எங்க சாமி அவங்க டி.வி.யில் தெரியலாமா?

Published on

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்காக தமிழகம் முழுக்க ஏராளமான கோவில்களுக்குச் சென்ற அந்தக் காட்சித்தொடர் மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் தொடராக வெளிவந்தது.

  • எல்லாக் கோவில்களிலும் சென்றதும் சட்டென்று காமிராவுடன் நுழைய அனுமதி கிடைத்துவிடுவதில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த சில கோவில்களுக்குள் நுழையச் சிரமங்கள் இருந்தன.அப்போதைய ஆளும்கட்சியுடன் தொடர்புடைய தொலைக்காட்சி என்பதால், பல இடங்களில் நுழைவது சுலபமாக இருந்தது.

  • சில தனியார்வசம் இருக்கிற கோவில்களுக்குப் போனபோது விநோதமான அனுபவம். மதுரைக்கு அருகில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்குள் யாரும் செல்போன் மூலம் படம் எடுப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இருந்தும் நாங்கள் சென்றபோது, தடையில்லாமல் கருவறைக்கு மிக அருகில் சென்று ஒளிப்பதிவு பண்ண முடிந்தது. காரணம் அப்போது பல கோவில்களில் மதிய--நேரத்தில் அன்னதானத்திற்குக் குறிப்பிட்ட நிதி கோவில்களுக்கு வழங்கப்--பட்டுக் கொண்டிருந்த்ததால் ‘கருணை’ யுடன் அனுமதித்தார்கள். அப்படிச் சில கோவில்-களுக்குள் முதலில் சென்று படம் பிடிக்க வாய்ப்புக் கிடைத்தது.

  • நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில். துடியானதாகச் சொல்லப்பட்ட கோவிலில் நாங்கள் நுழைந்தது சிலருக்குப் பிடிக்கவில்லை. சில தொந்திரவுகளுக்குப் பிறகு ஒருவருக்குச் ‘சாமி’ வந்து ஆடினார். ‘’இந்த ஊர் எல்லையைத் தாண்டுவதற்குள் நீங்கள் வந்த வாகனம் விபத்தில் மாட்டும். நீங்க உள்ளே எடுத்ததில் ஒண்ணுமே பதிவாகியிருக்காது..அழியபோறீங்க” துடியான சாபம் கொடுத்தார்.ஒரு வழியாக திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்து, தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குப் போய் காமிராவைச் சோதித்தபோது, காமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளுக்கு எந்தச் சேதமும் இல்லாமல் பதிவாகி இருந்தன.

  • புதுவைக்கு அருகில் உள்ள ஒரு கோவில் திருவிழா. மக்கள் திரள் அடர்த்தியாக இருந்தது. உடம்பில் வாயிலும், முதுகிலும் இரும்புக் கொக்கிகளை மாட்டுவதைப் படம் பிடித்தோம். முதுகில் கூரான கொக்கி முனையை உடலுக்குள் செலுத்தி வெளியே எடுத்தபோது, எடுத்துக் கொண்டிருந்த காமிராமேனுக்குக் கிறுகிறுத்து, உடனிருந்தவர்கள் தான் பதற வேண்டியிருந்தது, கொக்கி மாட்டியவர்கள் கொஞ்ச நேரத்தில் சத்தமில்லாமல் சிறகை நீட்டிய பறவைகளைப் போலக் கயிறு கட்டி அந்தரத்தில் தொங்க ஆரம்பித்துவிட்டார்கள், வேண்டுதலின் படி.

  • ஈரோடுக்கு அருகில் ஒரு கோவில் திருவிழாவில், சிறு சிறு கத்திகளைச் சங்கிலியில் இணைத்துத் திறந்த முதுகில் அடித்தபடியே நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களைப் பார்த்தபோது, இஸ்லாமிய சமூகத்தினரின் பிரபலமான விழா தான் நினைவுக்கு வந்தது.  

  • அதே மாவட்டத்தில் இன்னொரு கோவில். இங்கு நேர்த்திக்கடனாகச் செலுத்துகிற நாட்டுக்கோழிகளை கூரான ஒரு இரும்பு வேலில் குத்திச் சென்றுவிடுகிறார்கள். துடிதுடித்து சிறகடிப்புகளுடன் அடங்கிவிடுகிற கோழிகள் வரிசையாக. ஆனால் அந்தப் பகுதியில் நாற்றம் எதுவும் இல்லாததை கோவில்’மகிமை’யாகச் சொல்கிறார்கள்,

  • தலையில் தேங்காயை உடைக்கும் ஒரு கோவில் திருவிழாவுக்குப் போனபோது, பூசாரி வரிசையாக குனிந்த நிலையில் வரிசையாக அமர்ந்திருந்த பக்தர்களின் தலைகளில் ஓங்கித் தேங்காயை உடைத்துக் கொண்டே வந்தார். படீரென்று உடைந்து தேங்காயின் வெண்மை பளபளத்தபோது, சிலருக்குத் தலையில் ரத்தம் கசிந்தது, அருகில் பார்க்கிறபோது நமக்குத் தான் வலிக்கிறது.

