ஊழிக்காலத்தின் முகமற்ற நாயகர்கள்

ஊழிக்காலத்தின் முகமற்ற நாயகர்கள்
Published on

தமிழகத்தின் பல இடங்களில் தண்ணீரின் தாண்டவத்தில் சிக்கி சின்னபின்னமாகியதற்கு ஒரு மாதம் கழித்து எழுதுகிற கட்டுரையில் என்ன சொல்ல முடியும்? அதுவும் ஊழிக்காலமாகத் தோற்றம் தந்து செல்வம், கல்வி, அதிகாரம் என்று எந்த ஏற்றத் தாழ்வும் இன்றி எல்லோரும் சமம் என்கிற அரிய உண்மையை  சாக்கடையால் அடித்து சொல்லிச் சென்றிருக்கிற இந்த வேளையில்?

அரசு எந்திரங்களை நம்பாத நடுத்தர, உயர்தர வர்க்கம் அதை மட்டுமே நம்பியிருக்கவேண்டிய பாடத்தை இந்த மழையில் கற்றது. எந்த ‘ஆப்’ சர்வீஸ் பயணக் கார்களும் வரவில்லை. இடுப்பளவு தண்ணீரில் அரசுப் பேருந்துகள் மட்டுமே ஓடின. தண்ணீரில் உயிர்கள் பலியானது மியாட் மருத்துவமனையில்தான். சென்னை அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கோ ஸ்டான்லி மருத்துவமனைக்கோ ஆபத்து வரவில்லை. இடுப்பளவு தண்ணீர் நின்ற இடங்களில் இடுப்பொடிய வேலை செய்து வடியச் செய்தது மாநகராட்சியின் கடைநிலை ஊழியர்கள்தான். தெருக்களில் தேங்கிய குப்பையை அள்ளிச்சென்றது அதே ஊழியர்கள்தான்! பொது மற்றும் அரசு நிறுவனங்களைக் குறைசொல்லும் நேரத்தில் அவற்றைப் பாதுகாக்க நாம் என்ன செய்கிறோம் என்று யோசிக்கச் செய்ததும் இந்த மழைதான்!

அரசு நிர்வாகம் இந்த பேய்மழையால் தடுமாறி முதல் இரண்டு நாட்கள் சுத்தமாக ஒருங்கிணைப்பு இன்றி துவண்டது நிஜம். அது சமூகம் தனக்குத்தானே உதவி செய்துகொள்ள வேண்டும். வெளியிலிருந்து யாரும் வரமாட்டார்கள் என்பதை உணர்ந்துகொண்ட நாட்கள். பக்கத்து வீட்டில் இருப்பவரின் பெயரைத் தெரிந்துகொண்ட நாட்கள். கடைக்கு நீந்திப்போய் பால் வாங்கி வந்து இதுவரை பேசியே இராத எதிர் வீட்டுக்கார அம்மாவுக்கு அளித்த நாட்கள். எப்போதும் சமூக ஊடகங்களில் வீண் பேச்சு பேசுவார்கள் என்று பெரும் இலக்கிய, அறிவுஜீவி ஜாம்பவான்களாலும் சாமானியராலும் ஒதுக்கப்பட்ட ட்விட்டர்வாசிகளும் முகநூலர்களும் இந்தசமயத்தில் ஒருங்கிணைந்தனர். அவர்கள் நீட்டிய உதவிக்கரங்கள்தான் ஆயிரக்கணக்கான பேருக்கு உடனடி உயிர்வளியாக அமைந்தது.

எதிர்பாராத இளைஞர்கள் எல்லாம் இச்சமயத்தில் நாயகர்கள் ஆனார்கள். “பெரும்பாலான சென்னை வாழ் இளைஞர்களுக்கு நீச்சல் தெரியாது. ஆனாலும் உதவி செய்யவேண்டுமே என்ற ஆர்வத்தில் இடுப்பளவு நீரில் குதிக்க அவர்கள் தயங்கவில்லை. சேற்றில் நடக்க தயங்கவில்லை. ஒரு இளைஞர் என்னிடம் சேற்றுப்புண் என்றால் என்ன அண்ணா என்று கேட்டுத் தெரிந்துகொண்டார். அவர்களுக்கு எந்த பயிற்சியும் இல்லை. மனித நேயம் மட்டுமே இருந்தது. மதங்களோ, சாதிகளோ, அந்தஸ்துகளோ குறுக்கே நிற்கவில்லை.” என்று சொல்கிறார் சமூக செயற்பாட்டாளரான தேவநேயன்.

