கோவாவில் ஒரு மீனவ குப்பத்திற்கு வந்த சுற்றுலாப் பயணி ஒருவர் படகிலிருந்து மீனை இறக்கிக் கொண்டிருந்த மீனவரை கொஞ்சம் நேரம் பார்த்திருந்து விட்டுப் பேச்சுக் கொடுத்தார்.
‘இவ்வளவு மீன்களைப் பிடிக்க எவ்வளவு நேரமாகும்?’ ‘அப்படியொன்றும் அதிகமில்லை’
‘இன்னும் கொஞ்சநேரம் அதிகம் செலவழித்து கூடுதல் மீன் பிடித்திருக்கலாமே’
‘இப்போது பிடித்த மீனில் உள்ள வருமானம் எனது குடும்பத்திற்கு போதுமானது’
‘அப்போ மீதி நேரங்களில் என்ன செய்வீர்கள்’
‘தூங்குவேன். குழந்தைகளோடு விளையாடுவேன். ஜாலியாக இருப்பேன்’
‘ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ படித்த நான் உங்களுக்கு உதவி செய்ய முடியும். நீங்கள் இன்னும் அதிக நேரம் மீன் பிடிக்க வேண்டும். உபரியான மீன்களை விற்று அதில் வரும் கூடுதல் வருவாயில் பெரிய படகுகளை வாங்க வேண்டும்.’
‘அப்புறம்?’
‘பெரிய படகு மூலம் இன்னும் உபரியான வருமானம் வரும். ஒன்று இரண்டாகி மூன்றாகி படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இடைத் தரகரிடம் மீன் விற்காமல் நேரிடையாக பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு விற்கலாம். வருமானம் அதிகரிக்கும் . பின்னர் நீங்களே பதப்படுத்தும் நிறுவனம் ஆரம்பிக்கலாம். அதிகப்படியான பணத்துடன் நீங்கள் மும்பைக்கு இடம் பெயர்ந்து பெரிய நிறுவனத்தை தொடங்கலாம்.’
‘இதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்’
‘இருபது இருபத்தைந்து வருடங்கள் ஆகலாம்’
‘அப்புறம்?’
‘வியாபாரம் மிகப்பெரியதாகும். கோடிகள் சர்வ சாதாரணமாகப் புரளும்.’
‘ அடேயப்பா! அப்புறம்?’
இந்த கதையை முடிப்பதற்குள் சில விஷயங்களைப் பார்ப்போம்.....
அதிகமான வேலைப்பளு மனிதனைக் கொன்றுவிடுமா? விடும் என்பதற்கு இரண்டு இந்திய சாட்சிகள் உண்டு.
1. தேவாங் மேத்தா - இந்திய மென்பொருள் கூட்டமைப்பான நாஸ்காமின் முதல் தலைவராக மென்பொருள் தொழிலில் ராப்பகலாக தூக்கமின்றி உழைத்து உச்சத்திற்கு கொண்டு செல்லும் பாதையில் 49 வயதில் காலமானவர்.
2. ரஞ்சன் தாஸ் - குஅக நிறுவனத்தின் இந்திய துணைக்கண்டத்தின்
நிர்வாக இயக்குநராக ஓய்வின்றி உழைத்தவர். மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் தொடர்ந்து ஒடியவர். தினமும் உடற்பயிற்சி செய்யும் ரஞ்சன் தனது 42 வது வயதில் ஜிம்மிலிருந்து வீட்டிற்கு வந்தவர் ஹார்ட் அட்டாக்கில் காலமானார்.
இருவரது மரணத்திற்கும் காரணமாக கூறப்பட்டது தூக்கமின்மையும் இடைவிடாத உழைப்பும் தான்.
‘உண்மையாக ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் நீங்கள் உழைத்தால் பதவி உயர்வு பெற்று மேல் அதிகாரியாக பன்னிரண்டு மணி நேரம் உழைக்க நேரிடும்’ என்கிற ராபர்ட் பிரஸ்ட்டின் வார்த்தைகள் நான் பதவி உயர்வு பெற்ற எல்லா சமயங்களிலும் நினைவிற்கு வந்திருக்கிறது.
