எங்கேயோ கேட்ட குரல்

எங்கேயோ கேட்ட குரல்
Published on

நாம் இதனை நியூயார்க் நகரில் இருந்தே ஆரம்பிக்கலாம்.

ஒரு காலைப் பொழுதொன்றில் நியூயார்க் நகர வீதியில் வந்து கொண்டிருந்த இளைஞன் அருகிலுள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.

அந்த நேரம் பார்த்து எதிர்பாரா விதமாக சிறுமி ஒருத்தியின் மீது நாய் ஒன்று பாய்கிறது. அதுவும் வெறி பிடித்த தெரு நாய். (விலங்குகள் நலச் சங்கத்தினர் மட்டும் இதைத் திரு.நாய் என்று மாற்றிப் படிக்கவும்). நாய் சிறுமியைக் குதறத் தொடங்க மற்ற சிறுவர்களும் பெற்றோர்களும் பயத்தில் தெறித்து ஓடுகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து கொண்டிருக்கிற அந்த அவலத்தைக் கண்டு பூங்காவினுள் பாய்கிறான் அந்த இளைஞன். வெறி பிடித்த நாயோடு கடுமையாகப் போராடி இறுதியில் அதைக் கொன்று சிறுமியின் உயிரைக் காப்பாற்றுகிறான்.

வழக்கம்போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ் அந்த இளைஞனின் அருகில் வந்து... “நீதான் உண்மையான கதாநாயகன்... நாளை காலை பேப்பரில் பார். ‘வீரம் மிக்க ஒரு நியூயார்க்காரன் வெறிபிடித்த நாயோடு போராடி ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றினான்’ என்று வரும்...” என்கிறான்.

அந்த இளைஞனோ “நான் நியூயார்க்காரன் இல்லையே அய்யா...”  என்கிறான் அப்பாவியாக..

“சரி விடு அப்படியானால் ‘அமெரிக்க இளைஞன் ஒருவன் தீரமாக நாயோடு போராடி ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றினான்’ என்று பேப்பரில் வரும்’ என்கிறான்.

அதற்கும் அந்த இளைஞன் அய்யா நான் அமெரிக்காவைச் சேர்ந்தவனும் இல்லையே என்கிறான் மீண்டும் அப்பாவியாக.

“அட அப்ப நீ அமெரிக்கனும் இல்லையா... அப்படியானால் நீ எந்த நாடு? அதையாவது சொல்” என்கிறான். “அய்யா நான் ஈராக்கில் இருந்து வருகிறேன் என்று சொல்ல...

அடுத்த நாள் அந்த போலீஸ்காரன் சொல்லிச் சென்றது மாதிரியே பேப்பரில் செய்தி வருகிறது இப்படி :

“வெறிபிடித்த முஸ்லிம் பயங்கரவாதி ஒருவன் அப்பாவி நாயை பூங்காவில் சுட்டுக் கொன்றான்” என்று.

இப்படித்தான் இருக்கிறது பெரும்பாலான ஊடகங்களின் இஸ்லாமியர் குறித்ததான சித்தரிப்பு.

இதோ இப்போது சிங்கள பௌத்தத் தீவிரவாதிகளாலும் மீண்டும் ஒருமுறை சூறையாடப்பட்டு இருக்கிறார்கள், தமிழ்பேசும் மக்களில் ஒரு பிரிவினரான அப்பாவி இஸ்லாமிய மக்கள். தென் இலங்கையில் உள்ள அளுத்தகமா நகரில் பௌத்த பிக்குகள் நடத்திய வெறியாட்டத்தில் வீடு வாசலை இழந்தவர்கள் எண்ணற்றோர். சிறுகச் சிறுக சேர்த்த செல்வத்தையும் சிங்கள வெறியர்களிடம் இழந்துவிட்டு தெருவில் தவிப்போர் கணக்கற்றோர்.

இலங்கையில் இருக்கும் இஸ்லாமியர்களில் 97 சதவீதம் பேர் தமிழர்கள்தான். மார்க்கத்தால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாலும் மொழியால் அவர்கள் தமிழோடு பிணைந்திருப்பவர்கள். எந்த அரேபிய ஷேக்குக்கும் சித்தப்பா பையன்கள் அல்ல. தமிழர்கள்... தமிழர்கள்... தமிழர்கள்...

“மதத்தால் இந்து ஆனாலும்,

மாண்பில் முஸ்லிம் என்றாலும்

வேதம் பயிலும் கிறிஸ்தவனும்,

தீரச்சைவன் ஆனாலும்

ஈழத்தழிழர் ஈழவரே.

அவர் எங்கிருந்தாலும் எம்மவரே.”