  • மதுரைக்கு அருகில் சட்டப்பேரவையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவரின் சொந்த ஊரில் அந்தக் கோவிலில் மிக வித்தியாசமான நேர்த்திக்கடன். கோவிலுக்கு முன்னால் நீக்குழி இறங்குகிற மாதிரி மண்ணைத் தோண்டி வைத்திருக்கிறார்கள். இதில் குறிப்பிட்ட நேரத்தில், நேர்ந்து கொண்ட குழந்தைகளை மண்குழிக்குள் இறக்கி மேலே மண்ணைப் போட்டு மூடிச் சற்று நேரத்தில் பரபரத்து அவர்களைத் தூக்கிவிடுகிறார்கள். அதாவது உயிரோடு மண்ணுக்குள் புதைத்து எடுக்கிறார்கள். இந்தச் சங்கதிகள் கசிந்த பிறகு பரபரப்பான செய்தியாகி, அந்தக் கோவில் திருவிழாவில் இந்த ஆபத்தான வேண்டுதலுக்குத் தடைவிதிக்கப்பட்டுவிட்டது.

  • மதுரைக்கு அருகில் முக்கியச் சாலையோரம் உள்ள பழமையான கோவில் அது. கோவிலைச் சுற்றி செம்மண் வண்ணத்தில் கோடுகளிட்ட சுவர். அதன் நடுவில் சதுர வடிவில் ஒரு ஓட்டை. அதற்கு முன்னால் தான் குறிப்பிட்ட சமூகத்தினர் நின்று சாமியைப் பார்க்க முடியும் என்பதைப் பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

  • திண்டுக்கல் மாவட்டத்தில் பழனிக்கு அருகில் உள்ள கோவிலுக்கு முன்னால் ஒரு எச்சரிக்கைப் பலகை. அந்த எல்லையைத் தாண்டிப் பெண்கள் யரும் வரக்கூடாது என்று எச்சரிக்கிறது. பெண்கள் அந்த எல்லைக்கு முன்பே நின்றுவிட, ஆண்கள் மட்டும் கோவில்களுக்குள் போய் வழிபடுகிறார்கள்.

  • வடமாவட்டத்தில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தின் முகப்பில் விரிந்த பொட்டலில் கோவில். அந்தக் கோவிலுக்குள் ஒளிப்பதிவுக்கு அனுமதி கிடைக்கவே இல்லை. மிகப் பிடிவாதமாக மறுத்ததோடு அதற்கு அவர்கள் சொன்ன காரணம். ‘’ எங்க கோவிலில் நீங்க எடுத்தா, எங்க சாமி டி.வி,யில் வரும். அது இன்னொரு சாதிக்காரங்க வீட்டிலே இருக்கிற டி.வி.யில் தெரியும். அப்படி எங்க சாமி வர்றதை நாங்க விரும்பலை.. நீங்க கிளம்புறீங்களா?” சாதியப் பார்வைகளில் இது தனி ரகம்!

  • தென் மாவட்டத்தில் சிறு கிராமத்தில் நெகிழ்வூட்டும் சம்பவம். சாராயம் காய்ச்சுவதில் பிரபலம் அந்தக் கிராமம். காய்ச்சுகிற குடும்பத்தைச் சேர்ந்த அந்தக் குடும்பத்திற்கு வாக்கப்பட்டு வந்த பெண்ணுக்கு அது பிடிக்கவில்லை. சொல்லிப் பார்த்திருக்கிறார். மன்றாடியிருக்கிறார். எதுவும் நடக்கவில்லை. முடிவில் சாராயம் காய்ச்சும் இடத்திற்கே போய்த் தன்னைக் கொளுத்திக் கொண்டு அந்த இடத்தில் அடங்கிப் போயிருக்கிறார். அதன்பிறகு அந்த ஊரில் சாராயம் காய்ச்சப்படுவதில்லை.அந்தப் பெண்ணின் நினைவாக ஒரு பூசை அறையில் சந்தனம் தெளித்த மரப்பெட்டியாக வைத்து வணங்குகிறார்கள். இம்மாதிரிக் குடும்பத்திற்கே உரித்தான சாமிகளும் இருக்கின்றன..

ஏப்ரல், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com