எங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார்!

ரா.கண்ணன்
ரா.கண்ணன்ஓவியம் : ஜீவா
Published on

அவரின் தியாகத்தை முன்பு அறிவேன். படித்திருக்கிறேன். ஆனால் அந்த மனிதரை முதலில் அறிமுகம் செய்து வைத்தவர், 'ஆனந்தவிகடன்' ஆசிரியராக இருந்த அன்பன் ரா.கண்ணன். ''மதுரைக்குப் போனால் ஐமாபாவை பாருங்கள். தியாகி என்பதற்கு ஓர் உருவம் வரைய வேண்டுமானால், அவர்தான். கடந்த கால தியாகம் பற்றி கப்சா விட மாட்டார். இந்தக் காலத்தை பற்றி மோசமாகப் பேச மாட்டார். தன்னை இந்த சமூகம் கொண்டாடவில்லையே என்ற தவிப்பு இருக்காது. தான் இந்த சமூகத்துக்குச் செய்த கடமையைச் செய்து முடித்ததாகப் பெருமை மட்டுமே இருக்கும்'' என்று சொன்னார். அப்போது நான், 'ஆனந்த விகடனில்' நினைவுச் சிறகுகள் என்ற தொடரை எழுதி வந்தேன். எழுபது, எண்பது வயதானவர்களை பார்த்து அவர்களது அனுபவங்களை எழுதுவது தான் அந்தத் தொடர். இதை சின்னக்குத்தூசியிடம் சொன்னபோது, 'ஓ! லேசா கண் தெரியுறவங்க... காதுகேட்காதவங்களையா பார்த்து பேட்டி எடுக்கப் போறீங்களா சார்?' என்று கிண்டல் அடித்தார். 'சார்' என்று சிரித்தேன். அந்த வரிசையில் அவரைச் சந்திக்க மதுரை மேலமாசி வீதியில் நடக்கிறேன். மக்கள் பரபரப்பான அந்தப் பெரிய வீதியில் ஒரு மாடியில் அவரைப் போய்ப் பார்க்கிறேன்.

தூய வெள்ளைக் கதர் ஆடையில் கையில் மஞ்சள் பையுடன் கட்டிலில் உட்கார்ந்து இருந்தார் ஐமாபா.

இந்திய விடுதலையின் உயிர்ச்சின்னமாக உட்கார்ந்து இருந்தார் ஐ.மாயாண்டி பாரதி!

பாளையக்காரர்கள் எதிர்ப்பு முடிந்து ஆகப் பல ஆண்டுகளாக விடுதலை நெருப்பு பட்டுப் போன பிறகு, திடீரென திருநெல்வேலி சிதம்பரத்தால் மூட்டப்பட்டது வெள்ளையர்க்கு எதிரான அனலும் கனலும். அந்த நெருப்பில் இருந்து பறந்து வந்த
சாம்பலும் கங்கும் தென்னகம் முழுக்கவும் சினத்தை விதைத்தது. அதில் ஒருவர்தான், ஐ.மா.பா.

'என்ன சொத்து உனக்கு இருக்கிறது?' - கேட்கிறார்
நீதிபதி.

'திருமலை நாயக்கர் மகால் எங்க சொத்துதான், மங்கம்மாள் சத்திரம் எங்கள் சொத்துதான்' - என்று சொன்னவர்தான், ஐமாபா.

பட்டொளி வீசிப் பறந்த கொடி, கழன்று விழுந்தது போல உட்கார்ந்து இருந்தார் கயிற்றுக் கட்டிலில்!

அவர் உட்கார்ந்த இடத்தில் இருந்து பார்த்தாலே சமையலறை தெரிந்தது. அவர் மனைவி, பாத்திரம் கழுவிக்கொண்டு இருந்தார். 'ஆனந்த விகடன்ல இருந்து வந்திருக்கார்' என்றார். சிரித்தார் அவர். சிரிப்பின் அடையாளமாய் டீ வந்தது.

'பட்டாளத்தில் சேராதே!

யுத்த நிதி கொடுக்காதே!

