உயிரின் கையெழுத்து!

உயிரின் கையெழுத்து!
Published on

அழகுக்கும், காதலுக்கும் உருவம் கொடுத்துப் பண்டைய ரோமர்களினால், பெண் தெய்வமாக வணங்கப்பட்டவள்தான் ‘வீனஸ்'.

பூமியை மையமாக வைத்துச் சுற்றிக் கொண்டிருப்பதாக நம்பப்பட்ட ஏழு கோள்களுக்கும் (சூரியன் உட்பட) கிரேக்க, ரோம கடவுளர்களின் பெயர்களே இடப்பட்டன. அதில் ஒன்றுதான், சூரியனுக்கு இரண்டாவது இடத்தில் இருக்கும் வீனஸ் கோள். தமிழில் வெள்ளி. அதிகாலையில் அழகாக ஒளிரும் அந்த வெள்ளியை, அழகுக்கும், காதலுக்கும் கடவுளாகவே பார்த்தாலும், அதன் நிஜ முகம் வேறானது. தலைகீழானது. தினமும் பல்லாயிரக் கணக்கான எரிமலைகள் வெடித்துச்

சிதறும் அபாயமான கோள் அது. அதன் நிலப்பரப்பு 470 சதமபாகை வெப்பநிலையில் எப்போதுமே கொதித்துக் கொண்டிருக்கும் தந்தூரி அடுப்பு.  மனிதனால் கற்பனையே செய்யமுடியாத கொதிநிலை. அது மட்டுமல்லாமல், பூமியைப்போல 92 மடங்கு அழுத்தமும் கொண்டது. அதன் மேகங்களிலிருந்து சல்பூரிக் அமிலம் மழையாகக் கொட்டிக் கொண்டேயிருக்கும். இவ்வளவு

பிரச்சனைகளின் மத்தியில்தான், வெள்ளிக்கோளில் உயிரினங்கள் வாழ்வதற்கான அறிகுறிகளைக் கண்டிருக்கிறோமென்று அறிவித்துள்ளார்கள் வானியல் ஆராய்ச்சியாளர்கள்.

பூமியில் உருவான பாக்டீரியாக்களில், இரண்டு வகைகள் இருக்கின்றன. பூமியில் வாழும் பெரும்பாலான உயிரினங்கள் சுவாசிப்பதற்குஆக்சிசனையே பயன்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். பாக்டீரியாக்களும் அப்படியே! ஆனால், இதற்கு விதிவிலக்காக

ஆக்சிசனைச் சுவாசிக்காத வேறு சில பாக்டீரியாக்களும் இருக்கின்றன. ஆக்சிசனை சுவாசிக்கும் பாக்டீரியாக்களை, ‘Aerobic' பாக்டீரியாக்கள் என்பார்கள். ஆக்சிசன் இல்லாமல் வாழ்பவற்றை, 'Anaerobic' பாக்டீரியா என்கிறார்கள். ஆனாலும், இந்த இருவகை பாக்டீரியாக்களும் ஒரு முக்கியமான வாயுவை வெளிவிடுகின்றன. அதுதான் பாஸ்பீன் வாயு (Phosphine). ஒரு பொஸ்பரஸையும் (p), மூன்று ஹைட்ரஜனையும் (h) கொண்டது பாஸ்பீன் (PH3). இந்தப் பாஸ்பீன் வாயுவை ஆராய்ச்சிக் கூடங்களில் நாம் உருவாக்கலாம். ஆனால், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள், தங்கள் கழிவுப்பொருளாகப் பாஸ்பீனையே வெளிவிடுகின்றன. பெங்குவின் போன்ற சில உயிரினங்களும் கழிவு வாயுக்களாக பாஸ்பீனை வெளிவிடுகின்றன. எப்படிப் பார்த்தாலும், பாஸ்பீன் வாயுக்கள் தோன்றுமிடம் உயிரினங்களாக மட்டுமே இருக்கின்றன. இந்தப் பாஸ்பீன் வாயுதான், குறிப்பிடத் தக்க அளவில் வெள்ளிக் கோளில் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதனால், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியம் உண்டெனவும் தெளிவானதொரு அறிக்கையும் வெளிவிட்டிருக்கிறார்கள்.

