‘எ பிலிம் பை’ என்று போட்டுக்கொள்ள மாட்டேன்!

‘எ பிலிம் பை’ என்று போட்டுக்கொள்ள மாட்டேன்!
Published on

குறும்படம் உதவி இயக்குநராவதற்கான நுழைவுச்சீட்டு என்ற காலம் மலையேறி,  ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான ஒப்புகைச்சீட்டு என்றாகி நெடுநாட்களாகிவிட்டது.

’பீட்சா’ கார்த்திக் சுப்புராஜ், ‘சூதுகவ்வும்’ நலன் குமரசாமி, ‘முண்டாசுபட்டி’ ராம்குமார் என்று நீள்கிறது நேரடியாக இயக்குநர் நாற்காலியில் அமர்ந்தவர்களின் எண்ணிக்கை. இவர்களது படைப்புகள் தனித்துவத்தோடு இருந்தது தான், இப்போதுவரை நிறைய குறும்படங்களின் மீதான மரியாதை உயர்ந்ததற்குக் காரணம். அந்தவகையில் தனித்த அடையாளத்தோடு திரையுலகில் வலம்வருபவர் ‘பண்ணையாரும் பத்மினியும்’ மூலமாக அறிமுகமான இயக்குநர் அருண்குமார். ’குறும்படங்கள் எடுக்கறதுக்கு முன்னால சினிமா பத்தின எந்தக்கனவும் இருந்ததில்லை’ என்று நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

”சினிமா துறையில எனக்கு யாரும் அறிமுகமில்லை. அதனால, கலைஞர் டிவியில வந்த நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில கலந்துக்கறதுக்காக இரண்டு குறும்படங்கள் பண்ணேன். சீசன் 2ல செலக்ட் ஆனேன். அப்படித்தான் குறும்படப் பயணம் ஆரம்பிச்சது” என்கிறார்.  “இன்ஜினியரிங் முடிச்சுட்டு ஒரு கம்பெனியில நெட்வொர்க்கிங் செக்‌ஷன்ல வேலை செஞ்சேன். அந்த வேலையில எனக்கு திருப்தியில்லை. சின்ன வயசுல இருந்தே, சினிமான்னா ரொம்பப் பிடிக்கும். அதனால, அஸிஸ்டெண்ட் டைரக்டராகலாம்னு  நினைச்சேன். நிறைய பேர்கிட்ட வாய்ப்பு கேட்டேன். எதுவும் நடக்கலை. வெறுமனே பயோடேட்டா கொடுக்கறது வேஸ்ட்னு தோணுச்சு. அப்போ சில பேர் ‘நீ குறும்படம் பண்ணா, உன்னை அஸிஸ்டெண்டா சேர்த்துப்பாங்க’ன்னு சொன்னாங்க. விஸ்காம் ஸ்டூடண்ட்ஸ் பைனல் இயர் புரொஜக்ட் பண்ற மாதிரி, நம்ம ஷார்ட்பிலிம் இருக்கணும்னு நினைச்சேன்.

வேலையில இருந்து நின்னப்போ வந்த பி.எஃப். பணம் கொஞ்சம் கையில இருந்துச்சு. அதை வச்சு, தெரிஞ்சவர் ஒருத்தர் மூலமா முதல் குறும்படம் பண்ணேன். அது சரியா வரலை. அப்போ நாளைய இயக்குநர்னு ஒரு நிகழ்ச்சி வரும்னுகூட எனக்கு தெரியாது. அப்புறம் அதைப்பத்தி கேள்விப்பட்டு, முதல் சீசனுக்கு என்னோட குறும்படத்தை அனுப்புனேன். அது செலக்ட் ஆகலை.

அப்புறம் நாம பண்ணதுல என்னென்ன தப்பு இருக்குன்னு யோசிச்சேன். சினிமா பத்தின புக்ஸ் படிச்சேன். அப்புறம்தான் இரண்டாவது குறும்படம் இயக்கினேன். என்னோட தவறுகள்ல இருந்து, என்ன பண்ணனும்னு கத்துக்கிட்டேன். இப்பவும் அப்படித்தான்” என்று சிரிக்கிறார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர்  நிகழ்ச்சி, இவரது வாழ்க்கையை அடியோடு மாற்றியது என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. “சீசன் 1 நடந்தப்போ, வாராவாரம் அதைப் பார்த்திடுவேன். ஒவ்வொரு வாரமும் அந்த நிகழ்ச்சியில ஒரு டாபிக் கொடுப்பாங்க. அதை வச்சுக் கதை எழுதச் சொல்வாங்க. அதைப் பார்த்துட்டு நானும் எழுதிப் பார்த்தேன். அடுத்த சீசன்ல கண்டிப்பா சேருவோம்னு நம்பிக்கையோட இருந்தேன். அப்படித்தான் இரண்டாவது குறும்படத்தை அனுப்புனேன். செலக்ட் ஆனேன்.

குறும்படம் தேர்வானாலும், அங்க எனக்கு பாராட்டுகள் கிடைக்கலை. ‘ஒரு படம்னா அழகியலோட இருக்கணும். அது உங்க படத்துல இல்ல’ன்னு திட்டுனாங்க. அந்த கமெண்டை மனசுல ஏத்திக்கிட்டு அடுத்தடுத்த குறும்படங்களைப் பண்ணேன். அந்த நிகழ்ச்சியில, நிறைய பெஸ்ட் பிலிம் அவார்டு வாங்கியிருக்கேன். பைனல்ல நான் ரன்னர்அப் ஆனேன்” என்று பழையன நினைவுகூர்கிறார்.