ஆங்கிலேய ஆட்சிக்கு

வரி எதுவும் தராதே!' & என்று அப்போது முழங்கியதை இப்போதும் ஆங்கில ஆட்சி நடப்பதாகவே நினைத்து முழங்கினார். அப்போது மட்டும் எங்களைத் திரும்பிப் பார்த்தார், அவரது மனைவி. ஐமாபாவின் பேட்டி, ஆனந்த விகடனில் வெளியானதும் அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். 29.04.2000ம் ஆம் நாள் தேதியிட்ட அந்தக் கடிதத்தை இப்போது என் கையில் வைத்துப் பார்க்கிறேன். ஐமாபாவின் கதராடையைப் போலவே வெள்ளையாக இருக்கிறது. அந்தத் தியாகி தனது மனைவியிடம் பாராட்டு வாங்கும் அளவுக்கு அந்தப் பேட்டி அமைந்திருந்தது.

''ஆனந்தவிகடனைப் பார்த்தேன். படித்தேன். ஒருவர் வந்து, 'மங்கம்மா சத்திரம் என்னுடைய சொத்து'னு சொன்னீங்களாமே. ஆனந்த விகடனில் போட்டிருக்கு' என்றார். உடனே ஒரு ஆனந்த விகடன் வாங்கினேன். விகடனில் உள்ள எனது படத்தை எங்க வீட்டிலே பார்த்தது. நல்லா இருக்குனு சர்டிபிகேட் கொடுத்தது'' என்று எழுதி இருந்தார். மனைவி பாராட்டை மகேசன் பாராட்டாக அவர் நினைத்த காலத்தில் பார்த்தேன். 'இருக்கின்றார் என்பதொன்றே இன்பம்' என்று பாரதிதாசன்
சொல்வாரே அப்படி ஒரு காலத்தில் பார்த்தேன்.

அதன்பிறகு அவர் மறையும் வரை மதுரைக்குப் போனால் வாய்ப்பு இருக்கும் போது சும்மா அவரைப் பார்க்கும் பழக்கம் இருந்தது. முதலில் நான் சந்தித்த பெரிய சாலையில் இருந்து, ஒடுக்கமான ஒரு சாலைக்கு மாறி இருந்தார். அப்போது சென்ற போது, 'படுகளத்தில் பாரத தேவி' புத்தகத்தைக் கொடுத்தார். ''இன்னும் சில புத்தகங்களை வெளியிட இருக்கிறேன்'' என்றார். ''இந்த வயதில் இது அவசியம் இல்லை, யாராவது பதிப்பாளரிடம் கொடுங்கள். அவர்கள் வெளியிடட்டும்'' என்றேன். ஏற்கெனவே அவர் வெளியிட்ட ''பாரததேவி'' பீரோவில் படுபாவமாய் கிடந்தது. வேறு சில கட்டுரைகளைக் கொடுத்து படிக்கச்
சொன்னார். வாசிக்கும் போது மாறும் நம் முகபாவங்களை ரசித்தார்.

ரா.கண்ணன்
ரா.கண்ணன்ஓவியம் : ஜீவா

மதுரையில், 'தமிழ் மண்ணே வணக்கம்' நடத்தியபோது பேச்சாளி பாரதிகிருஷ்ணகுமார் தான், 'வாங்க சார், ஐமாபாவை பார்த்து வருவோம்' என்றார். அவருக்கு ரவா தோசை அதிகம் பிடிக்கும் என்றார், பாகிகு. ரவா தோசையுடன் ஐமாபாவை சந்தித்தோம். நாடு ரணகளமாகிக் கிடப்பதை வைத்து பொங்கித் தீர்த்து விட்டார் ஐமாபா. இதனை அப்படியே தனது செல்போனில் பதிவு செய்தார், ராஜசேகர். அந்த வயதிலும் என்ன குரல்? என்ன கோபம்? என்ன ஆத்திரம்?

ஏன் அவருக்கு மட்டும் இவ்வளவு கோபம், ஆத்திரம்? என்றால், ஒன்றல்ல இரண்டல்ல 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் அவர். அடிமை இந்தியாவில் மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவிலும் சிறையில் இருந்தவர். ஓராண்டு காலம் தலைமறைவாக வாழ்ந்தவர். அன்னியரிடம் இருந்து விடுதலை, பொருளாதார சுதந்திரம் உள்ள இந்தியா & இதுதான் அவரது இறுதியான உறுதியான இலக்குகளாக இருந்தன. சின்ன வயதில் அரும்பிய கொள்கைத் தீரம் இறுதி வரைக்கும் இருந்ததுதான் அதிசயிக்கத்தக்கது.