“எண்பது வயதில் வரக்கூடிய வியாதிகள் இப்போதெல்லாம் 25 வயதிலேயே வந்துவிடுகின்றன. இதெல்லாம் தெரிந்து கொண்டு தான் 30 வயதில் ஓய்வூதியத் திட்டம் என விளம்பரம் செய்கிறார்கள்” என்கிறார் சென்னையில் உள்ள ஹோமியோபதி மருத்துவரான வெங்கட்ராமன்.
“என்னிடம் ஆலோசனைக்கு வந்த ஒரு தம்பதி இரண்டு வருடங்களாக வாரத்தின் இறுதி நாட்கள் மட்டும் பார்த்து கொள்வார்கள். மற்ற நாட்களில் இவர் வரும்போது அந்த பெண் வேலைக்கு கிளம்பி விடுவாள். இப்படிப்பட்ட பாதிப்புகளை சரி செய்ய எங்களிடம் வருகிறார்கள். இதில் குழந்தைகள் நிலை இன்னும் மோசம். காரணமேயில்லாமல் குழந்தை திடிணிடூஞுணt ஆகிறது என அழைத்து வருகிறார்கள். குழந்தைகளிடம் அதிக நேரம் உங்களால் நேரம் செலவழிக்க முடிவதில்லை. அது தான் காரணம் என்று சொல்கிறோம்.எதனால் உடல் நிலை மற்றும் குடும்ப சூழல் சீர் கெடுகிறது என்று எல்லாருக்கும் தெரியும்” என்கிறார் அவர்.
சென்னையின் பிரபலமான மனநல மருத்துவர் டாக்டர் சத்தியநாதன்,“முன்பெல்லாம் 40 வயதுக்கும் மேலே உள்ளவர்கள் விரக்தி, மணவாழ்க்கையில் பிரச்சனை போன்ற காரணங்களுக்காக எங்களிடம் வருவார்கள். இப்போது முப்பது வயதுக்குள்ளாகவே இது போன்ற பிரச்சனைகள் வந்து விடுகின்றன. இதய பிரச்சனைகள், தூக்கமின்மை, பாலியல் பிரச்னைகள் என்று எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அதிகம். அலுவலகத்தில் வேலை செய்யும் நேரம் அதிகம் என்பது ஒரு பக்கம், இது தவிர வீட்டில் வந்து லாப் டாப்பே கதி என்று இருக்கிறார்கள். அண்ணாநகரில் வீடு கட்டிக்கொண்டு, சிறுசேரி வரை அலுவலகத்திற்கு சென்று வரும்போது குடும்பத்திற்கு செலவழிக்க வேண்டிய நேரம் பயணத்திலேயே கழிகிறது. ஆலோசனைக்காக வருபவர்களுக்கு நேரம் இல்லாமை தான் பிரச்சனைக்கு காரணம் என்று தெரியும். ஆனால் வேலையை விடவும் முடியாது. இதற்கு ஒரே தீர்வாக நான் சொல்வது போதும் என்று சொல்கிற மனம் தான்” என்கிறார்.
இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது“முன்பை விட இப்போது குறைவாகத்தான் வேலை செய்கிறோம் . ஆனால் வேலையில் பல தடங்கல்கள் வந்து விடுகின்றன. முன்பெல்லாம் காலை பதினொன்றிலிருந்து பன்னிரண்டிற்குள் ஒரு தடவை பியூன் வந்து அன்றைய தபால்களை கொடுத்துச் செல்வார். ஆனால் இப்போது காலை முதல் நள்ளிரவு வரை
இமெயில் பார்த்தும் அதற்கு பதிலளித்துமே நேரம் கழிகிறது. தொலைபேசியும் அது போலத் தான் ஒருவரிடம் பேசும் போது என்னவெல்லாம் பேசவேண்டும் என்று யோசித்துப் பேசாமல் நினைவு வந்தவுடன் எல்லாம் கூப்பிடுகிறோம். கடந்த வருடம் எங்களது நிறுவனத்தில் சராசரியாக ஒவ்வொருவரும் 1962.25 மணி நேரம் அலுவலகத்தில் இருந்திருக்கிறார்கள். பேஸ்புக்கில் லைக் போடுவது, உடன் வேலைபார்ப்பவர்களைப் பற்றிப் புறம் பேசுவது எல்லாம் இதில் அடக்கம். அவர்கள் வேலை பார்த்தது ஒரு வருடத்தின் மொத்த நேரமான 8760 மணி நேரத்தில் 22.4 சதவிகிதம் தான். அதிகமாக வேலை பார்க்கிறோம் என்பது மனப்பிராந்தி” ஐடி நிறுவனமொன்றில் முக்கியப் பொறுப்பில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகி.
