என் சின்ன வயதில் என் அம்மா பலதடவை கோபத்திலும், சிலநேரம் பெருமிதத்திலும்... sometimes in anger and desperation or at times in inherent joy -- சொல்லும் வார்த்தைகள்: ‘டேய்! உன்னைப் பெத்த வயத்துலெ பெரண்டையை வெச்சுத் தான் கட்டிக்கணும்!‘ ஏன் பிரண்டையை மட்டும் கட்டிக்கொள்ளவேண்டுமென்பதற்கு இதுவரை யாரும் ஒரு லாஜிக்கான பதிலை சொன்னதில்லை! பிரண்டை அரிக்கும் என்பதைத் தவிர வேறெந்த லாஜிக்கும் பிடிபடவில்லை. சரி... அப்படி எந்த அம்மாக்களாவது ஒருமுறை பிரண்டையைக் கட்டிக்கொண்டிருப்பார்களா? என் அம்மா சிவகாமி அம்மாள் ஒருதடவை கட்டிக் கொண்டாள்!
பல வருடங்களுக்குப்பிறகு நான் தில்லி போனபின், ஒருமுறை லீவுக்கு பார்வதிபுரம் வந்திருந்தபோது, ஒருநாள் காலையில் என் தில்லி பெருமைகளை அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தேன். அம்மா பதிலெதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் ‘என்னம்மா பேச்சையே காணோம்.... வாய் அடச்சுப்போச்சா?' என்று கிண்டலாகக் கேட்டேன். தன் பெருமிதத்தை மறைத்துக்கொண்டு, ‘ஆமாண்டா!.... உன்னெ பெத்த வயத்திலெ பெரண்டையெ வெச்சுத்தான் கட்டிக்கணும்!' என்று பதிலளித்தாள்.
அன்று மதிய உணவுக்கு முன்னால் ஆற்றங்கரைக்கு குளிக்கப்போனேன்.
பார்வதிபுரத்துக்கு ஆற்றங்கரை என்பது இருபதடி அகலமும் ஆறடி ஆழமும் கொண்ட அனந்தன் கால்வாய் தான். வருடத்துக்கு பத்து மாதங்கள் பாசனத்துக்கு ஒரேசீராக கழுத்தளவு தண்ணீர் வரும் கால்வாய். அதனால் தான் நாஞ்சில் நாட்டில் மூன்று போகம் விளைந்தது. ஸ்ரீ சித்திரைத் திருநாள் மகாராஜா காலத்தில் வெட்டப்பட்டது. ஒழுக்கு வேகமாக இருக்கும். எங்கள் ஊருக்கே ஊருணி அதுதான். பெண்கள் அதில் குளித்துவிட்டு, ஒரு குடம், ஒரு தோண்டி நிறைய தண்ணீர் கொண்டு வருவார்கள். வீட்டிலிருக்கும் பெரிய மண்பானையை கழுவிவிட்டு, அதன் வாயில் (அப்பாவின் பழைய) மல்வேட்டித்துண்டைப்போட்டு வடிகட்டி வைத்தால், அடுத்தநாள் வரை அது தான் சமையலுக்கும் குடிக்கவும்... கங்கா அம்ருதம்!
அடுத்திருக்கும் வயற்பகுதிகளுக்கு வேலியாக பச்சைப்பசேலென்று கள்ளி வேலிகள். குச்சியால் குத்தினாலே கள்ளிப்பால் பீறிடும் புஷ்டியான கள்ளிவேலியில் ஆங்காங்கே ஓலைப்பெட்டிகள் கயிற்றில் தொங்கும். வீடுகளில் பசுமாடுகள் கன்று போடும்போது கன்றோடு சேர்ந்து வெளியாகும் நிணநாளங்களை ஓர் ஓலைப்பெட்டியில் போட்டு அதோடு பூக்கள், மாட்டின் சீம்பாலும் விட்டு கள்ளிவேலியில் கட்டித்தொங்கவிடுவார்கள். கள்ளியைப்போலவே கெட்டியான பால் பசுமாடும் தரும் என்ற நம்பிக்கையில்! எல்லா கள்ளிவேலியிலும் உமையொருபாகனைப்போல கள்ளியை ஆரத்தழுவிய பிரண்டைக்கொடிகளும் இருவித பச்சை நிறத்தில் இரண்டறக்கலந்திருக்கும்.
ஆற்றங்கரையில் குளித்துவிட்டுத் திரும்பும்போது, என் கண்ணில் பட்டது கள்ளியை விட்டு வெளியே இன்னொரு காதலனைத்தேடும் முயற்சியில் தன் தளிர்க்கரங்களை நீட்டிக்கொண்டு காத்திருக்கும் ஒரு பிஞ்சுப்பச்சை பிரண்டைக்கொடி! பார்த்ததும், காலையில் அம்மா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அந்தப்பிஞ்சு பிரண்டையும் ‘என்னைப்பறி... பறி!' யென்று கெஞ்சியது. அப்படியே பறித்துப்போனால் சரியாகாதென்று, தோப்புவீட்டின் சுவரைத்தாண்டி தலைநீட்டிக்கொண்டிருக்கும் வாழையிலையில் நாலைந்து துண்டு பிரண்டையை சுருட்டி எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன்.