“அதுக்கப்புறம் யார்கிட்டயாவது அஸிஸ்டெண்டா சேரணும்னுதான் நினைச்சிட்டு இருந்தேன். நேரா படம் பண்ற எண்ணமே இல்லை. அப்போதான், ‘காதலில் சொதப்புவது எப்படி’ குறும்படத்தை முழுநீள படமா எடுத்தார் பாலாஜி. கார்த்திக் சுப்புராஜ் ’பீட்சா’ பண்ணார்.  சீசன் 1ல வெற்றி பெற்ற எல்லோருமே படம் பண்றதைப் பார்த்தப்போ, நாமளும் ட்ரை பண்ணலாமேன்னு தோணுச்சு.

முதல் படமா ‘பண்ணையாரும் பத்மினியும்’ பண்ணனும்கறது என்னோட சாய்ஸ் கிடையாது. நான் வேற கதைதான் மனசுல வச்சிருந்தேன். ஆனால், அந்தக் குறும்படத்தை படமா பண்ணலாம்னு புரடியூசர்ஸ் வந்தாங்க. பெரிய புரொடக்‌ஷன் கம்பெனியில இருந்து கதை கேட்டாங்க. அதனால, அந்த குறும்படத்தை அடிப்படையா வச்சு, ஒரு ஸ்கிரிப்டை ரெடி பண்ணேன். உண்மையைச்

சொன்னால், அப்போ என்கிட்ட ஒரு மணி நேரத்துக்குதான் ஸ்கிரிப்ட் இருந்துச்சு. வெறும் எட்டு நிமிடக் குறும்படத்தை இரண்டரை மணி நேர படமா மாத்துறது ரொம்ப கஷ்டம். ஸ்கிரிப்ட்ல கடுமையா வொர்க் பண்ணேன்.  அதுக்காக, நிறைய கேரக்டர்ஸ் சேர்க்க வேண்டியிருந்துச்சு” என்று சொல்லும் இவர், தனது ‘பண்ணையாரும் பத்மினியும்’ குறும்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களையே திரைப்படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்.

ஆனாலும், பண்ணையாரும் பத்மினியும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார். “அது ரிலீஸான நேரம் சரியில்லைன்னு சிலர் சொன்னாங்க. காலம், நேரம் இதெல்லாம் ஒரு காரணமா இருந்தாலும், ஒரு சினிமா ஓடறதுக்கு வேற சில விஷயங்களும் இருக்குதுங்கறதுதான் உண்மை. கேரளாவுல நடந்த பிலிம் பெஸ்டிவல்ல, அந்தப்படத்தை தொடர்ந்து ரெண்டு ஷோ போட்டாங்க. படிக்கட்டுல எல்லாம் உட்கார்ந்து மக்கள் படம் பார்த்தாங்க. ஷோ முடிஞ்சதும், ஸ்டேண்டிங் ஓவேஷன் கிடைச்சது. இது எல்லாமே என் மனசுல இருக்குது” என்று பக்குவத்துடன் பேசுகிறார். அந்தப்படத்தில் நடித்த விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயபிரகாஷ் உட்பட பலரது எண்ணமும் அதுவே. “என் டைரக்‌ஷன்ல இரண்டு படம் நடிச்சிருக்கார் விஜய் சேதுபதி. ஆனாலும், அவர் நடிச்சதுல பிடிச்சதுன்னு ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை சொல்வார்” என்கிறார் அருண்குமார்.

தற்போது இணையத்தில் எங்கும் குறும்படங்கள் நிறைந்து கிடக்கிறது. இதிலிருந்து நல்ல குறும்படத்தை எப்படித் தேடிக்கண்டுபிடிப்பது? இந்தக் கேள்விக்கு எளிதாகப் பதில் சொல்கிறார் அருண்குமார்.  “ஒரு குறும்படத்தை நாம ஏன் பார்க்கணும்கற ஒரு கேள்வி வருது? அதைப் பூர்த்தி பண்ணிட்டா போதும், அது கண்டிப்பா நல்ல குறும்படம்தான்” என்கிறார். இந்த வகையில், இயக்குனர் அருண்குமாரின் மனதை சமீபத்தில் கவர்ந்த குறும்படம் ‘விழுமியம்’. அதன் இயக்குநர் புவிராஜை வரவழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

 “நான் யார் எது சொன்னாலும் கேட்டுக்குவேன். அதேமாதிரி, என்னோட படத்துல ‘எ பிலிம் பை’ன்னு போடக்கூடாதுங்கறதுல உறுதியா இருக்கேன். நான் டைரக்ட் பண்ணாலும், அதுல என்னோட வொர்க் பண்றவங்களோட யோசனைகள் கண்டிப்பா இருக்கும். பல நூறு பேரோட கிரெடிட் அதுல இருக்கு,” என்கிறார்.

இவரது அடுத்த படமும் விஜய் சேதுபதியுடன் தான் என்பது கூடுதல் தகவல்.

நவம்பர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com