அதிகரித்துக் கொண்டே போகும் ஆசைகளும் வேலையில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளும் எல்லாரையும் மூச்சிறைக்க ஓடவைக்கிறது.“எங்க அண்ணன் திருவான்மியூரில் வீடு வாங்கி பால் காய்ச்சினான். வந்திருந்தவர்கள் எல்லாம் அடுத்து நீதான். எப்போ வீடு வாங்க போற என்று படுத்தி விட்டார்கள்.இப்போ ஓஎம் ஆரில் திரி பெட் ரூம் வீடு தேடி அலைகிறேன் . எனக்கு பைக்கே போதுமானது. நண்பர்கள் எல்லாம் கார் வாங்கியதால் நானும் வாங்கினேன். அவர்கள் இன்னும் பெரிய காருக்கு மாறிவிட்டார்கள். இப்போ பெரிய கார் வாங்க வேண்டிய கட்டாயம்.தேவைக்கதிகமாக ஆசைப்படும் போது அதிகமாக வேலைபார்த்துத்தானே தீரவேண்டும்’ என்கிறார் 32 வயதில் உயர் பதவி வகிக்கும் சாமுவேல் ரவிக்குமார் .
வீட்டிலிருக்கும் தமிழக பெண்மணிகளின் நேரத்தை டிவி சீரியல்கள் களவாடிவிட்டதைப் போல், வேலை சார்ந்த சில விஷயங்கள் பலரது நேரத்தை களவாடுகின்றன.
திட்டமிடாத வேலைகள், வேலைகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்தளிக்காமல் தன்னிடமே வைத்துக் கொள்ளுதல், பல முறை நிகழும் காபி, டீ அல்லது சிகரெட் பிரேக்குகள், வெட்டிப் பேச்சு, திட்டமிடாத சரியான குறிக்கோள்கள் இல்லாத மீட்டிங்குகள், தள்ளிப்போடுதல், முடிவெடுக்கமுடியாத தன்மை , நள்ளிரவு வரை
நீண்டு போகும் மப்பு பார்ட்டிகள் ஆகியவை நேரத்தை களவாடி விட்டு வேலை அதிகரித்துவிட்டது போன்ற போலியான உணர்வை ஏற்படுத்துகின்றன.
இப்போது முதலில் சொன்ன கதையை விட்ட இடத்தில் பிடிப்போம்.
‘உங்கள் கம்பெனியை வாங்க பலர் போட்டி போடுவார்கள். நல்ல லாபத்தில் விற்று விட்டு ஏதாவது ஒரு அமைதியான கடற்கரையோரம்
செட்டிலாகி விடலாம். குழந்தைகள் குடும்பம் நண்பர்கள் என்று ஜாலியாக இருக்கலாம்.’ எம்.பி.ஏ நண்பர். இதற்குப் பதிலாக மீனவ நண்பர்
“நல்ல விஷயமாக இருக்கிறதே. வியா பாரத்தை விரிவுபடுத்த இப்ப நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கலாம்
அல்லது....
“ஐயா இப்பவே ஜாலியாகத் தான் இருக்கிறேன். பிறகு எதற்காக இருபத்தைந்து வருடத்தை வீணடிக்க வேண்டும்?” என்றும் கேட்கலாம். சாய்ஸ் மீனவ நண்பருடையது, ஏனென்றால் அது அவருடைய வாழ்க்கை. நீங்கள் உழைப்பை ஒழிக்கலாம் அல்லது கொண்டாடலாம் . சாய்ஸ் உங்களுடையது.
(உதவி: ஜா. தீபா)
நவம்பர், 2012.