இதுதான் ஈழ விடுதலைப் போரினை உலகின் கண்களுக்குக் கொண்டு சென்ற தோழர் இரத்தினசபாபதி அவர்கள் போராளிகளுக்குக் கற்றுக் கொடுத்த பாலபாடம். 70 களில் லண்டன் நகரில் பத்திரிகையாளராகவும் பணியாற்றியவர் தோழர் இரத்தினசபாபதி. அவர் தொடர்ச்சியாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் குறித்து எழுதி வந்த கட்டுரைகளைப் பார்த்த பி.எல்.ஓ அமைப்பின் பிதாமகர் யாசர் அராபத் கேட்ட முதல் கேள்வி : “ஙிடணி டிண் tடச்t கீச்tணச்?”  என்பதுதான். முன் வந்து நின்ற தோழர் இரட்ணாவின் ஆற்றலும் அறிவும் கண்டு மலைத்துப் போகிறார் யாசர் அராபத். அவர்கள் இருவரது உறவிலும் தொடங்கியதுதான் பாலஸ்தீனத்திற்கும் ஈழத்துக்குமான உறவு. அந்த உறவுதான் ஈழப்போராளிகளை ஆயுதப் பயிற்சிக்காக பி.எல்.ஓ  அமைப்பிடம் அனுப்பி வைத்தது. தம்பி பிரபாகரன், தோழர் பாலகுமார், உமாமகேஸ்வரன்,பத்மநாபா என போராளிகளின் தலைவர்கள் அனைவருமே அளப்பரிய மரியாதை வைத்திருந்தனர் தோழர் இரட்ணாவிடம். அப்பொழுது இயங்கி வந்ததுதான் ஈழ ஆய்வு நிறுவனம்.(Eelam research Organisation-EROSு) அந்த அமைப்புதான் ஈழ மக்களுக்கான துயரைக் களைவது எவ்விதம் என்று அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்தது.

மலரப்போகும் தேசத்திற்கு என்ன பெயரிடுவது? தமிழ் ஈழம் என்றால்... ஏற்கெனவே சிலர்  சொல்லிக் கொண்டிருக்கும் “தமிழும் சைவமும் இரு கண்கள்” என்கிற சொல்லாடல் மற்ற மார்க்கத்தவரை அந்நியப்படுத்தி விடுமா? அல்லது “ஈழம்” என்றால் தமிழ் பேசும் மக்கள் அனைவருமே இணைந்து செயல்பட ஏதுவாக இருக்குமா? என்றெல்லாம் ஆராய்ந்தது அவ்வமைப்பு. அப்போது எழுந்ததுதான் மேலே சொன்ன “மதத்தால் இந்து ஆனாலும்... மாண்பில் முஸ்லிம் என்றாலும்” என்கிற முழக்கம். இன்னும் பச்சையாகச் சொன்னால்... சிங்களரிடமிருந்து அல்ல சைவம் பேசி சாதி பிரித்தவர்களிடமிருந்து தமிழையும் தமிழ் பேசும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய அவலம் அன்றைக்கு இருந்தது. தமிழர்கள் என்றாலே இந்து இஸ்லாமிய கிருஸ்துவர் அனைவரும் தமிழர்கள்தான் என்று தமிழ் நாட்டைப் போலில்லை. சிங்களர், தமிழர், சோனகர் (தமிழ்பேசும் இஸ்லாமிய மக்கள்) என்று இலங்கை அரசாங்கமே தமிழ்பேசும் மக்களைக் கூறு போட்டது. அதற்குத் துணை போனதில் இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ...  அதே அளவு பங்கு சைவத்தால் சாதி பிரித்தவர்களுக்கும் மார்க்கம் பிரித்தவர்களுக்கும் இருக்கிறது. ஆக...

அளுத்தகமவில் பலியானாலும் சரி.

மட்டக்களப்பில் மாண்டாலும் சரி.

மலையகத்தில் வாடினாலும் சரி

வல்வெட்டித்துறையில் துயருற்றாலும் சரி..

எங்கிருந்தாலும் எம்மவரே.

தென் இலங்கையில் தமிழ் பேசும் மக்களில் ஒரு பிரிவினரான இஸ்லாமிய சகோதரர்கள் கொல்லப்பட்டிருப்பது இன்னமும் ஒரு பேரழிவுக்கு முன்னதான ஒத்திகை.

அளுத்தகமவில் பொதுபல சேனாவின் ஞானசாரா தேரர் பேசிய பேச்சுக்கள் இங்குள்ள இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் பேசும் நஞ்சைக் கக்கும் பேச்சுக்களுக்கு எந்த விதத்திலும்

சளைத்ததல்ல.

அதே குரல்.

அதே அவதூறு.

அதே வன்மம்..

நாடு மட்டும்தான் வேறு வேறு.

இஸ்லாமிய மக்களை வேட்டையாடினால் ஒருவேளை மேற்குலகு மெச்சும் என்கிற கணிப்பு மெய்யாகுமா பொய்யாகுமா என்பதைக் காலம்தான் முடிவு செய்யும். ராஜபக்சேக்களின் மற்றொரு முகம்தான் இந்த பொதுபல சேனா. இன்றைய நமது தேவையே மார்க்கங்கள் எதுவாயினும் மொழியால் பிணைந்த நம் உறவுகளின் காயம்பட்ட மனங்களுக்கு மருந்திடுவதும் துணை நிற்பதும்தான்.

இந்த பிணைப்பே தலைவிரித்தாடுகிற சிங்கள பௌத்த பேரினவாதத்தின் குரல்வளையை இறுக்கும்.

நாளை ஒரு நல்ல விடியலைக் கொடுக்கும்.

ஜூலை, 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com