உள்ளம் உருகுதய்யா...!

டி.எம்.எஸ் நினைவுகள்
உள்ளம் உருகுதய்யா...!
Published on

சுமார் நாற்பது ஆண்டுகள் தமிழ்ச்சமூகத்தின் இசைப்புலத்தில் தன் வெண்கலக்குரலால் ஆதிக்கம் செலுத்திய டி.எம்.எஸ். விட்டுச் செல்லும் வெற்றிடம் மிகப்பெரியது. குறைந்தது மூன்று தலைமுறைத் தமிழர்களின் மன அடுக்குகளில் அவரது குரல் பதிந்திருக்கிறது.

மதுரையில் மீனாட்சி அய்யங்காருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த டி.எம்.எஸ். தன் காலத்து சாதனையாளர்களைப் போலவே மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டவர். அவரது தந்தை அங்கிருந்த ஒரு பெருமாள் கோவிலில் பூசை செய்துவந்தவர். அங்கு திருவிழாக்களில் பாடிப்பெற்ற ஐந்தும் பத்தும்தான் அவருக்கு ஆரம்பத்தில் கிடைத்த சன்மானம். மதுரைப் பூச்சி அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்கார்தான் இவருக்கு குரு. 

டிஎம்.எஸ்சுக்கு மானசீக  குரு எம்.கே. தியாகராஜ பாகவதர். “அவருடைய வசீகரக் குரலால் பாதிக்கப்பட்டுத் தான் நானும் மிகப்பெரிய பாடகன் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டேன்” என்று என்னிடம் கூறியிருக்கிறார்.

கிருஷ்ண விஜயம் என்ற படத்தில் ராதை உனக்குக் கோபம் ஆகாதடி என்கிற பாடல்தான் அவருக்கு முதலில் கிடைத்த வாய்ப்பு. அது எம்.கே.டி. சிந்தாமணி படத்தில் பாடிய பாடலின் தழுவல். அந்த பாடலில் நடித்தவர் நரசிம்மபாரதி. பின்னர் சர்வாதிகாரி போன்ற படங்களில் சின்ன சின்ன பாடல்கள் பாடினார்.

சுதர்சனம் என்கிற படத்தில் பி.பி ரங்காச்சாரியுடன் திரையில் தோன்றிப் பாடினார். இக்காலகட்டத்தில் மாடர்ன் தியேட்டர்சுடன் தொடர்பு ஏற்பட்டது.   கணபதி பிலிம்ஸ், மாடர்ன் தியேட்டர்ஸ் இணைந்து தயாரித்த தேவகி படத்திலும் பாடும் வாய்ப்பு கிட்டியது.

அருணா பிக்சர்ஸ் எடுத்த தூக்குத் தூக்கியில்தான் டிஎம்.எஸ்ஸுக்கு பெரிய வாயில் திறந்தது என்று  சொல்லவேண்டும். இப்படத்தில் சிவாஜி கணேசன்  ஹீரோ. இசை ஜி.ராமனாதன். இப்படத்தில் பாடுவதற்காக அப்போது மிகவும் பிரபலமாக இருந்த திருச்சி லோகநாதனை ஒப்பந்தம் செய்தபோது அவருக்கு பேசிய தொகைக்கு தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை. எனவே லோகநாதனே மதுரையில் இருந்து வந்திருக்கும் பையனான சௌந்தரராசனைப் பாடவையுங்கள் என்று சிபாரிசு செய்தார்.

ஆனால் சிவாஜிக்கு அதில் விருப்பமில்லை. பராசக்தி யில் தனக்குப் பாடிய சி.வி. ஜெயராமனைப் பாடவைக்க வேண்டுமென அவர் விரும்பினார். ஆனால் தனக்கு ஒரு வாய்ப்புத் தரும்படி  டிஎம்.எஸ் அவரை  நேரில் சந்தித்து வேண்டிக்கொண்டார். அப்படித்தான் அப்படத்தில் எட்டு பாடல்களை டி.எம்.எஸ் பாடினார்.  அவரது குரல்வளம் சிவாஜிக்குப் பிடித்துப் போயிற்று.

