உலகம் உருண்டை அல்ல

உலகம் உருண்டை அல்ல
Published on

இருநூறு தடவைக்கும் மேலாக வாசித்திருப்பேன் ஹெர்மன் ஹெஸ்ஸே எழுதிய சித்தார்த்தா நாவலை. ஒவ்வொருமுறையும் எனக்கு அது வழிகாட்டிக்கொண்டே இருக்கிறது. திருலோகசீத்தாராம் 1950களில் மொழிபெயர்த்த பதிப்பிலிருந்து ஆங்கிலத்தில் இரு மொழிபெயர்ப்புகள் வரை சித்தார்த்தாவை நான் தொடர்கிறேன். முதல்முறையாக வாசித்த போது புத்தர் பற்றிய கதை என்று நினைத்துத்தான் ஆரம்பித்தேன். ஆனால் இது சித்தார்த்தா என்கிற பிராமணச் சிறுவனின் தனிமனித அகத்தேடலைச் சொல்லும் மிகச் சிறிய நாவல்தான். கோவிந்தா என்னும் நண்பனுடன் சேர்ந்து சமணம், பௌத்தம், புத்தரின் உரை என்றெல்லாம் ஊர்ந்து செல்லும் பயணத்தில் ஒரு அளவு ஞானப் படிநிலையை அடையும் அவன் ஒரு வணிகரிடம் பணிபுரிந்து, பின்னர் கமலா என்கிற தாசியுடன் வாழ்ந்து குழந்தைக்கும் தகப்பன் ஆகிறான். ஓரிடத்தில் கமலா சித்தார்த்தாவிடம் கேட்கிறாள்: உனக்கு என்ன தெரியும்? எனக்கு தனித்திருக்க, விழித்திருக்க, பசித்திருக்கத் தெரியும் என்கிறான் சித்தார்த்தா.

பெருமளவு செல்வத்தை ஈட்டும் அவன், ஒரு நாளில் அனைத்தையும் துறந்து வெளியேறி, ஆற்றங்கரை ஒன்றில் ஓடக்காரனை குருவாக ஏற்று ஞானத்தைத் தேடுகிறான். அவனுடன் அலையும் கோவிந்தா ஞானம் பெறுவதில்லை. அவன் ஒரு சக மனிதனாகவே வருகிறான். கோவிந்தாக்கள் ஒருபோதும் சித்தார்த்தன்கள் ஆவதில்லை. எதைப் பார்க்கிறோமோ அது உண்மை அல்ல அதற்குப்பின்னால் வேறொரு உண்மை மறைந்திருக்கிறது என்பதை இந்த நாவல் எனக்குச் சொல்லித்தந்திருக்கிறது. என் தந்தை 2008ஆம் ஆண்டு மறைந்த தருவாயில் சித்தார்த்தாவை மீண்டும் மீண்டும் படித்தபோது அது எனக்குள் மேலும் பல கதவுகளைத் திறந்தது. இந்த உலகம் உருண்டையானதோ, தட்டையானதோ அல்ல; நீர்மமானது என்ற புரிதலை எனக்கு உருவாக்கியது. காலம் நம்மை விட்டு ஒரு நதியாகக் கடந்துகொண்டிருக்கிறது. இனிப்பு, துவர்ப்பு என பல சுவைகளை அது விட்டுச்செல்கிறது. இதில் நாம் நாமாக இருப்பது மட்டுமே நம்மால் இயன்றது.

சித்தார்த்தா என் சிதையை நானே பார்த்து பரிகசிக்கக் கூடிய வல்லமையை எனக்குக் கொடுத்திருக்கிறது.

ஜூலை, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com