மழைக்குப் பிந்தைய ஒரு நாளில் நண்பரொருவரின் அலுவலகம் சென்றிருந்தேன். அவர் ஆர்வமுடன் என்னிடம் காட்டிய காணொளியில் கடலூரில் கடல்போல் வயலில் தண்ணீர் தேங்கியிருந்த பின்னணியில் நடிகர் சித்தார்த்தை பேட்டிக் கண்டுகொண்டிருந்தார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர். “இவ்வளவு தெளிவாக ஒரு பிரச்னையைப் பற்றிப் பேச தமிழ்நாட்டில் யாராவது ஒரு ஆள் இருக்கிறாரா? சொல்லு” என்று கேட்டார் அவர். உண்மையே. சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்ட சித்தார்த் ஆர்ஜே பாலாஜியுடன் சேர்ந்து முன்கூட்டியே நிவாரணப்பணியில் குதித்திருந்தார். அவரது வீடு தண்ணீரில் மூழ்கிப்போயிருந்தது. பெரும் பொருளிழப்பும் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவர் தன் பேட்டி முழுக்க பிரச்னை பற்றியே பேசினார். அவர் தன் நடிகன் என்ற முகத்தை அந்த காணொளியின் ஒவ்வொரு கணத்திலும் அழிக்கவே முயன்றுகொண்டிருந்தார் என்பதை உணரமுடிந்தது. செய்தியாளர் அவரை ஒரு திரைப்பட நாயகனாக சித்திரித்து கேள்விகள் கேட்டு அவரை திசை திருப்ப முயன்றாலும் சித்தார்த் ஒரு முகமற்ற களச்செயற்பாட்டாளனாகவே தன்னை முன் வைத்துக்கொண்டிருந்தார்.

சித்தார்த்தின் முகம் திரையுலகில் இருப்பதால் நமக்குத் தெரிந்த முகம். இப்படி எந்த அடையாளமுமே இல்லாமல், இருந்தாலும் அவற்றைத் துறந்து பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள் எத்தனை பேர்?

பண்பலை ஒன்றில் பணியாற்றிய தோழி ஒரே நாளில் ஐநூறுக்கும் மேற்பட்ட அழைப்புகளை சலிக்காமல் எதிர்கொண்டார். ஒவ்வொரு இடத்திலும் அமைக்கப்பட்ட நிவாரண மையங்களிலும் இதே நிலையே. யாருக்கும் சலிப்பில்லை. உதவப்புறப்பட்டது மானுடம்! மார்வாடிகளின் திறமையான தொழில் திறனுக்காக அவர்களைக் கரித்துக் கொட்டியவர்கள், அவர்கள் வடித்து வடித்து அனுப்பி வைத்த உணவுகளை உண்டு உயிர்வாழ்ந்தோம்!

“வெள்ளத்தால் சூழப்பட்டு இரண்டாம் மாடியில் இருந்த என்னைத் தவிர எங்கள் குடியிருப்பில் யாரும் இல்லை. சாப்பிட எதுவுமே இல்லை. யாரோ அந்த ஊழிக்காலத்தின் ஒரு கணத்தில் என் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். திறந்தேன். இரண்டு பால் பாக்கெட்டுகள், ஒரு பிரெட் பாக்கெட்டுடன் ஒரு தம்பி. இந்தாங்க, நீட்டிவிட்டு படியிறங்கிச்  சென்றுவிட்டார். அவர் யாரோ? அவர் முகம் எனக்கு ஞாபகம் இல்லை! ஆனால் என் வாழ் நாள் முழுக்க என் நாயகன் அவர்தான்!” உணர்ச்சி பொங்க எம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஒரு நண்பர்.

கதைளும் கண்ணீர் விட வைக்கும் இழப்புகளும் ஏராளம் நண்பர்களே... ஆனால் இழப்புகளின் போதும், ஊழிகளின் போதும்தான் மானுடம் மேலும் வல்லமை பெறுகிறது.

பீப் சாங்கைப் பற்றி கருத்துக்கேட்ட இளம் செய்தியாளரை இளையராஜா திட்டியதற்கு சற்று முன்பாக அவர் சொன்ன கருத்து இது. ‘’மக்கள் மனதிலே பெரிய மாற்றத்தை உண்டாக்குவதற்காக இறைவன் நம்மீது இயற்கையை ஏவிவிட்டான் என்பதையே நான் நிச்சயமாகக் கூறுவேன். இந்த மாற்றம் வெறும் மாற்றமாக இல்லாமல் நிரந்தர மாற்றமாக இருக்கவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்”.

 இழப்பின் வலி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. அனுபவங்கள் தந்த பாடங்களுடன் எடுத்து வைக்கும் அடி கவனமாக இருக்கட்டும்!

ஜனவரி, 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com