மலைக்கள்ளன் படத்தில் ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்  இந்த நாட்டிலே’ என்ற பாடல்தான்  எம்ஜிஆருக்கு டி.எம்.எஸ். பாடிய முதல் பாட்டு. அதன் பிறகு அவர்களின் உறவு தொடர்ந்தது.  சிவாஜிக்கு ஒரு மாதிரியும் எம்.ஜி.ஆருக்கு ஒருமாதிரியும் பாடிப்பாடி டி.எம்.எஸ். படைத்த சரித்திரம் மிகப் பெரியது.

இவர்கள் மட்டுமல்ல. பின்னர் ஜெய்சங்கர் நடிக்க வந்த காலத்தில் அவருக்கும் நூற்றுக்கணக்கான அழகான பாடல்களை இவர் பாடியிருக்கிறார். இது என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் இசைக் காலம் சற்று ஓய ஆரம்பித்த நேரம். ஆனால் அப்போது எஸ்.என்.சுப்பையா நாயுடு என்கிற மூத்த இசைக் கலைஞரை ஜெயசங்கர் விடாது பிடித்து தன் படங்களுக்கு இசை அமைக்க வைத்ததால் அற்புதமான பாடல்கள் கிடைத்தன. அப்படியொரு பாடல்தான் ‘நீஎங்கே.. என் நினைவுகள் அங்கே’(மன்னிப்பு) என்கிற பாடல்!

டி.எம்.எஸ்சை வைத்து இமயத்துடன் என்கிற தொலைக்காட்சித் தொடரை இயக்குநர்  விஜயராஜ் தயாரித்தார். அதில் நானும் இணைந்து பணியாற்றினேன்.  மிகக் கடினமான உழைப்புக்குப் பின்னர் தயாரிக்கப் பட்ட அத்தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அதைக் காண அவர் இல்லையே என்ற வருத்தம்.  இந்தி இசையமைப்பாளர் ரவி, உஸ்தாத்- கி- உஸ்தாத் என்ற படத்தில் இசையமைத்த பாடல் ‘சௌ பார் ஜனம் லேங்கே’. இது முகமது ரபி பாடிய பாடல். இது தமிழில் வல்லவனுக்கு வல்லவன் என்ற பெயரில் தமிழில் எடுக்கப் பட்ட போது அந்த பாடல் தமிழில் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் என்று வேதாவின் இசையில் வந்தது. பாடியவர் டி.எம்.எஸ். டிஎம்.எஸ்  தமிழில் இதைப் பாடியதைக் கேட்ட முகமது ரபி, உணர்ச்சி வயப்பட்டு அவரது தொண்டைக்கு முத்தம் கொடுத்துப் பாராட்டினாராம்!

டி.எம்.எஸ் ஒரு குழந்தை மாதிரி எனலாம். வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் ஒரு செல்போன் வைத்து அதிலிருந்து தன் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். உன் கண்ணில் நீர் வழிந்தால், என்னடி ராக்கம்மா.. போன்ற பாடல்கள் அவை. பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருக்கும் அவருக்கு தான் பாடிய பல பழைய பாடல்களைப் பற்றிய நினைவே இல்லை!

சமயங்களில் எங்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் தான் பாடிய சிவாஜி, எம்.ஜி.ஆர் பாடல்காட்சிகளை டிவியில் போட்டு அவற்றின் பாடல் ஒலியை ம்யூட் செய்துவிட்டு பார்ப்பார். பின்னர் தன் பாடலுடன் அதை ஒலிக்கச் செய்து. காட்சிக்கு உயிர் தருவது தன் பாடல்தானே என்று பெருமையுடன்  கேட்பார்.

“ என்ன பாடி என்னய்யா பிரயோசனம்? கடைக்குப் போய் எம்.ஜி.ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு வேணும்னுதான் கேக்கிறாங்க, நம்ம பெயரை யார் ஞாபகம் வெச்சிருக்காங்க..” என்று சலித்துக் கொள்வார்.

 டி.எம்.எஸ்  மிக அற்புதமாக ராகங்களைப் பாடக் கூடியவர்.