வெள்ளிக்கோள்தான் தந்தூரி அடுப்பைவிட அதிக வெப்பநிலையில் தகிக்கிறதே! அதில் எப்படி உயிரினம் வாழ முடியும்? உண்மைதான். வெள்ளிக்கோளின் மேற்பரப்பில் எந்த உயிரினமும் வாழமுடியாதுதான். அதிகபட்சம் ஒரு நிமிடம் வாழலாம். அப்புறம் சாம்பலை அள்ளி அப்பால் போடவேண்டியதுதான். அப்போ எப்படி? அதிகப்படியான எரிமலை வெடிப்புகளும், நிலநடுக்கங்களும் தொடர்ச்சியாக ஏற்படுவதால் உருவாகும் வாயுக்கள், வெள்ளியைச் சூழ்ந்து மிகப்பெரிய வளிமண்டலத்தை (Atmosphere) உருவாக்கியிருக்கின்றன. பூமிக்கு இருப்பதுபோலவே அது இருந்தாலும், பூமியின் வளிமண்டலத்தைவிடப் பலமடங்கு செறிவாகவும், தடிப்பானதுமாக வெள்ளியின் வளிமண்டலம் காணப்படுகிறது. இந்த வளிமண்டலம் வெள்ளியின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 50 கிமீ உயரத்தில் காணப்படுகிறது. ஆச்சரியப்படும் வகையில் அந்த வளிமண்டலத்தின் வெப்பநிலை பூச்சியத்திற்கு அருகே இருக்கிறது. அத்துடன் அவற்றின் காற்றழுத்தமும், பூமியின் காற்றழுத்தத்திற்குச் சமமாகக் காணப்படுகிறது. இந்தச் சூழ்நிலைகொண்ட வளிமண்டலத்தில்தான் பாஸ்பீன் வாயுக்கள் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ‘பாஸ்பீன் வாயு, வெள்ளியின் வளிமண்டலத்திலிருக்கும் சில வேதிப் பொருட்களால் ஏன் உருவாகியிருக்க முடியாது?‘ என்னும் கேள்வி உங்களுக்குத் தோன்றலாம்.

வெள்ளிக்கோளில், பாஸ்பீன் வாயு இருக்கிறது என்று தெரிந்தவுடன், அங்கு உயிரினம் வாழ்கின்றது என்னும் முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துவிடவில்லை. தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் இதற்கான ஆராய்ச்சியை நடத்திய பின்னர்தான் இந்த முடிவுக்கே வந்திருக்கிறார்கள். வெள்ளிக்கோளின் வாயு மண்டலத்தை ஆராய்ந்தபோது, அது 96% கார்பன் டை ஆக்சைடையும் (CO2), 3% நைட்ரஜன் (N2) வாயுவையும் கொண்டது. மிச்சமுள்ள 1% இல்தான் ஏனைய அனைத்து வாயுக்களும் அடங்குகின்றன. இதில், பொஸ்பீன் உருவாவதற்குரிய பொஸ்பரஸோ, ஹைட்ரஜனோ அங்கு காணப்படவில்லை.

உதாரணமாக, வியாழன்கோளிலும், சனிக்கோளிலும் பாஸ்பீன் இருப்பதற்கான அடையாளத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனால், அங்கெல்லாம் உயிரினம் வாழ்வதாக

முடிவெடுக்கப் படவில்லை. காரணம், அங்கு நீரோ, ஹைட்ரஜனோ இருக்கின்றன. அதனால், பாஸ்பீன் வாயு, ஏதோவொரு வகையில் அங்கு உருவாகலாம். ஆனால், வெள்ளிக்கோளில் அந்தச் சூழ்நிலைகள் எதுவுமில்லை. பொஸ்பரஸோ, ஹைட்ரஜனோ இல்லாத இடத்தில் எப்படி இது  உருவாக முடியும்? இதுதாண்டி பாஸ்பீன் உருவாகுமானால், அதற்கான ஒரே வழி நுண்ணியிரிகளும், பாக்டீரியாக்களும் மட்டும்தான். அதனாலேயே, Anaerobic பாக்டீரியாக்கள் அதாவது, உயிர்வாழ ஆக்சிசன் தேவைப்படாத பாக்டீரியாக்கள் வெள்ளியின் வளிமண்டலத்தில் வாழலாம் என்னும் இறுதி முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

வெள்ளிக்கோளில் உயிரினம் இருக்கிறது என்று யாரும் அடித்துச் சொல்லவில்லை. ஆனால், உயிரினம் போடும் ‘கையெழுத்து' அங்கே காணப்படுவதால், அவை அங்கே இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பியிருக்கிறார்கள். அப்படியென்றால், பூமியில் வாழ்வது போன்ற  கண்ணுக்குத் தெரியக்கூடிய உயிரினங்களும் அங்கே வாழுமா?

அதற்கான வாய்ப்பு இல்லையென்றே சொல்ல வேண்டும். ஒருகல நுண்ணுயிரிகள் தாண்டிப் பல கலங்களைக் கொண்ட உயிரினங்கள் அங்கிருப்பதற்குச் சாத்தியமில்லை. ஆனால், அப்படி இருக்கலாம் என்னும் புனைவுடனான ஹாலிவுட் திரைப்படங்களை மட்டும் நீங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம்.

அக்டோபர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com