது போக்குச் சாதனமாகவே நாம் அணுகுகிறோம், கலை வடிவத்திற்கான மரியாதையைக் கொடுப்பதில்லை என்பதற்கான பதிலும் இதற்குள்ளேதான் அடங்கியிருக்கிறது. நல்ல படம், மோசமான படம் என்பதை தாண்டி பொழுதுபோக்கு என்பதற்கான முக்கியத்துவம் நம்மிடம் அதிகமிருக்கிறது. மகாநதி படத்தைத் திரும்பிப் பார்க்க மனம் ஒப்புவதில்லை, ஆனால் வின்னர் படத்தை எத்தனை முறை என்றாலும் சலிப்பில்லாமல் பார்த்துச் சிரித்துக் கொண்டேயிருக்கிறோம்.

கல்லூரியில் மருந்தியல்(Pharmacology)) துறை இறுதித்தேர்வு அன்று. கடைசி நாளில் படித்தால் எப்படி விளங்கும்? தேர்வு எழுதவேண்டாம் என்று முடிவுசெய்து நண்பர்கள் ஐந்து பேர் சினிமாவுக்கு சென்றோம். அந்தப் படம் சோகத்தை ஃபிரேம் ஃபிரேமாகப் பிழிந்தது. படம் முடிந்து வருகையில் ‘இதுக்கு பாடத்தையே படிச்சிருக்கலாம்’ என நண்பர் சொல்ல, சோகத்தை மறந்து குபீரானது ஏரியா ( அரியர் தேர்வன்று அதே படம் டிவியில் வந்து எங்களைத் துரத்தியது தனிக்கதை). நல்ல படமா என்று பார்த்தோமே தவிர படம் மனதைத் திசை திருப்ப உதவுமா என்று யோசிக்கவில்லை.

நாட்டில் மிகப்பெரிய பிரச்னை அல்லது வறுமை நிலவும்போதுதான் சில படங்கள் மிகப் பெரிய வரலாற்று வெற்றியைப் பெருகின்றன என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். மக்கள் தங்களுடைய பிரச்னைகளை மறக்கத் திரை அரங்குகளை நோக்கி படை எடுக்கிறார்கள். அறிவுப்பூர்வமான படங்களோ, கலைப் படங்களோ இங்கு வெற்றியடைவதில்லை.  சாகசப் படங்களே மகிழ்விக்கின்றன. ஜேம்ஸ்பாண்ட் படங்கள், டைட்டானிக், பாகுபலி என்று எண்ணிலடங்கா உதாரணங்கள் உண்டு.

தொழில் நுட்ப வளர்ச்சியில் இன்று மொபைல் போனிலேயே சினிமாவைப் பார்த்துவிடலாம்.         யூட்யூப்பில் மனதுக்குப் பிடித்தமான படத்தையோ பாடலையோ பார்த்து மனதை உற்சாகப்படுத்திக் கொள்ள முடிகிறது. சமூக வலைதளங்களில் இப்படி மேய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாவதை வைரல் வீடியோக்களைக் கொண்டு அறியலாம். சமீபத்திய ஓணம் ஹிட்டான ஜிமிக்கி கம்மல், கொலவெறி ரேஞ்சுக்கு நாடு முழுக்க ஹிட்டடித்திருக்கிறது. ஒரிஜினல் ஜிமிக்கி கம்மலை விட ஷெரில் பிரபலமாகிவிட்டார். திடீரென்று யாருமே எதிர்பார்க்காத வெற்றி இது. மக்களுக்கு இது போன்ற இளைப்பாறல்கள் அதிகம் தேவைப்படும் காலமிது. அம்மாவின் ஜிமிக்கி கம்மலை, அப்பா திருடி விற்று, சரக்கு வாங்க அதை அம்மா குடித்து விட்டார் என்பது பாடலின் அர்த்தமாக தெரியவந்தபோது நினைவிற்கு வந்தவர் எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபா. மலையாளக்கரையோரம் என்ற புத்தகத்தில் தமிழ் பாடல்களையும் மலையாள பாடல்களையும் ஒப்பிட்டு, ‘மலையாளக் கரையோர மீனவன்கூட, கடலின்அக்கரைக்குச் செல்பவர்களே, பதினாலாம் இரவின் பாற்கடல் அலையின் கடல்கன்னிகள் உதிர்க்கும் மாணிக்கத்தைக் கொண்டு வருவீர்களா என்று ஒரு ஃபேன்டஸி கனவைத்தான் பாடுகிறான். தமிழ் மீனவனோ, வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திமிங்கிலம் தலைமையில் நடக்கும் எளிமையான  காதல்  திருமணத்தைத் தன் எளிமையான மொழியில் பாடுகிறான். தமிழின்மிக முக்கியமான அம்சம் சாதாரண மக்களின் பாடல்கள்தான். அதிலும் கானாப்பாடல்கள் தரும் மனவெழுச்சி வார்த்தைகளில் அடக்க முடியாதது’  என்று சொல்லியிருப்பார். ஜிமிக்கி கம்மல் பாடல் மலையாள பாடல்களும் தமிழ் பாடல்களுக்கு இணையாக இறங்கி அடிப்பதை உறுதி செய்கிறது.