சினிமா பாடல்களின் மெட்டுக்களைக் கேட்டு அவற்றை ராகங்களாக மாற்றிக் கொண்டு பாடும்போது மெருகேற்றிப் பாடுவார். இதனால் இசையமைப்பாளர்களிடம் உரசல்கள் ஏற்டுவதும் உண்டு. கர்நாடக இசைக்கச்சேரிகளை  நடத்தியிருக்கிறார். தானே  இசை அமைத்து பாடியிருக்கிறார். முருகன் மீது பக்தி கொண்ட அவர் பாடிய அத்தனை தனிப்பாடல்களும் பெரும் புகழ் பெற்றவை. கற்பனை  என்றாலும், கற்பகவல்லி நின் பொற்பதங்கள்  பிடித்தே,  முருகா என்றழைக்கவா?  போன்ற பாடல்கள் சாகாவரம் பெற்றவை.

முருகா என்றதும் உருகாதா மனம்? மோகன குஞ்சரி மணவாளா? இந்தப்பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதிசயத் திருடன் என்ற படத்தில் சித்தூர் நாகையா என்ற நடிகருக்காகப் பாடியது.

கார்த்திகை தீபம் என்ற படத்தில் எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா என்ற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?  அப்படியே காற்றில் மிதந்து கரைந்துவிடத் தோன்றும். இதற்கு இசை ஆர்.சுதர்சனம்.

சிரமமான பாடல் என்று அவருக்கு எதுவும் இருந்திருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை! முத்தைத் திரு பத்தித் திருநகை ஆகட்டும் அம்பிகாபதியில் வடிவேலும் மயிலும் துணை  பாடலில் மூச்சு விடாமல் பாடியதாகட்டும்!  இதையெல்லாம் சுலபமாகக் கடந்திருப்பார் அவர்!

பலபரீட்சை என்ற படம் அவர் இசை அமைத்த ஒரே படம். ஏ.எல்.ராகவனுடன் இணைந்து கல்லும் கனியாகும் என்ற ஒரு படத்தையும் தயாரித்தார்.

அவர் பாடியதில் எத்தனையோ பாடல்களை என்னால் ரசித்துச் சொல்லமுடியும். வாழ்விலே ஒரு நாள்( தென்றலே வாராயோ), வாழ்ந்தாலும் ஏசும்( நான் பெற்ற செல்வம்), நாடகமெல்லாம் கண்டேன் ( மதுரை வீரன்), மணப்பாறை மாடு கட்டி ( மக்களைப் பெற்ற மகராசி),  சித்திரம் பேசுதடி        ( சபாஷ் மீனா), யாரடி நீ மோகினி(உத்தம புத்திரன்), ஓங்காரமாய் விளங்கும் நாதம்( வணங்கா முடி), இதய வானிலே( கற்புக்கரசி), மோகனப் புன்னகை ஏனோ( பத்தினி தெய்வம்),தில்லையம்பல நடராசா( சௌபாக்கியவதி), சரியா தப்பா(கூண்டுக்கிளி), மந்தமாருதம் தவழும்( நானே ராஜா), இது மாலை நேரத்து மயக்கம்( தரிசனம்), கண்ணும் கண்ணும் பேசியது(கைராசி), மலர்ந்தும் மலராத(பாசமலர்), போனால் போகட்டும் போடா( பாலும் பழமும்), சர்க்கரைப் பந்தலில்(பட்டாம்பூச்சி), பாட்டும் நானே பாவமும் நானே ( திருவிளையாடல்), அன்னக்கிளி ஒன்னத் தேடுது( அன்னக்கிளி), அமைதிக்குப் பெயர்தான் சாந்தி(ஒரு தலைராகம்) என்று அவரது பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

சமீபத்தில் பிபி ஸ்ரீனிவாஸ் மரணம். இப்போது டி.எம்.எஸ். இசை ரசிகர்களுக்கு மாபெரும் இழப்புதான்.  இந்த இருவரும் இணைந்து பாடிய பொன்னொன்று கண்டேன்(படித்தால் மட்டும் போதுமா) பாடலைக் கேட்கிறேன்.  கண்ணீர் தளும்புகிறது! 

 அடுத்து நான் கேட்க விருக்கும் பாடல் -உள்ளம் உருகுதைய்யா..

(சந்தானகிருஷ்ணன் குறிப்பிடத்தக்க திரைப்பட இசைத் தட்டுக்கள் சேகரிப்பாளர் எழுத்து வடிவம்: முத்துமாறன்)

ஜூன், 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com