வீட்டுக்குப்போனதும், அவசரமாக, ‘‘அம்மா! கிழக்கே பார்த்து நில்லு. எனக்காக நீ என்னவெல்லாம் செய்திருக்கே? நீ ரொம்ப நாளா கேட்டதை இதுவரை என்னால் நிறைவேற்ற முடியாமெப் போச்சு!'' என்று மடிசார் கட்டியிருக்கும் அவள் புடவைத்தலைப்பை பிரித்து, அந்த வாழையிலைச்சுருளை அவசரமாக வைத்து முடிந்தேன். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘‘நமஸ்காரம் பண்றேன்... ஆசிர்வாதம் பண்ணு!' என்று சாஷ்டாங்கமாக மூன்றுமுறை தரையில் விழுந்து எழுந்தேன். ‘என்னடா இது?' என்று புடவைத் தலைப்பை விரித்துப் பார்த்தவள் சொன்னது ‘‘அடுமாண்டு போவான்... நன்னாயிரு!'' என்பதுதான்!
அன்று இரவு அதுதான் வீட்டுத்திண்ணையில் அவள் தலைமையில் தினமும் நடக்கும் ‘மாதர் வம்புசபா'வின் முக்கியச்செய்தி! அடுத்தநாள் மதிய உணவில் அந்தப்பிரண்டை ருசிமிக்க துவையலாக உருமாறி என் கலத்தில் விழுந்தது!
வஜ்ரவல்லி என்றழைக்கப்படும் பிரண்டை நமது புராணங்களிலும் இடம்பெற்றிருக்கிறது. அருந்ததியைப்பற்றிய கதையொன்றுண்டு. அருந்ததியின் கணவர் வசிஷ்டருக்கும், விசுவாமித்திரருக்கும் பழைய வாய்க்கால் தகராறுகள் நிறைய உண்டு... இருந்தாலும் நல்ல நண்பர்கள். ஒருமுறை தன் முன்னோர் திவசத் திதியன்று வசிஷ்டர் கோபக்காரரை தன்வீட்டு விருந்துக்கு அழைக்கிறார். முனிவரும் உடனே ‘‘அதற்கென்ன! வந்தால் போச்சு... ஆனால் விருந்தில் 1008 கறிவகைகள் இருக்கவேண்டும்!'' என்று கூறினார். இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறதென்பதை தெரிந்துகொண்டு, வசிஷ்டரும் ''ஆஹா! என் மனையாட்டி அருந்ததியிடம் சொல்லிவிடுகிறேன்! அவள் பார்த்துக்கொள்வாள்!'' என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.
திவசத்தன்று மூக்கின்மேல் கோபம் எட்டிப்பார்க்கும் விசுவாமித்திரருக்கு பலகை போட்டு, இரு தலைவாழையிலையில் வெறும் 11 வகையான கறிவகைகள் மட்டுமே பரிமாறப்பட்டிருந்தன. ‘என்ன இது?' என்பதுபோல் விசுவாமித்திரர் வசிஷ் டரைப்பார்க்க, அருந்ததி கீழ்க்கண்ட சுலோகத்தை உரக்கச்சொன்னாள்:
காரவல்லி ஸதம் சைவ வஜ்ரவல்லி தத்ரயம்
பனஸம் ஷட் சதம் சைவ ச்ராத்தகாலே விதீயதே!
இதைக்கேட்டதும், இன்னொரு சண்டைக்கு தயாராக வந்த விசுவாமித்திரர் ஒன்றும் பேசாமல் திருப்தியாக சாப்பிட்டுவிட்டுப் போனாராம்! ஆமாம்... அப்படி என்னதான் சொன்னாள் அருந்ததி?
‘‘பித்ருக்களின் திதியன்று பாகற்காயை சமைத்தால், 100 கறிவகைகளுக்கும், பிரண்டையைச் சேர்த்தால் 300 கறிவகைகளுக்கும், பலா 600 கறிவகைகளுக்கும் சமம்! இதுவே திவசநாள் விதியாகும்!
இதனால் அறியப்படுவது யாதென்றால், திருமணத்தன்று அருந்ததியை நன்றாகப் பார்க்கும் நாரீமணிகள் பிறகு, அருந்ததியைப் போலவே வாழ்நாள் முழுதும் சங்பரிவார் ‘கோ ரக்ஷக்' மாதிரி தங்கள் கணவன்மார்களை பசுவைப்போல் தலையாட்ட வைத்துவிடுவார்கள் என்பது தான்! ஆனால் தெருவில் உப்புசப்பில்லாத பிளாஸ்டிக் பைகளை சாப்பிடாமலிருப்பது நமது புத்திசாலித்தனம்!
பிரண்டைக்கு நிறைய கல்யாணகுணங்கள் உண்டு. நீங்கள் கூகுளில் தேடலாம். முடியாதவர்கள் தினமும் காலைநேர டி.வி. சானல்கள் ஒன்றில் கையில் பிரண்டைக்கொடியை வைத்து ஆட்டிக்கொண்டே அதன் பலன்களைச்சொல்லும் தாடிவைத்த பகுதிநேர சித்தரிடம் தெரிந்துகொள்ளலாம்!
டிசம்பர், 2018.