இந்தியாவின் பெரு முதலாளி முகேஷ் அம்பானி தினமும் தூங்குவதற்கு முன் ஒரு சினிமா பார்க்கிறார். அவரைப் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள சினிமாக்கள் உதவுகிறது. டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி எந்தவொரு முக்கியமான போட்டிக்கு முன்னரும் சினிமாவையோ அல்லது பாடல்களையோ பார்த்துதான் மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்வதாகச் சொல்கிறார். எனக்குத் தெரிந்த தொழிலதிபருக்கு மன்னன், பாட்ஷா போன்ற ரஜினி படங்களை வாரம் ஒரு முறையாவது பார்க்காவிட்டால் ரத்த அழுத்தம் எகிறி விடும். சமூகத்தின் பல மட்டத்தினரும் மன அழுத்தத்தைப் போக்க தங்களுக்குப் பிரியமான நாயகனின் படங்களைப் பார்ப்பதைத்தான் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

சுந்தர்.சி மற்றும் எழில் இயக்கும் படங்களுக்கு நம்மூரில் ரசிகர்கள் அதிகம். சமீபத்தில் கலகலப்பு, தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்று சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுப்பவர்கள் இவர்கள். அந்தக்கால ஸ்ரீதரிலிருந்து, எஸ்.பி.முத்துராமன், பாக்யராஜ், பாண்டியராஜன், கே.எஸ்.ரவிகுமார் என்று படம் பார்க்க வருபவர்கள் மகிழ்ச்சியாகத் திரும்பிப் போக வேண்டும் என்ற வைராக்கியத்தோடு படம் எடுக்கும் இயக்குநர்கள் அதிகம் உண்டு.  நம்முடைய அன்றாடப் பிரச்னைகளிலிருந்து விடுபட இதுபோன்ற கல கல சினிமா, மசாலா சினிமா மற்றும் பிக் பாஸூம், கொஞ்சம் ஜிமிக்கி கம்மலும் தேவைப்படுகிறது.

சினிமா தியேட்டர்களை  சிலநாட்கள் மூடி வைத்துப் பாருங்களேன். நாட்டில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவிடும் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் சீறினார் டி.ராஜேந்தர். இதில் உண்மை இல்லாமல் இல்லை!

ஆகவே மக்களே, அஜீத்தும் விஜயும் கலைப்படங்களில் கால் வைக்காமல் ரசிகர்களை உற்சா கப்படுத்த வணிகப்படங்களில்  மட்டும் நடித்துக் கொண்டிருப்பதில் ஒரு அர்த்தமும் இருக்கத்தான் செய்கிறது இல்லையா?

அக்டோபர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com