''நாங்க எங்க வீட்டுல 13 பிள்ளைகள். நான் அதுல 11 வயது பிள்ளை. இந்த மேலமாசி வீதியிலதான் எங்க வீடு. எப்போதும் வீதியைச் சுற்றிலும் கடவுள் பக்தி மட்டுமல்ல தேசபக்தியும் மணக்கும். நான் சுதந்திரப்
 போராட்ட ஆர்ப்பாட்டத்துக்கு போறதெல்லாம் எங்க அப்பாவுக்குப் பிடிக்காது. அடி வெளுத்துடுவார். 'டேய், வெள்ளைக்காரன் துப்பாக்கி வெச்சிருக்கான், சுட்டுப்புடுவான்' என்று அவர் தான் என்னை மிரட்டினார். 'காந்தியும் நேருவும் கோடீஸ்வரர் வீட்டுப் பிள்ளைகள். அவர்களையே கம்பி எண்ண வெச்சுட்டான்.
நீயெல்லாம் எந்த மூலைக்கு?' என்று மிரட்டினார்.

ஆனா இது எதுவும் என் காதுக்குள்ள ஏறல.

காங்கிரஸ் கட்சி வெளியிடும் சட்டவிரோத துண்டுப் பிரசுரங்களை வீடுவீடாகச் சென்று கொடுப்பேன். அவர்கள் தரும் ரகசிய அறிக்கையை தெருவில் போய் ஒட்டுவேன். அதிகாலையில் தகர டப்பாவை அடித்து மக்களை எழுப்பி யாரையெல்லாம் கைது செய்துள்ளார்கள் என்று சொல்வேன். இதுதான் என்னுடைய வேலை.

நன்றாக நான் எழுதுகிறேன் என்று சென்னைக்கு 'லோகசக்தி' பத்திரிகை வேலைக்கு அழைத்துச் சென்றார்கள். அதில் வந்த கட்டுரைக்காக அந்தப் பத்திரிகை தடை செய்யப்பட்டது. அதன்பிறகு 'பாரத சக்தி' என்ற பத்திரிகை தொடங்கினோம். அதுவும் தடை செய்யப்பட்டது. அந்தக் கோபத்தில்தான், 'படுகளத்தில் பாரததேவி' புத்தகம் எழுதினேன். அதையும் தடை செய்தார்கள். அதில் இருந்து சிறை வாசம் தான்'' என்று சொல்லிவிட்டு அவர் சொன்ன புகழ் மிக்க வார்த்தைதான், 'ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்' என்பதுதான் என்னுடைய வாழ்க்கை என்பது.

எப்போதும் இவரை காவல்துறை தேடிக் கொண்டுதான் இருக்கும். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் ஏறி எங்கெங்கோ இவர் போய்க்கொண்டு இருப்பாராம். 'அதுதான் ஏறினால் ரயில்'.

எங்காவது போலீஸ் அவரைப் பார்த்து கைது செய்தால் சிறைக்கு அழைத்துச் சென்று விடுவார்களாம். அதுதான், 'இறங்கினால் ஜெயில்' என்பது.

''ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். அப்படியே மெல்ல கம்யூனிஸ்ட் ஆக ஆகிவிட்டேன். அதன்பிறகு வாழ்க்கையே போராட்டம் ஆனது. இந்தியா விடுதலை அடைந்த பிறகும் ஜெயில்ல இருந்தது நாங்கதான். அப்படீன்னா உண்மையான தியாகி யாரு? நாங்கதானே?'' என்று கேட்டார்.

''நீங்கதான்'' என்றேன். ''ஆனா நாங்க தியாகிகள் என்று சொல்லிக்கிறது இல்லை, நாங்கள் பாட்டாளிகள், கம்யூனிஸ்ட்டுகள்'' என்று சொன்னார்.

''எங்களுக்கு உண்மையான பென்ஷன் எது தெரியுமா? மக்களோட சிரிப்பு தான்'' என்றார். அப்போது அவர் முகத்தில் சோகம் இருந்ததும் உண்மைதான்.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி ஒரு முறை பேச்சு வந்தது.

''நான் சிறையில் இருந்தபோது தான் என் தாயார் இறந்தார். சாவுக்கு நான் கலந்து கொள்ள அனுமதி கிடைக்கவில்லை.

நான் சிறையில் இருந்தபோது தான் என் பெரிய அண்ணன், என் சின்ன அண்ணன், என் தமக்கை, என் தங்கை, என் அண்ணி ஆகியோர் இறந்து போனார்கள். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதி கேட்டேன். ஒரு முறைகூட பரோல்
கிடைக்கவில்லை,'' என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்தார்.

எனக்கு எழுதிய கடிதத்தில், ''என்னை
செல்வந்தனாக்குவதற்கு பல வாய்ப்புகளும் முற்றுகைகளும் வந்தன. நழுவி விட்டேன். அதெல்லாம் பெரிய கதை. பதவிகளையும் பிடித்திருக்கலாம். ஏனென்றால், என்னுடன் சிறைவாசம் புரிந்த பல நண்பர்களும் சீடர்களும் தான் அமைச்சர்களாக இருந்தார்கள். ஆனால் நான் கம்யூனிஸ்ட் ஆச்சே!'' என்று எழுதி இருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது இவரோடு
சிறையில் இருந்தவர்கள்தான் பிற்காலத்தில் காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்கள். இவர் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக இறங்கியபோது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டு இவர் கடுமையாக விசாரிக்கப்பட்டார். அப்போது உங்கள் தலைவர் எங்கே இருக்கிறார்? என்று இவரிடம் கேட்டார்களாம். 'எங்கள் தலைவர் தூரத்தில் இருக்கிறார்' என்று இவர் சொன்னாராம். தலைவரைக் கண்டுபிடித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில், 'எந்த ஊரில் பதுங்கி இருக்கிறார்?' என்று கேட்டார்களாம். 'அவர் மாஸ்கோவில் பதுங்கி இருக்கிறார். அவர் பெயர் ஸ்டாலின்' என்றாராம், இவர். அடி முன்னை விட பலமாக விழுந்திருக்கும்.

இப்படிப்பட்ட ஐமாபா, செல்வந்தன் ஆக முடியுமா? பதவிகளை அடைய முடியுமா? அமைச்சர்களிடம் போவாரா?

கீழ்வெண்மணி நிகழ்வு அனைவருக்கும் தெரியும். 44 உயிர்களை பலிவாங்கிய நிலச்சுவாந்தாரை பழிவாங்கிய நிகழ்வு நடந்தபோது, ஐமாபாவுக்குத் தான் முதலில் தகவல் தெரியும் என்று பாரதிகிருஷ்ணகுமார் சொன்னார்.

இப்படிப்பட்ட ஐமாபா, செல்வந்தன் ஆக முடியுமா? பதவிகளை அடைய முடியுமா? அமைச்சர்களிடம் போவாரா?

ஆனால் ஐமாபா இறக்கும் போது பல பதவிகளில் இருந்தார். மதுரை நகர சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதி தலைவர்.

தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் சமிதி துணைச் செயலாளர்.

மதுரை மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க கௌரவத் தலைவர்.

சென்னை சோசலிஸ்ட் தொழிலாளர் சங்க கௌரவத் தலைவர்.

மதுரை காந்தி மன்ற இயக்கத்தின் தலைவர்.

தமிழ்நாடு காந்தி மன்ற  இயக்கத்தின் துணைத் தலைவர்.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட பூமிதான இயக்கத் துணைத்தலைவர்.

மதுரை சர்வோதய ஊழியர் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்.

இவை அனைத்துக்கும் மேலாக போராட்டக்காரர். கம்யூனிஸ்ட். உண்மையான தேசபக்தர். இன்று இருந்திருந்தால் எங்காவது நின்று ஹைட்ரோகார்பனுக்கு எதிராக, மீத்தேனுக்கு எதிராக, இன்றைய மத்திய அரசுக்கு எதிராக, இன்றைய மாநில அரசுக்கு எதிராக போராட்டக் களத்தில் நின்றிருப்பார் ஐமாபா.

அவருக்கு மாபெரும்  பட்டம்,  பதவி ஒன்று கிடைத்திருக்கும். 'ஆன்ட்டி இண்டியன்!'

ஆகஸ்ட், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com